விஜய நகரப் பேரரசின் ஆஸ்த்தான திருப்பதியில் கோடிகள் குவிவது எப்படி?

இலங்கை அரசியல் தலைவர்கள் பலர் இலங்கைக்கு வெளியே அடிக்கடி செல்லும் ஆலயம் எது என்று கேட்டால், திருப்பதி என்று உடனே சொல்லிவிடக் கூடிய அளவுக்கு, திருப்பதி ஶ்ரீ வெங்கடாஜலபதி ஆலயம் இலங்கையர்களிடம் பிரசித்தி பெற்றிருக்கின்றது. பல நூற்றாண்டு காலமாக திருப்பதி, மங்காப் பெரும்புகழ் கொண்ட கோயிலாக இருக்கின்றது. உலகில் நன்கொடை மூலம் பணம் திரளும் மத வழிபாட்டுத் தலங்களின் வரிசையில், வத்திகானுக்கு அடுத்தபடியாக இருப்பது திருப்பதியே என்று கூறப்படுகின்றது.

பண்டைய உண்டியல், இன்றைய உண்டியல் மற்றும் நன்கொடைகளை எண்ணும் பக்தர்கள்

திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள தங்கத்தின் கையிருப்பு எவ்வளவு என்று தெரிந்தால் மலைத்து விடுவீர்கள். 9,000 கிலோகிராம் தங்கம். இது தவிர ஒவ்வொரு ஆண்டும் பணமாக உண்டியல்களில் இடப்படும் நன்கொடைகளின் தொகை 1,000 கோடியிலிருந்து 1,200 கோடி இந்திய ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் உள்ள நிலையான வைப்புகள் 12,000 கோடி இந்திய ரூபாயை விடவும் அதிகம் என்கின்றார்கள். அந்த நிலையான வைப்புகளில் இருந்து கிடைக்கும் வட்டி மாத்திரமே, ஆண்டுக்கு 850 கோடி இந்திய ரூபாய்!

இந்தத் தகவல்கள் எல்லாம் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி கோயிலில் திரளும் செல்வத்தினைப் பற்றிய காட்சிப்பதிவை உங்களுக்குள் ஏற்படுத்தியிருக்கலாம். திருப்பதி எப்படி இப்படியொரு செல்வம் கொழிக்கும் நிலைமைக்குச் சென்றது? இவ்வளவு நிதி எப்படி திருப்பதியில் திரள்கின்றது? இது குறித்து ஆய்வுகள் கூட முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

விஜயநகரப் பேரரசின் சக்கரவர்த்தி கிருஷ்ணதேவராயர் மற்றும் திருப்பதியின் பழைய தோற்றம்

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஆட்சியாளர்களின் பரிபூரண ஆதரவைப் பெற்றமையே, இதற்கான அத்திவாரம் என்று கூறப்படுகின்றது. விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரம் சற்று தொலைவிலேயே இருந்தாலும், திருப்பதியின் மூல மூர்த்தியை அதன் ராஜ குடும்பத்தினர் அடிக்கடி தரிசித்துக் கொண்டே இருந்தனர். சோழர்களுக்கு சிதம்பரம் எப்படி முக்கியமானதோ, விஜயநகரப் பேரசின் இராஜ குலத்தினர் மத்தியில் திருப்பதி அதே முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது.

விஜயநகரப் பேரரசின் சக்கரவர்த்திகளான கிருஷ்ணதேவராயர், அச்சுததேவராயர் மற்றும் சதாசிவராயர் போன்றோர், வெறுமனே திருப்பதிக்கு வந்து வழிபட்டுச் செல்லாமல், அந்தக் கோயிலில் பாரிய ஈடுபாடு கொண்டிருந்தனர். அவர்கள் அந்தக் கோயிலின் நிர்வாகத்தை மட்டும் சீரமைத்துவிட்டுப் போகாது, அதன் செல்வத்தை எவ்வாறு முகாமை செய்வது என்பதற்கான வழிமுறைகளையும் செம்மையாக நடைமுறைப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் வைடூரியம் என நகைகளால் அலங்கரிக்கப்பட்ட திருப்பதிவாசன்

வரலாற்றுக் காலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி மூர்த்திக்காக, மன்னர்கள் அளித்த நன்கொடைகளைப் பற்றிக் கூறும் கல்வெட்டுகள் ஏழு தொகுதிகளாக உள்ளன. அவற்றுள் கிருஷ்ணதேவராயர் அளித்த கொடைகளைப் பற்றிய தகவல்களை ஒரு தொகுதிக் கல்வெட்டு முழுவதும் காணக்கூடியதாக உள்ளது. விஜயநகரச் சக்கரவர்த்தி கிருஷ்ணதேவராயர் செம்மையாக அமைக்கப்பட்ட தங்க நகைகளையே அதிகம் கொடையளித்துள்ளதாக கன்னடப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் சி.எஸ். வாசுதேவன் கூறுகின்றார்.

கிருஷ்ணதேவராயர், மற்றும் அவரது இரு மனைவிகளான திருமலாதேவி, சின்னாதேவி ஆகிய மூவரும் திருப்பதிக்கு அளித்த கொடைகளைப் பற்றி, 400 கல்வெட்டுக்கள் உள்ளதாக கூறும் பேராசிரியர் வாசுதேவன், ஸ்ரீ வெங்கடாஜலபதி மூர்த்திக்கான திருமுடி, உதரபந்தம், பாகுவளையம், திருசந்தனம், காரை, பாததாயலம், நவரத்ன ப்ரபாவளி போன்ற ஆபரணங்களும் பெருந்தொகையாக வழங்கப்பட்டமையைச் சுட்டிக்காட்டுகின்றார். இவை தவிர கோயிற் பயன்பாட்டுக்காக ஏராளமான தங்க மற்றும் வெள்ளிப்பாத்திரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

வெங்கடாஜலபதிக்கு அளிக்கப்பட்ட திருமுடியில் வைரங்களும் சிவப்பு இரத்தினக் கற்களும் அலங்காரத்திற்காக பதிக்கப்பட்டிருந்தனவென, ஸ்ரீ கிருஷ்ணதேவராயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான சேஷ சாஸ்திரி, கூறுகின்றார். இந்த வைரக்கற்கள் மற்றும் தங்கத்தின் எடை தொடர்பான தகவல்கள் கூட கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அவர் தெரிவிக்கின்றார்.

வெங்கடாஜலபதிக்கு அளிக்கப்பட்ட திருமுடியின் வைரங்களும் சிவப்பு இரத்தினக் கற்களும்

ஒவ்வொரு வெற்றியின் போதும் கிருஷ்ணதேவராயர் திருப்பதிக்கு வந்து, வெங்கடாஜலபதிக்கு நன்றி சொல்லும் வகையில், கொடையளிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார் என்று சுட்டிக்காட்டுகின்றார் இந்த விடயப்பரப்பில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட சேஷ சாஸ்திரி. பிரதாப ருத்திரனை போரில் வென்ற பின்னர் திருப்பதிக்கு வந்து கிருஷ்ணதேவராயர் அளித்த தானங்கள் குறித்த கல்வெட்டு ஒன்றினை, சேஷ சாஸ்திரி இதற்கு உதாரணமாக குறிப்பிடுகின்றார்.

திருப்பதி ஶ்ரீ வெங்கடாஜலபதி கோயிலின் செல்வச்செழிப்புக்கு இரண்டு வகையான மூலங்களே காரணமெனக் கூறப்படுகின்றது. ஒன்று நில மானியங்கள்; அடுத்தது நிதி சார் கொடைகள் ஆகும். பல்வேறு வகையான நிலமானியங்களும் கோயில் அதிகார மையத்தினால் சீராக முகாமை செய்யப்பட்டன. அந்த நிலங்களின் பெரும்பாலான விளைச்சல் கோயிலுக்கும் அதன் சிறு பாகம் விளைவித்தவர்களுக்கும் வழங்கப்பட்டன. நான்கு தசாப்தங்கள் நீடித்த கிருஷ்ணதேவராயரின் ஆட்சியில் சுமார் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இந்தக் கோயிலுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிதி சார் செல்வங்கள் அனைத்தையும் அதன் அதிகார மையம், வேறிடத்தில் முதலிட்டு மேலதிக வருமானத்தைப் பெறும் வாய்ப்பு அந்தக் காலத்திலேயே காணப்பட்டது. அரச குலத்தவர்களின் நன்கொடைகள் மட்டுமல்லாது வணிகர்கள் பலரும் கூட திருப்பதி கோயிலுக்கு செல்வங்களை வாரி வழங்கியதாக தெரியவருகின்றது. 1542 ஆம் ஆண்டிலிருந்து 1568 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் மட்டும், அரச குடும்பத்தினர் வழங்கிய கொடைகளை விட, பொதுமக்களும் வணிகர்களும் வழங்கிய நிதிக்கொடைகள் 8 சதவீதத்தினால் அதிகம் எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

திருமலைவாசனை தரிசிக்க காத்திருக்கும் பக்த அடியார்கள்

பண்டைய காலத்திலேயே பல பக்தர்களும் நெடுந்தொலைவிலிருந்து திருப்பதிக்கு தல யாத்திரை மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாகவும் அந்தக் கோயிலின் செல்வ நிலை அதிகரித்தது. மேலும் அக் காலத்திலேயே, தனது செல்வத்தை பல துறைகளிலும் முதலீடு செய்திருந்ததுடன், வேறுபட்ட வர்த்தகங்களிலும் செலுத்தி, வருமானத்தைப் பெருக்கிக் கொண்டுள்ளது. அந்தச் செல்வத்தின் அடித்தளமே, இன்றும் அந்தக் கோயில் செல்வச் செழிப்புடன் திகழ்வதற்கான ஆதாரமாக உள்ளது.

இலங்கை மட்டுமல்லாது, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் திருப்பதி ஶ்ரீ வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சென்ற வண்ணமே உள்ளனர். இன்றும் பல செல்வந்தர்கள், துறை சார் வல்லுநர்கள் திருப்பதி தரிசனம் தங்களது அதிஷ்டத்தை மென்மேலும் அதிகரிக்கும் என நம்புகின்றனர். இந்தியாவில் இன்றைய ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்திலேயே இந்தப் புகழ்பூத்த திருக்கோயில், இயற்கை எழில் கொஞ்ச வீற்றிருக்கின்றது. 1932 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட திருப்பதி திருமலா தேவஸ்தானச் சட்டத்தின் படி, அந்தக் கோயிலின் நிர்வாகமானது, திருப்பதி திருமலா தேவஸ்தானம் என்ற அமைப்பின் வசம் அளிக்கப்பட்டது. அதன் செல்வங்களையும் சொத்துக்களையும் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் பொறுப்பும் திருப்பதி திருமலா தேவஸ்தானத்திடமே உள்ளது.கோடிக்கணக்கான பக்தர்கள் இன்றும் திருப்பதி வெங்கடாஜலபதியின் காலடியில், பணக்கற்றைகளையும் தங்கத்தையும் கொண்டுவந்து கொட்டிச் சென்றபடியே இருக்கின்றார்கள். அவர்கள் எழுப்பும் “கோவிந்தா கோவிந்தா” கோஷம், கோயிலிலும் அதன் சுற்றுப்புறத்திலும் இரவும் பகலுமாய் எதிரொலித்த வண்ணமே இருக்கின்றது.

Related Articles

Exit mobile version