இலங்கையில் பௌத்த வரலாற்றை தோற்றுவித்த மன்னன்

மகாமேகவனத்தின் கொடிவீட்டில் அமர்ந்தபடி, இலங்கையின் வரலாற்றில் மாறாப்பெருமையும், முக்கியமும் பெற்ற பண்டுகாபய மன்னனின் வாரிசான மூத்தசிவன் தன்னுடைய வாழ்வின் இறுதிநாட்களை எண்ணி காத்துக்கொண்டுருந்தார். மூத்தசிவனுக்கு 10 புதல்வர்களும் 2 புதல்வியரும் இருந்தனர். மரபுரிமையின் பிரகாரம் தந்தைக்கு பின்பு தலை மகனையே ஆட்சியை தொடர்ந்திருக்க வேண்டும். எனினும் இங்கு அவ்வாறு நிகழவில்லை. அநுராதபுர ஆட்சியின் வரலாற்றில் அவருக்கிணையான அமைதியான ஆட்சியை பிறிதொரு மன்னரும் மேற்கொண்டதில்லை. 60 வருடங்களாக தன்னுடைய ஆட்சியில் நிலவிய அமைதியும், சௌபாக்கியமும் தனக்கு பின்னும் தொடர்வதற்கு உரியதோர் அரசியல் வாரிசை ஆட்சியில் ஏற்ற வேண்டிய சந்தர்ப்பம் நெருங்கிக்கொண்டிருந்ததை மூத்தசிவன் உணரத்தலைப்பட்டார். தன் மைந்தருள் திறமையும் அறிவும் மிக்கவனான தீசன் எனும் இரண்டாவது புதல்வனை அடுத்த அரசனாக பிரகடனம் செய்து மூத்தசிவன் தன்னுடைய அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக்கொண்டு இறையடி சேர்ந்தார்.

கி.மு.307 இன் மார்கழி பூர்ணிமை அன்று தீசன் இலங்கையின் புதிய மன்னனாக பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டான். தீசனின் ஆட்சியில் மக்கள் சொல்லுமளவுக்கு எந்த குறைகளும் இல்லாது இனிதாக வாழ்ந்து வந்தனர்.  தீசனின் ஆட்சியில் இலங்கை தீவின் பல பகுதிகளிலும் சிறப்பான நன்னிமித்தங்கள் தோன்றின. பல்லாண்டுகாலமாக நிலமகளின் மடியில் புதையுண்டிருந்த உலோகங்களும், மாணிக்கங்களும் தன்னியல்பாக வெளிப்பட்டன. செல்வங்கள் நிறைந்த பெரும் நாவாய் ஒன்று சூறைக்காற்றால் அடிக்கப்பட்டு சிதைவுண்டு இலங்கையின் கரைகளை அடைந்தது. தீவின் தலைநகரான அனுராதபுரத்தில் இருந்து தெற்கு திசையில் இரண்டு யோஜனா தொலைவில் அமைத்திருந்த சத்தாமலை எனும் பகுதியில் தேர்த்துலாவின் தடிப்பை கொண்ட தங்க,வெள்ளி,பலவர்ண பூக்களின் நிறத்தில் விளைந்த மூன்று பெரும் மூங்கில்கள் தோன்றின. கயா, ஹாயா, ரதா, அமலகி, அங்குலி, வைத்தக, கும்பக், வளைய, பரகதிக எனும் எண்வகை முத்துக்களும் ஒரே நாளில் கரையொதிங்கின. இதனை கண்ட மக்கள் இவ்வனைத்து செல்வங்களையும் ஒன்று திரட்டி அனுராதபுரத்திற்கு கொண்டுவந்து மன்னன் தீசனுக்கு அன்பளித்தனர். அவற்றை மனமுவந்து வாங்கிக்கொண்ட தீசன் அச்செல்வங்களின் மதிப்பை உணர்ந்து அவற்றை தன்னுடைய மனதுக்கினிய நண்பனுக்கு அளிப்பதே பொருத்தமானதாக அமையும் என எண்ணினான்.  அந்நண்பன் உலக வரலாற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்தியாவின் பெரும் சக்ரவர்த்தியான அசோகர்.

அசோக மன்னன் தேரோட்டும் காட்சி:
பட உதவி : விக்கிபீடியா

அசோகரை சந்தித்து பரிசில்களை கையளிப்பதற்காக  விசேட தூதுக்குழு ஒன்று ஒதுக்கப்பட்டது. அசோகருக்கும் தனக்கும் நிலவிய நட்பினை மனதில் நிறுத்தி, அக்குழுவின் தலைவனாக தன்னுடைய சொந்த மருமகனும் முதன்மை அமைச்சனுமான மகா அரிட்டனை நியமித்தார். மேலும் அரசின் பிரதம புரோகிதர், அரசின் தனாதிகாரி, அமைச்சர் ஒருவர் என மொத்தம் நான்கு பேர் அடங்கிய தூதுக்குழுவாக அது அமைந்தது. மூவகை இரத்தினங்கள், சத்தாமலையில் இருந்து பெறப்பட்ட அரசுதேருக்கான மூன்று மூங்கில் துலாக்கள், வலம்புரி சங்குகள், எண் வகை முத்துக்கள் மற்றும் மேலும் பல செல்வங்களுடன் தூதுக்குழுவானது ஜம்புகோளப்பட்டினத்தின் (தற்போதைய யாழ்ப்பாணம்) துறையில் இருந்து பயணப்பட்டனர்.

பதினான்கு நாட்கள் பயணத்தை தொடர்ந்து, மௌரிய சாம்ராஜ்யத்தின் தலைநகர் பாடலிபுத்திரத்தை அடைந்தனர் தீசனின் தூதுக்குழுவினர். லங்காபுரியில் இருந்து தன் அன்பு நண்பன் அனுப்பிய அனைத்து பரிசல்களையும் மனமுவந்து ஏற்றுக்கொண்ட அசோக சக்ரவர்த்தி தூதுக்குழுவினர்க்காக தனிமாளிகை ஒன்றை ஒதுக்கி விருந்தினரை சிறப்பாக கவனித்து கொண்டார். அடுத்துவந்த நாட்களில் தன்னுடைய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மகா அரிட்டனுக்கு ‘சேனாபதி’ என்ற பட்டத்தையும், பிராமனருக்கு ‘புரோகிதர்’ பட்டத்தையும், தனாதிகாரிக்கு ‘தண்டநாயகன்’ பட்டத்தையும், அமைச்சருக்கு ‘சேதி’ பட்டத்தையும் வழங்கி கௌரவித்தார். ஐந்து மாத காலம் பாடலிபுத்திரத்தில் தங்கிய அரிட்டனின் குழுவினர் நாடு திரும்பும் போது அசோகர் தீசனுக்காக பட்டாபிஷேக வஸ்துக்களை பரிசில்களாக அனுப்ப முடிவு செய்தார். அதன் பிரகாரம் யாக் மாட்டின் மயிரால் செய்யப்பட்ட பீலிவிசிறி, மகுடம், உடைவாள், தங்கப்பாதுகைகள், வெண்குடை, தலைப்பாகை, காதணிகள், சங்கிலிகள், பொற்குடங்கள், சந்தனக்கட்டைகள், உயர் பட்டாலான துவாய்கள், நாகர்களிடம் இருந்து பெற்ற ஆபரணங்கள், வாசனைத்தைலங்கள், செம்மண், கங்கைநதி நீர், அனோத்தை ஏரி நீர், தங்கப்பாத்திரங்கள், மதிப்புமிக்க அம்பாரி, அரிய மூலிகைகள், பழங்கள், நூற்றியறுபது மூட்டை மலையரிசி என பல்வேறு பரிசில்கள் தயார்செய்யப்பட்டன. இவற்றுக்கு மேலாக தீசனுக்காக மௌரிய அரசகுலத்தில் பிறந்த இளவரசி ஒருத்தியும் பரிசாக வழங்கப்பட்டது அவர்கள் நட்பின் உறுதியை வெளிப்படுத்தி காட்டியது. இந்த பரிசில்களுடனும், தீசனுக்கான ஒரு தனிப்பட்ட செய்தி ஓலையுடனும் அரிட்டனின் குழு தாமிரலிப்தி (தமியிற்றியா) துறையில் இருந்து புறப்பட்டு கடல்வழியாக தாய்த்தேசம் திரும்பினார்கள்.

பாடாலிபுரத்தில் இருந்து மீண்ட அரிட்டன் தீசனை சந்தித்து அசோகரின் ஓலையை கையளித்தான். அவ்வோலை இலங்கையின் வரலாற்றில் பெரும் மாற்றத்தை உருவாக்கவுள்ளதை தீசனோ, அரிட்டனோ அறிந்திருக்கவில்லை. ஓலையை பிரித்த தீசன் அவற்றில் பொதிந்திருந்த வார்த்தைகளின் மீது கண்களை ஓட்டினான்.

“நான் புத்தரின் அடிமை, அவரின் தர்மத்திலே சரணடைந்தவன். மனிதருள் சிறந்தவனே! நீயும் புத்தம்,சங்கம்,தர்மம் எனும் மும்மணிகளை ஏற்று அவரிடம் சரணடைவாயாக”

கலிங்க யுத்தத்தின் பின் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்த அசோகர் பௌத்த மதத்தை தழுவினார். அது தன்னளவில் ஏற்படுத்திய பல மாற்றங்களை உணர்ந்து பௌத்தத்தை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் பலநாடுகளுக்கு தர்ம மஹா மாத்ராக்கள் எனும்  தூதுவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இதன் ஒரு அங்கமாகவே இலங்கைக்கான இந்த செய்தியும் காணப்பட்டது. உடனடியாக எந்த முடிவையும் எடுக்க விழையாத தீசன் இதுகுறித்தான ஆலோசனையை தள்ளிவைத்தான். அசோகரின் பரிசில்களை கொண்டு மீண்டும் மாகுடதாரண விழாவை நடத்த நன்னாள் குறிக்கப்பட்டது. மௌரிய குலா இளவரசியை முறைப்படி திருமணம் செய்து கொண்ட பின்பு, அசோகர் தீசனுக்கு வழங்கிய ‘தேவநம்பிய’ என்ற பட்டதுடன் மௌரிய முறையின் படியே முடிசூட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இலங்கையின் ஆட்சிக்கட்டில் முதல் முறையாக மௌரிய அரசவம்சம் நிலைகொண்டது இந்நிகழ்வுக்கு பின்னேயாகும். அன்றில் இருந்து அவன் தேவநம்பிய தீசன் எனவே அனைவராலும் அறியப்பட்டான்.

தேவநம்பிய தீசன் சிலை

தேவநம்பிய தீசனின் ஆட்சிக்காலம் வரை இலங்கையில் இந்துமத வழிபாடுகளும், நம்பிக்கைகளும் வலுவாக நிலைகொண்டிருந்தன. மக்களிடையே லிங்கவழிபாடு பிரதானமாக இருந்ததுடன், நாகதீபம் உள்ளிட்ட பகுதிகளில் பௌத்தமும், இன்னும் சில பகுதிகளில் சமணம் மற்றும் பழந்தமிழ் வழிபாடான ஆசிர்வகமும் வழக்கத்தில் இருந்தன. பூர்வீக்குடிகளான நாகர்கள் நாகவழிப்பட்டையும், இயக்கர்கள் ஆவி வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தனர். வைகாசி மாத பௌர்ணமி தினமொன்றில் தேவநம்பிய தீசன் நாற்பதாயிரம் பேர்கொண்ட பெரும் பரிவாரத்துடன் மிசாகபர்வதத்தின் (மிகிந்தலை) அடிவாரத்திற்கு வேட்டையின் பொருட்டு விஜயம் செய்திருந்தார். விதியின் வலிமையை வெல்லும் ஆற்றல் மானுடருக்கு அரிது, லங்காபுரியின் வரலாற்றில் பாரிய மாற்றத்தை உருவாக்க விதியானது அன்று மாரீசன் என மாயமான் உருக்கொண்டது. மிரளும் மணிவிழி கொண்ட அந்த மானை தன் வில்லுக்கு இறையாக்குவதன் பொருட்டு விரட்டிச்சென்றான் தீசன். மாரீசன் மாயமான் என அது கணப்பொழுதில் மின்னிமறைந்து ஓடியவண்ணமே இருந்தது. அரசனின் கைவில்லில் இருந்து தன்னுயிரை காக்க அம்மான் அம்பத்தாலா சிகரத்தை அடைந்தது. எண்ணித்துணிந்த கருமத்தை நிறைவுற்றத விரும்பிய மன்னனோ மானை தொடர்ந்து சிகரத்தை அடைந்தான்.

கனிந்த பார்வையும் காவி உடையும் தரித்த பிக்குவின் காலடிகளை அடைந்து தன்னுயிருக்கு அபயம் கோரியது அம்மாயமான். சிகரத்தை அடைந்த அரசனை நோக்கி ‘தீஸா! என்னருகில் வா’ என்றோர் குரல் கட்டளையிட்ட்டது. நாட்டின் அரசனை பெயர் சொல்லி விளிக்கும் ஆணவம் இயக்கர்களுக்குரியதே என எண்ணிய அரசன் தன் வில்லை குரல் வந்த திசை நோக்கி உயர்த்தினான். வதனத்தில் முறுவலுடன் ‘நாங்கள் தர்மராஜாவாகிய அசோகரின் தூதுவர்கள். உன்மீது கொண்ட கருணையின் விளைவால் இங்கு வந்தோம்’ என் கூறினார் அந்த பிக்கு. அவர் தன்னுடைய மதிப்பிற்குரிய நண்பனின் புதல்வனான மகிந்தர் என்பதை அரசன் அறிந்துகொண்டான். மிசாகபர்வதத்தின் உச்சியில் மன்னனின் அறிவின் திறமையை கண்டறிய மகிந்தர் சிலவினாக்களை தொடுத்தார். அரசன் அவற்றுக்கு அளித்த விடைகளால் திருப்தி அடைந்து கள்ளபத்தி பதோபம் என்ற சூத்திரத்தை மன்னனுக்கு உபதேசம் செய்தார். அந்நாளில் அரசனின் பரிவாரத்தில் இருந்த நாற்பதாயிரம் பேரும் பௌத்தமத்தை ஏற்றுக்கொண்டனர்.

அடுத்த நாள் மகிந்தரும் குழுவினரும் ஆகாயமார்க்கமாக அனுராதபுரத்தை அடைந்தனர். அவர்கள் காலடிபதிந்த இடத்தில் பிற்காலத்தில் பத்மன சைத்தியம் என்ற விகாரை அமைக்கப்பட்டது. அரண்மனையில் விருந்தினை முடித்துக்கொண்ட மகிந்தரின் குழுவினருடன் அரச குடும்பத்தினருக்கான விசேட கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் மன்னனின் தம்பியும், யுவராஜனுமான மகாநாகனும், அவனின் மனைவி அனுலா தேவியும் கலந்துகொண்டனர். விடயம் அறிந்த அனுராதபுரத்தின் மக்களும் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். மக்களின் வசதிக்காக அரண்மனை பெருமுற்றமும், யானைக்கொட்டிலும் சுத்தம் செய்து ஒருக்கங்கள் செய்யப்பட்டது. எனினும் அவ்விடமும் போதாமையால் அரண்மனைக்கு தெற்கே இருந்த புகழ்பெற்ற மகாமேகவனம் என்ற பூங்காவில் தர்மோபதேசத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மகாமேகவனத்தில் தொடர்ச்சியாக போதனைகள் நடைபெற்றது. மகிந்தர் தலைமையிலான குழு மகாமேகவனத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கதம்ப நதிக்கரையில் தித்தாவ சைத்தியம் அமைக்கப்பட்டது. பிக்குகள் தங்குவதற்கான போயாமனை, தங்கும் மனை, அன்னசாலை முதலியவை ஒருக்கப்பட்டது. மக்கள் தொடர்ச்சியாக மேகவனத்துக்கு வந்தமையால், பௌத்த வழிபாட்டின் பொருட்டு அப்பூங்கா மகிந்தருக்கு கையளிக்கப்பட்டது. மேகவன வளாகத்தில் மகிந்ததேரர் குறித்து தந்த இடங்களில் மகாவிகாரை, தூபாராம மற்றும் ஸ்ரீ மகாபோதி விருட்சம் ஆகியவை அமைக்கப்படுவதற்கான வேலைகள் தொடங்கின. மகாமேகவனம், மகாவிகாரை வளாகம் என மாறியது.

மிகிந்தலை மகாவிகாரை பட உதவி: ccf.gov.lk

*மன்னர் மூத்தசிவனின் ஆட்சிக்காலத்திலேயே மகாமேகவன பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவிற்கான நிலம் அரண்மை யானைகளால் தெரிவுசெய்ப்பட்டவுடன், ஆகாயத்தில் கருமேகங்கள் பல சேர்ந்து மக்கள் காணாத பெரும் மழையை கொட்டித்தீர்த்தது. இந்நன்னிமிதத்தை கருத்தில் கொண்டு அப்பூங்கா மகாமேகவனம் (பெரும் முகில்களால் ஆசிர்வதிக்கப்பட்ட வனம்) என பெயரிடப்பட்டது.

மழைக்காலத்தை கழிக்கும் எண்ணத்துடன் சேத்திய பர்வதத்தில் தங்கியிருந்த மகிந்ததேரரை கண்டு அரிட்டனும் அவனது 55 தோழர்களும் பிக்குகளாக அபிடேகம் செய்துகொண்டனர். இலங்கையின் முதல் பிக்குசாசனம் அமைக்கப்பட்டது. அங்கு பிக்குகள் மழைக்காலத்தை கழிக்க 32 கற்குகைகள் கட்டப்பட்டது. சிலகாலத்தில் மகிந்தரின் முயற்சியால் கயாவில் இருந்து புத்தரின் தாடையெழும்பு, பிச்சைப்பாத்திரங்கள் என்பன இலங்கைக்கு பெறப்பட்டன. புத்தரின் தாடையெழும்பை கொண்டு இலங்கையின் முதல் தாதுகோபமான தூபாராம தூபி அமைக்கப்பட்டது.

தூபாராம விஹாரை
பட உதவி: lankapura.com

புத்தர் ஞானம் அடைந்த போதிமரத்தின் கிளையை பெற்றுவர தீசன் தனது அமைச்சனும், முதல் பிக்குவுமான அரிட்டன் தலைமையிலான குழு மீண்டும் பாடாலிபுரத்துக்கு சென்றது. சங்கமித்ரா பிக்குனியின் தலைமையில் வெள்ளரசு கிளை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. அவர்களுடன் 18 பிக்குனிகள், 18 அரசகுலத்தவர்கள், 18 பிரபுக்கள், 8 பிராமணர்கள், 8 வர்த்தக குடும்பங்கள், யாதவர்கள், நெசவாளர்கள் என பெரியதொரு குழு இலங்கையை அடைந்தது. ஜம்புகோலத்தை அடைந்த பிக்குனியின் கப்பலை தேவநம்பிய தீசன் தானே சென்று வரவேற்றான்.

சங்கமித்ரவினால் கொண்டுவரப்பட்ட வெள்ளரசு மரம் : விக்கிபீடியா

அரசன் தானே வெள்ளரசு கிளையை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வந்தான். அனுராதபுரத்தின் தெற்கு வாயில் வழியாக மேகவன வளாத்திற்குள் கொண்டுவரப்பட்ட போதிக்கிளை 16 அரச பிரதானிகளால் மகிந்தர் நிர்ணயித்த இடத்தில் நடப்பட்டது. போதிமரம் செழித்து வளர்ந்ததும் நாட்டின் எட்டு பகுதிகளுக்கு அதன் கிளை கொண்டு சென்று நடப்பட்டது. மகாராணி அனுலாவும் அவளின் 500 தோழிகளும் சங்கமித்ரா மூலம் பிக்குனிகளாக அபிடேகம் செய்துகொண்டு இலங்கையில் பிக்குனி சாசனத்தை ஏற்படுத்தினர்.

ஈழத்தீவை நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறான். “கோ எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே” என்பதற்கு பொருந்தி தீசனின் தனிப்பட்ட முடிவினால் இலங்கையின் முழுவரலாறும் மாற்றி அமைக்கப்பட்டது.

coverphoto credit : uktamilnews.com

தகவல்கள் உதவி : மகாவம்சம்

Related Articles

Exit mobile version