சிலோன் ராபின் ஹூட் – மாவீரன் சூர சரதியல்

மாவனெல்லவில் 6 ஏக்கர் பரப்பளவில், ஒரு தனித்துவமான செயற்கை கிராமம் உள்ளது.  இலங்கை ராபின் ஹூட் என்று அழைக்கப்படும் வீரன், உத்துவன்கந்த சூர சரதியலின் வாழ்வின் தருணங்களை சிற்பங்களுடன் எடுத்துக்காட்டும் ஒரு கலைச்சின்னமாக இக்கிராமம் திகழ்கின்றது. இது வரலாறு, இயற்கை, சாகச மற்றும் வேடிக்கை ஆகியவற்றின் அம்சங்களின் கலவையாகும்.  

எங்கு உள்ளது உத்துவன்கந்த?

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி செல்லும் சாலையில்  கடல் மட்டத்திலிருந்து 1,410 அடி உயரத்தில் புகைபோக்கி போன்ற ஒரு பாறையின் காட்சியை காணலாம். இந்த பாறை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு சரதியலின் மறைவிடமாக செயல்பட்டது.

கண்டி நோக்கி செல்லும் சாலையில்  கடல் மட்டத்திலிருந்து 1,410 அடி உயரத்தில் புகைபோக்கி போன்ற ஒரு பாறையின் காட்சி

கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லவில் அமைந்துள்ள ஒரு குக்கிராமம் உத்துவான. இக்கிராமத்தை பார்வையிடுவது 19 ஆம் நூற்றாண்டில்  சிலோனில் சரதியலின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக அமைகிறது.        

யார் அந்த சரதியல்?

19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவத்தில்  அடக்குமுறை சுதந்திரத்திற்காக போராடிய ஒரு கிளர்ச்சியாளர்தான் உத்துவன்கந்த சூர சரதியல். தீகிரிகேவகே சரதியல் அப்பு என்பது இவரது இயற்பெயர். புகையிலை வர்த்தகரொருவரின் மூத்த மகனாக சிலாபத்தில் உள்ள ஹல்டன்துவ என்ற கிராமத்தில்1832ம் ஆண்டில்  பிறந்தார். 

தீகிரிகேவகே சரதியல் அப்பு

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்று அப்பாவி மக்களை துன்புறுத்தியவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஒரு மாவீரனாக உத்துவன்கந்த சரதியல்  நாட்டின் வரலாற்றுப் புத்தகத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளார்.

சரதியல் கிராம உருவாக்கம்

தொழில் ரீதியாக ஒரு மருத்துவரான Dr. கமகே தீவிரமான சுற்றுலாப் பயணியும் ஆவார். இதன் விளைவாக ஒரு வரலாற்றுக் கதையை காட்சி மூலம் வடிவமைத்தல் அதனை இன்னும் இலகுவாக புரிந்துகொள்ள முடியுமே என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. 

Dr. கமகே
பட உதவி : 2.bp.blogspot.com

உலகெங்கிலும் உள்ள ஏராளமான இடங்களுக்கு பயணித்திருப்பதால் ஏன் ஒரு கிராமத்தையே உருவாக்கக் கூடாது என்ற யோசனை அவர் மனதில் தோன்ற அதற்கான முயற்சிகளை செய்ய ஆரம்பித்தார். கல்பூஷண மில்டன் ஜெயபால அவர்களின் ஒத்துழைப்புடன் கிராமத்தை உருவாகும் பணிகளை ஆரம்பித்தார். 

2008 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2012 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த கிராமம் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. 

சுற்றுலா அனுபவம் எப்படி இருக்கும்? 

நீங்கள் சரதியல் கிராமத்திற்குள் நுழையும்போது, ​​பெமினிவத்தவின் ஆராச்சி (தலைவர்) உங்களை வரவேற்பார்.  இக்கதாபாத்திரத்தை ஜெயலால் அவர்கள் சிறப்பான முறை ஏற்று நடித்துவருகிறார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சரதியல் கிராமத்திற்கு வருகை தந்த பயணிகள் சத்திரத்தில் ஓய்வெடுக்கலாம்.

கிராமத்திற்குள் நுழையும்போது ​​பெமினிவத்தவின் ஆராச்சி (தலைவர்) உங்களை வரவேற்கும் காட்சி

அலுத் நுவர விகாரையின் பிரதிபலிப்பாக புத்த சாசனத்தின் காவல் தெய்வம் என்று நம்பப்படும் தெடிமுண்ட தெய்யோவுக்கு மரியாதை செலுத்திய பின்னர் சுற்றுப்பயணம் தொடங்குகிறது.    

அங்காடி

ஹென்ட்ரிக் அப்புஹாமியின் தேநீர் விடுதி (kopi kade)

சரதியல் கிராமத்தில் உள்ள கடைகள் பலவகை செயற்பாடுகளைக் கொண்டதாக காணப்படும். ஹென்ட்ரிக் அப்புஹாமியின் தேநீர் விடுதியில் ஒரு நாளில் நடைபெறும் பொதுவான விடயங்களை சித்தரிக்கும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்கள் அக்காலத்தில் மக்களிடையே காணப்பட்ட இன நல்லிணக்கத்தையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கின்றன.     

ஆராச்சியின் வீட்டிற்கு வருகை 

ஜோதிடரின் வீடு, தச்சு வேலைக்காரர் பொற்கொல்லரின் பட்டறை மற்றும் குயவன்

ஜோதிடரின் வீடு, தச்சு வேலைக்காரர் பொற்கொல்லரின் பட்டறை மற்றும் குயவன் ஆகியோரைக் கடந்து கிராமக் காட்சிகளுடன் , ​​ஆராச்சியின் வீட்டிற்கு வரவேற்கப்படுகின்றோம். 

கிராம தலைவரின் சுன்னாம்பு பூசப்பட்ட வீடு, ஓடுகளாலானா கூரை மற்றும் ஒல்லாந்தர் வடிவ நாற்காலி

 அக்காலத்தில், கிராமத் தலைவர்களுக்கு மட்டுமே வீடுகளிற்கு சுண்ணாம்பு பூசவும், ஓடுகளாலானா கூரை இடவும் அனுமதி வழங்கப்பட்டது. அங்கு அவரின் திண்ணையில் ஒல்லாந்தர் வடிவ நாற்காலி ஒன்று உள்ளது. கிராம பிரச்சினைகளை கையாளும் போதும், சர்ச்சைகளை தீர்க்கும் போதும் இதில் அமர்ந்தே செயல்படுகிறார். 

தண்டு கடய ( Dandu Kadaya) எனும் சித்திரவதை சாதனம்

அவரின் வீட்டின் வெளியில் தண்டு கடய ( Dandu Kadaya) எனும்  ஒரு சித்திரவதை சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவறிழைக்கும் ஆண்களுக்கு அக்காலத்தில் விதிக்கப்படும் தண்டனை முறையாக பயன்படுத்தப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் வீடுகளின் தோற்றம் 

19 ஆம் நூற்றாண்டில் பாரம்பரிய களிமண் வீடுகள் தியாபிலா, வட்டபிலா மற்றும் கோட்டாபிலா என அழைக்கப்படும் வெவ்வேறு பிரிவுகளைக் கொண்டிருந்தது. வீட்டைக் காக்க குடும்பத்தில் உள்ள ஆண்கள் தூங்கும் இடம் கோட்டாபிலா. தியாபிலாவில், பார்வையாளர்களின் தாகத்தைத் தணிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய களிமண் குழம்பு உள்ளது. முக்கிய ஆவணங்கள் கொண்ட பெட்டியை வைக்க களிமண் சுவரின் உள் அமைக்கப்பட்ட  அலமாரி உள்ளது, அதில் மதிப்புமிக்க பொருட்கள் வைக்கப்பட்டன. வீட்டிற்கு வெளியே ஒரு நெல் களஞ்சியம் உள்ளது.

நெற்பயிர்களை விதைத்து  அறுவடை செய்யும் காட்சிகள்

அக்காலத்தில் நெற்பயிர்களை முதன்முறையாக அறுவடை செய்யும்போது, ​​ ஆண்கள் அவற்றை வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள், பெண்கள் அதை சுவருக்கு எதிராக தொங்கவிட ஒரு பாயை நெசவு செய்கிறார்கள். இன்றும், நெற்பயிர்கள் ஒரு பாயில் இடப்பட்டு கதவின் சட்டகத்தில் சொத்தின் அடையாளமாக அல்லது சில நேரங்களில் வீட்டு அலங்காரத்தின் ஒரு பகுதியாக தொங்கவிடப்பட்டுள்ளது. 

சுற்றுப்பயணத்தின் இரண்டாம் பகுதி

அவர்களில் அன்றாட வாழ்க்கை முறைகள்

சரதியலின் குழந்தைப் பருவத்திற்கும் கிளர்ச்சி நாட்களுக்கும் அழைத்துச் செல்கிறது. வழியில், டிக்கிரி மெனிகேவின் சமையலறை மற்றும் சலவை மனிதனின் வீடு, அந்த நாட்களில் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது மற்றும் வர்த்தகம் எவ்வாறு செழித்தது என்பதை விளக்குகிறார் ஆராச்சி.

சூர சரதியல்

பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக கடுமையாக போராடி அவர்களால் ஒரு கொள்ளைக்காரனாக முத்திரை குத்தப்பட்டார்.

சூர சரதியல் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட காட்சி

ஆனால், மக்களால் சூர சரதியல் என்று அழைக்கப்பட்ட அவரின் பெயரும் துணிச்சலும் உத்துவன்கந்த பாறை சிகரங்களில் எதிரொலிக்கின்றன.அவர் சட்டவிரோதமானவர் அல்ல, நாயகன் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

காலனித்துவ எதிர்ப்பிற்க்காக போராடி தனது வாழ்வையும் உயிரையும் அர்ப்பணித்த ஒரு கிளர்ச்சியாளனுக்கு இந்த கிராமம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  

முகப்பு படம் : மாவீரன் சூர சரதியல் கைதுசெய்யப்பட்டு கொண்டுபோகும் காட்சி

Related Articles

Exit mobile version