உலகின் இரண்டாவது மின்சாரம் பெற்ற நகரம்: கோலார் தங்க வயல் – KGF

எல்டோராடோ என்பது ‘தங்கத்தால் ஆன நகரம்’ எனப்பொருள்படும். இந்த எல்டோராடோ எனும் வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் தென்னமெரிக்க பழங்குடியினர். ஒட்டோமன் பேரரசிடம் தோல்விகண்ட ஐரோப்பிய நாடுகள் புதிய கடல் வணிகப்பாதைகளை தேடும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது கண்டறியப்பட்டதே அமெரிக்க பெருநிலப்பரப்பு. இயற்கையுடன் ஒன்றி செல்வச்செழிப்புடன் வாழ்ந்த பல பழங்குடியினர் கடலோடிகளான ஸ்பானியர்களின் கைகளுக்கு சிக்குண்டனர். அப்பழங்குடிகளிடம் இருந்து ஸ்பானியர்கள் கேட்டறிந்ததே எல்டோராடோ எனும் தங்க நகரம் குறித்த கதைகள்.

தங்கத்துக்குரிய மதிப்பு உலகத்தில் எந்நாளும் குறைந்தது இல்லை, இவ்வாறிருக்க ஒரு தங்கநகரமே இருக்கிறது என செவியுற்ற ஸ்பானியர்கள் அந்நகரை கண்டடைய பெரு முயற்சியில் இறங்கினர். வழிநெடுகிலும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியதாயிற்று. அந்நியர்களை எதிர்த்த பழங்குடிகள் கொன்று அழிக்கப்பட்டனர். ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பிலும் சேதம் அநேகம். எனினும் செலுத்திய உயிர் விலைக்கும், பொருள்விலைக்கும் பதில் கிடைத்தபாடில்லை.  எல்டோராடோ ஒரு கனவு நகரமாகவே போனது. ஆனால் நினைவுலகில் ஒரு தங்கநகரம் இருந்தது. அது கனவு நகரமான எல்டோராடோவில் இருந்து வெகுதொலைவில் தக்கண பீடபூமிக்கு அடியில் உறங்கிக்கொண்டு இருந்தது.

1800களில் நடந்தது…

1800 களின் ஆரம்பத்தில், இந்தியாவில் விரிந்துவந்த தங்களின் ஆட்சியை இலகுபடுத்தவும், வரிவசூலிப்பை மேற்கொள்ளவும் பிரித்தானிய அரசு இந்திய நிலங்களின் அளவையும் எல்லைகளையும் சர்வே எடுக்க ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவுக்கு தலைமை தாங்கியவர்  லெப்ட்டினல் ஜான் வோரன். மைசூர் சமஸ்தானத்தின் கிழக்கு எல்லைகளில் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த போது வோரனின் காதுகளுக்கு ஒரு தங்கச்செய்தி கிட்டியது. ஆம் அது தங்கச்செய்தியே தான். தற்கால பெங்களூரில் இருந்து கிழக்கு பக்கமாக 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோலார் எனும் பகுதி. இந்த பகுதியில் மண்ணுக்கடியில் அதிகளவு தங்கம் இருப்பதாகவும் அதை மக்கள் எடுக்க முயற்சித்த வண்ணம் உள்ளதாகவும் பல செய்திகள் அவரை வந்தடைந்தன.

உடனே கோலார் நோக்கி சென்றார் வோரன். நிலமெங்கிலும் மண்வெட்டிகள் பதம்பார்த்த அடையாளங்கள் இருந்தன.  மக்களின் இந்த தங்க ஆர்வதுக்கு காரணம் இல்லாமல் இல்லை. கோலாரின் மண்ணை கைநிறைய அள்ளினாலே கணிசமான அளவு தங்கம் கிடைக்கும் என பலவாறு கதைகள் காற்றில் பறந்தவண்ணம் இருந்தது. இதுவே அந்த மக்களை தங்கம் தேடி மண்ணைத்தோண்ட வைத்தது. தேடியவர்கள் எவருக்கும் பெரிதாய் ஒன்றும் கிடைக்கவில்லை. சிலருக்கு நெல்மணியளவு தங்கம், பலருக்கு கைகள் நிறைய புழுதி. கோலாரின் வரலாற்றையும், அதன் தங்கம் குறித்து நிலவிய கதைகளையும் அறிந்த வோனர் 2 ஆண்டுகள் அங்கேயே தங்கி கோலார் பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதினார்.

கட்டுரையோடு நின்றுவிடாமல் கோலாருக்கு அருகே இருந்த பழைய மாரிக்குப்பம் பகுதி இளைஞர்களை சேர்த்துக்கொண்டு தங்கச்சுரங்க வேலைகளை ஆரம்பித்தார் வோரன். எனினும் அதில் அவரால் வெற்றியை காணமுடியவில்லை. வோரனின் ஆய்வுக்கட்டுரை வெளியானதை தொடர்ந்து சில ஆங்கிலேய அதிகாரிகளும், பிரித்தானிய சுரங்க முதலாளிகளும் வோனரின் ஆய்வுத்தொகுப்பை அடிப்படையாகக்கொண்டு தங்கவேட்டையை நடத்தினர். வோரனின் ஆய்வுத்தொகுப்பின் படி கோலாரில் நிச்சயமாக டன் கணக்கில் தங்கம் உள்ளது. அதை அவர் விஞ்ஞான பூர்வமாக விளக்கியிருந்தார். எனவே பணத்தைவாரி இறைத்து மண்ணைச்சலித்தனர் ஆங்கிலேயர்கள். இருந்தும் பயன் ஒன்றும் இல்லை. ‘ஒன்றை போட்டு பத்தை எடுக்கலாம்’ என நினைத்த ஆங்கிலேயருக்கு ‘நூறு போட்டால் தான் ஒன்றேனும் தருவேன்’ என ஏமாற்றத்தை பரிசாக தந்தது கோலார். செலவுக்கு ஏற்றவாறு துளியளவும் லாபம் கிடைக்காததால் தங்களின் ஆசைகளையும், ஆட்களை மூடைக்கட்டிக்கொண்டு முதலாளிகள் நாடு திரும்பினர். எப்படியோ  இந்த முறையும் தப்பிவிட்டோம் என்ற நிம்மதியில் கோலாரின் தங்கப்படிவங்கள் மண்ணுக்குள் சுருண்டுகொண்டன.  

 KGF சுரங்கம்
படஉதவி : www.eastcoastdaily.com

நவீன சுரங்க நிர்மாணம்

பிரித்தானிய ரோயல் ஆர்மியில் சிப்பாயாக பணிசெய்த மைக்கல் ஃபிட்க்ரோல் லவேல் 1871 இல் கோலார் தங்க விவகாரம் குறித்து கேள்விப்பட்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துசேர்ந்தார். வோரனின் ஆய்வுக்கட்டுரையின் வழிகாட்டலுடனும், உள்ளூர் மக்களின் துணையுடனும் தன்னுடைய தேடலை லவேல் ஆரம்பித்தார். இந்த முறை தேடல் வீண்போகவில்லை. கோலாரின் மண்ணை நீரில் அலசிப்பார்த்த லவேலுக்கு கோலார் பூமியில் புதைந்து கிடந்த தங்கத்தின் அளவு புரிய ஆரம்பித்தது. கோலாரில் ஒரு நவீன சுரங்கம் அமைக்கும் எண்ணம் லவேலுக்கு உருவானது. கோலார் நிலமானது மைசூர் சமஸ்தானத்துக்கு உரியதாக இருந்தமையால் லவேல் சமஸ்தானத்திடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. 1873 ஆகஸ்ட் 20இல் லவேல் சமஸ்தானத்துக்கு ஒரு உரிமவிண்ணப்பத்தை முன்வைத்தார். அதன்படி கோலாரில் அதிகளவு நிலக்கரியும், மக்னீசியமும் கிடைப்பதாகவும், அவற்றை அகழ்ந்தெடுத்து விற்பனை செய்யவுள்ளதாகவும் சமஸ்தானத்திற்கு அறிவிக்கப்பட்டது. தங்கம் குறித்து வாய்திறந்தால் உரிய அனுமதி கிடைக்காது என்பதை உணர்ந்தே லவேல் இங்கனம் கோரிக்கையை முன்வைத்தார். நிலக்கரி என்பதால் சமஸ்தானமும் உடனே அனுமதியளித்தது. எனினும் சிலநாட்களிலேயே லவேலின் உண்மைநோக்கம் தெரியவரவே மைசூர் சமஸ்தானம் லவேலுக்கான உரிமையை மறுத்தது. பின்னர் லவேலின் பெருமுயற்சியால் 1875 புதியதொரு ஒப்பந்தம் உருவானது. அதன்படி கோலாரில் வெட்டியெடுக்கப்படும் தங்கத்தில் 10% சமஸ்தானத்துக்கு வழங்கப்படும்.

KGF சுரங்கம் 
படஉதவி :www.independent.co.uk

சமஸ்தானத்தை சரிக்கட்டிய பின்புதான் முறையாக லவேலால் நவீன சுரங்கவேலைகளை ஆம்பிக்க முடிந்தது. தற்போதைய மாரிக்குப்பம் பகுதியில் முதலாவது நவீன தங்கச்சுரங்க வாசல் அமைக்கப்பட்டது. லவேல் நினைத்ததை விடவும் பணி கடுமையாகவே இருந்தது. இக்காலகட்டத்தில் கோலாருக்கு வருகைதந்த எஃப்.சி.பென்னி என்பவர் கோலார் தங்கச்சுரங்கத்தொழிலாளிகளின்  ஆபத்தான வாழ்க்கை குறித்து ‘Living Dangerously’ என்ற நூலை வெளியிட்டார். இதனால் ஈர்க்கப்பட்ட ஆங்கிலேய சுரங்க முதலாளிகள் கோலாரை நோக்கி பயணமானார்கள். எதிர்பார்த்ததை விட செலவுகள் கைமீறிப்போனதால் லவேல் தன்னுடைய சுரங்க உரிமையை நல்லவிலைக்கு விற்றுவிட்டு தாய்நாடு திரும்ப முடிவெடுத்தார். சுரங்க உரிமையை எதிர்பார்த்து கோலாருக்கு வந்திருந்த ‘அர்பேட் நோட் & கம்பெனி’க்கு சுரங்க உரிமையை விற்றுவிட்டு கைநிறைய பணத்துடன் நாடு திரும்பினார் லவேல்.

கைமாற்றங்கள்

அர்பேட் நோட் & கம்பெனி சில பிரித்தானிய செல்வந்தர்களுடன் இணைந்து The Koalar Constructionary’s Company என்ற கூட்டமைப்பை உருவாக்கியது. விட்டுப்போன சுரங்கவேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் நோக்கத்துடன் ஆஸ்திரேலியாவின் பிரபல்யம் மிக்க இரு சுரங்கவியல் பொறியியலாளர்களை பணிக்கு அமர்த்தியது இந்த கூட்டமைப்பு. கோலாரில் அப்போதைய பணத்தில் 50 000 செலவழித்து நவீனகருவிகளுடன் புதியதொரு சுரங்கவாயில் அமைக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அவர்களால் தங்கத்தை அடையமுடியவில்லை. தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை படிப்படியாக குறைந்து செல்லவே கூட்டமைப்பு மெல்ல மெல்ல சுருங்கியது. நிலைமை மோசமாக செல்லவே அர்பேட் நோட் & கம்பெனி தன்னுடைய சுரங்க உரிமையை பிறிதொரு நிறுவனத்திற்கு தாரை வார்த்தது.

காலத்துக்கு காலம் கோலார் புதுப்புது கம்பெனிகளை வரவேற்றதே தவிர எவருக்கும் தன்னுடைய தங்கத்தை வழங்க முன்வரவில்லை. கோலாரில் தங்கம் காண வந்த அனைத்து கம்பெனிகளும் ஏமாற்றத்தையே விலைகொடுத்து வாங்கிச்சென்றன. 11 கம்பெனிகள் மாறிமாறி கோலாரை துளைத்தும் கோலார் தன்னுடைய நிலையில் இருந்து மாறவே இல்லை. நிலைமை இவ்வாறு போய்க்கொண்டே இருக்க 1880 இல் பிரித்தானியாவின் சுரங்கம் மற்றும் கட்டுமான நிறுவனமான ஜான் டெய்லர் & சன்ஸ் கோலார் நிலத்தின் உரிமையை வாங்கிக்கொள்ள இந்தியா வந்துசேர்ந்தது. கோலாரில் தங்கம் தேடிய கம்பெனிகளின் நிலையை கேட்டறிந்து கொண்டார் ஜான் டெய்லர். எனினும் தன்னிடம் இருந்த நவீன கருவிகளிக்கொண்டு கோலாரின் தங்கத்தை அடைந்துவிடலாம் என்று வலுவாக நம்பினார் டெய்லர்.

தங்கப்புதையல்

கோலாரில் விலைக்கு வாங்கியிருந்த கணிசமான அளவு நிலத்தில், பிரித்தானியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிநவீன சுரங்க இயந்திரங்களுடன் வேலைகளை ஆரம்பித்தார் டெய்லர். பழைய மாரிக்குப்பம் பகுதியில் முதல் சுரங்கம் அமைக்கப்பட்ட போதே கோலார் தன்னுடைய வரவேற்பை டெய்லருக்கு வாரி வழங்கியது. அது நிலத்தடி நீர். நிலமட்டத்தில் இருந்து 6 மீட்டர்களிலேயே நீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தமையால் டெய்லரின் முதல் சுரங்கம் ஜனித்த சிலநேரத்திலேயே மண்கொண்டு நிரப்பப்பட்டது. எனினும் டெய்லரில் நம்பிக்கை இம்மியளவும் குறைந்தபாடில்லை. சீர்க்கெட்டுள்ள சுரங்கத்தின் நிலையை சரிசெய்யக்கருதி இங்கிலாந்துக்கு ஒரு கடிதம் வரைந்தார். அக்கடிதம்  கேப்டன் பிளம்மருக்கு.

KGF சுரங்கம்
பட உதவி: thenewsminute.com

கேப்டன் பிளம்மர் டெய்லரின் சுரங்கப்பணிகளில் வேலை செய்த திறமை மிக்க பொறியியலாளர். 1884 இல் டெய்லருக்கு உதவும் நோக்கில் இந்தியா வந்து சேர்ந்தார் பிளம்மர். கோலாரை முழுவதும் பல ஆய்வுக்கு உட்படுத்திய பிளம்மர் பழைய மாரிக்குப்பம் பகுதியில் இருந்த பண்டைய சுரங்கவாசல் ஒன்றை கண்டறிந்தார். கைவிடப்பட்ட அந்த வாயிலை தொடர்வதால் தங்கத்தை அடையமுடியும் என கூறினார் பிளம்மர். ஆனால் அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. எதிர்ப்புகளையும் மீறி டெய்லர் தன்னுடைய பொறியியலாளர் மீதுவைத்திருந்த நம்பிக்கையால் சுரங்கப்பணியாளர்கள் சுரங்கத்திற்குள் இறக்கப்பட்டனர். சுமார் 173 அடிகள் தோண்டப்பட்ட பின்னர் அத்தனை காலமும் கோலர் பூமிக்கும் பிரித்தானிய கம்பெனிகளுக்கும் இடையில் நடந்துவந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. கோலாரின் தங்கப்படிமங்கள் அன்றைய நாளில் டெய்லருக்கு கிடைத்தது. 1000 கிலோ பாறைக்கு 125 கிராம் தங்கம் என்ற வீதத்தில் படிமங்கள் கிடைத்தது. தங்கசுரங்க உலகில் இது நியாயமான ஒரு அளவு. இந்த தங்கம் The Champion Quarts Load என அழைக்கப்பட்டது. பிளம்மரின் இந்த துணிச்சலான முடிவு இந்திய தங்கச்சுரங்க வரலாற்றுக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்தது.

(கோலார் தங்கவயலானது இரண்டாம் நூற்றாண்டில் இருந்து பயன்பாட்டில் இருந்துவந்தது. கங்கர்கள், சோழர்கள், போசளர்கள், விஜயநகரம், ஹைதர் அலி, திப்பு சுல்தான் என பலரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இங்கு தங்கம் அகழப்பட்டுள்ளது)

ஊழியப்படை

கோலாரில் தங்கம் உள்ளது என்பதை உலகுக்கு வெளிக்கொண்டுவந்த டெய்லர் இங்கிலாந்தில் இருந்து பாரியளவில் இயந்திரங்களை இறக்குமதி செய்து வேலையை துரிதப்படுத்தினார். சுரங்கத்தில் வேலைசெய்வதற்கு போதுமான ஆள்பலம் வேண்டும் என்பதால் இங்கிலாந்தில் பயிற்சிபெற்ற சுரங்கத்தொழிலாளர்களை கோரி விண்ணப்பம் செய்தார் டெய்லர். ‘எட்டு மணிநேரம் மாத்திரமே வேலை, சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல்’ என நீண்டவண்ணம் சென்ற அவர்களின் கோரிக்கை பட்டியலைக்கண்டு சலிப்புற்ற டெய்லர், பிரித்தானிய சுரங்கத்தொழிலாளர்களை பணியமர்த்தும் தன்னுடைய எண்ணத்தை கைவிட்டார். அதனை தொடர்ந்து டெய்லரின் கண்கள் மாரிக்குப்பம் மட்டம் ஊர்கம் பகுதிகள் மீது படிந்தது.

Serra Pelada mine
பட உதவி: rarehistoricalphotos.com

இந்தியாவில் நிலவிவந்த கடுமையான சாதீய அடக்குமுறைகளால் மிகவும் ஒடுக்கப்பட்டிருந்த இந்தமக்கள் ‘சாதீய ஒடுக்குதலை காட்டிலும் சுரங்கமே மேல்’ எனக்கருதி தங்களுடைய வாழ்வுக்கான ஒரு ஆதாரமாக இந்த சுரங்கத்தொழிலை பார்த்தனர். எனவே டெய்லரின் அழைப்புக்கு உடனே சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இம்மக்களின் உழைப்பால் கோலார்சுரங்கம் அசுரவேகத்தில் வளர்ச்சிகண்டது. சுரங்கம் வளர்ச்சியடையவே வேலையாட்களுக்கான தேவையை டெய்லரால் பூர்த்திசெய்துகொள்ள முடியவில்லை. குறைந்த ஊதியத்தில் பெருமளவு ஊழியர்களை பெறுவதற்கு கண்காணிகளை அனுப்பி வடதமிழக பகுதிகளான சேலம், ஆற்காடு, சித்தூர், தர்மபுரி ஆகியபகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் பலர் கோலாருக்கு கொண்டுவரப்பட்டனர். இதற்கு சான்றாக இன்னும் கோலாரில் வசிக்கும் மக்களில் 70% தமிழர்களே. கண்காணிகளால் ஆசைவார்த்தை காட்டி அழைத்து வரப்பட்ட இம்மக்கள் குறைந்த ஊதியத்திற்கு தங்களின் உழைப்பை விற்கவேண்டியதாயிற்று.

(கண்காணிகள் எனப்படுவோர் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை பிடித்துத்தரவும், அவர்களிடம் இருந்து வேலைகளை வாங்கவும், தொழிலாளிகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் ஆங்கிலேயரால் நியமிக்கப்பட்ட உள்ளூர் ஆட்கள்.)

சுரங்க வாழ்க்கை

தங்கச்சுரங்கத்தின் அமைப்பானது 15 அடி நீளமான shaft எனும் நேரான குழியுடன் ஆரம்பிக்கும். அதில் இருந்து வலது புறமாகவும், இடது புறமாகவும் இரு tunnel அமைப்புகள் செல்லும். பின்னர் அந்த ஒவ்வொரு tunnel முடிவிலும் இருந்து மற்றுமொரு shaft உருவாக்கப்படும். இவ்வாறு நிலமட்டத்தில் இருந்து ஆழமாக சுரங்கங்கள் அமைக்கப்பட்டுக்கொண்டே செல்லும் போது ஒவ்வொரு 70 அடிகளுக்கும் ஒரு ஃபேரன்ஹீட் (1 F) வெப்பநிலை அதிகரிக்கும். சுரங்கங்களை மேலும் குடைந்து செல்லும்போது பாறைகள் ஏதேனும் வழியில் குறுக்கிடுமாயின் அவைகள் குண்டு வைத்து தகர்க்கப்படும் . ஏற்கனவே வெப்பமும், அழுத்தமும் நிறைந்து கிடக்கும் சுரங்கங்கள் இதனால் மேலும் மோசமடையும். சிலசமயங்களில் மேற்தளத்திலுள்ள பாறைகளும், மண்ணும் சரிந்து விழுந்து சுரங்கங்கள் மூடிக்கொள்ளும் அவலங்கள் நிகழ்ந்தேறும். இவ்வாறு மூடிக்கொண்டு பலசுரங்க வாயில்கள் மீண்டும் திறப்படாமலே விடப்படுவதும் உண்டு. காரணம் சுரங்கத்தை திறக்க முற்படுகையில் செலவாகும் நேரத்தையும், சக்தியையும் தங்கம் அகழ்வதற்கு பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் முதலாளித்துவ சிந்தனைகளே. பாறைகளை வெடிக்கச்செய்யும் போது வெளிப்படும் தூசு நிறைந்த காற்றையே தொழிலாளர்கள் சுவாசிக்க வேண்டும்.

KGF சுரங்கம்
பட உதவி : thenewsminute.com

சுரங்கத்தில் வேலைபார்ப்பவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துபோகக்கூடாது என்பதற்காக சுரங்கத்தில் குழாய்கள் மூலம் குளிர்ந்த காற்று உட்செலுத்தப்படும் எனினும் அவை சுரங்கத்தின் உட்பகுதியை அடைவதற்கு முன்னமே அவை அனல்காற்றாக மாறிவிடும். சுரங்கப்பணியாளர்களுக்கு எப்போதும் அந்த அனல் காற்றுதான். சுரங்கப்பணியில் அடிக்கடி பாறைகளை வெடிக்கச்செய்யவேண்டி இருந்தமையால் சுரங்கத்தின் காற்றில் சிலிக்கன் துகள்களும், தங்கத்துகள்களும் இருந்தன. இதனை சுவாசிக்கும் தொழிலாளர்களின் நுரையீரலில் சிலிக்கன்படியும், தங்கத்துகள்களால் ஏற்படும் துவாரங்களும் இணைந்து சிலிக்கோஸிஸ் என்ற நோயை உருவாக்கியது. இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்தியா தங்க அகழ்வுகளிலேயே 90% மேலான தேவையை பூர்த்திசெய்த கோலாரின் தங்கச்சுரங்க பணியாட்களுக்கு கிடைத்த சன்மானம் இந்த சிலிக்கோஸிஸ் நோய் மட்டுமே!

லிட்டில் இங்கிலாந்து : முடிவு

கோலாரின் தங்கச்சுரங்க வேலைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தி இயக்கும் இயந்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் மின்னுக்கான தேவை இந்தியாவில் உருவானது. 1902 இல் காவிரி நீரை பயன்படுத்தி நீர்மின் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவிலேயே முதன்முதலாக மின்சாரத்தை பயன்படுத்திய நகரமாக கோலார் புகழடைந்தது. உலகிலேயே டோக்கியோவிற்கு அடுத்து இரண்டாவதாக மின்சாரம் பெற்ற நகரம் கோலார். கோலார் சுரங்கப்பணி நிமித்தமாக 1900களின்  ஆரம்பத்தில் இருந்தே வைத்தியசாலை, ரயில் நிலையம், பள்ளிக்கூடம் என சகலவசதிகளும் கொண்ட நகரமாக கோலார் பரிணாமம் அடைந்தது. பிரித்தானியரின் கண்களுக்கு கோலார் குட்டி இங்கிலாந்து எனவே தென்பட்டது.

கோலாருக்கான முடிவானது இந்தியாவின் சுதந்திரத்துடன் இணைத்தே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் கூட ஜான் டெய்லர் கம்பெனியே 1956 வரை கோலாரில் தங்கம் அகழ்ந்து வந்தது. 1963 இல் இருந்தே கோலார் தங்கவயல் பூரணமாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. டெய்லரின் காலத்தில் பயன்படுத்தி வந்த அதே தொழில்நுட்பத்தை கொண்டே தங்கத்தை அகழ்ந்து இந்திய அரசு. இதன் விளைவாக கோலார் தங்கசுரங்கம் நஷ்டத்தை அடைந்தது. மேலும் டெய்லர் கம்பெனியின் நுட்பமான ஒப்பந்தத்தின் மூலமாக தங்கம் அதிகம் கிடைக்கும் சுரங்கங்கள் மூடப்பட்டதுடன், இந்தியா கோலாரில் கிடைக்கும் தங்கத்தை எப்போதும் லண்டன் சந்தையிலேயே விற்க வேண்டும் எனவும் ஒரு நிலையை உருவாக்கியது. இவ்வாறான காரணங்கள் கோலாரின் அழிவை திட்டவட்டமாக உறுதிசெய்தது. கோலாரில் நிலவிய நஷ்ட நிலைக்கான காரணத்தை கண்டறிய 3 ஆணையங்கள் அமைக்கப்பட்ட போது, அம்மூன்றுமே மேற்சொன்ன காரணங்களை இந்திய அரசுக்கு சுட்டிக்காட்டியது. இருந்தும் அதற்கு செவிசாய்க்காத இந்திய அரசு கோலாரை நிரந்தரமாக மூடிவிடுவதற்கான வேளைகளில் இறங்கியது.

30 000 தொழிலாளிகளின் ஒரே வேலைவாய்ப்பையும், 300 000 மக்களின் வாழ்வாதாரத்தையும் தாங்கிக்கொண்டிருந்த கோலார் தங்க சுரங்கத்தை,தொழிலாளர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி 2001 இல் நீதிமன்ற உத்தரவுடன் மூடியது இந்திய அரசு. அயல்நாட்டாரால் பேணப்பட்டு 800 டன் தங்கத்தை உலகுக்கு தந்த உலகின் ஆழமான தங்கச்சுரங்கங்களுள் ஒன்று, அசட்டுத்தனமான போக்கினாலும், அதிகாரிகளின் ஊழலாலும் இன்று பாழடைந்து போய் நிற்கிறது.

முகப்பு படஉதவி : rarehistoricalphotos.com

Related Articles

Exit mobile version