வெள்ளை பிரம்பு…. நம் சமூகத்தில் விழிப்புலனற்றோரின் அடையாளமாக திகழுவது. அவர்கள் மீதான எமது கவனம் ஈர்க்கப்பட்ட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதற்காகவே இவ்வெள்ளைப் பிரம்பு தினம் உலகளாவிய ரீதியில் அனுட்டிப்படுகின்றது.
விழிப்புலனற்றோருக்கான வெள்ளை பிரம்பும் அவர்களிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக வெள்ளை பிரம்பு தினமும் உருவானதற்கு சில நிகழ்வுகள் காரணமாய் அமைந்துள்ளன.
விழிப்புலனற்றோருக்கான பிரம்பின் தோற்றத்தின் முதல் நிகழ்வு
1939 தொடக்கம் 1945 வரையான காலகட்டத்தில் ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் பங்கு கொண்ட இரண்டாம் உலகப்போர் உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் நடைபெற்றது. போர் என்றாலே வெற்றி பெறுதலும் சரணடைதலும் தானே. ஒவ்வொரு நாடாக போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைய ஆரம்பித்தது.
1943 அமெரிக்கா தனது படையுடன் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றி ஜப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறியது. அமெரிக்கா ஜப்பான் மோதல் முற்றியது. அமெரிக்கா ஜப்பான் மேல் தொடர் தாக்குதலில் இருந்தது. இறுதியாக ஜப்பான் மேல் ஆகஸ்ட் 6 ஆம் திகதி 1945 மற்றும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி 1945 அன்று இரு அணுகுண்டுகள் வீசப்பட்டது. ஜேர்மனி அணுகுண்டுகளை தயாரித்தாலும் அதற்கான பரிசோதனையில் ஈடுபடவில்லை. அமெரிக்கா அதற்கான களமாக ஜப்பானை பயன்படுத்திக் கொண்டது. “லிட்டில் பாய்” (LITTLE BOY) மற்றும் “ஃபெட்மேன்” (FAT MAN) என்று யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் அணுகுண்டுகளுக்கு பெயரிடப்பட்டது.
அதிகபட்ச நாசம் விளைவிக்கும் நோக்கத்துடன் 1900 அடி உயரத்திலேயே, அணுகுண்டு வெடித்துச் சிதறும் வகையில் விமாமன்த்தில் இருந்து குண்டு வீசப்பட்டது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்புகளின் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அமெரிக்கா அதை நியாயப்படுத்தியது.
போர் முடிவுக்கு வந்தாலும் அதன் தாக்கம் ஜப்பானை விட்டு செல்லவில்லை. லட்சக்கணக்கான உயிர்களை சூறையாடிய அணுகுண்டு பலபேரின் பார்வையை பறித்தது. இவ்வாறு பெருமளவிலானோர் ஜப்பானில் பார்வை இழக்கவே அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக அவ்வேளை ஜப்பானில் பிரபல்யமாக இருந்த வைத்தியரை மக்கள் நாடுகின்றனர்.
தம்மை நாடி வந்தோரில் கூடியளவிலானோரின் பார்வையை வைத்தியரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இத்தகையதொரு பரிதாபகரமான நிலைமையை எதிர்நோக்கிய வைத்தியர் மனிதர்கள் என்ற வகையில் அவர்களையும் சமூகத்தில் நடமாட வைப்பதற்கு வழிதேடுகிறார். அதன் பிரதிபலனாக உருவானதே வெள்ளைப் பிரம்பாகும். அந்த வைத்தியரின் சிந்தனையில் விசையும் திசையும் உதித்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் நகர்வதற்கு பயன்படுத்திய முறையில் வெள்ளைப் பிரம்பு மகத்துவம் பெற்றது என ஒரு கதை உண்டு.
இலகுரக நீண்ட பிரம்பு நுட்பத்தின் தந்தை – ரிச்சர்ட் ஈ. ஹூவர்
1944 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின் போது ரிச்சர்ட் ஈ. ஹூவர் என்பவர் வேலே ஃபோர்ஜ் இராணுவ மருத்துவமனையில் புனர்வாழ்வு நிபுணராக பணிபுரிந்து வந்துள்ளார். போரின் பிறகு காயமடைந்த உடல் ஊனமடைந்த இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை கொடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வந்துள்ளார். இந்நிலையில் கண் பார்வையை இழந்த அனைத்து வீரர்களையும் சந்தித்துள்ளார் ஹூவர். இவர்களின் வாழ்க்கைக்கு என்ன தீர்வு தர முடியும் என யோசித்துள்ளார். அந்தச்சமயத்தில் தனது கண்களை துணியால் கட்டிக் கொண்டு ஒரு நீண்ட மரக்குச்சியை கையில் வைத்துக்கொண்டு ஒரு வாரம் முழுக்க மருத்துவமனையைச் சுற்றி வந்துள்ளார். அதன் பிறகு இந்த ‘நீண்ட பிரம்பு’ பயிற்சியின் ஒரு நிலையான முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதாவது உடலின் மையத்திலிருந்து பிரம்பை கால்களுக்கு முன்னும் பின்னுமாக அசைப்பதே அம்முறையின் அடிப்படை நுட்பமாகும். கையில் பிடித்துக்கொண்டு நடப்பதற்கு ஏற்ற வகையில் பிரம்பு பாரம் குறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் ஹூவர் மிகவும் முனைப்புடன் இருந்துள்ளார். குறைந்த எடையுள்ள பிரம்புகளை தயாரிப்பதற்கான பிரத்தியேக ஆணைக்குழுவை நியமித்துள்ளார். அதன் விளைவாக ரிச்சர்ட் ஈ. ஹூவர் ‘இலகுரக நீண்ட பிரம்பு நுட்பத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
வெள்ளை நிற பிரம்பின் அறிமுகம்.
1930 ஆம் ஆண்டில் பார்வையற்ற ஒரு நபர் பிரம்பை வைத்துக்கொண்டு இரவில் பாதையை கடக்க முயன்றதை லயன்ஸ் கிளப் உறுப்பினர் ஒருவர் அவன்தனித்துள்ளார். அவர் கைகளில் இருந்த பிரம்பு தூரத்தில் வரும் வாகன சாரதிகளுக்கு புலப்படாத வண்ணம் இருந்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து விழிப்புலனற்றோருக்கான பிரம்பை வெண்மையாக வண்ணம் தீட்ட லயன்ஸ் கிளப் முடிவு செய்தது.
முதல் சிறப்பு வெள்ளை பிரம்பிற்கான உத்தியோகப்பூர்வமான சட்டம் 1930 ஆண்டில் டிசம்பர் மாதம் இல்லினாய்ஸின் பியோரியாவில் நிறைவேற்றப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் சர்வதேச லயன்ஸ் கிளப் அமைப்பு விழிப்புலனற்றோருக்கான வெள்ளைப் பிரம்புகளை பயன்டுத்த ஊக்குவிக்கும் திட்டத்தை தொடங்கியது.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தை விழிப்புலனற்றோருக்கான மாதமாக கடைபிடிக்கின்றனர் சர்வதேச லயன்ஸ் அமைப்பு. முக்கியமாக அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குதல், சமூக நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தல், அவர்களுக்கான கல்வியினை பெற்றுக்கொடுத்தல் முதலான விடயங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
பார்வையற்றவர்களுக்கு, வெள்ளை பிரம்பு என்பது ஒரு முழுமையான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை அடைவதற்கான திறனை அவர்களுக்கு வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய கருவியாகும்.
வெள்ளை பிரம்பு தினம் உத்தியோகபூர்வ பிரகடனம்
1963 ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு ஒன்று கூடியது. ஐம்பது மாநிலங்களின் ஆளுநர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் திகதியை வெள்ளை பிரம்பு தினமாக அதாவது விழிப்புலனற்றோர் தினமாக அறிவிக்க அழைப்பு விடுத்தது. 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் திகதி அன்று ஆண்டுதோறும் அக்டோபர் 15ஆம் திகதி உலக வெள்ளை பிரம்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.