பண்டைத் தமிழர்களின் வீரத்தாய் மரபு- அன்னையர் தின சிறப்புக் கட்டுரை

இன்று அன்னையர் தினம். அன்னையர் தினம் என்பது குடும்பம் அல்லது தனிநபரின் தாய் மற்றும் தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் செல்வாக்கு ஆகியவற்றைக் கௌரவிக்கும் ஒரு தினமாக அடையாளம் காணப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் கைக்கொள்ளப்படும் போதிலும் பொதுவாக மார்ச் அல்லது மே மாதங்களிலேயே அதிகமானோரால் அனுட்டிக்கப்படும். மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை தாய்மையைப் போற்றும் விதமாக முதலில் நிர்ணயம் செய்யப்பட்டது 1907இல் ஆகும். அன்னா ஜார்விஸ், மேற்கு வர்ஜீனியாவின் கிராஃப்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் மெதடிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயத்தில் முதல் அன்னையர் தின ஆராதனையை நடத்தினார். அன்றே நவீன அன்னையர் தினம் தோற்றம் கொண்டது. 

நவீன கால மேலைத்தேய கலாச்சாரங்கள் பெரும்பாலும் தனிநபர் சுதந்திரத்தை முன்னிறுத்தி அமைவதால், அங்கு குடும்பங்களுக்கு இடையிலான பிணைப்பு ஏனைய கிழக்குலக நாடுகளுடன் ஒப்பிடும் போதும் மிகவும்,குறைவாகவே காணப்படுகிறது. பிள்ளைகள், பெற்றோரை நேரில் கண்டு உணவருந்துவதற்குக் கூட முன்கூட்டியே நாட்பதிவு செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே அவர்களுக்கு தங்கள் உற்ற உறவுகளைக் கொண்டாடி மகிழ ஒரு நாளையேனும் ஒதுக்கும் தேவைப்பாடு எழுகிறது. அதற்காகவே அன்னையர் தினம், தந்தையார் தினம், சிறுவர் தினம் போன்றன உருவாகின. 

ஆனால் கிழக்குலக கலாச்சாரமோ, குறிப்பாக நம் தமிழ் மரபு எப்போதும் எவரையும் கொண்டாடத் தவறியதில்லை. பகைவனே ஆனாலும் படி நுழைந்து வருபவரின் பசியாற்றாது திருப்பி அனுப்பும் பான்மை நமக்கு வாய்த்தது இல்லை. அவ்வாறிருக்க, மானுடரை ஆக்கி, வளரத்து ஆளாக்கும் அன்னையரை நாம் மறவாது விடுவோமா!. தமிழ் மரபு என்பது எப்போதும் அன்னையரை முன்நிறுத்தியே ஒழுகுவதாகும். தமிழுக்குக் கூட அன்னை வடிவை நாம் வழங்கியிருப்பது, பல்லாண்டு காலமாக நாம் மதிப்புக்குரிய ஒவ்வொன்றையும் அன்னையெனக் கருதி வழிபட்டு வரும் நமது ஆயிரமாண்டு தாய்த் தெய்வ வழிபாட்டு முறையின் நீட்சியல்லவா. அப்பாக்களை மரியாதை ஒருமையில் ‘அவர்’ என நம்மில் பலர் விழித்தாலும், அம்மக்களை மரியாதை பன்மையில் ‘அவர்கள்’ என்றே அழைப்போம் என்பதை உணரும் தருணத்தில் நம் மொழியில் கூட அன்னையருக்கு வழங்கும் முக்கியத்துவத்தை உணரலாம்.

புகைப்படவிபரம் – Ankita Artlife/Facebook

இத்தகைய நீண்ட தாய்ப் பாரம்பரியம் கொண்ட தமிழக மரபில் இலக்கியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இலக்கியங்கள் அவை எழுதப்பட்ட காலங்களின் காட்சிகளை அப்படியே தனியே சிறைப்படுத்தி அவற்றை எதிர்வரும் தலைமுறைகளுக்கு கடத்துகின்றன. அவ்வாறு ஈராயிரம் வருடங்களுக்கு முன் தமிழ் சமூகத்தின் வாழ்வியலை வெளிக்காட்டும் புறநானூறு நூலில் அக்காலத்து மறக்குடி அன்னையரின் மனவுறுதியும், துணிவும் திறம்படக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய அன்னையரின் மனப்போகக்கை பாடும் மூன்று புறநானூற்றுப் பாடல்களை இங்கு காண்போம். 

                                                  மீன்உண் கொக்கின் தூவிஅன்ன

                                                 வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்

                                                 களிறுஎறிந்து பட்டனன்’ என்னும் உவகை

                                                 ஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர்

                                                  நோன்கழை துயல்வரும் வெதிரத்து

                                           வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.(புறம் 277)

[பூங்கணுத்திரையர் தும்பைத் திணையில் பாடிய இப்பாடல், முதிய அன்னையொருத்தி தன்னுடைய மிக இளைய மகன் செருக்களத்தில் எதிரிப்படையின் போர் யானை ஒன்றை தனியானக் கொன்று, அச்சண்டையில் பட்ட புண்ணினால் அவனும் இறந்து போனான் என அறிந்தவள் தன் மகனை எண்ணி கண்ணீர் உதிர்ததை பாடுகிறது: ஆனால் அது சோகத்தின் வீச்சத்தால் உண்டான விழிநீர் அன்று, பெருவீரனாய் களத்தில் மடிந்த மகனை எண்ணி வடித்த ஆனந்தக் கண்ணீர்] 

 

                                                  நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

                                                  முளரி மருங்கின், முதியோள் சிறுவன்

                                                 படைஅழிந்து மாறினன்” என்று பலர் கூற,

                                                “மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன்

                                                 முலைஅறுத் திடுவென், யான்’ எனச் சினைஇக்,

                                               கொண்ட வாளடு படுபிணம் பெயராச்,

                                              செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய

                                               படுமகன் கிடக்கை காணூஉ,

                                            ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே! (புறம் 278)

[காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் தும்பைத்திணையில் பாடிய இப்பாடல், மிக முதிர்ந்த அன்னையொருத்தி போருக்கு சென்ற மகன் புறமுதுகிட்டு ஓடினான் என மாற்றார் சொல்லக்கேட்டு அளவிலா ஆத்திரம் அடைந்ததும், பின்னர் களத்திற்கு சென்று அங்கு தனது மகனின் இறந்த உடல் கிடக்கக் கண்டு, தன் மகன் வீரனே என ஒருபுறம் உவகையும், மறுபுறம் இறந்த மகனைக் கண்ட துக்கமும் அவளை ஒரு சேர வந்தடைவதைக் கூறுகிறது]

 

                                            கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;

                                             மூதின் மகளிர் ஆதல் தகுமே;

                                          மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,

                                           யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;

                                         நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,

                                        பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;

                                         இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,

                                         வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,

                                        பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,

                                        ஒருமகன் அல்லது இல்லோள்,

                                        ‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே! (புறம் 279)

[ஓக்கூர் மாசாத்தியார் வாகைத் திணையில் பாடிய இப்படால், ஒரு வீரத் தமிழ்த் தாயின் மன உறுதியை பாடுகிறது. முன்னாட்களில் எதிரிப்படைகளின் யானை ஒன்றுடன் போரிட்டு அதனைக்கொன்று களத்திலேயே தானும் உயிர்விட்டான் இவளது தகப்பன், பின்னாட்களில் பெரும் ஆநிரையைக் காக்கும் பொழுதில் களம்பட்டு உயிர்விட்டான், இன்றோ முதியவளான இவளுக்கு தன் சிறுமைந்தனைத் தவிர உலகில் வேறு ஆதரவு எதுவும் இல்லை, இருப்பினும் எதிரிகள் தங்கள் தாய்நாட்டை தாக்க வருவதை அறிந்துகொண்ட முதியவள், தன் ஒரே மகனையும் ஆயத்தம் செய்து ‘போர்க்களத்துக்கு செல்’ என தளராத மன உறுதியுடன் அனுப்பிவைக்கிறாள்]

புகைப்படவிபரம்- Sriramgurujala.com

மேற்கண்ட மூன்று பாடல்களுமே செருக்களம் சென்ற தங்கள் மக்களை எண்ணி பெருமை கொள்ளும் மூன்று வீரத்தமிழ் அன்னையரின் கதையாகும். ஒரு தாய் வாழ்விலேயே அதிக மகிழ்ச்சியடையும் நாள், அவள் தன் குழந்தையை ஈன்றெடுக்கும் நாள், ஆனால் முதல் இரு பாடல்களிலும் அன்னையர் தங்கள் மைந்தன் வீரனென மடிந்ததைக் கேட்ட போதும், கண்ட போதும் ஈன்ற பொழிதினும் பெரிய உவகையை அடைந்தனராம். இரண்டாவது பாடலில் தன் மகன் புறமுதுகிட்டு ஓடினான் என்பதை கேட்ட அந்தத்தாய் ‘தப்பிப் பிழைத்தேனும் தன் மகன் வாழ்கிறானே ’ என மகிழாது, அவன் கோழை எனில் அவனுக்கு அமுதூட்டிய இந்த முலைகளை அறுத்து எறிவேன் என சபதமிட்டுக் கொண்டு கைகளில் வாளுடன் கிளம்பி போர்க்களத்துக்கு செல்கிறாள். இந்த மூன்று பாடல்களிலும் விளங்கும் முக்கியமான ஒற்றுமை இவர்கள் மூவரும் தள்ளாத வயதை அடைந்த தாய்கள், மைந்தனன்றி வேறு ஆதரவு இல்லாதவர்கள். எனினும் அவர்களில் எவருமே தன்னுடைய மைந்தன் செருக்களம் செல்வதை தடுக்கவில்லை, வாழ்த்தி வழியனுப்பினார்கள், அதே போல மைந்தன் வீரனாய் மடிந்ததைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்தனர். 

 

அன்னையரின் தியாகம் என்பது இல்லாமல் இந்த மானுடக்குலம் இத்தகைய வளர்ச்சியைக் கண்டிருக்க முடியாது. அன்னையரின் மனதில் உண்டாகும் துணிவு தான் அவர்களின் பிள்ளைகளில் வீரமென மிளிர்கிறது. எப்பாடுபட்டாவது குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நல்லன்னையர் தாம், தன் பிள்ளைகள் பிறருக்காக போராடி உயிரை விடும் பொழுதில் உவகை அடைவார்கள்.இன்றைய சிந்தனைகளுடன் இவற்றை அணுகிப்பார்ப்பது நமக்கு சிறிதே சிரமமாக இருக்கலாம், ஆனால் இதிலருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் ஒன்றுள்ளது, நல்லன்னையரே நற்குடியை உருவாக்குவார்கள், நற்குடிகளே நல்லதொரு நாட்டை உண்டாக்கும், நல்ல பல நாடுகளே நல்லதொரு உலகை சமைக்கும், நல்லதொரு உலகே நாளைய தலைமுறைக்கு வாழ்வளிக்கும். இன்று உலகமெங்கும் பல நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன, இவ்வாறான சவால்கள் எதிர்காலத்தில் உண்டாகாது இருக்க நிரந்தரத் தீர்வை உண்டாகும் ஆற்றல் படைத்தவர்கள் அன்னையரே, மானுடரை தழைக்கச்செய்யும் அவர்களே, மானுடத்தை பிழைக்கவும் செய்வார்கள் என்ற உறுதியுடன், அனைத்து தாயுள்ளங்களுக்கும் எமது இனிதான அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

Related Articles

Exit mobile version