ஆகச்சிறந்த ஆச்சரியம் அமெரிக்கா…… 

அமெரிக்கா, சுதந்திரத்தை எவரிடமும் பெறாமல், அதை எடுத்துக்கொண்ட நாடு. நம் பூமியின் மறுபக்கம் அமைந்துள்ள இன்றைய உலகின் ஒற்றை வல்லரசு. உலகமென்பது அமெரிக்காவையும் உள்ளடக்கியது என கண்டறியப்பட்டது முதல் அது பூலோக சொர்க்கமாகவே இருந்து வருகிறது. பிரிட்டனின் 13 குடியேற்ற நாடுகள் இணைந்து சூலை 4, 1776 ல்  உருவான இந்த தேசத்தில் இன்று 50 நாடுகள் உள்ளன. ஃபிரான்ஸிடமிருந்து லூசியானாவையும், ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவையும் வாங்கிய அமெரிக்கா, ஸ்பெயின், மெக்சிகோ, பிரிட்டனிடமிருந்து அதன் ஆளுகையிலிருந்த ஃபுளோரிடா, கலிஃபோர்னியா, டக்கோட்டா, உள்ளிட்ட பகுதிகளை பல்வேறு காலகட்டங்களில் ஆயுதம் தாங்கி கைப்பற்றியது. மேலும் குடியரசு நாடாக இருந்த டெக்சாஸ் மற்றும் ஹவாய் தீவுகளையும் இராணுவம் கொண்டு இணைத்துக்  கொண்டது.

அமெரிக்கக் காங்கிரஸ்

ஆஃப்ரிக்க மக்களை அடிமை வியாபாரம் செய்து கொண்டிருந்ததை அந்நாட்டு அதிபர் ஆபிரஹாம் லிங்கன்  சட்டத்தின் மூலம் தடுக்க நினைக்க உள்நாட்டு போர் மூண்டது. அடிமை வியாபாரத்தை ஆதரித்த, விவசாயமே முதன்மையான நாட்டின் தென் பகுதியை, அடிமை வியாபாரத்தை எதிர்த்த தொழில் வளம் நிறைந்த வடபகுதி வெற்றிகொள்ளவே, ஆபிரஹாம் லிங்கன் சுடப்பட்டார். அமெரிக்கா, ஸ்பெயினோடு போரில் வெற்றிகண்டு தன்னை வலிமையில் செதுக்கிகொண்டது. முதல் உலகப்போரில் இராணுவ வலிமையை உலகிற்கு காட்டிய அமெரிக்கா, இரண்டாம் உலக போரை, தம் நாட்டில் தடை செய்திருந்த கம்யூனிஸத்தையே பிரதானமாகக்  கொண்டிருந்த சோவியத்தோடு இணைந்து வெற்றி கண்டு உலகின் இரட்டை வல்லரசுகளில் ஒன்றானது. அதன் பிறகு சில பத்தாண்டுகளுக்கு சோவியதோடு பனிப்போரில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தது. கம்யூனிசத்திற்கு சோவியத் தலைமையேற்றதைப் போல கேப்பிட்டலிசம் என சொல்லப்படும் முதலாளித்துவத்திற்கு தன்னிகரற்ற தலைவனாகவே உருவெடுத்தது.

அதிபர் ஆபிரகாம் லிங்கன்

பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி போன்ற நாடுகளில் இரண்டாம் உலகப் போரால் ஏற்பட்ட பாதிப்பும்,  இங்கிலாந்தின் பொருளாதார வீழ்ச்சியும், இயல்பாக அமெரிக்காவை முதலாளித்துவத்தின் தலைமையேற்க வைத்தது. அதற்கான தகுதியும், வளமும், பலமும் பொருந்திய நாடாகவே அமெரிக்கா அப்போது இருந்ததோடு  அசுர வளர்ச்சியடைந்தது. சோவியத் இருந்த வரை கியூபா, வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், கொரியா, என அமெரிக்காவிற்குத் தோல்வி அல்லது முழு வெற்றி கிடைக்காத நிலையே இருந்தது. இராணுவப்போட்டி மட்டுமில்லாது, அறிவியல், கலை என சகலவிதத்திலும் அமெரிக்க, சோவியத் பனிப்போர் நீண்டு கொண்டே சென்றது. அதிலும் விண்வெளிப்போட்டி பெரியதாக பேசப்பட்டது. செயற்கை கோள்களை அனுப்புவதில் தொடங்கி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது வரையில் அது நீண்டு கொண்டே இருந்தது. வெற்றி, தோல்வி மாறி மாறி இருநாடுகளுக்கும் கிடைத்தாலும் சோவியத்தே பெரும்பாலும் சோபித்துக்கொண்டிருந்தது.  சோவியத் உடைந்த பின்பு உலகில் இராணுவம், பொருளாதாரம், அறிவியல் என எல்லாவற்றிலும் அமெரிக்காவே தன்னிகரற்ற வல்லரசு.

விண்வெளியில் அமெரிக்கா

90 களுக்கு பிறகு அமெரிக்காவே அனைத்தும். போட்டியாளரே இல்லாத ஒரு பெரும் வெற்றியாளர். எதிர்காலத்தில் சீனாவும், இந்தியாவும் கடும் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்றால், இந்தியாவோ சீனாவோ வளர்வதில் அல்ல. அமெரிக்கா அதுவாக வீழ்ந்தால் தான் முடியும். காரணம்,  நீர்வளம் நிறைந்த, நில வளம் பரந்த தேசம் அமெரிக்கா. தேவைப்பட்டால் மனித வளத்தையும் ஈர்த்துக்கொள்ளும். கடுங் குளிர் பரப்பும் உண்டு, கொடும் வெயில் பாலையும் உண்டு, கரடு முரடான மலைமுகடும்  உண்டு, மேடு பள்ளமே இல்லாத சமவெளியும் உண்டு. எல்லாமும் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள். ராக்கி மலைத்தொடர், நெவோடா பாலைவனம், மிசிசிப்பி நதி, கொலராடோ மலைமுகடுகள், நயாகரா அருவி, பெரும் நன்னீர் ஏரி, என இயற்கை வளமும், வனப்பும் நிறைந்து நிற்கிறது அமெரிக்கா. அமெரிக்காவில் 30 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள பூர்வகுடிகளான செவ்விந்தியர்களைத்  தவிர அனைவருமே வந்தேறிகள் தான் என்றாலும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குள் குடியேறிய ஆசிய, ஆஃப்ரிக்க மக்கள் தான் அந்நியர்களாக அல்லது வந்தேறிகளாக இருக்கின்றனர்.

நயாகரா நீர்வீழ்ச்சி

பெரும்பாலன ஐரோப்பியர்கள் அம்மண்ணின் மைந்தர்களாகவே தங்களை  பாவித்துக் கொள்கின்றனர். ஆனால் அதிலும் இஸ்பானியர்களுக்கு ஆஃப்ரிக்க, ஆசிய மக்களின் நிலைமைதான். கிட்டத்தட்ட 11 மில்லியன் மெக்சிகோ மக்கள் அங்கு குடியேறியுள்ளனர். 2 மில்லியனுக்கும் அதிகமான சீனர்களும் 2 மில்லியனுக்கு சற்று குறைவான இந்தியர்களும் இங்கு உள்ளனர்.  இதில் சீனர்கள் சுரங்க வேலைகளுக்காக கலிஃபோர்னியா பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். அண்டை நாடான மெக்சிகர்களோ வேலைக்காகவும், வறுமை போக்கவும் எல்லை தாண்டியவர்கள். சேவைத்துறை சார்ந்தும், நிர்வாக பணிகள் சார்ந்தும் பெரும்பாலான இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் அதிகளவிலான வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். கலிபோர்னியாவில் 27.2 சதவிகித வெளிநாட்டவர்களும், நியூயார்க்கில் 22.2 சதவிகித வெளிநாட்டவர்களும்,  டெக்சாஸில் 16.9 சதவிகித வெளிநாட்டவர்களும் உள்ளனர். இதில் கலிபோர்னியாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களும், நியூயார்க்கில் 3 லட்சம் இந்தியர்களும், நியூஜெர்சியில் 2 லட்சத்து 90 ஆயிரம் இந்தியர்களும், டெக்சாஸ்சில் 2 லட்சத்து 45 ஆயிரம் இந்தியர்களும் உள்ளனர். இந்தியர்களுள், இந்திபேசும் மக்கள், குஜராத்திக்கள், தெலுங்கர்கள், தமிழர்கள் பெரும்பான்மையானவர்களாக உள்ளனர்.

 

செவ்விந்தியர்கள் படுகொலை

அமெரிக்க மண்ணின் மைந்தர்களான, செவ்விந்தியர்களை, நிலத்திற்காகவும், காடுகளை அழிப்பதற்காகவும்,  தங்கத்திற்காகவும், குடியேற்றத்திற்காகவும், கொத்துக்  கொத்தாக லட்சக்கணக்கில்  கொன்று குவித்து அவர்களின் குருதியின் மீது எழுப்பப்பட்டதே அமெரிக்கா.     அமெரிக்கா… சுதந்திரத்தை எவரிடமும் பெறாமல், அதை எடுத்துக்கொண்ட நாடு. அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடணமே தனிப் பெருமை கொண்டது.

உலக உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு  கொண்ட நாடு.  உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் வால்ஸ்ட்ரீட்டும், சினிமாவின் உச்சமான ஹாலிவுட்டும் அந்நாட்டின் இரு துருவங்கள். ட்வின் டவர்கள் தகர்க்கப்பட்டால், எதிர் நடவடிக்கை போர்தான். அணு ஆயுதம் இருக்குமோ என்ற சந்தேகம் வந்தாலும் நடவடிக்கை போர்தான். போதைப்பொருள் கடத்துறவங்க கூட தொடர்பில் இருக்கிறார்ங்குற சந்தேகம் வந்தால், அது இன்னொரு நாட்டு அதிபராக இருந்தாலும் அத்துமீறிப்  போய் கைது செய்யப்படுவார். அந்த துணிச்சலும், பலமும் பொருந்திய நாடு அமெரிக்கா. அதெற்கெல்லாம் பின்புலத்தில் பெரும் அரசியல் காய்நகர்த்தல்கள் இருக்கும். அமெரிக்காவின் ஒவ்வொரு அசைவிலும் உலகின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இன்றைய அளவில் தன் நாட்டிற்கு வெளியே அதிகளவு ராணுவத்தை குவித்து வைத்துள்ள நாடு அமெரிக்காதான். தீவிர எதிர்ப்பு நாடுகளையும், அவற்றுக்கெதிரான ஆதரவு நாடுகளின் கட்டமைப்பையும் அந்நாடு கொண்டுள்ளது. இரட்டை கோபுரத் (Twin Tower) தகர்ப்புக்கு பிறகு தீவிரவாதத்துக்கெதிரான போரை முன்னெடுத்து வரும் அமெரிக்காவில் துப்பாக்கிக்  கலாச்சாரமும், நிறவெறியும் நீடித்துக்  கொண்டிருப்பது ஆச்சர்யமில்லை.  இன்றும் கருப்பினத்தவர்களின் போராட்டம் நீடித்துக்கொண்டேயிருக்கிறது.

அமெரிக்க டாலர்

முற்போக்கானவர்களின் நாடு, மெத்தப்படித்த குடிகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தால் அது தவறு. இன்றும் நிறவெறி நீடிக்கின்ற மனிதர்கள் நிறைந்திருக்கின்றனர். அதற்கெதிரான சமத்துவ மக்களும் அங்கே உள்ளனர். ஆச்சர்யங்கள், அதிசயங்கள்  நிறைந்த நாடு அமெரிக்கா… அவ்வப்போது உலகிற்கு அதிர்ச்சியையும் அளிக்கும்…

Related Articles

Exit mobile version