யாழ்ப்பாணக் கோட்டை : நானூறு ஆண்டுகளின் நடுகல்

நீண்டதொரு வரலாற்றின் நினைவுகளைச் சுமந்த வண்ணம் மௌனித்திருக்கின்றது யாழ்ப்பாணக் கோட்டை.  உருவான காலம் தொட்டு ஒவ்வொரு நூற்றாண்டிலும் இரத்தத்தின் கறையும் நாற்றமும் அடுத்தடுத்து நிகழ்ந்த கொலைகளால் சிதறிப் பறந்த தசைத் துணுக்குகளும் தழுவிக் காய்ந்த அதன் பெருங் கற்சுவர்களிடம் சொல்வதற்கு பல்லாயிரம் கதைகள் உள.

பட உதவி : lankapura.com

மரணத்தின் நீங்காத வாசனையுடன் உறைந்து போன அழுகுரலோசையுடன், யாழ்ப்பாணக் கோட்டை பரந்து கிடக்கின்றது. இலங்கை வரலாற்றில் யாழ்ப்பாண இராசதானியை கைப்பற்றிய போர்த்துக்கேயர்கள் இதனை அமைக்கும் போது, அது இவ்வளவு பாரிய கட்டமைப்பைக் கொண்டதாக இருக்கவில்லை. 1618 ஆண்டில் போர்த்துக்கேய தளபதியான பிலிப்பே டி ஒலிவேறா (Phillippe de Oliveira) யாழ்ப்பாணத்தில் இந்தக் கோட்டையைக் கட்டுவித்தான். 1627 ஆம் ஆண்டில் உயிரிழந்த அவன் தான் இறக்கும் வரை இலங்கையின் வடபாகத்தின் கட்டுப்பாட்டைத் தன் வசம் வைத்திருந்தான். இவனுடைய ஆளுகையின் போது யாழ்ப்பாணத்தில் 500க்கும் அதிகமான இந்துத் தேவாலயங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும் பல சுதேசி இந்துக்கள் வலிந்து ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்டிருந்தனர்.

போர்த்துக்கேயர் வருகை மற்றும் கோட்டையின் தோற்றம்

பல ரணங்களுக்கும் காயங்களுக்கும் ஆதாரமான போர்த்துக்கேயர் கட்டிய இந்தக் கோட்டை, 1658 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் திகதி ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. இதனைக் கைப்பற்றிய  ஒல்லாந்தத் தளபதி ரிஜ்கோவ் வான் கொனெஸ் (Rijcklof van Goens) பின்னாளில், இலங்கையில் ஒல்லாந்தர் வசமிருந்த பகுதிகளுக்கான ஆளுநராகவும் பதவி வகித்தான். வான் கொனெஸ் தனது பயணங்களைப் பற்றி நிறையவே எழுதி வைத்திருந்தான். தற்போது ஜேர்மனியிலிருக்கும் ஒரு பகுதியில் பிறந்த அவன், ஜாவா தீவு, இலங்கை மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கு தான் சென்ற பயணங்கள் குறித்தும் அவற்றின் விபரங்கள் குறித்தும் எழுதி வைத்திருக்கின்றான்.

ரிஜ்கோவ் வான் கொனெஸ் வருகை

போர்த்துக்கேயருக்கு எதிரான ஒல்லாந்தரின் பல போர்களில், வான் கொனெஸின் பங்கு கணிசமானதாக இருந்தது. 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையை மட்டுமல்லாது, மன்னார் மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஆகிய போர்த்துக்கேயர் தளங்களையும் அவன் கைப்பற்றினான். வெறும் 2,139 படை வீரர்களையும் 1,550 மாலுமிகளையும் கொண்ட 21 கப்பல்களை வைத்தே  வான் கொனெஸ் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தான். இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான பம்பாயை, 1673 ஆம் ஆண்டு, இவன் ஆறாயிரம் வீரர்கள் துணை கொண்டு தாக்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

வான் கொனெஸின் கப்பல்கள் மற்றும் படை வீரர்கள்

வான் கொனெஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னரே, யாழ்ப்பாணக் கோட்டை இன்று காணப்படும் ஐந்து முனை நட்சத்திரக் கட்டமைப்பைப் பெற்றது. அது மட்டுமல்லாமல் போர்த்துக்கேயர் வசம் இருந்த போது அதன் வலு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவில்லை. ஆனால், ஒல்லாந்தரோ யாழ்ப்பாணக் கோட்டையை, வடிவமைப்பின் மூலமும் கட்டுமானத்தின் மூலமும் மிகுந்த வலிமையானதாக உருவாக்கினார்கள்.

ஐந்து முனை நட்சத்திர கட்டமைப்பு

இதன், உள் அரண்களை முதலில் கட்டிய ஒல்லாந்தர்கள், வெளியரண்களை 18 ஆம் நூற்றாண்டிலேயே கட்டினார்கள். இலங்கையின் இரண்டாவது பாரிய கோட்டையாக கருதப்படும் பெருமையை யாழ்ப்பாணக் கோட்டைக்கு ஒல்லாந்தரே அளித்தனர்.

கிழக்கினை ஆள வந்த மேற்குச் சக்திகள், தமக்குள்ளும் முரண்பட்டுப் போர் புரிந்து கொண்டே இருந்தன. அந்தப் போர்களிலும் முரண்பாடுகளிலும் வென்றவர்கள் கீழ்த்திசையில் புதிய நிலங்களையும் களங்களையும் தமதாக்கிக் கொண்டார்கள். அந்த வகையில், ஒல்லாந்தரால் வளர்த்தெடுக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டை 1795 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வசமானது. சுமார் 137 ஆண்டுகள் ஒல்லாந்தரிடமிருந்த யாழ்ப்பாணம், ஆங்கிலேயர் வசம் போனது அப்போதுதான்.

பட உதவி : nashaplaneta.net

1795 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டான 1948 வரை, யாழ்ப்பாணக் கோட்டையில், பிரித்தானியக் கொடி ஓங்கிப் பறந்த வண்ணமிருந்தது.  சுதந்திர தேசமான இலங்கையில் எண்பதுகளில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் வரை யாழ்ப்பாணக் கோட்டையின் மிடுக்கிற்கு எந்தக் குறையும் வரவில்லை. எண்பதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதியை தமிழீழ விடுதலைப்புலிகள் தம்வசம் வைத்திருந்த போதும் கூட, இந்த யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்தது. அதன் பின்னர் இடம்பெற்ற சமர்களில் இரு தரப்பிற்கும் நடுவே சிக்குண்ட யாழ்ப்பாணக் கோட்டை கடுமையான பாதிப்பினை எதிர் கொண்டது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த போது, கோட்டையில் முக்கியத்துவம் மிகுந்த பாகங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மீண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்த போது, இந்தக் கோட்டையும் கைப்பற்றப்பட்டது.

கடுமையான பாதிப்பினை எதிர் கொண்ட யாழ்ப்பாணக் கோட்டையின் தோற்றம்

குருதியையும் கண்ணீரையும் காண்பதற்காகவும் வெடியோசைகளையும் அழுகுரல்களையும் கேட்பதற்காகவுமே உருவாக்கப்பட்டதோ என்று சொல்லும்படியாகச் செல்கின்றது யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாறு! இன்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக மாறிவிட்ட போதும், அங்கு நிலவும் கனத்த மௌனத்தை யாராலும் கலைத்துவிட முடிவதில்லை.

முகப்பு பட உதவி : routelanka.com

Related Articles

Exit mobile version