இலங்கையின் நாணய வரலாறு

இலங்கையின் நாணய வரலாறானது அநுராதபுர இராசதானிக் காலகட்டத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. இக்காலகட்டதில் நாணயத் தயாரிப்பு மற்றும் விநியோகம் மிகவும் முறைசார்ந்த அடிப்படையில் நடைபெற்றுள்ளதென்பதும்,  வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நாணயப் பயன்பாடு பற்றியும்  அநேகமான தகவல்கள் கல்வெட்டுக்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.  நாணயத் தயாரிப்புக்குப் பொறுப்பான பணிப்பாளர் அக்காலத்தில் “ரூபடக”  என்றும்   தயாரிக்கப்பட்ட நாணயங்களை அங்கீகரிப்பவர் “ரூபவார” என்றும்  அழைக்கப்பட்டுள்ளார். அந்தவகையில், மிகப்பழமையான நாணயக்கூறாக  அறியப்பட்டது “கஹபான” ஆகும். இவை சமஸ்கிருதத்தில் “புராண” எனவும் ஆங்கிலத்தில் “எல்டிங்கஸ்” எனவும் அழைக்கப்பட்டன. வெள்ளியிலான  அடையாளமிடப்பட்ட இக்  குத்திகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சர்வதேச வர்த்தகத்தின் ஊடாக இந்திய வணிகர்களின் மூலம் இந்நாட்டிற்குக் கிடைத்திருக்கலாம் எனவும்,  இந்த நாணயங்களைப் பின்பற்றியே இந்நாட்டில் ‘கஹபன’ பின்னாளில் தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகின்றது .

மிகப்பழமையான நாணயக்கூறாக  அறியப்படும் “கஹபான” – புகைப்பட உதவி – www.cbsl.gov.lk

கி.மு. 3 வது நூற்றாண்டிலிருந்து கி.பி. 1வது நூற்றாண்டு வரை ‘கஹபன’நாணயங்கள் எமது நாட்டில் பயன்பாட்டில் இருந்துள்ளன. அநுராதபுரம், தொலுவில, வெஸ்ஸகிரியா, சீகிரியா, புன்னாபொல, தெதிகம, மினுவன்கொடை, உடவளவை, அம்பலாங்கொடை, திஸ்ஸமகாராமய, வல்லிபுரம், கந்தரோடை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாந்தோட்டம், பதவியா, திருகோணமலை ஆகிய பல பிரதேசங்களிலிருந்து இந்த வகையைச் சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கஹப்ன வகையைச் சேர்ந்த சுவாஸ்திக நாணயக்குத்திகள்,பிடரிமயிர் இல்லாத சிங்க  நாணயக்குத்திகள் போன்றனவும் இக்காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்துள்ளன. கி.மு. 3 – கி.பி. 8 வது நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில்   பெண்ணின் உருவத்துடன் கூடிய நாணயங்கள் முதற் தடவையாக இலங்கையில் சுற்றோட்டத்தில் காணப்பட்டன. நாணயங்களின் முகப்பில் காணப்படுகின்ற பெண் இலட்சுமியென்றே கருதப்படுகின்றது. ஆதலால் இந்நாணயங்கள் இலட்சுமி தகடு நாணயம் என அழைக்கப்படுகின்றன.கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து 8ஆம் நூற்றாண்டு வரை சிங்களவர்களின் தங்க நாணயம் ‘ஹகவனு’ புழக்கத்திலிருந்து.

அடுத்து பொலன்னறுவை இராசதானி நாணயவரலாற்றின்படி, சோழர்களின் ஆதிக்கத்தை முறியடித்து நாட்டை ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்ததுடன் பொலனறுவை இராசதானியை ஆரம்பித்து வைத்த முதலாவது விஜயபாகு நாணயங்களை தயாரிக்கின்றபோது,அவற்றின் மேல் தமது பெரையும் பொறித்தார். இதன்படி நாணயங்களில் தமது பெயரைப் பொறித்து அவற்றை வெளியிட்ட முதலாவது சிங்கள மன்னர் முதலாவது விஜயபாகு மன்னராவார். அந்த நாணயம் ‘மஸ்ஸ’ என அழைக்கப்பட்டது.13ஆவது நூற்றாண்டளவில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஆட்சிபுரிந்த ஆரியச்சக்கரவர்த்தி மன்னரால் வெளியிடப்பட்ட சேது நாணயங்கள்  “தம்பதெனிய மஸ்ஸவைப்” பிரதிபண்ணியதொரு நாணயமாகும். நாணயத்தின் ஒரு பக்கத்தில் மாடொன்றின் உருவமும் மறுபக்கத்தில் “தம்பதெனிய மஸ்ஸ” நாணயத்தில் காணப்படுகின்ற நின்ற நிலையிலுள்ள மனிதனின் உருவத்தைப் போன்றதொரு உருவமும் பொறிக்கப்பட்ட செப்பு நாணயமாகும்.  இந்த நாணயங்கள் அதிகமாக நல்லூர், திருநெல்வேலி, கோப்பாய், சண்டிலிப்பாய், சுந்தூர். நாகர்கோவில் மற்றும் மாங்குளம் ஆகிய பிரதேசங்களிலிருந்தே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

“தம்பதெனிய மஸ்ஸ” -புகைப்பட உதவி – www.cbsl.gov.lk

அடுத்து சிங்கள பேரரசின் இறுதி இராசதானியாக இருந்த கண்டி இராச்சியத்தின் நாணயங்களை நோக்கின், பத்தாவது நூற்றாண்டில் ‘மசுரன்’ எனப்படும் தங்க நாணய வகையொன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் தங்க உலோகத்தின் அரிதான தன்மையின் காரணமாக இந்நாணயங்கள் படிப்படியாக பாவனையில்லாது போயின. பதினாறாம் நூற்றாண்டின் இறுதியளவில் ‘ரிதி (மஸ்ஸ)’ மற்றும் ‘பணம’ எனப்படும் வெள்ளியினாலான இரண்டு நாணய வகைகள் பயன்பாட்டுக்கு வந்தன. ஆயினும் மேற்படி காலமளவில் ‘ரன் பணம’ மற்றும் ‘ரன் மஸ்ஸ’ ஆகிய தங்க நாணயங்கள் ஓரளவு பயன்பாட்டில் காணப்பட்டன. அதன் பின்னர் ‘தங்கம் மஸ்ஸ’, ‘பொடி தங்கம்’, ‘ரிதிய’ ஆகிய நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்திய ‘வராகம்’ பதினெட்டாம் நூற்றாண்டில்  இலங்கையில் பயன்படுத்தப்பட்டது.

செப்பினால் செய்யப்பட்ட ‘சல்லி’ எனப்படுகின்ற நாணய வகையொன்றும் மேற்படி காலத்தில் கொடுக்கல்வாங்கல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு ரிதியவின் பெறுமதி 64 சல்லிகளாகும். இதே காலத்தில் ஒல்லாந்தரின் நாணயமொன்றான ‘ஸ்ருய்வர்’ (Stuiver) கண்டிய இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்டது. சிங்கள மக்கள் அதனை ‘துட்டு’ என்று குறிப்பிட்டனர். அங்குட்டு மஸ்ஸ நாணயம் கண்டி மற்றும் கோட்டே காலப்பகுதியில் பயன்பாட்டிலிருந்ததுடன் வெள்ளியில் தயாரிக்கப்பட்டிருந்தது. கொக்கியின் வடிவத்தில் தயாரிக்கப்பட்டிருந்த இந்நாணயங்கள் பாரசீகத்திலிருந்து வணிகர்களினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவை என நம்பப்படுகிறது. இப்பாரசீக நாணயங்கள் ‘லாறின்’ எனவும் அழைக்கப்பட்டன. அநுராதபுரம், பொலனறுவை, கண்டி என  நாம் பண்டைய இலங்கையின் காலகட்டங்களை பிரித்துக் காட்டினாலும்  அந்த எல்லாக் காலகட்டங்களிலும் இலங்கை தனியொரு மன்னரின் கீழ் ஆளப்படவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளுக்கும் உள்ளாகியது. ஆயினும் கோட்டை இராசதானி காலகட்டம் வரை இலங்கையை ஆக்கிரமித்தவர்கள் சோழர்களாவர். எனினும் அந்த எல்லாக் காலகட்டங்களிலும் பட்டுப் பாதையின் ஊடாக நடைபெற்ற சர்வதேச வர்த்தகத்தின் அனுகூலங்களின் ஊடாக புகழ் பெறுவதற்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் இலங்கையால் முடிந்தது.

கி.பி. 1505இல் போத்துக்கீசர் இலங்கையின் கரையோரத்தினை கைப்பற்றி கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்னர் 1506 – 1658 வரையான காலப்பகுதியில் ஒரு சில வேறுபட்ட  நாணயங்களை வார்த்து சுற்றோட்டத்திற்குவிட்டனர்.மலாக்கா நாணயங்களின் ஒரு பக்கத்தில் போத்துக்கேய அரச சின்னமும் அதன் இரு புறத்திலும் AM அல்லது MA அல்லது DM என்ற எழுத்துக்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. கி.பி 1658இல் இலங்கையின் கரையோரப் பகுதிகளிலிருந்து போர்த்துக்கேயர்களை விரட்டியடித்த ஒல்லாந்தர்கள் அப்பிரதேசங்களை தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.  போர்த்துக்கேயர்களின் கோட்டையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் இரண்டாவது இராஜசிங்க (1635 – 1687) மன்னருடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டனர். அதன் 14வது வாசகத்தில் நாணயப் பயன்பாடு தொடர்பான பல ஒழுங்குவிகிகள் சேர்க்கப்பட்டிருந்தன. இதற்கமைய மன்னரால் அல்லது ஒல்லாந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்படாத எவராலும் நாணயங்களை அச்சிடல், தயாரித்தல், விளம்பரம் செய்தல் அல்லது நாணயங்களுக்கு நிகராக தரக் குறைவான நாணயங்களை தயாரித்தல் அல்லது சுற்றோட்டத்திற்கு விடுத்தல் சட்டத்திற்கு மாறானதாகும்.

 முதலாவது வங்கி நாணயத் தாள்கள்

இலங்கையில் ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதி வரை கொடுக்கல் வாங்கலின் பொருட்டு நாணயக் குத்திகளே பயன்படுத்தப்பட்டன. ஆயினும் 1700களின் இறுதிப் பகுதியின் போது ஒல்லாந்தரின் பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்தன.  செலவு வருமானத்தைத் தாண்டிச் சென்றது. அத்தகையதொரு பின்னணியிலேயே நாணயத் தாள்களுக்கான அடிப்படை இடப்பட்டது.

 இலங்கையில் அச்சிடப்பட்ட முதலாவது நாணயத் தாள்- புகைப்பட உதவி – www.cbsl.gov.lk

இதற்கிணங்க, 1785 march 19 ஆம் திகதி 25000 பதாக பெறுமதியுடைய நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிணங்க இலங்கையின் முதலாவது நாணயத் தாள்  தொகுதி 1785 மே மாதம் 10 ஆம் திகதி தோன்றியது. அந்த முதலாவது நாணயத் தாள் தொகுதி பதாக 50, 100, 500, மற்றும் 1000 பெறுமதிகளைக் கொண்டிருந்தது. ஆயினும் பின்னர் பதாக 1, 2, 3, 4, 5, 10 நாணயத் தாள்களும் அச்சிடப்பட்டுள்ளன. இந்த நாணயத் தாள்கள் மூன்று அரசாங்க அலுவலர்களின் கையொப்பத்துடன் கூடியதாக காணப்பட்டன.

1949  58ஆம் இலக்க நாணயச் சட்ட விதியின்படி 1950இல் இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்டது. நாணயச் சட்ட விதி, நாணயச் சபையினை நிறுவுவதற்கும் நாணயத் தாள்கள், நாணயக் குத்திகள் ஆகிய இரண்டும் உட்பட நாணயத்தினை வெளியிடுவதற்கும், மற்ற விடயங்களோடு இதனை நிர்வகிப்பதற்கும் உதவுகின்றது.

Related Articles

Exit mobile version