இலங்கையின் அமைச்சரவை நிலப்பரப்பிலிருந்து வெளியேறி, கடல் மீது கூடிய கதையை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா? அது 1953 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அனேகமாக, அவ்வாறான அமைச்சரவைக் கூட்டமொன்று அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ கூட நடைபெற்றதில்லை.
1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய இலங்கையின் முதலாவது பிரதமராக பதவி வகித்த டி.எஸ். சேனாநாயக்கவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் டட்லி சேனாநாயக்க அந்தப் பதவியை ஏற்றார். அதனையடுத்து நடந்த பொதுத்தேர்தலில் அவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. எனினும், லங்கா சமசமாஜ கட்சி உள்ளிட்ட எதிர்த்தரப்புகள் அந்தத் தேர்தலில் பல ஒழுங்கீனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக விமர்சித்தன.
தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இதனையடுத்து அப்போதைய நிதியமைச்சரான ஜே. ஆர். ஜெயவர்தன கொண்டுவந்த வரவு செலவுத்திட்டம் இலங்கை மக்களின் வயிற்றை நேரடியாகத் தாக்கியது. அந்த வரவுசெலவுத்திட்டத்தில் அரிசியின் மீதான மானிய நீக்கமே முக்கியமானதாக பேசப்பட்டது. மேலும், சீனியின் விலை, தபால் சேவைக் கட்டணம், புகையிரதப் போக்குவரத்துக் கட்டணம் ஆகியனவும் அதிகரிக்கப்பட்டிருந்தன. கொரிய தீபகற்பத்தில் அப்போது ஏற்பட்டிருந்த போர் இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாக சொல்லப்பட்டது.
1952 ஆம் ஆண்டு தேர்தலில் அரிசியை 25 சதத்துக்கு தருவதாக ஐக்கிய தேசியக் கட்சி வாக்களித்த போதும், அதன் அரசாங்கம் அரிசியை 75 சதம் ஆக அதிகரித்தமை, இன மத பேதம் இன்றி நாட்டு மக்கள் அனைவருடைய கோபத்தையும் அதிகரித்தது. இது தவிர, அப்போது நடைமுறையிலிருந்த பல்வேறு சமூக நலன்புரித் திட்டங்கள் யாவும் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து சுதந்திர இலங்கையின் முதலாவது பாரிய ஹர்த்தால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
எதிர்த்தரப்பில் அப்போது இருந்த அனைத்துக் கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த வரவுசெலவுத் திட்டத்தினை எதிர்த்த போதும், லங்கா சமசமாஜ கட்சி உள்ளிட்ட சில இடதுசாரிகளால் இந்தப் பாரிய ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஏழை மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை, அப்போதைய அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்டம் கடுமையாகப் பாதிப்பதாக கூறியே இந்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அந்த வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதும், ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
1953 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல் ஹர்த்தாலின் முக்கிய காட்சிகள் ஆரம்பமாகியிருந்தன. ஒத்துழையாமையும், பணிப்புறக்கணிப்பும் முன்கொண்டு செல்லப்பட்டன. அரிசி விலை அதிகரிப்பே போராட்டத்தின் முக்கிய தூண்டுகோலாக இருந்தது. இந்தப் போராட்டம் நாடளாவியரீதியில் நடைபெற்றதாக கூறப்பட்ட போதும், நாட்டின் மூன்றில் ஒரு பாகத்தில் மட்டுமே இடம்பெற்றதாக ஒரு கருத்தும் நிலவுகின்றது.
பொதுச்சொத்துக்களைச் சேதமாக்கும் அளவுக்கு அந்தப் போராட்டம் சென்றது. மகரகம, பொரலஸ்கமூவ, கங்கொடவில, கிருலப்பனை, எகொட உயன, கட்டுகுருந்த, கோரலவெல, வஸ்கடுவ, கரந்தெனிய, தொம்பே, அக்குரல, தொட்டகமூவ, ஹிக்கடுவ, ராமவை ஆகிய பகுதிகளில், வன்முறைகள் இடம்பெற்றன. தொடர்பாடல் வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் பாரிய சேதத்தை எதிர்கொண்டன.
அந்த அரசாங்கத்தினால் இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாகவும், வரவு செலவுத்திட்டத்தின் மீதான எதிர்ப்பு காரணமாகவும், இந்தப் போராட்டம் யாழ்ப்பாணத்திலும் தீவிரமடைந்தது. அங்கு பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதே அல்லாமல் வன்முறைகள் எவையும் பதிவாகவில்லையெனக் கூறப்படுகின்றது.
அரசாங்கத்துக்கு எதிரான இந்தப் போராட்டம், முக்கியமாக மேற்கு, தெற்கு, சப்ரகமூவ மாகாணங்களின் 24 பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே உக்கிரம் பெற்றிருந்தது. நாட்டின் பல பகுதிகளிலும் நாச வேலைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. உதாரணமாக, புகையிரதத் தண்டவாளங்கள் இந்த நாசவேலைக்கு இலக்காக்கப்பட்டிருந்தன. தொட்டகமுவ பகுதியில் உள்ள புகையிரதத் தண்டவாளங்களின் ஆதாரமாக இருந்த மரக்கட்டைகள் மீது தீ வைக்கப்பட்டது. தந்திக்கம்பங்கள் விழுத்தப்பட்டன. பொதுப்போக்குவரத்தில் ஈடுபட்ட பேருந்துகள் இடை மறிக்கப்பட்டு கல்வீச்சுக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. நாட்டின் முக்கியமான பேருந்து வழிகளின் ஓரங்களில் நின்ற மரங்களைத்தறித்து விழுத்துவதன் ஊடாக பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் தடைசெய்யப்பட்டன.
இந்த வன்முறைகளுக்கான அரசாங்கத்தின் பதிலடியும் கடுமையாகவே இருந்தது. களத்தில் இராணுவம் இறக்கி விடப்பட்டது. இதனையடுத்தே, கடுமையான நடவடிக்கைகள் மூலம் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பல இடங்களில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக குறைந்தது 10 பேராவது கொல்லப்பட்டிருக்கலாமெனக் கூறப்படுகின்றது.
முழு நாடும் கொந்தளித்துக் கொண்டிருந்த வேளை அது. அந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி, பிரதமர் டட்லி சேனாநாயக்காவின் அமைச்சரவை, கொழும்புத் துறைமுகத்தின் எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் கூடியது. HMS Newfoundland என்ற அந்தக் கப்பல் இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் காரணமாகவே பிற்காலத்தில் பெரிதும் பேசப்பட்டது. இந்தப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அந்தக் கப்பல் பிரித்தானியக் கடற்படைக்குச் சொந்தமாக இருந்தது. பிற்காலத்தில் அதாவது 1959 ஆம் ஆண்டின் இறுதியில் அது பெரு நாட்டின் கடற்படைக்கு விற்கப்பட்டுவிட்டது.
அந்தக்கப்பலில் இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அவசரகாலச்சட்டத்தின் சில பிரிவுகள் நாட்டில் அமுல்படுத்தப்பட்டன. இதன் காரணமாகவே, பொதுச்சொத்துகள் தொடர்ந்தும் சேதமாவதைத் தடுத்து நிறுத்த முடிந்தது. அப்போது பிரதமராக இருந்த டட்லி சேனாநாயக்க இந்த ஹர்த்தாலையடுத்து தமது பிரதமர் பதவியைத் துறந்தார்.
எனினும், நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே தொடர்ந்தும் பலம் மிக்கதாக இருந்தது. டட்லியின் உறவினரான ஜோன் கொத்தலாவல அடுத்த பிரதமராகபதவியேற்றுக் கொண்டார். அதனையடுத்து முழுதாக நீக்கப்பட்டிருந்த அரிசியின் மீதான மானியம் அரைவாசியாக குறைக்கப்படுமென அரசாங்கம் அறிவித்தது. இதனையடுத்து நாட்டில் நிலவிய அமைதியின்மை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
எனினும், 1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தப் பாரிய மக்கள் போராட்டத்தின் நீண்ட கால விளைவாக, 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய தோல்வியைச் சந்தித்தது. ஐக்கிய தேசியக் கட்சி அல்லாத முதலாவது அரசாங்கத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபித்தது. அதற்கு “தனிச்சிங்களச் சட்டம்” குறித்த, பண்டாரநயக்காவின் அரசியற் கோஷம் உதவியது தனிக்கதை!