“ஆகாசவானி செய்திகள் வாசிப்பது………..” 80,90 களில் வானொலியில் இந்த வார்த்தையைக் கேட்டு மயங்காத ஆட்களே இருக்க முடியாது.
தற்போது நீண்ட தூரம் ஒலிபரப்பு செய்யப்படும் வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி ஆவார். ‘கம்பியற்ற தகவல்தொடர்பு முறை’ மற்றும் ‘மார்க்கோனி விதி’ ஆகியவற்றை உருவாக்கியவர் இவரே. இந்த கண்டுபிடிப்பிற்காக 1909 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்ன்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர், மற்றும் 1897 ல் ‘மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்’, ‘வானொலி’மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவரும் இவர் தான். மார்க்கோனி வாழ்ந்த காலத்தில் மின்காந்த அலைகள் பற்றிய கருத்தை ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் என்ற அறிஞர் வெளியிட்டார். மின்காந்த அலைகளின் கொள்கைகளை ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் மற்றும் மைக்கேல் ஃபாரடே ஆகியோரின் ஆராய்ச்சிகளின் மூலம் முன்பே பெறப்பட்டிருந்தது. மின்காந்த அலைகளை அலைபரப்ப முடியும். மேலும் அவை வெளி முழுவதும் நேர்கோடுகளில் பயணிக்கின்றன. மேலும் சோதனை கருவிகள் மூலம் பெற முடியும் என்று ஹெர்ட்ஸ் செயல்முறை விளக்கமளித்தார். ஆனால் அதன் சோதனைகள் அவர்களால் பின்தொடரப்படவில்லை. இங்கிலாந்தில் ஆலிவர் லாட்ஜ் என்பவரும் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அவர் அந்த காப்புரிமையும் பெற்றிருந்தார். ஆனால் அவ்வுரிமையை மார்க்கோனிக்கு விற்று விட்டார்.
1894-ல் இந்திய இயற்பியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் கொல்கத்தாவில் மின்காந்த அலைகளைக் கொண்டு வானொலி பரப்பும் முறையைச் செய்து காட்டினார். ஜகதீஸ் சந்திர போஸ் இந்த காலக்கட்டத்தில் முந்தைய கம்பியற்ற தகவல் கண்டுபிடிப்பு சாதனம் உருவாக்கப்பட்டது. மேலும் அவர் மில்லிமீட்டர் நீளமுள்ள மின்காந்த அலைகளை பற்றிய அறிவை அதிகரிக்க உதவினார். ஆனால் அதற்கான காப்புரிமைமை பெறாததால் அந்த ஆய்வை தொடரமுடியவில்லை. இந்த செய்தியை இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ‘டெய்லி குரோனிக்கல்’ என்ற ஆங்கில நாளிதழில் 1896ல் செய்தியாக வெளியிட்டது. 1891-93-ல் நிக்கோலா தேஸ்லா என்ற அறிவியல் அறிஞர் வானியல் பற்றிய தனது கண்டுபிடிப்பை உறுதி செய்து காப்புரிமை பெற்றார். தெஸ்லாவின் கம்பிச் சுருளை வைத்துதான் மார்க்கோனி ஆய்வுகளைச் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் என்னுடைய 17 காப்புரிமை கருவிகளை பயன்படுத்தி தான் தனது ஆய்வுகளை செய்தார் என்று டெஸ்லாவால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு முதன்முதல் வானொலியை கண்டுபிடித்தவர் டெஸ்லா என்ற ஒரு தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால் மார்க்கோனி அதற்கு மேல் முறையீடு செய்து பல ஆண்டுகள் கழித்து மார்க்கோனிக்கு ஏற்புடைய தீர்ப்பு வழங்கப்பட்டது. 1894-ல் ஹெர்ட்சின் மறைவிற்குப் பிறகு போலக்னோ பல்கலைக்கழக மாணவர் எழுத்தாளர் ஆகஸ்டோ ரைட் என்று ஹெர்டினின் ஆய்வு அறிக்கைகளை கொண்டு மேலும் ஆய்வுகளில் பங்கேற்றார். அப்போது அவருடன் துணையாக மார்கோனியும் அதில் ஈடுபட்டார். பிந்தைய கண்டுபிடிப்பாளர்களால் கம்பியற்ற தகவல்தொடர்பு மற்றும் தொலைநிலை கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களின் நடைமுறைப் பயன்பாடுகள் செயல்படுத்தப்பட்டன.
மார்க்கோனி தன் இல்லத்திலும் இந்த ஆய்வுகளை தொடர்ந்தார். எந்த பொருளின் மூலமாகவும் மின்காந்த அலைகள் பாயும் என்ற கருத்தை தன் ஆய்வின் மூலம் வெளிபடுத்தினார். வானொலி அலைகளை கொண்டு கம்பியில்லாத் தந்தி முறையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் இந்த முயற்சியை 50ஆண்டுகளுக்கு முன்பே பலரும் செய்ய முயற்சி செய்த போதிலும் அதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் மார்க்கோனி 1895 ஆம் ஆண்டு ஏறத்தாழ ஒன்றரை கிலோமீட்டர் அளவுக்கு செய்தியை அனுப்பக்கூடிய ‘திசைதிரும்பும் மின்கம்பம்’ [Directional Antenna] என்ற கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றிக்கண்டார். இந்த அரிய முயற்சியில் இத்தாலிய அரசாங்கம் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை. இதனால் லண்டன் சென்ற மார்க்கோனி தன்னுடைய ஆய்வுகளை பற்றிய செய்திகளை அங்கே பரப்பினார். ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளரான ‘வில்லியம் ஃப்ரீஸ்’ இவருடைய ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி ஊக்கம் கொடுத்தார். பல தொடர் ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1897 மார்ச் மாதம் மோர்ஸ் அலை வடிவை 6 கிலோமீட்டர் தூர அளவுக்கு செலுத்தும் வகையில் மின்காந்த அலை பரப்பை (டிரான்ஸ்மிட்டர்) உருவாக்கினார். 1897-ல் மே 13 அன்று நீரின் வழியாக ‘நீங்கள் தயாரா?’ என்ற செய்தியை சுமார் 14 கி. மீ தூரத்திற்கு செலுத்துவதற்கான ஒலிபரப்பியை உருவாக்கினார். அவரது இந்த ஆய்வில் மனங்கவர்ந்த ஃப்ரீல் பொது மக்கள் மத்தியில் கம்பியில்லாத் தந்தி முறை என்ற தலைப்பில் 11 டிசம்பர் 1896 இல் டாய்ன்பீ கூடத்தில் சொற்பொழிவாற்றி விளக்க ஏற்பாடு செய்தார். அதன் விளக்கங்களை ராயல் கழகத்திற்கு வழங்கவும் துணை புரிந்தார். 1897 இல் ‘மார்க்கோனி நிறுவனம்‘ இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. 1897 ல் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தொலைவில் தொடர்பு ஏற்டுத்தி காட்டினார். 1899இல் ஆங்கிலக் கால்வாய் தாண்டி இங்கிலாந்திற்கும் ஃபிரான்சுக்கும் எந்தவொரு காலநிலையிலும் இயங்கும் கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார். 1912ஆம் ஆண்டு ஒரு மோட்டார் விபத்தில் தனது வலது கண்ணை இழந்த போதிலும் இவர் தனது ஆய்வை கைவிடாமல் தொடர்ந்து நடத்தினார். 1914-ல் முதல் உலகப் போர் தோன்றியபோது இத்தாலி நாட்டின் தரை, கடற்படைகளில் வானொலியைப் பயன்படுத்தி வேலை புரிந்தார். அமெரிக்காவின் போர்க்குழு உறுப்பினர் போலத் தொண்டாற்றினார். முசோலினியை அவர் ஆதரித்து இத்தாலியன் பாசிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் நாள் மார்க்கோனி காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.
இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரே நேரத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. முதல் வானொலி நிகழ்ச்சிகள் ‘ரேடியோ கிளப் ஆப் பாம்பே’ என்ற தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, நிர்வாகம் செய்து வந்தது. 1936 ஆம் ஆண்டு முதல் வானொலி, அகில இந்திய ஒலிபரப்பில் காலூன்றியது. 1947 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் பெறும் போது 6 வானொலி நிலையங்கள், 18 டிரான்ஸ் மீட்டர்கள் இருந்தது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 2.5 சதவிகித இடத்திற்கு மட்டுமே வானொலி ஒலிபரப்பு சென்றடைந்து கொண்டிருந்தமையால் வெறும் 11 சதவீத மக்கள் மட்டுமே வானொலி ஒலிபரப்பை கேட்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி இந்தியா முழுவதும் 208 வானொலி நிலையங்கள் உள்ளது. பல்வேறு அலை நீளம் கொண்ட 326 டிரான்ஸ் மீட்டர்கள் உள்ளன. இந்த பிரம்மாண்ட வானொலி சேவை 89.5 சதவிகித பகுதிக்கு சென்று சேர்கிறது. 98.82 சதவீத மக்கள் வானொலி ஒலிபரப்பை கேட்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது வரவேற்கப்பட வேண்டிய செயலே.
அகில இந்திய வானொலி நிறுவனம் 24 இந்திய மொழிகளில் அதன் உள்நாட்டு ஒலிபரப்பை நடத்தி வருகிறது. இவை மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியன் போன்ற அயல்நாட்டு மொழிகளிலும், 16 தேசிய மொழிகளிலும் சர்வதேச ஒலிபரப்பை செய்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, 2.25 லட்சம் வானொலி பெட்டிகள் மட்டுமே இருந்தன. தற்போது, 11.10 கோடி வானொலி பெட்டிகள் உள்ளன. அகில இந்திய வானொலியின் டெல்லி நிலையம் மட்டும் 88 செய்தி தொகுப்புகளை ஒலிபரப்பு செய்கிறது. இத்துடன் 42 மாநில மொழி நிலையங்கள் வழியாக 202 செய்தி தொகுப்புகளும் ஒலிபரப்பாகின்றன.
வர்த்தக நோக்கில் ‘விவித் பாரதி‘ என்ற சேவை 1957 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி தொடங்கியது. 1969 ஆம் ஆண்டு ‘யுவவாணி’ என்ற ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பண்பலை ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டில், டிஜிட்டல் ரேடியோ, ‘பிராட்காஸ்டிங்’ ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. இணையதளம் வழியாக நேயர்கள் விரும்பும் பாடல்களை ஒலிபரப்பும், ‘ரேடியோ ஆன் டிமாண்ட் சர்வீஸ்’ என்ற இணைய சேவையும் தொடங்கப்பட்டது. மேலும், 1998 ஆம் ஆண்டில், நியூஸ் அண்ட் டெலிபோன் என்ற தொலைபேசி வாயிலாக செய்திகளை கேட்டு தெரிந்துகொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னையில் தான் முதல் பண்பலை நிலையம் 1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் நாள் துவங்கப்பட்டது. சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை நகரங்களில் அகில இந்திய வானொலி ‘ரெயின்போ’, ‘கோல்டு’ என்ற இரண்டு அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரெயின்போ என்பது முழுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், சிறு சிறு தகவல்களையும் அந்தந்த பகுதிக்கு ஏற்றாற்போல் வெளியிடுவதாகும். கோல்டு என்ற இரண்டாவது அலைவரிசை இந்தியா முழுமைக்குமான ஒலிபரப்பாகும். இதில், தேசிய செய்திகள், செய்தி விமர்சனம் போன்றவை முக்கியமாக கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களும் கூட ஒலிபரப்புகிறது. பொதுவாக, ஒரு பண்பலை வானொலியின் ஒலிபரப்பு எல்லை 40 முதல் 50 கிலோ மீட்டர் தான் இருந்தது. குறைந்த தொலைவு, தெளிவான, துல்லியமான ஒலிபரப்பு என்பது தான் பண்பலையத்தின் இலக்கணமானது. இதில்,விதிவிலக்காக கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் உள்ளது. அதன் டிரான்ஸ் மீட்டர் எனும் ஒலிபரப்பு கோபுரம் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், அதன் ஒலிபரப்பு எல்லை கிட்டத்தட்ட 250 முதல் 300 கி.மீ. தொலைவில் வரை செல்கிறது. இதனால், தென்னிந்தியத்தின் 22 மாவட்டங்களுக்கு ஒலிபரப்பாகிறது.
Web Title: History behind the radio
Featured Image Credit: pixabay