இந்த கட்டுரை எழுதுவதற்கு முதல் நோக்கம் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே என் வடநாட்டு நண்பர் என்னைப் பற்றியும் என் ஊரை பற்றியும் விசாரித்ததுதான். நானும் எனக்கு தெரிந்ததை முடிந்த அளவிற்கு அவருக்கு எடுத்து கூறினேன். அவர் ‘நீங்கள் செட்டிநாடு சாப்பாடு சாப்பிட்டது உண்டா’ என்று அவர் கேட்டதற்கு. நான் கூறினேன் ‘நான் சென்னையை சேர்ந்தவன் செட்டிநாடு உணவை பற்றி கேள்வி பட்டிருக்கேன், ஆனால் செட்டிநாடு உணவை ருசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்று கூறினேன். அப்போதுதான் செட்டிநாடு பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் அதிகரித்தது.
சரி எப்படியாவது செட்டிநாடு பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் அங்கு எப்படி செல்லவேண்டும் என்று எனது நண்பர்களிடம் விசாரித்தேன். ஒரு நண்பன் தென் மாவட்டங்கள் அனைத்தும் செட்டிநாடு என்று கூறினான், மற்றொரு நண்பன் இராமேஸ்வரம் பக்கம் இருக்கும் என்று கூறினான். பிறகு இணையத்தில் சென்று தேடிப்பார்த்தேன் பல சுவாரசியமான தகவல்கள் எனக்கு கிடைத்தது.பிறகு விடுமுறை தினங்களில் காரைக்குடிக்கு பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.
நான் சென்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள்.
காரைக்குடி சென்றவுடன் என்னை குழப்பித்த முதல் விஷயம் பேருந்து நிலையம். காரைக்குடியில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன ஒன்று காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றொன்று காரைக்குடி பழைய பேருந்து நிலையம். காரைக்குடி நகரம் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.
‘காரைக்குடி’ என்பதற்கான விளக்கம் செட்டிநாட்டின் வீடுகளை அடிப்படையாகக் கொண்டது. ஆம், இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் பெரும்பாலும் சுண்ணாம்புக் கற்களால் ஆனவை, சுண்ணாம்புக் கற்களை “காரை” என்று அழைப்பதாகவும் அதன்மூலமே இவ்விடம் காரைக்குடி என்று அழைக்கப்படுவதாகவும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்
காரைக்குடியின் வளர்ச்சி செட்டியார்கள்
காரைக்குடி இன்று உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஊர் என்றால் இதற்கு முழு காரணமும் செட்டியார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த ஊரில் பெரும்பாலானோர் செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் . இந்தியாவின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றான அழகப்பா பல்கலைக்கழகம் இந்த காரைக்குடியின் முக்கிய சிறப்பாகும். இதனை நிறுவியவர் செட்டியார் குடும்பத்தை சேர்ந்த வள்ளல் அழகப்பர் ஆவார். காரைக்குடியின் இன்றைய வளர்ச்சியில் இந்த பல்கலைக்கழகம் முக்கிய அங்கம் வகிக்கிறது.
செட்டிநாடு உணவுகள்
இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகம் காரைக்குடியின் சிறப்பு என்றால் செட்டிநாடு உணவு மற்றொரு சிறப்பாகும். ஆச்சி சமையல் என்று உள்ளூர் மக்களால் அறியப்படுவதும் மேலதிக சிறப்பு எனலாம். செட்டிநாடு உணவில் பிரபலமான உணவு வகைகள் அசைவம் ஆகும். மீன் குழம்பு, நண்டு மசாலா, சிக்கன் செட்டிநாடு, சுறா புட்டு, இறால் மசாலா போன்றவைகள் மிகவும் பிரபலமான மற்றும் ருசிகரமான உணவுகள் ஆகும். சைவ உணவுகளில் இடியப்பம், அடை மற்றும் பணியாரம் போன்றவைகள் மிகவும் பிரபலம் ஆகும். அன்னபூர்ணா ஹோட்டல், பிரியா மெஸ், ஆச்சி மெஸ் போன்ற உணவகங்களில் செட்டிநாடு சுவையை சுவைக்கலாம்.
செட்டிநாடு கட்டிடக்கலை
காரைக்குடியில் இருக்கும் ஒவ்வொரு வீடும் மாளிகை என்பது அதன் பிரம்மாண்டமான கட்டிடக் கலையை பார்த்தாலே தெரியும். சுண்ணாம்பு கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டிடங்கள் பல நுற்றாண்டு பழமையானது என்பது வல்லுனர்கள் கருத்தாகும். அதிலும் பிரபலமான கட்டிடம் என்று சொன்னால் ‘ஆயிரம் ஜன்னல் வீடு’ 20 கதவுகள் 1000 ஜன்னல்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த வீடு, காரைக்குடியின் மிகவும் முக்கியமான பொக்கிஷம் ஆகும். செட்டிநாடு அரண்மனை மற்றும் கவியரசு கண்ணதாசன் மணி மண்டபம் காரைக்குடியின் மற்றொரு சிறப்பாகும்.
வரலாற்று சிறப்பு கோவில்கள்
தமிழுக்கு கோவில் கட்டிய பெருமை காரைக்குடி நகரைச் சேரும். தமிழ் தாய் கோவில் இருப்பது இந்த காரைக்குடி மண்ணில்தான். குன்றக்குடி முருகன் கோவில், உலக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், பட்டமங்கலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோவில், திருகோஷ்டியூர் பெருமாள் கோவில் என காரைக்குடியை சுற்றி பல சக்திவாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்கள் இங்கு இருப்பது காரைக்குடிக்கு மேலும் பெருமை சேர்க்கின்றது. மேலும் இங்கு இருக்கும் பிரதானமான கோவில்கள் 18 ஆம் நுற்றாண்டை சேர்ந்தவை என பல தரப்பு மக்களால் நம்பப்படுகிறது.
காரைக்குடியும் தமிழ் சினிமாவும்
இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோஸ். இந்த ஸ்டுடியோ முதல் முதலில் ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்களால் காரைக்குடியில் திறக்கப்பட்டது. பிறகு பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டன. பல்வேறு முன்னணி நடிகர்களை காரைக்குடி உருவாக்கியுள்ளது. மேலும் இயக்குனர் ஹரி இயக்கும் அனைத்தும் படங்களும் காரைக்குடியில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. தமிழ் தொலைக்காட்சியில் பல வருடங்கள் ஓடிய மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் போன்ற நாடகங்கள் காரைக்குடியில் படமாக்க பட்டுள்ளது. இவ்வளவு ஏன் திருட்டு விசிடிக்காக விஷால் குரல் கொடுத்த முதல் ஊர் காரைக்குடி தான்.
சிக்ரி ஆராய்ச்சி நிலையம்
தமிழக மக்களுக்கோ அல்லது மற்ற மாநிலத்தில் இருப்பவர்களுக்கு கூட காரைக்குடியில் இருக்கும் சிக்ரி(அறிவியல் தொழிலக ஆய்வுக்குழுமம்) பற்றி தெரியாது. 1942 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ஆய்வுக்குழுமம் இன்றுவரை நாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. சிக்ரியில் உலோக அரிமானம், மின்கலன்கள், குளோரோ அல்கலி, மின் உலோகவியல், மின் நீர் உலோகவியல், மின் வேதியியல் துறைக்கு பயன்படும் நவீன கனிமம் மற்றும் மூலப்பொருட்கள், மின் கரிம வேதியியல், நோய் சம்பந்தப்பட்ட கிருமிகளை ஆராய பயன்படும் நவீன சென்சார்ஸ் மற்றும் மின் முலாம் பூசுதல் ஆகியவை குறித்து பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதுவரை 250 தொழில் நுட்பங்கள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு வளங்கள் நிறைந்த இந்த செட்டிநாடு மண்ணை எப்படி அடைவது என்று நினைத்தால் கவலைவேண்டாம். சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்து இங்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. மேலும் காரைக்குடிக்கு சென்னையில் இருந்து நேரடி ரயில் வசதியும் உண்டு. மேலும் செட்டிநாடு பாரம்பரியம் தமிழகத்தின் முக்கியமான பாரம்பரியங்களில் ஒன்று என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை யாகும்.