இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இராணவன் குகை

இராவணன். இந்த ஒற்றைப் பெயர் அத்தனை ஈர்ப்புசக்தி கொண்டது. இதை யாரும் மறுக்கமுடியாது. இராவணனை இராமாயணம் கெட்டவனாக சித்தரித்தாலும், பிறர் மனைவியை கவர்ந்தவன் என்று ஏளனம் செய்தாலும் அவனிடத்திலிருந்த தொழில்நுட்பமும் யுத்த தந்திரங்களும் கோட்டைக்கட்டி ஆண்ட முறைகளும் அரண்மனைகளும் ஏராளம். உலகத்திற்கு விமானத்தை கொடுத்தது வேண்டுமானால் ரைட் சகோதரர்களாக இருக்கலாம்; ஆனால், அந்த காலத்திலேயே விமானத்தை வைத்திருந்தான் இராவணன் என்கிறது இராமாயணம். அதற்கு புஷ்பக விமானம் என்ற பெயரையும் சொல்கிறது. ஒருவேளை இது கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால் அப்படி பறக்க முடியும் என்ற கற்பனையை உருவாக்கும் அளவிற்கு ஆதித் தமிழர்கள் தொழில்நுட்பம் நிறைந்த அறிவோடு இருந்திருக்கிறார்கள் என்றால் அதை நாம் நிச்சயம் மெச்சிக் கொள்ள வேண்டும்.

ராவணனின் புஷ்பராக விமானத்தின் ஓவியம்
படஉதவி : blogspot.com

இராவணன் என்றாலே ஒரு வித சிலிர்ப்பும், கர்வமும் எமக்கு வந்துதான் போகின்றது. அந்த இராணவனன் ஆண்டதாக சொல்லப்படும் இலங்கையில் சீதையைக் கவர்ந்துவந்து மறைத்துவைத்ததாக சொல்லப்படும் இடங்கள் ஏராளம் உண்டு. அதில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இடம்தான் எல்லே நகரத்தில் அமைந்துள்ள இராணவன் குகை. இராணவன் வெட்டு, இராணவன் நீரூற்று என்று பல இராமாயணக் காலத்து இடங்கள் இருந்தாலும் இராணவன் குகையானது கொஞ்சம் விசேடம்தான். இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா புரியில் பல குகைகளில் மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான் இந்த இராவணன் குகை. இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையில் இருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில்தான் எல்லே நகரம் அமைந்திருக்கின்றது. நகரத்தின் மத்தியிலிருந்து 2கிலோ மீற்றர் தொலைவான மலையில்தான் இந்த இராவணா குகை அமைந்திருக்கின்றது. இராவணன் குகை 50 அடி அகலமும் 150 அடி நீளமும் 60 அடி உயரமும் கொண்டதாக கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 4490 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.

இராவணன் குகையின் முன் பகுதி 
படஉதவி : tripadvisor.ie

இராவணன் குகைக்கு யாரும் எந்த நேரமும் செல்ல முடியாது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி மணிவரைதான் செல்ல முடியும். 8 மணிக்குத்தான் இராவணன் குகைக்கு செல்லும் கதவுகளை திறந்துவிடுவார்கள். படிகளினூடாகத்தான் நாம் குகையை நோக்கி செல்ல முடியும் கிட்டத்தட்ட ஆயிரம் படிகளுக்கு மேல் இருக்கின்றன. செங்குத்தாகவும் சமாந்திரமாகவும் வளைவுகள் நிறைந்ததாகவும் இந்த படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  சுமார் அரை மணி நேரப்பயணத்தில் உச்சியை அடைந்துவிடலாம்.

குகைக்கு செல்லும் பாதையில் குருவிகளின் சத்தங்களும் நீர் வீழ்ச்சிகளின் சத்தங்கள் எம்மை சாந்தப்படுத்தியே மேலே அழைத்துச் செல்கின்றன. உயரத்தை சென்றடைந்தபிறகு ஏதோ மகிழ்ச்சி. மெது மெதுவாக குகையை நோக்கி கால்கள் நகர்கின்றன. சிறிது தூரத்தில் படிகற்கள் இல்லாமல் பாறைகளின் நடுவே செல்லவேண்டும். அதன்பின் இருண்ட குகைகளுக்குள் செல்கின்றோம். ஒரே இருட்டு ஒரு கல்லின் மேல் மறு கல்லை வைத்து அடுக்கிவைத்தால் போல் உள்ளது இக்குகை.

இராவணன் குகைக்கு உள்ளே செல்லும் சுற்றுலாப் பயணிகள்
படஉதவி : ellacabs.com

அந்தக் கற்களின் இடைவெளியூடாக சூரிய ஒளி உள்ளே நுழைகின்றது. ஞானிகள் முனிவர்கள் ஏன் குகைகள் தியானம் செய்தார்கள் என்பது அந்த குகைக்குள் செல்லும் போதுதான் புரிகிறது. மனதில் ஒரு அமைதி சிறிது தூரம் உள்ளே நகரும்போது குருவிகள் சத்தம் மட்டுமே கேட்கும். குகை முழுக்க இருள் சூழ்ந்து காணப்பட்டது.  ஆனால் மனதில் ஏதோ இனம்புரியாத அமைதியும் சில்லென்ற குளிரும்.  ஏதேதோ எங்கெங்கோ தேடி அழையும் நமக்கு நம் நாட்டிலேயே அமைந்துள்ள இந்தக் குகையானது  சற்று ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. சரி இது இராவணனின் குகைதானா என்பது அரிதியிட்டு உறுதியாக சொல்லிவிட முடியாது என்ற போதிலும் இதை இராணவன் குகை என்றே விழிக்கின்றனர்.

 எல்லே- இராவணன் நீர்வீழ்ச்சி .
படஉதவி : wikipedia.org

இராமாயணக் கதாபாத்திரமான இராவணன் பதுளையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததாக சொல்லப்படுகின்ற. இராவணன் அருவி, ஸ்ரீத்ரீபுரம் வளைவு சுரங்கம், ஹக்கலை மலை, தியூரும்வலை கோயில் ஆகியன இராவணனின் கதையுடன் தொடர்புள்ளவையாகும். ஆக புராணங்களின்படி இது இராணவன் குகை என்றே நாமும் எடுத்துக்கொள்வோம்.

Related Articles

Exit mobile version