அடிமைகள். இது உலகம் கேட்க விரும்பாத வார்த்தை. ஆனால் ஒரு காலத்தில் அடிமைகள் இல்லாமல் உலகமே இல்லாத நிலைதான் இருந்திருக்கிறது. நாம் தற்போது நாகரீக வளர்ச்சியைக் கொண்டாடும் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஜனநாயகம் பற்றி பேசுகிறோம். ஆனால் 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் மனிதனே மனிதனை அடிமைகளாக்கி தங்கள் வேலைகளை செய்துக் கொண்டிருந்திருக்கிறான். வெறும் நிறத்தை வைத்து ஒருவனை ஒருவன் அடிமைகளாக்கியிருக்கிறான்.
இந்த அடிமை வர்த்தகமானது மிகப்பெரிய அளவில் அப்போது இருந்திருக்கிறது. அடிமைகள் அப்போது மனிதர்களாகவே மதிக்கப்படவில்லை அல்லது அவர்கள் மிருகங்களைவிடவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள் என்றால் அது மிகையில்லை. இன்று மிகப் பெரிய ஜனநாயக நாடுகளாகவும் உலக வல்லரசு நாடுகளாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நாடுகள்தான் அப்போது மிகப் பெரிய அடிமை வர்த்தக களத்தில் ஈடுபட்ட நாடுகள்.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணப்படும் மனிதன் தன்னுடைய கலாசாரத்தை மற்றவர்கள் மீது புகுத்த ஆரம்பித்தான். மேலும் மற்ற இடங்களில் உள்ள செல்வச் செழிப்புகளை கொள்ளையடிக்கவும் ஆரம்பித்தான். அந்த செல்வச் செழிப்புகளை கொள்ளையடிக்கும்போது அந்த பூர்வகுடி மக்கள் அதனை எதிர்த்தனர். எதிர்த்த பூர்வகுடி மக்களை கொள்ளையடிக்கச் சென்றவர்கள் கொன்று குவித்தனர். அதில் தப்பி பிழைத்தவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். தனது அதிகாரத்தை மற்றவர்களிடம் காட்டுவதற்காகவே முதலில் அடிமைகள் உருவாக்கப்பட்டனர். ஒருவன் இன்னொருவனை அடிமைப்படுத்துவதின் மூலம் தன்னை வலிமையானவனாக நினைத்துக்கொள்கிறான்.
அதனை தொடர்ந்து வரலாற்றில் ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயர்கள் மனிதர்களிடையே பாகுபாடுகளை உருவாக்கினர். அதற்கு நிறச்சாயலையும் கலாச்சார சாயலையும் பூசினர். நிறத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வுகளை உருவாக்கினர். கருப்பாக இருப்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் வெள்ளையாக இருப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையையும் புகுத்தினர். இதன் அடிப்படையில் ஆப்பிரிக்க கண்டத்தை சார்ந்த மக்கள் தாழ்வானவர்களாக கருதப்பட்டனர். மேலும் அடிமைத் தொழில் செய்வதற்கென்றே பிறந்தவர்கள் போல அவர்கள் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டனர்.
முந்தைய நூற்றாண்டுகளில் ஆபிரிக்க கண்டத்திலிருந்து தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனர். 16ஆம் நூற்றாண்டில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆபிரிக்காவிலிருந்து பிற கண்டங்களுக்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1 கோடியே 25 இலட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதன் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம். அப்படி அடிமைகளாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட ஒரு கூட்டம்தான் இலங்கை ஆப்பிரிக்கர்கள். இவர்களை இலங்கையில் கஃபீர் (Kaffir) இனத்தவர்கள் என்கின்றனர்.
ஆப்பிரிக்காவிலிருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளியிருந்தாலும் கூட ஆப்பிரிக்காவின் சுவாசம் அவர்களுக்குள் இருக்கின்றது. காடுகளையும், இயற்கை சார்ந்த வாழ்வையும் மீறி இவர்களால் வாழ்ந்துவிட முடிவதில்லை. அவர்களின் மரபணுக்கள் ஆபிரிக்க உருவத்தை இன்னும் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திக் கொண்டேயிருக்கின்றன. தாங்கள் வாழும் பகுதியின் கலாசாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை கற்றுக்கொண்டு வாழ்ந்தாலும் கூட இன்றும் இந்த கஃபீர் இனத்தவர்கள் தங்களின் சில பழைய மரபுகளையும், கலைகளையும் பாதுகாத்து வைத்துள்ளனர். குறிப்பாக கப்பரிஞ்சா (Kaffringna) என்னும் பைலா இசை. இலங்கையின் ‘பைலா’ என்பது உலக அளவில் மிகவும் பிரபல்யம்தான். அதில் மிக முக்கியமான பங்கு இந்த இலங்கை ஆபிரிக்கர்களைத்தான் சேரும்.
இலங்கை காப்பிரி அல்லது இலங்கை ஆபிரிக்கர்கள் எனப்படுவோர் 16ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் போர்த்துக்கேயர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போது, ஆபிரிக்க அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின்னர் உள்ளூர் மக்களுடன் கலந்து கொண்ட இனத்தவரைக் குறிக்கும். இவர்களின் முன்னோர்களாக ஆபிரிக்கர்களும் போர்த்துக்கேய வணிகர்களும் காணப்படுகின்றனர். இவர்களுள் எத்தனைப் பேர் தற்போது இலங்கையில் வசிக்கின்றனர் என்பது பற்றிய சரியான குறிப்புகள் இல்லை. தற்போது இவர்கள் வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின் சிரம்பியடியிலும் மட்டக்களப்பில் வென்னப்புவ பகுதியிலும் இருப்பதாக அறியக்கிடைக்கின்றது. இவர்கள் பேசியது போர்த்துக்கீசம் கலந்த காப்பிலி (ஆபிரிக்க) கிரியோல் (creole) மொழியாக இருந்திருக்கிறது. ஆனால் தற்போது சிங்களமே இவர்களின் தாய்மொழியாக மாறிவிட்டது.
புகழ்பெற்ற ‘பைலா’ என்ற இசை ஆட்டத்திலிருந்து ‘கப்ரிஞ்சா’ மற்றும் ‘மஞ்சா’ என்னும் அவர்களது ஆடல் பண்பாட்டுத் தனித்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. இந்தப் பாடல்களை அவர்கள் அவர்களின் ஆப்பிரிக்க மொழியிலும் போர்த்துக்கீசம் மொழியிலும் கூட பாடி வருகின்றனர். புத்தளத்தில் ஆப்பிரிக்க கஃபீர் இனத்தில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் 50 என சொல்லப்படுகின்றனது. திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய பிரதேசங்களிலும் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். திருகோணமலையில் வாழும் ஆபிரிக்க கஃபீர்களுடன் இவர்களுக்குத் தொடர்புகள் இருக்கின்றன. இவர்கள் தமிழ் பேசுபவர்களாகவும் காணப்படுகின்றனர். தற்போது அவர்களின் ஆதி மொழியும் மறந்து போய்விட்டது என்றே சொல்கிறார்கள். அவர்களின் இளம் தலைமுறைக்கு ஆதி மொழியை சொல்லிக் கொடுக்ககூட அவர்களால் முடியவில்லையாம்.
அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்டனர். மன்னிக்கவும் கொண்டுவரப்பட்டனர். அவர்களின் வழித் தோன்றல்களே இந்தக் கஃபீர். இவர்கள் மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்ததாக தமது முன்னோர் கூறக் கேட்டதாகக் கூறினாலும், அது முற்றிலும் சரியா, அப்படியென்றால் மொசாம்பிக் நாட்டின் எப்பகுதியிலிருந்து வந்தார்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் யாரிடமும் இல்லை. கஃபீர் இன மக்கள் இசை மற்றும் நடனத்தை மிகவும் நேசிப்பவர்கள். அவர்களின் இசையின் மூலத்தில் ஆபிரிக்க இசை வடிவத்தின் தாக்கம் இருந்தாலும் இலங்கை இசையின் கலப்பும் உள்ளது.