இலங்கையை ஆண்ட பிரித்தானியர்கள் தங்களது சொந்தப் படையில் அங்கம் வகித்த சிறந்த இலங்கை வீரரை, அநீதியான முறையில் கொன்ற கதை, இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வீரரின் பெயர் ஹென்றி பேதிரிஸ். கொழும்பில் வாழும் பலருக்கும் இந்தப்பெயரை எங்கோ கேட்டது போல இருக்கலாம். ஆம், கொழும்பின் மத்திய பாகத்தில் ஹவ்லொக் டவுனில் அமைந்துள்ள ஹென்றி பேதிரிஸ் மைதானம் அந்த வீரருடைய பெயரிலேயே அமைந்திருக்கின்றது.
பிரித்தானிய இராணுவத் தளபதிகள், ஹென்றி பேதிரிஸ் மீது சந்தேகப்பட்டு, அவருக்கு மரணத்தைத் தண்டனையாகத் தந்தனர். ஆனால், ஹென்றி பேதிரிஸ் இறந்து சில காலத்துக்கெல்லாம் அவர் நிரபராதியென்பது வெளிப்பட்டு விட்டது. பிரித்தானியச் சட்டங்களை தம் வசம் வைத்திருந்தவர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகி, உயிர் துறந்தார் கப்டன் ஹென்றி பேதிரிஸ்.
ஆரம்பம்
1888 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி பிறந்த அவருடைய முழுப்பெயர் டுவெனுகே எட்வேட் ஹென்றி பேதிரிஸ் (Duenuge Edward Henry Pedris). காலியில் பிறந்த ஹென்றியின் செல்வந்தக் குடும்பம், அப்போதைய காலத்தில், நாட்டில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தது. தனது கல்வியை, இலங்கையின் முதன்மைக் கல்விக்கூடங்களாக இன்றும் திகழும் றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை பரிதோமாவின் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுக்களில், ஹென்றி மிகவும் சிறந்து விளங்கியதாக வரலாற்றுத் தரவுகள் எடுத்துரைக்கின்றன.
ஹென்றியின் தந்தையார், தமது மகன் பிற்காலத்தில் தனது வியாபாரத்தைக் கவனித்துக் கொள்வான் என்று நம்பியிருந்தார். ஆனால் விதியெனும் காட்டாற்று வெள்ளத்தின் வேகத்தின் முன்னால், எவருடைய எண்ண அலைகள் தான் எதிர்த்து நிற்க முடியும்?
பிரித்தானியாவின் சிறப்புப் படையில் ஹென்றி
அது முதலாம் உலகப்போர் உச்சத்திற்கு வரத்தொடங்கியிருந்த காலம்! இலங்கையில் ஆட்சி செய்து கொண்டிருந்த பிரித்தானியர்கள், தமது படைகளுக்கு துணையாகவும் கொழும்பு நகரைக் காப்பதற்காகவும் சிறப்புப் படையொன்றைக் கட்டியெழுப்பினார்கள். கொழும்புப் பட்டினக் காவற் படையென்ற (Colombo Town Guard) அந்தப் படைப்பிரிவில் சேர்ந்து கொண்டார் ஹென்றி. அந்தப்படையில் இணைந்து கொண்ட முதலாவது சிங்களவர் அவர் தான். ஹென்றிக்கு அடிமட்ட இராணுவ வீரருக்கு தரப்படும் “ப்ரைவேற்” என்ற தர நிலையே, அப்போது வழங்கப்பட்டது. ஆனாலும், ஹென்றி மனம் தளரவில்லை.
தன்னுடைய கடுமையான உழைப்பாலும் வீரத்தின் வெளிப்பாட்டாலும், தனது உயர் அதிகாரிகளை ஹென்றி பேதிரிஸ் கவர்ந்து கொண்டார். குதிரையோட்டத்தில் ஹென்றிக்கு இருந்த அபார ஆற்றல் அனைவரையும் வியக்க வைத்தது. இந்த நிலையில், அடிமட்டத் தர நிலையில் இருந்த ஹென்றிக்கு, கட்டளையிடும் அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவர் நிர்வாகப் பிரிவுக்கும் மாற்றப்பட்டார். ஓராண்டுக்குள்ளாகவே அவருக்கு மற்றுமொரு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. பிரித்தானிய இராணுவத்தின் கப்டன் தர நிலைக்கும் ஹென்றி உயர்த்தப்பட்டார்.
ஹென்றி பேதிரிஸின் இந்த அசுர வளர்ச்சி பலருடைய கண்களை உறுத்தத் தொடங்கியது அப்போதுதான்! ஹென்றியின் குடும்பத்தின் செல்வ நிலையும் அந்தஸ்தும் அப்போதைய இலங்கையில், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன. அந்தச் சூழலில், பிரித்தானிய இராணுவத்தில் அவருக்கு கிடைத்த, இந்தத் தரநிலை உயர்வு, பலரது பொறாமைத் தீ கொழுந்து விட்டெரியக் காரணமானது.
ஹென்றிக்கு எதிரான சூழ்ச்சி
1915 ஆம் ஆண்டு கண்டி நகரில் இரு இனத்தவர்களுக்கிடையே மூண்ட கலவரத்தை அடக்கி அமைதி ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலையில், பிரித்தானிய ஆளும்தரப்பு இருந்தது. அதனால், இரும்புக் கை கொண்டு கலவரத்தை ஒடுக்குமாறு தனது இராணுவத்திற்கு அது பணித்தது. இதனையடுத்து 1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதியன்று இராணுவச் சட்டம் அமுற்படுத்தப்பட்டது.
கலவரத்தைத் தூண்டும் வகையில் யாரேனும் செயற்பட்டால், எந்தவித விசாரணையுமின்றி அவரைச் சுட்டுக்கொல்லும்படி, காவல்துறைக்கும் இராணுவத்திற்கும் உத்தரவுகள் கிடைத்தன. கண்டியில் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவர பூதம், கொழும்பிலும் தனது சீரழிவைப் புரிந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கொழும்பு நகரை கலவரத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்த ஹென்றி பேதிரிஸ், விரைந்து செயற்பட்டார். அவரது துரிதமான மற்றும் விவேகமான நடவடிக்கைகளால், கலவரக் குழுக்கள் செயலிழந்தன.
ஹென்றி மீது எப்போது குற்றம் கண்டு பிடிக்கலாமென்று தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அவரது எதிரிகள், இந்தத் தருணத்தைப் பயன்படுத்தினர். ஹென்றி பேதிரிஸ் ஒருபோதும் செய்யாத ஒரு குற்றத்தை அவர் மீது சுமத்தினர். கலவரத்தின் போது, முஸ்லிம் குழு ஒன்றின் மீது ஹென்றி பேதிரிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக அந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்தச் சூழ்ச்சிக்குப் பின்னால், அப்போதைய பிரித்தானிய ஆளுநரின் ஆலோசகரெனக் கூறப்படும் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க (Sir Solomon Dias Abeywickrema Jayatilleke Senewiratna Rajakumaruna Kadukeralu Bandaranaike) இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த சூழ்ச்சிக்குப் பலியான ஹென்றி பேதிரிஸ், இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். முஸ்லிம் குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், பேலியகொட பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி மக்களை பேரணியாக திரண்டு வருவதற்குத் தூண்டியதாகவும், ஹென்றி பேதிரிஸ் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, ஹென்றி கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி ஆளும் தரப்பினரின் நீதி நாடகம் சிறப்பாக நடந்தேறியது. ஆனால், ஹென்றியின் மீது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையால், இலங்கையில் புரட்சி வெடிக்குமென பிரித்தானிய ஆளும் தரப்பு அச்சம் கொண்டது. அதன் காரணமாக, ஹென்றியைக் கைது செய்ததுடன், அப்போது இலங்கையிலிருந்த பல முக்கிய அரசியல் மற்றும் சிங்கள சமூகத் தலைவர்களையும் கைது செய்து சிறைக்குள் தள்ளியது பிரித்தானிய அரசு. டி.எஸ். சேனாநாயக்க உள்ளிட்ட சுமார் 80 தலைவர்கள் சிறை சென்றனர்.
நிரபராதிக்கு வழங்கப்பட்ட தண்டனை
இதேவேளை, ஹென்றிக்கு எதிரான முன்னெடுப்புகள் சட்டத்தின் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டன. 1915 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி இராணுவ நீதிமன்றத்தில் மூன்று இராணுவ அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஹென்றி பேதிரிஸ், குற்றவாளியென்றும் துரோகியென்றும் அறிவிக்கப்பட்டார். துப்பாக்கி சுடும் படையினர் மூலம் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட வேண்டுமென இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பு மீது எந்தவொரு மேன்முறையீடும் செய்ய முடியாத வண்ணம், ஹென்றியின் மரண தண்டனைக்கான திகதி 1915 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அப்போது இலங்கையில் வாழ்ந்து வந்த பல பிரித்தானியர்களும் இலங்கையர்களும் ஹென்றிக்கு இழைக்கப்படவிருந்த இந்த அநீதியை எதிர்த்துக் குரல் கொடுத்தனர். பிரித்தானியப் பேரரசினை அப்போது லண்டனிலிருந்து ஆண்டுவந்த அரசர் ஐந்தாம் ஜோர்ஜ்க்கு (King George V), நீதியற்ற இந்தத் தண்டனை குறித்து மேன்முறையீடும் செய்யப்பட்டது. ஆனால் அவை எதுவுமே பயனளிக்கவில்லை.
நிர்ணயித்த திகதியில், ஹென்றி பேதிரிஸ் அவரது இராணுவ தர நிலையிலிருந்து அகற்றப்பட்டதோடு, சுட்டும் கொல்லப்பட்டார்.
ஆனால், அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளின் இறுதியில், ஹென்றி பேதிரிஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவையென தெரியவந்தன. உயிரிழந்த ஹென்றி பேதிரிஸ் குற்றமற்றவர் என, பின்னர் அறிவிக்கப்பட்டது.
பிரித்தானியத் துப்பாக்கிகளின் தோட்டாக்களால் துழைக்கப்பட்டு, மரணத்தைத் தழுவிய போது, கப்டன் ஹென்றி பேதிரிஸுக்கு வயது 26.