இந்த இணைப்பில் இருக்கும் பூலான் தேவியின் சிறு வயதுக் கதைகளை முதலில் படித்து இந்த கட்டுரையின் விருவிருப்பை முற்றிலுமாக அனுபவிக்க
பிக்ரம் மல்லாவின் அடைக்களம்
ஒரு கொள்ளையனின் பிடியிலிருந்து மற்றொரு கொள்ளையனின் சொத்தாக மாறிவிட்டோம் என்று தான் பூலான் தேவி முதலில் நினைத்தார். ஆனால் பூலானை மரியாதையுடன் பிக்ரம் மல்லா நடத்திய விதம், எனக்கு நிகரானவள் நீ என்று பூலானை நம்பவைத்தார் பிக்ரம். கொள்ளை கும்பல்களில் பெண் நபர் ஒருவர் இருப்பது துரதிஷ்டவசமானது என நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் அவருக்கு மதிப்பை உருவாக்கினார். எப்படி திருடுவது எப்படி சுடுவது போன்றவற்றை பூலானிற்கு சொல்லிக்கொடுத்தார் பிக்ரம்.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட மல்லா சமூகத்தை சேர்ந்த பிக்ரம், கொள்ளைக்கார கும்பல் தலைவனாக வளர்ந்திருப்பது தாக்கூர் சமூகத்தை சேர்ந்த கொள்ளைக்காரர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை.. குறிப்பாக லாலாராம், ஸ்ரீராம் தாக்கூர் ஆகியோர் எப்படியாவது பிக்ரம் மல்லாவை கொலை செய்யவேண்டும் என துடித்தனர். அத்துடன் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணான பூலான் தேவி, துப்பாக்கியுடன் வலம் வருவது அவர்களுக்கு மேலும் எரிச்சலூட்டுவிதமாக அமைந்தது. இதனையடுத்து அவர்கள் பிக்ரமை கொன்றுவிடுகின்றனர். பின்னர் பூலானை கண்ணீர் பேமாய் என்ற கிராமத்திற்கு கடத்தி சென்றனர். கிட்டத்தட்ட மூன்று வாரத்திற்கு அவர்களின் அடிமையாக நடத்தப்பட்டார் பூலான். தாக்கூர்களால தொடர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். பழைய பூலான் தேவியாக இருந்திருந்தால் அவர்களின் கொடுமைகளுக்கு மரணித்திருப்பார். ஆனால் தாக்கூர்கள் கடத்தி சென்றது பிக்ரம் மல்லாவினால் தயார் செய்யப்பட்ட கொள்ளைக்காரி பூலான் தேவி.
தொடர் பாலியல் வன்புணர்வு
1980களின் ஆரம்பத்தில் நடந்த இந்த சம்பவம், இந்தியாவையே உலுக்கிய கொள்ளைக்காரியை உருவாக்கியது. உத்தரபிரதேசத்திலுள்ள பேமாய் என்ற கிராமத்தை சேர்ந்த கொள்ளைக்கார கும்பலால் 18 வயதான பூலான் தேவி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார். முதலில் கொள்ளைக்கார கும்பல் தலைவர்களான லாலாராம், ஸ்ரீராம் சிங் தாகூர் ஆகியோரால் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகிறார். அத்துடன் நிற்கவில்லை… ஊரில் இருக்கும் தாக்கூர் சமூகத்தை சேர்ந்த பலருக்கு பூலான் தேவியை விருந்தாக்கினர். கூட்டு நாட்கள் நகர்ந்தன.. பூலான் தேவி மீது கட்டவிழ்க்கப்பட்ட கொடூரங்கள் நிற்கவில்லை… அடி, உதை என காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டார் பூலான் தேவி. அவர் உடுத்தியிருந்த உடையை கிழித்தெறிந்துவிட்டு நிர்வாணமாக வேலை செய்ய வைத்தனர் தாக்கூர்கள். அவருக்கு நிகழ்ந்த கொடுமையை ஊரில் உள்ள எவருமே தட்டி கேட்கவில்லை. தடுக்க கூட முயற்சிக்கவில்லை. அனைவரும் வேடிக்கை பார்த்தனர். எந்த பெண்ணும் அனுபவிக்க கூடாத கொடூரங்களை அனுபவித்தார் பூலான் தேவி. அவரது உயிரை மட்டுமே விட்டுவைத்திருந்தனர் தாக்கூர்கள். தன்னிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பதை அவரால் கணக்கு வைத்து கொள்ளமுடியவில்லை. ஆனால், எத்தனை முறை தன் உடலை தாகூர்கள் பங்கு போட்டார்கள் என்பதை எண்ணினார். 24 முறை.
தப்பிக்க சக்தியல்லை பூலானிடம் என தாக்கூர்கள் எண்ணி அசந்த போது, உயிரை மட்டும் பிடித்து கொண்டு தப்பினார் பூலான் தேவி. சில மாதங்கள் தலைமறைவாக இருந்தார். தன்னுடைய மனதையும் உடலையும் வலிமை படுத்தி கொண்டார். அதனையடுத்து தன்னை கொடுமைப்படுத்திய தாகூர்களின் பேமாய் கிராமத்திற்கு திரும்பினார் பூலான் தேவி. கொள்ளைக்கூட்டத்தின் ராணியாக.
காவல்த்துறையிடம் சரணடைந்த ராணி
தன்னை பாலியல் கொடுமைப்படுத்தி மரணத்தின் விளிம்பிற்கு அழைத்துசென்ற லாலாராம், ஸ்ரீராம் தாக்கூரை தேடினார். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. தனக்கு நேர்ந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்த, உடனிருந்த, காரணமாய் இருந்த தாக்கூர்களை ஊருக்கு நடுவே அழைத்து வர செய்தார் பூலான். அவர்களில் சிலர் பூலானிடம் தவறாக நடந்து கொண்டவர்கள். ஆனால் அவர்களின் முகங்களை வைத்து பூலானால் அடையாளம் காணமுடியவில்லை. பின்னர் 22 பேரை வரிசையாக நிற்கவைத்தார். எந்த வித தயவு தாட்சனையுமின்றி 22 பேரையும் சுட்டுகொன்றார்… ஒரே நாளில் பூலான் தேவியின் பெயர் நாடு முழுவதும் பேசப்பட்டது. சுதந்திர இந்தியாவில் ஒரே சமயத்தில் 20க்கும் மேலானோர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதில்லை. அதுவும் ஒரு 18வயது பெண்ணால்.
உத்தரபிரதேசத்தை சுற்றி கிட்டத்தட்ட 50 கொள்ளைக்கார கும்பல்கள் அப்போது இயங்கி வந்தன. அவர்களில் கைது செய்யவேண்டியவர்கள் என போலீசார் வைத்திருந்த பட்டியலில் ஒரே நாளில் முதலிடத்திற்கு முன்னேறினார் பூலான் தேவி. அவரை பற்றி தகவல் கொடுப்பவருக்கு அப்போதே பத்தாயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது. தன்னிடம் தவறாக நடந்த கொண்டவர்களை பூலான் தேவி கொன்றுள்ளார் என செய்தி சர்வதேச ஊடகங்களிலும் வெளியானது. இந்தியாவின் பெண் ராபின் ஹூட் THE BANDIT QUEEN, கொள்ளைக்கார ராணி என ஊடகங்கள் அவருக்கு பெயர் சூட்டி கொண்டாடின. பூலான் தேவியின் தலைக்கு தாக்கூர்கள், போலீசார் விலை அறிவித்தனர் அவரது குடும்பம் மிரட்டப்பட்டது. அப்போது எப்படி உங்க வீட்டு பெண் கொள்ளைக்காரியாக மாறினார் என்று கேட்டார்கள் போலீசார். அப்போது ஆண்களை சன்யாசியாக்குவது கடவுள், பெண்களை கொள்ளைக்காரியாக மாற்றியது ஆண்கள் என பூலானின் சகோதரி ராம்களி கூறினார். ஒரே நாளில் இந்தியாவின் MOST WANTED CRIMINAL என்ற பட்டத்திற்கு சொந்தகாரரானார் பூலான்.
காடுகளிலும் மலைகளிலும் பூலானையும் அவரது கூட்டாளியையும் பிடிக்க முடியாமல் திக்குமுக்காடினர் போலீசார். பூலானை பிடிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன. அதுவரை பூலான் தேவியை பார்த்திராத போலீசார், அவரது ஊர்மக்கள் சொன்ன அடையாளங்களை வைத்து தேடினர். ஆயிரக்கணக்கான போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பூலான் சிக்கவில்லை என்றாலும் சம்பல் பள்ளத்தாக்கை கூடாரமாக கொண்ட பல கொள்ளையர்களை பிடித்தனர். அவர்கள் மூலம் பூலானின் விவரம் பற்றி அறிய முயன்றனர். ஆனால் போலீசாரிடம் சிக்கினால் எதிரியே ஆனாலும் அவரை பற்றி சொல்லிவிடகூடாது என்ற பழக்கம் கொள்ளையர்கள் மத்தியில் இருந்தது. இதனால் எத்தனை கொள்ளையர்களை பிடித்தாலும் பூலானை பற்றிய எந்த ஒரு விவரமும் கிடைக்காமல் தவித்தனர் போலீசார். இரண்டு ஆண்டுகள் கடந்தன. உத்தர பிரதேச போலீசாரால் பூலானை நெருங்க கூட முடியவில்லை. இருப்பினும் பூலானின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். பலர் கொல்லப்பட்டிருந்தனர். நிலையான ஒரு இடமில்லாமல் தொடர்ந்து ஓடி கொண்டிருப்பது பூலானுக்கு பிடிக்கவில்லை. அத்துடன் போலீசாரை போல் தாக்கூர் பிரிவை சேர்ந்த கொள்ளைக்காரர்களும் பேமாய் படு கொலைகளுக்காக பூலானை பழி தீர்க்க முயற்சித்து வந்தனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்திலும் கொள்ளை குற்றத்திற்காக பூலானை வலைவீசி தேடி வந்தனர். ஆனால் அவரை உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதில் மத்திய பிரதேச போலீசார் உறுதியாக இருந்தனர். குறிப்பாக அம்மாநிலத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் சதூர்வேதி பூலானை சரணடைய வைப்பதற்கு முயற்சித்து வந்தார். இதன் பின்னணியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இருந்ததாக கூறப்பட்டது. பூலான் தேவியை கொல்லவும் முடியவில்லை, பிடிக்கவும் முடியவில்லை, குறைந்தது அவரை சரணடையவாது செய்யுங்கள் என அவர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. முதலில் பூலான் தேவி சரணடைய மறுத்தாலும், குடும்பத்தின் பாதுகாப்பு, தூக்கு தண்டனை இல்லாமல் சிறை தண்டனை மட்டுமே என மத்திய பிரதேச அரசு கொடுத்த வாக்குறுதிகள் பூலானுக்கு பிடித்திருந்தது. 1983ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்பல் நதிக்கரையில் அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் அர்ஜூன் சிங் முன்னிலையில் சரணடைந்தார் பூலான் தேவி. அப்போது அங்கிருந்த காந்தி மற்றும் துர்கா தேவியின் படங்களை கும்பிட்டு அவர் சரணடைந்தார்.
விடுதலை
அவரை காண ஆயிரக்கணக்கானோர். அந்த இடம் திருவிழா கோலம் பூண்டிருந்தது. அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் முதன் முறையாக பூலானை நேரில் பார்கின்றனர். கொலை கொள்ளை என மிரட்டிய 20 வயது பெண் எந்த சலனமுமின்றி காக்கி உடை, சிவப்பு கம்பளி போர்த்தி கொண்டு சரணடையும் மேடைக்கு வந்தார். காக்கி உடையில் தான் சரணடைவேன் என அடம்பிடித்திருந்தார் என பின்னாளில் காவல் ஆய்வாளர் சதுர்வேதி பேட்டி அளித்துள்ளார். உள்ளூர், வெளிநாட்டு பத்திரிகைகள் அவரது முதல் வார்த்தைக்காக காத்திருந்தன. 22 பேரை எந்த வித தயக்குமின்றி கொன்றவர், தனது கும்பலுடன் சரணடைந்தார். பூலான் தேவி மேல் 26 ஆள்கடத்தல் , 22 கொலை வழக்குகள் போடப்பட்டிருந்தன. பாலியல் வன்புணர்வு செய்தவர்களை கொன்ற பூலான் தேவியை பலர் பெண் கடவுளாக பார்த்தனர்.
ஆண்டுகள் உருண்டோடின. 1993ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குவங்கியால் ஆட்சியை பிடித்த முலாயம் சிங் யாதவின் அரசு பூலான் தேவி விடுதலை செய்வதற்கான முயற்சிகளை எடுத்தது. இதனையடுத்து 11 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு பூலான் தேவி விடுவிக்கப்பட்டார். சிறைக்கு செல்லும் போது காக்கி உடை துப்பாக்கி, தோட்டா பெல்ட் என சென்ற 20 வயது பெண் பதினொறு ஆண்டுகள் கழித்து சேலை அணிந்த பெண்மணியாக வெளியேறினார். ஆயிரக்கணக்கானோர் அவரை வரவேற்றனர்.
திரைப்படமான அவர் கதை
இதற்கிடையில் பத்திரிகைகள், புத்தகங்களில் மட்டும் எழுதப்பட்ட பூலான் தேவியின் கதை படமாக்கபட்டு வெளியானது. சேகர் கபூர் இயக்கத்தில் வெளியான BANDIT QUEEN என்ற திரைப்படம் பூலானை சர்வதேச அரங்குக்கு கொண்டு சென்றது. ஆனால் அந்த படத்திற்கு பூலானிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தன் வாழ்க்கையில் அனுபவித்த பாலியல் கொடூரங்களை காட்சிபடுத்தியதன் மூலம் பூலான் தேவி என்றால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர் மட்டும்தான் என்பது போல் சேகர் கபூர் சித்தரித்துவிட்டார் என புகார் கூறினார். படத்தை வெளியிட கூடாது என முறையிட்டார். படத்திற்கு தடைவிதிக்காவிட்டால் திரையரங்கு முன்பு தீக்குளிப்பேன் என அறிவித்தார். ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கணிசமான நஷ்டஈடு வழங்கிய பிறகு பட வெளியீட்டிற்கு ஒப்புக்கொண்டார் எனக்கூறப்படுகிறது.
இறுதி நாட்கள்
சிறையில் இருந்து வெளியான அடுத்தாண்டு தமிழகத்தில், பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மது, ஆபாச ஒழிப்பு மற்றும் மகளிர் இயக்க மாநாட்டில் பூலான் தேவி பங்கேற்றார். மேலும், சிறையில் இருந்த போது அம்பேத்கரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அவர் புத்தமதத்திற்கு மாறிய சம்பவம் பூலானிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரை போல் 1995ம் தீக்ஷ பூமியில் புத்த மதத்திற்கு மாறினார். சமாஜ்வாதி கட்சியில் 1996ம் ஆண்டு இணைந்தார். கொள்ளைக்கார ராணியிலிருந்து அரசியல்வாதியாக தனது இரண்டாவது அத்தியாயத்தை தொடங்கினார் பூலான் தேவி. அதே ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். எந்த மாநிலம் அவரது தலைக்கு சன்மானம் அறிவித்து அவரை விரட்டி விரட்டி தேடியதோ அதே மாநிலத்தின் எம்பியாக டெல்லிக்கு சென்றார் பூலான். காடுகளில் அழைந்து திரிந்த BANDIT QUEEN நாடாளுமன்ற இருக்கையை அலங்கரித்தார். அடுத்தாக 1998ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றார். எனினும் சுதாரித்து கொண்டு 1999ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். உத்தரபிரதேசத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் பூலான் தேவியை கொண்டாடினர்.
அதே சமயம், விடுதலையானதிலிருந்து பூலான் தேவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனையடுத்து தன்னுடைய தற்காப்புக்காக துப்பாக்கி வேண்டும் என டெல்லி காவல்துறையிடம் அனுமதி கோரினார் பூலான். ஆனால் அவர் மீது வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதால் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி இல்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துவிடுகிறது. இந்த நிலையில் 2001ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும் பூலான் தேவியின் வீட்டுக்கு முன்பு, அவர் சுட்டுகொல்லப்படுகிறார். அவரை ஐந்து முறை சுட்டுவிட்டு கொலையாளிகள் தப்பித்து ஓடிவிட்டனர். சில நாட்கள் கழித்து அவரை கொலைசெய்தவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் 1981ம் ஆண்டு பேமாய் கிராமத்தில் 22 தாக்கூர் சமூகத்தை சேர்ந்தவர்களை கொன்ற பூலான் தேவியை பழி வாங்கவே கொன்றதாக அவரை கொன்ற பங்கஜ் சிங் தெரிவித்தார். கடைசி வரை, ஒரு கணம் கூட பூவை போன்று மென்மையானதாக அமையவில்லை அவரது வாழ்க்கை. பாவப்பட்ட பெண்ணாகவோ, கொள்ளைக்காரியாகவோ, அரசியல்வாதியாகவோ அறியப்பட வேண்டியதையும் தாண்டி, பாலியல் பலாத்காரங்களுக்கு எதிரான சின்னமாக பூலான் தேவி கொண்டாடப்பட வேண்டியது அவசியம்.
Web Title: Biography Of Phoolan Devi2, Tamil Article
Featured Image Credit: dnaindia