“It would be my greatest sadness to see Zionists ( Jews) do to Palestine Arabs much of what Nazis did to Jews “
எனும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein) இன் வார்த்தைகளோடு இந்தக்கட்டுரைக்குள் நுழைகிறேன். ஏனெனில் அதுதான் மிகப்பெரிய உண்மையும்கூட.
இஸ்ரேல் – பாலஸ்தீன முரண்பாடு என்பது நூற்றாண்டுகள் கடந்தும் வரலாற்றில் இன்றுவரை தொடர்கிற, முடிவுக்கு கொண்டுவர முடியாத பிரச்சினையாக காணப்படுகிறது. சர்வதேச சமாதானத்தின் நிலைத்தலுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள இம்முரண்பாடு இன்று நேற்று உருவானதில்லை. இஸ்ரேல் – பாலஸ்தீன முரண்பாடு என்பது நீண்டகால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. இம்முரண்பாடு 20ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது என்று கூறப்பட்டாலும் இதற்கான பின்னணியினை 19 ஆம் நூற்றாண்டிலேயே எம்மால் காணமுடியும். இம்முரண்பாட்டின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும், இன, மத, மொழி ரீதியிலான பாரபட்சங்கள், நவகாலனித்துவம், அதிகார அரசியல், பொருளாதார, அரசியல், கலாச்சார காரணிகள், மனித உரிமை மீறல்கள், பயங்கரவாதம், இராணுவமயமாக்கம், சர்வதேச அரசுகளின் தலையீடு, மத அடிப்படைவாதம், வரலாறு, புவியியல், போன்ற பலதரப்பட்ட காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ், ரஷ்யா, போலந்து, பிரிட்டன், ஜேர்மன், மற்றும் ஒட்டமான் பேரரசுகளில் பரவி வாழ்ந்த யூதர்கள் பலவிதமான ஒடுக்குமுறைக்கு உள்ளானார்கள். யூத இனத்தின் அரசியல், பொருளாதார கலாச்சார வளர்ச்சியானது ஏனைய இனங்களின் இருத்தலிற்கும் அபிவிருத்திக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. இவ்வாறான பலதரப்பட்ட காணிகளினால் முழு ஐரோப்பாவும் யூத இனத்தை வெறுக்க தொடங்கின. யூத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத்தொடங்கின.
அப்போது மாவீரன் நெப்போலியன் பேசிய வார்த்தைகள் ஐரோப்பா முழுவதும் சிதறி வாழ்ந்த யூதர்களை பாலஸ்தீனம் நோக்கிச் செல்லத் தூண்டுதலாக இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அக்கூற்று வருமாறு, “ஆண்டாண்டு காலமாக யூதர்கள் ஐரோப்பாவில் வசித்து வருகின்றனர். அதற்காக அவர்கள் தேசத்தின் அரசியல் சாசன உரிமையிலோ, வழமையிலோ, பெரியளவில் சொந்தம் கொண்டாட முடியாது. பாலஸ்தீனத்தில் இருந்து வந்தவர்கள் என்கின்ற அளவில் அவர்களது குடியேற்ற உரிமைகள் பாதுகாக்கப்படும். “ என்றார்.
நெப்போலியனின் “பாலஸ்தீனத்தில் இருந்து வந்தவர்கள் “ என்ற அங்கீகாரம் பாலஸ்தீன் யூதர்களுக்குத்தான் சொந்தம் என கருதி யூதர்களை செயற்படத்தூண்டியது. ஐரோப்பாவில் யூத எதிர்ப்பின் போது உலக யூதர்கள் அனைவரது மனதிலும் உதித்த இடம், கடவுளால் தமக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்ட பூமி எனக்கருதும் பாலஸ்தீனமாகும். பாலஸ்தீனம் அப்போது ஒட்டமான் பேரரசின் கீழ் இருந்தது.
இக்காலத்தில் யூதர்கள் ஓரளவு பிரச்சினையின்றி வாழ்ந்தார்கள். இதனைப் பயன்படுத்தி யூத தேசத்தினை உருவாக்க தியோடர் ஹெசில் (Theodor Herzl) தலைமையில் சியோனிஸ அமைப்பு (Zionism) உருவாக்கப்பட்டு உலகவாழ் யூதர்கள் அனைவரையும் இணைத்த வகையில் அவர்களின் உதவியோடு பாலஸ்தீனை நோக்கிய யூத தேசத்துக்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்காக “The Grand plan” என்ற நூறு பக்க அறிக்கை ஹெசிலினால் தயாரிக்கப்பட்டது. இதை “Operation For Palestine” என சொல்லுமளவிற்கு இத்திட்டம் இராஜதந்திர ரீதியாக ஹெசினால் முன்னெடுக்கப்பட்டது .இதன்படி யூத நிலவங்கிகள் (Land Bank) உருவாக்கப்பட்டன. இவை யூதர்கள் நிலம் வாங்க வேண்டிய பணத்தைக் கடனாகக் கொடுத்தன. அதிகளவான யூதரின் முதல் தெரிவாக பாலஸ்தீனம் இருந்தது.1897 இல் யூத காங்கிரஸ் மாநாட்டில் ஹெசில் அதிகாரபூர்வமாக பின்வருமாறு அறிவித்தார்.“நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி நம் இலக்கு பாலஸ்தீனம் தான். யூத வங்கிகளின் மூலம் அங்கேயே நிலங்களை வாங்குவோம். குடியிருப்புகளை உருவாக்குவோம். பாலஸ்தீனத்தை நமதாக்குவோம்”
இவ்வாறான யூதர்களின் தந்திரமான நகர்வுகளின் பின்னர் 20ஆம் நூற்றாண்டு பிறந்தபோது பாலஸ்தீனத்தில் இருந்த மொத்த யூதர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக அதிகரித்திருந்தது. பாலஸ்தீன அராபியர்களின் பாழ் நிலங்களை அவர்கள் எதிர்பார்த்த தொகைக்கு மேலதிகமாக கொடுத்து வாங்கிக்கொள்ளப்பட்டது. நிலவங்கிகள் உள்நாட்டு அராபியருக்கு கடன் கொடுக்க ஆரம்பித்து வட்டி உயரும்போது அவர்கள் நிலங்களை அபகரித்துக்கொண்டது.
இரண்டே ஆண்டுகளில் பாலஸ்தீன அராபியர்களின் நாலரை சதவீத நிலமானது யூதர்களின் கைக்கு மாறியது. பாலஸ்தீன அராபியர்கள் சொந்த நாட்டில் புறக்கணிக்கப்பட்டனர். ஏமாற்றி நிலங்களை அபகரித்த யூதர்கள் சொந்தநாட்டில் அரேபியர்கள் புறக்கணிக்கப்பட காரணமாயினர். பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்த யூதர்கள் பெரும்பான்மையினராகி சகலவித அபிவிருத்தியிலும் முன்னிலையில் இருந்தனர்.
இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே பாலஸ்தீன அராபியருக்கும் யூதருக்கும் முரண்பாடு வளரத்தொடங்கியது. அரேபிய முஸ்லீம்களின் கிளர்ச்சி அதிகரித்த போது யூதர்களுக்காக பாலஸ்தீன் என்ற கோரிக்கையோடு ஹெசில் சில நாடுகளின் ஆட்சியாளர்களை சென்று சந்தித்தார். (உதாரணமாக, ஜெர்மன் மற்றும் துருக்கி)
இவ்வாறான முயற்சிகளின் போது பிரிட்டன் காலனியின் மூத்த அமைச்சர் கோசப் சேம்பர் லெனின் பின்வருமாறு கருத்தினைக் குறிப்பிட்டிருந்தார்.“யூதர்களுக்கு பாலஸ்தீனம் சாத்தியமில்லை” என்று அப்போதிருந்த யதார்த்த நிலையை வெளிப்படையாக சொன்னார். கிழக்கு ஆபிரிக்காவில் உகாண்டாவில் யூத தேசத்தினை உருவாக்குமாறு யோசனைகளை முன்வைத்திருந்தார்.
முதலாம் உலகப்போர் காலக்கட்டத்தில் ரஷ்ய யூதர்களின் நிலை படு மோசமாக இருந்தது. எனவே பாலஸ்தீனத்தை குறிவைத்த சியோனிஸ தலைவரான தியெடர் ஹெசில் கூட “பாலஸ்தீனை தனி யூத நாடாக்கிக் கொள்வது நில ரீதியாக சாத்தியப்படக்கூடியது என்றாலும் வன்முறைகள் அதிகரித்துகொண்டே செல்கின்றன. எனவே பிரிட்டன் கூறியது போல உகண்டாவை ஏற்றுக்கொள்வோம்” என 6வது யூத காங்கிரஸ் மாநாட்டில் முன்வைத்தார். இக்கருத்தினால் அனைத்து யூதரின் தீவிர எதிர்ப்புக்கு உள்ளான ஹெசில் 1904இல் நோய்வாய்ப்பட்டு மரணமானார்.
1ஆம் உலகமகாயுத்தத்தில் ஒரு இலட்சம் ரஷ்ய வீரர்கள், நாற்பதாயிரம் ஆஸ்திரிய யூதர்கள், பன்னிரண்டாயிரம் ஜேர்மனிய யூதர்கள், ஒன்பதினாயிரம் பிரான்சிய யூதர்கள், எட்டாயிரம் பிரிட்டிஷ் யூதர்கள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் பங்குபற்றியதற்கு பிரதான காரணமே யூதர்களுக்கான தனிநாடாக பாலஸ்தீனத்தை பெறுவதாகும். போர் முடிவில் பிரிட்டனிடம் யூதர்களின் கோரிக்கை வலுப்படுத்தப்பட்டு பெல்ப்பர் பிரகடனம் உருவாக்கப்பட்டது. 1917 டிசம்பர் 9 ஜெருசலேம் பிரிட்டன் கைவசமானது. பெல்ப்பர் பிரகடனம் இம்முரண்பாட்டின் தோற்றத்துக்கு அடிப்படையாக அமைந்தது என அரசியல் அறிஞர்கள் சொல்வதுண்டு. இப்பிரகடனப்படி,
“பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தனி நிலப்பகுதி ஒன்றை உருவாக்கியாக வேண்டும். இப்போது பாலஸ்தீனத்தில் வசிக்கும் யூதர் அல்லாதோரின் உரிமைகளுக்கோ, மத உரிமைக்கோ பங்கம் வராது“ என்றவாறு அது அமைந்திருந்தது. பாலஸ்தீனம் எவ்வாறு யூதருக்கு சொந்தமானதோ அதே போல அராபியர்களுக்கும் அது பூர்வீகமான நிலம் என்பதை வரலாற்றை புரிந்த எவராலும் உறுதியாக கூறமுடியும் . வரலாறு முழுவதும் யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு சிதறி வாழ்ந்த போதும் பாலஸ்தீன அப்பாவி முஸ்லிம்கள் ஆண்டான்டு காலம் அம்மண்ணில் நிலைத்து நின்றவர்கள். ஆனால் பெல்ப்பர் பிரகடனம்” யூதர் அல்லாதோர் “என சுட்டி பாலஸ்தீன அராபியர்களின் உரிமையைப் புதைத்தது.
1ஆம் உலகப்போரின் முடிவின் பின்னர் இத்தாலியில் League of Nations மாநாட்டில் 1922 காலப்பகுதியில் “பாலஸ்தீனுக்குள் ஒரு யூத தேசத்தினை நிறுவுவது, பிற மக்களின் சிவில், மத உரிமைகளை பாதுகாப்பது” எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. யூதர்கள் வெறும் 11 வீதமாக இருந்துக்கொண்டு பெரும்பான்மை அராபியரி னை கட்டுப்படுத்தி வாழ்ந்தனர். 2ஆம் உலக மகாயுத்தமும், ஹிட்லரால் கொல்லப்பட்ட இருபது இலட்சம் யூதர்கள் மேல் எழுந்த இரக்கமும் இஸ்ரேல் எனும் யூத தேசம் உருவாக்குவதற்கான சாத்தியப்பாட்டை உலக அரசியலில் அதிகமாக்கின. உலகமே யூதர்களை எதிர்த்த மனநிலையினை இச்சம்பவம் மாற்றியமைத்தது. ஆனால் பாலஸ்தீன பூமியின் இன, மத, சனத்தொகை பரம்பலானது பிரிட்டன், அமெரிக்காவிற்கு யூத தேசத்தினை நிர்ணயம் செய்வதற்கு தடையாக இருந்தது.
1947 பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பிரிட்டன் இப்பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்தது. அந்தவகையில் அது பின்வரும் அறிவிப்பை வெளியிட்டது.
“பாலஸ்தீன இரண்டாகப் பிரிக்கப்படும். யூதர்களுக்கென்று தனி நிலப்பகுதி உருவாக்கப்படும். அதன் பெயர் இஸ்ரேல். பூர்வீக அராபியர்கள் வாழும் பகுதி பாலஸ்தீன் என்றே இருக்கும்”
இரண்டு தேசங்களிலும் இரண்டு இனத்தவர்களும் வசிக்கலாம். இஸ்ரேலில் 498,000 யூதர்களுடன் 407,000 அராபியர்கள் வசிப்பார்கள். பாலஸ்தீனத்தில் இருக்கும் 725,000 அராபியருடனும் 10,000 பேர் யூதர்கள் வசிப்பார்கள். ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்கு இவ் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஜெருசலேம் பெரும்பாலும் பிரச்சினைக்குரிய இடமாக கருதப்படுவதால் அது இஸ்ரேல் வசமோ, பாலஸ்தீனத்தின் வசமோ ஒப்படைக்கப்பட்டு இருப்பதோடு ஐ. நா. கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். ஜெருசலேமையும் அதனை சுற்றியுள்ள பகுதியான பெத்லஹேம், பெயத் ஜெல்லா ஆகிய இடங்களில் பெரும்பாலும் அரேபிய கிறிஸ்த்தவர்கள் வசித்து வருவதனால் மூன்று மதத்தினருக்கும் புனித இடமாக அது பொதுவாக இருக்கும் .
மேலும் 105,000 அரேபிய முஸ்லீம்களும் 1 இலட்ச யூதர்களும் வசிக்கலாம் எனப்பட்டது.
கலீலி விவசாய மலைப்பகுதி அரேபியர்களின் வசம் இருக்கும். நெகவ் பாலைவனப்பகுதி யூதர்களின் வசம் இருக்கும் என்று பிரகடனங்கள் சுட்டின .
மேற்குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் இந்த தீர்மானங்களை கொண்டு வரப்பட்டவுடனேயே பாலஸ்தீன் கலவரம், முரண்பாடு ஆரம்பமானது. யூதர்களும் பாலஸ்தீன அரேபியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தனர். அப்பாவி பாலஸ்தீனர்கள் எவ்வளவு எதிர்த்தபோதும் இஸ்ரேல் அப்பாவி மக்களின் நிலங்களில் உருவாக்கப்பட்டன.
அதன்படி 1948 மே 15 இஸ்ரேல் என்ற புதிய தேசம் உருவானது. மேற்குறிப்பிட்ட காரணிகள் எல்லாம் சேர்ந்தே இஸ்ரேல் – பாலஸ்தீன முரண்பாட்டின் தோற்றத்திற்கு அடிப்படையான காரணங்களாக அமைந்தன. ஆனால் மதம் என்ற ஒன்று அந்த முரண்பாட்டின் ஆதாரமாக அமைந்தது. மதம் எப்போதும் மக்களினால் உணர்ச்சிபூர்வமாக கையாளப்படுவதால் இந்த முரண்பாட்டை கையாள்வதும், தீர்வை ஏற்படுத்துவதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. நூற்றாண்டுகள் ஆகியும் முற்றுப்பெறாத இந்த முரண்பாட்டின் பிரச்சினைகளின் மூலங்களை தேடி இனிவரும் தொடர்களில் பயணிப்போம்.