கீழே பார்க்கவிருக்கும் விஞ்ஞானிகள், மனித இன முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனாலும், அவர்கள் உயிரோடிருந்த காலம் வரை, தங்கள் கண்டுபிடிப்புகளாலேயே, தாங்கள் இறக்கவிருப்பதை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.
ஒவ்வொருவரும், அவர்கள் உருவாக்கிய அவர்களது கண்டுபிடிப்புகளின் சோதனை கட்டங்களில், ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, அதன் விளைவாக இறந்துள்ளனர். இறப்பு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றெனினும், கண்டுபிடிப்புகளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அதன் மூலம் இந்த உலகில் தங்களுக்கும் ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்துவிடாதா? என்ற ஏக்கத்திலிருந்தவர்கள், தாங்கள் கண்டறிந்த பொருட்களாலேயே இறந்தது வருத்தத்திற்குரியதாகும்.
மேக்ஸ் வேளர்
காலம்: பிப்ரவரி 9, 1895 – மே 17, 1930
ராக்கெட்டின் ஆற்றல் பற்றின ஒரு தொலைநோக்குப்பார்வை, அப்போதே வேளரிடம் இருந்தது. அவர் “விண்வெளி விமான சமூகம்”(Space Flight Society) ஒன்றை அப்போதே ஏற்படுத்தியிருந்தார். 20-ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, அப்போல்லோ மூன் மிஷன் என்ற விண்வெளி பயணத்திற்கு அது முன்னோடியாக இருந்திருக்கிறது.
ராக்கெட் சக்தியூட்டலை கொண்ட கார்களை 1928 – 1929-களில் பிரிட்ஸ் வான் ஆபேல் என்பவருடன் சேர்ந்து வடிவமைத்தார். அவரது விண்வெளி விமான சமூகம், திரவ எரிபொருளினைக்கொண்டு இயங்கும் ராக்கெட் வாகனங்களை வடிவமைக்க முயன்றுகொண்டிருந்தனர்.
வேளர் ஒரு திரவ எரிபொருள் உந்துவிசை கொண்ட, ராக்கெட் கார் ஒன்றினை பரிசோதித்தார். கெரோசின், தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் கலவை கொண்ட எரியூட்டு அறையில்(Combustion Chamber) எந்தவித பாதுகாப்பும் இல்லாது, சோதனை செய்துகொண்டிருக்க, இரண்டு கட்ட சோதனைகள் வெற்றியடைந்தது. அவர் மூன்றாம் கட்ட சோதனையை மேற்கொள்ளும்போது, திடீரென எரியூட்டு அறை வெடிக்க, அதுவே அவரின் இறுதி சோதனையானது. 1930-ல் 35 வயதே ஆன, வேளர், அந்த வெடிப்பின் காரணமாக உயிரிழந்தார்.
லி சி
காலம்: கி.மு. 280 – கி.மு.208
ஜான் க்னோப்ளாக் என்ற அறிஞரின் கூற்றுப்படி, “லி சி என்பவர், சீன வரலாற்றின் முக்கிய ஓரிரண்டு நபர்களில் ஒருவர்” என கருதப்படுகிறார். கின் பேரரசை நிறுவியதில் லி சி, முக்கியமானவராவார்.
கின் பேரரசின், பிரதம அமைச்சராக பணியாற்றிய லி சி, அவர் உருவாக்கிய 5 தண்டனைகளின் மூலமாகவே கொல்லப்பட்டார். முகத்தில் பச்சை குத்துதல், மூக்கினை வெட்டி விடுதல், முழங்காலின் சில்லினை எடுத்து விடுதல், இனப்பெருக்க உறுப்புகளை நீக்கிவிடுதல் மற்றும் உயிருடன் வேக வைத்தல் போன்றவை அந்த தண்டனைகள் ஆகும்.
பிரான்சிஸ் எட்கர் ஸ்டான்லி
காலம்: ஜூன் 1, 1849 – ஜூலை 13, 1918
நீராவியினைக்கொண்டு இயங்கும் கார் ஒன்றை பிரான்சிஸ் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, எரிக்க பயன்படும் மரங்களின் குவியலில் மோதி உயிரிழந்தார்.
தானியங்கி மோட்டார் வாகனத்தொழிலில் ஈடுபடும்முன், அவருடைய இரட்டை சகோதரரான பிரீலான் ஓ. ஸ்டான்லியுடன், நியூ இங்கிலாந்தில் ஃபோட்டோ ஸ்டூடியோ ஒன்றை நடத்திவந்தார். ஸ்டான்லி, முதல் ஏர்பிரஷ்ஷிற்கான காப்புரிமையை வைத்திருந்தார்.
பின்னாளில், ஸ்டான்லி சகோதரர்கள் அதனை ஜார்ஜ் ஈஸ்ட்மன் என்பவருக்கு விற்றுவிட்டனர். அவர் கோடாக் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். கோடாக் “சுருள் படங்களுக்கு”(Roll Films) புகழ்பெற்றது என்பது நாம் அறிந்ததே.
ஜுன்-பிரான்காய்ஸ் பிளாட்ரே டே ரோஜெயர்
காலம்: மார்ச் 30, 1754 – ஜூன் 15, 1785
பிரான்ஸை சேர்ந்த ஜுன்-பிரான்காய்ஸ் பிளாட்ரே டே ரோஜியர், ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் ஆசிரியராக இருந்தார். ஜூன் 15, 1785-ல் ஒரு பஸ்-டே-கலைஸ் எனும் இடத்தினருகே, அவரது ரோஜெயர் பலூனில் பறந்துகொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அந்த சோகமான விபத்தே, வான்வெளியில் நடந்த முதல் விபத்தாக கருதப்படுகிறது.
பிரான்ஸ் ரெய்செல்ட்
காலம்: 1879 – பிப்ரவரி 4, 1912
ஈஃபிள் கோபுரத்தின் மீதிருந்து, தான் வீட்டிலேயே தயாரித்த பாராச்சூட்டினை உடுத்திக்கொண்டு குதிக்க, அது துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைய, பிரான்ஸ் அங்கேயே உயிரிழந்தார்.
காவல் அதிகாரிகள், அவர் ஒரு போலி உடலினை அவரது பாராச்சூட் சோதனைக்காக பயன்படுத்தியிருப்பார் என நினைத்துக்கொண்டிருந்ததாக கூறியுள்ளனர். ஆனால், அவர் அந்த சோதனைக்கு அவரையே பயன்படுத்திக்கொண்டது, வருந்தத்தக்க முடிவிற்கு இட்டுச்சென்றுவிட்டது.
ஹென்றி ஸ்மோலின்ஸ்கி
காலம்: 1933 -1973
சீஸ்னா 337 என்ற விமானத்தின் இறக்கையையும், ஃபோர்ட் பின்டோ காரினையும் இணைத்து ஒரு பறக்கும் காரினை உருவாக்க எண்ணினார்,
ஹென்றி ஸ்மோலின்ஸ்கி. ஹால் பிளேக் எனும் அவரது நண்பருடன் இணைந்து அந்த பறக்கும் காரினை சோதனை செய்யும்போது, விபத்து ஏற்பட்டு, அவர் நண்பருடன் பலியானார்.
அவர் உயிருடன் இருந்தபோது, அந்த காரானது, 130 மைல் வேகத்தில், 12,000 அடி உயர பறக்கும் என தெரிவித்திருந்தார்.
வில்லியம் புல்லக்
காலம்: 1813 – April 12, 1867
வில்லியம் புல்லக் இறந்த விதம் பற்றி கேள்வியுற்றால், சிலருக்கு மயிர் கூச்சம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. வில்லியம் புல்லக், ஒரு ரோட்டரி அச்சடிக்கும் இயந்திரத்தினை வடிவமைத்திருந்தார். அதில் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட ஒரு படத்தினை உள்ளீடாக வைத்தால், அதன் பிரதியை எந்த ஒரு பொருள் மீதும் மறுமுறை அச்சடிக்கும் திறமையினை, அவ்வியந்திரம் கொண்டிருந்தது.
சில வருடங்கள் கழித்து, ஒரு புதிய இயந்திரத்தினை நிறுவும் வேளையில், வில்லியம் புல்லக்-கின் கால் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டு நசுக்கப்பட்டு விட, அவர் காலினை இழக்க, அது அழுகவும் செய்திருந்ததால், சில காலங்களிலேயே இறந்தார்.
ஹோரஸ் லாவ்சோன் ஹன்லி
காலம்: ஜூன் 20, 1823 – அக்டோபர் 15, 1863
இவர் ஒரு கடல்துறைப் பொறிஞராக, கான்ஃபெடரேட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவில் பணியாற்றினார். இவரே முதல் போர் நீர்மூழ்கியை வடிவமைத்தவர். 7 நபர்களுடன் சேர்ந்து, எச்.எல்.ஹன்லி என அவர் இறப்பிற்கு பின் பெயரிடப்பட்ட, நீர்மூழ்கியில் பரிசோதனை மேற்கொண்டபோது, அனைவரும் அக்டோபர் 15, 1963 அன்று உயிரிழந்தனர்.
இருப்பினும், சுமார் ஒரு வருடம் கழித்து 1964-ல்அதே நீர்மூழ்கி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
மேரி க்யூரி
காலம்: நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934
இருவர் சேர்ந்து நோபல் பரிசு பெற்றவர்களில் முதல் பெண்ணாக அறியப்படுபவர். போலந்தினைச்சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியல் அறிஞர்.
கதிரியக்க அயனியாக்கம், குறிப்பாக ரேடியத்தின் கதிர்வீச்சு பண்புகளை ஆராய்ச்சி செய்தவர். பொலோனியம் மற்றும் ரேடியம் போன்ற கதிர்வீச்சு கொண்ட தனிமங்களை அவரது கணவருடன் சேர்ந்து கண்டறிந்தவர்.
அவர் அதன் விளைவுகளை அப்போது அறிந்திருக்கவில்லை. பின்னாளில், கதிர்வீச்சின் வெளிப்பாடுகள் அவரை பாதித்தது. அதன் காரணமாக அப்லாஸ்டிக் அனீமியா எனும் ஒருவகையான இரத்த சோகை தொடர்புடைய நோயினால் இறந்தார். அவருடைய உடைமைகள் கூட, பாதுகாக்கப்பட்ட பெட்டிகளுக்குள் பிறகு வைக்கப்பட்டது. ஏனெனில், அவர் ரேடியத்தினை அவர் சட்டைப்பையிலும், அவரது மேசை அலமாரியிலும் சர்வசாதாரணமாக கையாண்டிருந்தார். நூற்றாண்டினை கடந்த அவரது குறிப்பேடும் கூட அந்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்ட பெட்டியிலேயே வைக்கப்பட்டுள்ளது.
கெரல் சாஸெக்
காலம்: ஏப்ரல் 19, 1947 – ஜனவரி 20, 1985
கெரல், நயாகரா நீர்வீழ்ச்சியின் மீதிருந்து 1000 அடி உயரத்திலிருந்து அவர் உருவாக்கிய அதிர்வு-தாங்கும் பீப்பாயில் உள்ளிருந்து குதித்து சாதனை படைத்தார். எனினும் முறையான அனுமதியின்றி அவ்வாறு செய்ததால், காவலர்கள், அவருக்கு 500 டாலர்கள் அபராதமாக விதித்தனர். அவர் அந்த பீப்பாயினைச்செய்ய, 15,000 டாலர்களும், 30,000 டாலர்களை அந்த சாகசத்தினை படம் பிடிக்கவும் செலவு செய்திருந்தார். ஆனாலும், அதன்பிறகு அதைவிட, அவரது பேட்டிகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதித்திருந்தார்.
பிறகு, ஹூஸ்டன் அஸ்ட்ராடோம் ஸ்டேடியத்தில் 180 அடி உயரத்திலிருந்து ஒரு தண்ணீர் தொட்டிக்குள் குதிக்க அந்த பீப்பாயில் முயற்சி செய்யும்போது, பீப்பாய் தவறான முறையில் விடப்பட்டதால், தவிறிப்போய் அது இரும்பு விளிம்புகளில் மோதியது. அவர் பீப்பாயினை தாங்குவதற்காக, உள்ளே அமைக்கப்பட்டிருந்த தெர்மாகோல் அமைப்பும், பீப்பாய் விடப்படும் முன்னரே தண்ணீரில் மிதக்க ஆரம்பித்திருந்தது. விளிம்பில் மோதியதால் பலத்த காயமுற்ற கெரல், அந்த நிகழ்ச்சி முடியும் முன்பே இறந்துபோனார்.
அவர் கூறிய ஒரு வாசகம், பின்னாளில் நினைவுபடுத்தப்பட்டது, “சொர்க்கம் அல்லது நரகம் என்று எதுவுமில்லை; கடவுளும் இல்லை, அவையனைத்தும் கட்டுக்கதை. நீங்கள் பிறக்கிறீர்கள், வாழ்கிறீர்கள், ஒரு நாள் நீங்கள் இறக்கிறீர்கள், அவ்வளவுதான்”
இவ்வாறு, பலரும் தங்கள் கண்டுபிடிப்புகளுக்காகவும், தங்களை உலகில் சிறந்தவர் என நிலைநிறுத்திக்கொள்ளவும் முயன்று, அந்த முயற்சியே இறுதிக்காலங்களில், அவர்களுக்கு எதிர்வினையானதை அறிந்திராமல் இருந்திருகின்றனர். ஆனாலும், தங்கள் பாதுகாப்பில் சற்று கவனம் கொண்டிருந்திருந்தால், நிச்சயம் அவர்கள் இறப்பினை தள்ளிப்போட்டிருக்க முடியும். மேரி க்யூரி போன்றவர்கள், முதலாம் உலகப்போரில், பல இலட்சக்கணக்கான இராணுவ வீரர்களை அவர்களது கண்டுபிடிப்புகளால், காப்பாற்ற உதவியுள்ளனர். இருப்பினும், தனிப்பட்ட பாதுகாப்பினை உறுதி செய்திடாமல் இருந்தது ஏனோ தெரியவில்லை..
Web Title: Popular Inventors Killed by Their Inventions, Tamil Article
Featured Image Credit: futurism/airandspace/steemit