இன்று ஆசியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அறியப்படும் பேராதனைப் பல்கலைக்கழகம் 9 பீடங்களையும் 73 துறைகளையும் கொண்டு இயங்குகின்றது. ஏறக்குறைய 11,000 மாணவர்களின் வளமான வாழ்வுக்கு அது வழிகாட்டியபடியே இருக்கின்றது. அதனால் மேற்கொள்ளப்படும் ஆய்வுச்செயற்பாடுகள் பல்வேறு சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படுகின்றமை காரணமாக, அதன் சர்வதேச முக்கியத்துவம் தொடர்ந்தும் அதிகரித்தபடியே இருக்கின்றது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் எழில் கோலம்
இயல்பாகவே இயற்கை எழில் சூழ்ந்த பகுதி பேராதனை. குளிரும் மழையும் குலவித் திரிகையில் அவ்வப்போது வெயிலும் மரங்களின் கிளைகளூடாக கோடு போல வெளிவந்து அழகுக் கோலம் காட்டுகின்ற காட்சி, எம்மை வேறோர் உலகத்திற்கு கூட்டிச் செல்லும். பனிப்புகாரில் மறைந்து கிடக்கின்ற நெடுமரங்களும் அவற்றுடன் காதல் கொண்டு பின்னிக் கிடக்கின்ற கொடிகளும் வாழ்வின் வெம்மையைத் தணித்து, புத்துணர்வைப் பெருக்கெடுக்க வைப்பன.
வசந்த காலம் வரும் போது, பேராதனை தனது புதிய முகத்தைக் காட்டும். பனிநிரம்பிய மாதங்களிலிருந்து வெளிப்பட்ட புற்கள் புதிய வாழ்வை வரவேற்கும். பல்கலைக்கழகத்தினூடே பாய்கின்ற நதியோடை, சலசலத்துப் பாய்கையில் அதற்குப் போட்டியாக குரங்குக் கூட்டங்கள் மரங்களில் பாய்ந்த வண்ணமிருக்கும். வசந்தத்தின் மலர்கள் விரிந்து தங்கள் வண்ணப் பேரழகைச் சிந்திக் கொண்டிருக்கும். ஒட்டுமொத்தத்தில் ஆண்டின் மற்றைய காலங்களில் பனிப்புகாரில் மங்கியிருக்கும் பேராதனைப் பல்கலைக்கழகம் வசந்த காலத்தில் ஒளிரத் தொடங்கும்.
கொழும்பிலிருந்து பேராதனை நோக்கி
கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் வழியில், கண்டிக்குச் சற்று முன்னரே வருகின்றது பேராதனைச் சந்தி! அங்கிருந்து கால்நடையாகவும் அல்லது முச்சக்கர வண்டிகளிலும் கூட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பீடங்களுக்குச் செல்லலாம். அந்த முழு நகரமே பல்கலைக் கழகமாக இருப்பதனால், ஒவ்வொரு பகுதியிலிலும் அதன் பீடங்களும் நிறுவகங்களும் அமைந்திருக்கின்றன. கொழும்பிலிருந்து வீதியூடாக ஆரம்பிக்கும் பயணத்திற்குப் பொதுவாக மூன்று மணித்தியாலங்களே தேவைப்படுகின்றன. எனினும் பேராதனையின் பெருத்த சவாலாக வாகனநெரிசல் காணப்படுகின்றது. அது சில வேளை உங்களின் பொறுமையைக் கூட சோதிக்கக் கூடும்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் தோற்றம்
இலங்கையின் பழமையானதும் மிகப் பெரியதுமான பேராதனைப் பல்கலைக்கழகம் ஆரம்பகாலங்களில் சிலோன் பல்கலைக்கழகம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது. இது 1942 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவ்வாறானதொரு பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டுமென, அப்போது இலங்கையை ஆண்டு கொண்டிருந்த பிரித்தானிய அரசாங்கத்திற்கு முன்மொழிவு 1899 ஆம் ஆண்டிலேயே வைக்கப்பட்ட போதும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சேர் பொன் அருணாச்சலம், சேர் ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் சேர் மார்கஸ் ஃபெர்னாண்டோ ஆகியோரின் வழிகாட்டலில் சிலோன் பல்கலைக்கழக சங்கம் 1906 ல் ஸ்தாபிக்கப்பட்ட பின்னரே, பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் வீறு நடை போட்டன. அதன் முதற்படியாக 1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர், அதனை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகமொன்றை அமைக்கும் ஏற்பாடுகளை பலர் முன்னெடுத்துச் சென்றனர். நீதிபதி. எம். டி. அக்பர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, உத்தேசிக்கப்பட்ட பல்கலைக்கழகமானது தனித்துவமாக இருக்க வேண்டுமெனக் கருதியது. மாணவர்களுக்கான விடுதி வசதிகளோடு கொழும்புக்கு வெளியே அது அமைய வேண்டும் எனவும் அந்தக் குழு பரிந்துரைத்தது. இதனையடுத்து கண்டிக்கு அருகே உள்ள வேறொரு இடத்தில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் Dr. S.C. Paul மற்றும் Andreas Nell ஆகியோர் அந்த இடத்தை மறுத்து அதில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதில் இருக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தினர். மேலும், பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கு சிறந்த இடம் பேராதனைதான் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியதோடு மட்டுமல்லாது முன்மொழியவும் செய்தனர்.
இரண்டாவது முதல்வராக Sir.Ivor Jennings பதவியேறும் வரை….
பேராதனை மண்ணின் வரலாற்றில் புகழ்பூத்த இந்தப் பல்கலைக்கழகத்துக்கான காணி, 1938 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டது. அப்போதைய பிரித்தானிய அரசினால் இந்த நோக்கத்திற்காக 150 ஹெக்டேயர் பரப்புடைய நிலம் கையகப்படுத்தப்பட்டதாக ஒரு கருது நிலவுகிறது. காணி தயாரான போதும் 1941 ஆம் ஆண்டு வரை பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு இரண்டாவது முதல்வராக Sir Ivor Jennings பதவியேறும் வரை இந்த நிலையே நீடித்தது. அவர் தான், பேராதனையில் பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணியைத் தீவிரப்படுத்தினார். அப்போது கல்வி அமைச்சராக இருந்த C. W. W. கன்னங்கராவுக்கு இந்தப் பல்கலைக்கழகத்தின் உடனடித்தேவையையை உணர்த்தியவர் Sir Ivor Jennings தான். அதனையடுத்தே பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் காரணமாகவே Sir Ivor Jennings பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிதாமகர் எனப் போற்றப்படுகின்றார்.
பேராதனை பல்கலைக்கழகம் சட்டபூர்வ அந்தஸ்தை பெற்றது
1942 ல் இந்தப் பல்கலைக்கழகம் உருவான நிலையில், சிலோன் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியன அதனுடன் இணைக்கப்பட்டன. நான்கு பீடங்களை அப்போது கொண்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகம் 55 கல்விசார் ஊழியர்களையும் 904 மாணவர்களையும் பெற்றிருந்தது. 1946 ஆம் ஆண்டிலேயே அங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டமை காரணமாக, அதற்கு முன்னர் வரை, இந்தக் கல்லூரிகளின் வகுப்புகள் கொழும்பிலேயே இடம்பெற்றன. ஆரம்பகாலக் கட்டிடங்கள் 1952 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட போதும், அவற்றின் உத்தியோகபூர்வ பயன்பாடு 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியன்று இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வுடனேயே ஆரம்பித்தது. அந்த நிகழ்வில் பிரித்தானியாவின் தற்போதைய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பங்கேற்புடன் இடம்பெற்றதென்பது விசேட உபரித் தகவல். 1972 ஆம் ஆண்டு ஆக்கப்பட்ட பல்கலைக்கழகச் சட்டத்தின் பிரகாரம், பேராதனை, கொழும்பு உள்ளிட்ட கற்கை வளாகங்கள் இலங்கைப் பல்கலைக்கழகம் என்ர பெயரின் கீழ் கொண்டுவரப்பட்டன. எனினும், 1978 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் வழியாக பேராதனை தனக்கான சட்டபூர்வ அந்தஸ்தினைப் பெற்றதுடன், தனித்துவம் மிக்க பல்கலைக்கழகமாகவும் மாறியது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தங்களின் இளமைக் காலத்தைக் கழித்துவிட மாட்டோமா என ஏங்காத மாணவர்கள் குறைவு. மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் சிறப்பாகப் பணியாற்றுகின்ற பேராதனைப் பல்கலைக்கழகம், அவர்களுக்கு சொர்க்கபுரியாக அமைந்திருக்கின்றது.