காலனியப் பயிர்களும் மலைக்காடுகளும் – நீலகிரித் தொடர் 2

ரம்யமான காலநிலையையும் சுவாத்தியத்தையும் தேடி, மலைப்பிரதேசங்களை நோக்கி பயணிக்கும் எமக்கு, அம்மலைத்தொடர்களில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போயிருக்கும் எமது முன்னோரின் உழைப்பின் தகிப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நீலமலைகள் சொல்லும் வரலாற்றில் தேயிலையும் சின்கோனா மரங்களும் சொல்லும் வரலாறு கொஞ்சம் பெரியதாகத்தான் இருக்கின்றது. (topnews.in)

சலீவன் வந்து சென்ற சாலையில் நீலகிரியின் பொருளாதார மாற்றத்திற்கான அடித்தளங்கள் பலமாக இடப்பட்டது. அது நம் வாழ்வினை அடிமையாக்கும் அளவிற்கு இருக்கும் என்பதனை நாம் உணர இயலாத தருணம். பசுமை போர்த்தியிருக்கும் மலைகளின் தோலினை உரித்துப் பார்த்தால் அங்கிருக்கும் எலும்புக் கூடுகள் அனைத்திற்கும் தனித்தனி கதைகள் இருக்கும். அங்கு பயிர் செய்யப்பட்ட ஒவ்வொரு புதுவகை மரஞ்செடிகொடிகளுக்கும் அவ்வாறே கதைகள் இருக்கின்றன.

நீலமலைகள் சொல்லும் வரலாற்றில் தேயிலையும் சின்கோனா மரங்களும் சொல்லும் வரலாறு கொஞ்சம் பெரியதாகத்தான் இருக்கின்றது. ஊர் சுற்றுதலோடு நின்று விடாமல் அம்மலைகள் எங்களுக்கு என்ன சொல்ல விளைகின்றன என்பதனை அறிந்துவர ஒரு தேநீர் இடைவெளி போதாது என்பதால் நாங்கள் மறுபடியும் மலையை நோக்கி பயணித்தோம். உயரம் செல்லச் செல்ல மலை மக்களின் வாழ்வானது எத்தனை தூரம் எளிமையானதோ அத்தனை தூரம் வலி மிகுந்தது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஜான் சலீவனிற்கு நீலகிரியின் சீதோசண நிலையானது மிகவும் பிடித்துவிட குடும்பத்துடன் இங்கு வந்து வசிக்கத் தொடங்கிவிட்டார். அவரின் பெரும் முயற்சியால் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பழமரங்களும், காய்கறிப் பயிர்களும் நீலகிரிக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. அவரின் வருகையானது மற்ற ஐரோப்பியர்களின் வருகைக்கு வழி வகை செய்யவே அவர்களுக்காக வேலை செய்யும் ஆட்களும், இராணுவ வீரர்களும் வந்து சேரத் தொடங்கினார்கள். தோட்டங்கள் அமைப்பதற்கும், பணம் தரும் பயிர் வகைகளை விதைப்பதற்கும், அவற்றை முறைப்படி பராமரிப்பதற்கும் திட்டங்கள் நிறைய கொண்டுவரப்பட்டன. அத்துடன் அந்த துறைகளில் வல்லவர்களாக இருந்தவர்கள் மேலை நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்தார்கள். ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலனிய நாடுகளில் இருந்து விதைகள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்து அறிமுகப்படுத்தப்பட்டன. அவ்வாறாக நீலகிரியின் பொருளாதார மாற்றத்திற்கான காரணிகளாக கருதப்படும் விதைகளின் வரலாற்றில் முக்கியப் பங்கினை வகிக்கின்றது சின்கோனா மரங்களும், தேயிலைக் காடுகளும்.

தேயிலை

1859ல் தாய்சோலையில் தேயிலைக்காடுகள் உருவாக்கப்பட்டன. அதனை உருவாக்க சீனத்தில் இருந்தும் மலாய், சிங்கப்பூரிலிருந்தும் கொண்டுவரப்பட்ட போர்க்கைதிகளை பயன்படுத்தினார்கள் ஆங்கிலேயர்கள் (oldindianphotos.in)

1832 – 33ல் ஆரம்பமாகின்றது தமிழகத்திற்கும் தேயிலைக்கும் இடையிலான பந்தம். வடகிழக்கு இந்தியாவில் தேயிலைகள் பயிர் செய்ய ஆரம்பித்து சில ஆண்டுகள் சென்ற பின்னரே, நீலகிரியை நோக்கி தேயிலை பயணித்தது. 1833ல் டாக்டர்.க்றிஸ்ட்டி நீலகிரியின் சூழ் இயல் மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வறிக்கை தயார் செய்வதற்காக நீலகிரி வந்தார். குன்னூர் அருகே தேயிலை போன்ற செடிகளை கண்டறிந்த அவர் , சீனாவில் இருந்து தேயிலைப் பயிர்களை வாங்குவதற்கான செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டார். அத்துடன் தேயிலை பயிரிடுவதற்காக நிலம் வேண்டி விண்ணப்பித்தார். விதைகளின் வருகைக்கு முன்பே அவர் மரணித்துவிட, அங்கிருந்த பல்வேறு ஐரோப்பியர்கள் தேயிலை வளர்ப்பதற்கான முன்னோட்டங்களை கையில் எடுத்துக் கொண்டார்கள். காடுகளை சமன் செய்து விளை நிலமாக மாற்றுவதற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. மேலும் மலைப்பகுதியில் வாழ்ந்த பழங்குடிகளிடமிருந்து குறைந்த பணத்திற்கு நிலங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் பழங்குடிகளை அவ்விடம் விட்டு அனுப்புவது சவலாக இருந்திருக்கின்றது ஆங்கிலேயர்களுக்கு.

இரண்டு ஆண்டுகள் கழித்து லார்ட் வில்லியம் பென்டின்க் அவரின் முயற்சியால் மீண்டும் சீனத்தில் இருந்து தேயிலை விதைகள் வாங்கிவரப்பட்டு குன்னூரிலும், உதகையிலும் பயிரிடப்பட்டது. கேத்தி பள்ளத்தாக்கில்தான் அதற்கான முன்னோட்டங்கள் நடைபெற்றன, ஆனால் அம்முயற்சிகள் அனைத்தும்  தோல்வியில் முடிவடைய கேத்தி பள்ளத்தாக்கில் இருந்த தேயிலைக்காடு மூடப்பட்டது. பிரெஞ்ச் தாவரவியலாளர் திரு. ஜார்ஜஸ் குர்ரேட் – சாமுவேல் – பெர்ரோடெட் அவரால் கண்டறியப்பட்ட சிறு எண்ணிக்கையிலான தாவரங்களை இரண்டு வருடங்கள் வளர்த்து வந்தார். அதுவே நீலகிரியின் முதல் தேயிலை வளர்ச்சியாகும்.  1840ல் ஜான் சலீவன் அந்த மாதிரிகளை மதராஸ் விவசாய – தோட்டக்கலை மையத்திற்கு அனுப்பிவைத்து நீலகிரியில் தேயிலை வளர்ப்பதற்காக முறையாக அனுமதி பெற்றார்கள்.  அதன் பின்னர் சீனத்தின் உயர்தர தேயிலைக்காடுகளில் இருந்து விதைகள் கொண்டு வரப்பட்டு பயிரிடப்பட்டது. 1859ல் தாய்சோலையில் தேயிலைக்காடுகள் உருவாக்கப்பட்டன. அதனை உருவாக்க சீனத்தில் இருந்தும் மலாய், சிங்கப்பூரிலிருந்தும் கொண்டுவரப்பட்ட போர்க்கைதிகளை பயன்படுத்தினார்கள் ஆங்கிலேயர்கள். இன்றும் தாய்சோலை, ஜெயில் தோட்டம் என்று அழைக்கப்படுகின்றது. தேயிலைக்கான வரலாறு இவ்வாறாக இருக்க, சின்கோனா மர வளர்ப்பிற்கான வரலாறு வேறொரு விதமாக இருக்கின்றது.

சின்கோனா

சின்கோனா மரங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் – இலங்கை (imagesofceylon.com)

திரு. வில்லியம் க்ரஹாம் மெக்ஐவர், 1825ல் ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்த இவர், எடின்பெர்க்கில் இருக்கும் இராயல் தாவரவியல் பூங்காவில்  தோட்டக்கலை வல்லுநராக பயிற்சி பெற்றவர்.  கீவ்வில் வேலை செய்துகொண்டிருந்த இவர் 1848ல் நீலகிரி மலைப்பகுதியில் இருக்கும் தாவரவியல் பூங்காக்களை வடிவமைப்பதற்காக ஆங்கிலேய ஆட்சியாளார்களால் நியமிக்கப்பட்டார். இதுவரையிலும் நீலகிரியில் ஆங்கிலேயர்களின் இராணுவமும், வேலையாட்களும் மட்டுமே இருந்து வந்த நிலையில் தோட்ட வேலைகளுக்காக வெளிமக்களை நீலகிரிக்கு கொண்டு வந்தார்கள். இவ்வாறாக வந்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் இரண்டாம் ஆங்கில-சீனப் போர்  (1856-1860) கைதிகள் மற்றும் ஸ்ட்ரைட் செட்டில்மெண்ட்களில் (சிங்கப்பூர், மலாய், மலாக்கா, மற்றும் பினாங்) இருந்து கொண்டு வரப்பட்ட மலேசிய சீனர்கள்.  அவர்களை ஆரம்பத்தில் மதராஸ் மாகாண சிறையில் சிறை வைத்திருக்கவே திட்டம். ஆனால்  இட நெருக்கடி மற்றும் போதிய வசதியின்மை காரணமாக அவர்கள் நீலகிரியில் இருக்கும் சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டார்கள். சிறைகள் முறையே தாய்சோலை மற்றும் கூடலூர் நடுவட்டம் சிறை. தாய்சோலையில் இருந்தவர்களை தேயிலை வளர்ப்பிலும், கூடலூரில் இருந்தவர்களை சின்கோனா வளர்ப்பிலும் பயன்படுத்தினார்கள். அதற்காக அவர்களை பணியில் அமர்த்தியவர் திரு. வில்லியம் க்ரஹாம் மெக்ஐவர்.

சின்கோனாவின் வருகையானது தென்னமெரிக்காவில் இருந்து தொடங்கியது. இங்கிலாந்து,  சர் க்ளெமெண்ட்ஸ் இராபர்ட் மார்கெம் அவர்களை இப்பணிக்காக பயன்படுத்தியது. தென்னமெரிக்க நாடான பெருவில் இருந்து சின்கோனாவின் தரமான விதைகளை இந்தியாவிற்கு தருவித்தது இவர்தான். மற்றவர்கள் அனைவரும் சின்கோனாவின் வளர்ப்பிற்காக கொல்கத்தா மாகாணாத்தை தேர்வு செய்ய, மார்கெமின் எண்ணமானது நீலகிரியில் நிலை பெற்றது. 1860ல் சின்கோனா இந்தியாவிற்கு வந்தது. முதல் முயற்சி முற்றிலும் தோல்வியை அடைய, அடுத்தடுத்த வருடங்களில் மீண்டும் விதைகள் கொண்டுவரப்பட்டன. அவற்றை பாதுகாப்பான முறையில் வளர்த்தெடுப்பதற்கு தொட்டப்பெட்டா சிகரம் தேர்வு செய்யப்பட்டது. அந்த முயற்சியில் தொய்வு ஏற்படாமல் இருப்பதற்காக மெக்ஐவர் தொட்டபெட்டாவில் தங்கினார். வளர்ந்த நாற்றுக்களை நடவு செய்வதற்காக நடுவட்டத்தை தேர்வு செய்தனர். முதல் சின்கோனா மரமானது 30 ஆகஸ்ட் 1862ல் அன்றைய மதராஸ் ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் அவரால் நடப்பட்டது. 1871ல் நீலகிரியினை நான்காக பிரித்து சின்கோனாவினை இலண்டனில் இருக்கும் சந்தைக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள் ஆங்கிலேயர்கள். ஒவ்வொரு காலனிய நாட்டுப் பயிர்களும் உலகின் வேறொரு மூலையில் இருக்கும் காலனிய நாடுகளில், மேலை நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்காக வளர்க்கப்பட்டது.

முதல் சின்கோனா மரமானது 30 ஆகஸ்ட் 1862ல் அன்றைய மதராஸ் ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் அவரால் நடப்பட்டது (commodityhistories.org)

ஆரம்ப காலங்களில் இந்த இரண்டு விதமான பயிர் வளர்ப்பிற்கும் அதிகம் பயன்படுத்தப்பட்டவர்கள் சீனர்கள். நடுவட்டத்தில் இருந்த சீனர்கள் அருகில் இருந்த தமிழ்ப்பெண்களை திருமணம் முடித்து மணவாழ்வில் ஈடுபட்டத்தற்கான குறிப்பினை எட்கர் தர்ஸ்டன் அவர்களின் “தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்”  என்ற புத்தகத்தில் தந்திருக்கின்றார். அந்த புத்தகத்தில் தமிழ்-சீன இணைகளுக்குப் பிறந்த குழந்தைகளின் முக அமைப்பு மற்றும் உருவம் தொடர்பான அத்தனை குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. இன்று நடுவட்டத்தில் அவ்வாறான குடிகளின் தலைமுறைகள் இருக்கின்றனவா என்பதில் எந்த தெளிவும்  கிட்டவில்லை. அவர்கள் இந்திய மக்கள் தொகையில் ஒன்றுடன் ஒன்றாக கலந்து வாழத் தொடங்கியும் இருக்கலாம்.

ஆனால் சீனர்கள் நம்முன்னோர்கள் இல்லை. இது நம் முன்னோர்கள் பற்றிய இரத்தம் தோய்ந்த கதையும் இல்லை. முகப்பு பத்தியில் குறிப்பிட்ட நம் முன்னோர்கள் அனைவரும் இந்த இரண்டு பயிர்களும் இந்தியாவிற்குள் வந்து மெல்ல மெல்ல நம் மலைக்காடுகளின் வளத்தினை அழித்து குடிபுகுந்த பின்னரே மலையேறுகின்றார்கள். அவர்கள் மலையேறுவதற்கு முந்தைய காலகட்டத்தினை விளக்க இக்கட்டுரை அவசியமாகின்றது. இந்த வரலாறானது தேவைப்படுகின்றது.

தேயிலையும் சின்கோனாவும் இன்னபிற பயிர்வகைகளும் இந்தியாவிற்குள் வரத் தொடங்கி முக்கிய மலைப்பிரதேசங்களில் குடிகொண்டது. அஸ்ஸாம் மற்றும் டார்ஜிலிங்கைத் தொடர்ந்து நீலகிரியை அடைந்தது. அதனைத் தொடர்ந்து கேரளத்திலும் கர்நாடகத்திலும் வேரூன்றத் தொடங்கியது. இக்காலகட்டத்தில்தான் 1876-1878ல் ஏற்பட்ட பஞ்சம் மருதநில விவசாயக் கூலிகளை வேலை தேடி குறிஞ்சி நோக்கி நகர வைத்தது. அவர்கள் பாதங்கள் படாத இடமேதும் இம்மலைகளில் இல்லை.

இதற்கு பின்னான ஐம்பதாண்டுகள் தேயிலை என்ற வார்த்தை எவ்வாறாக, சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து பஞ்சம் பிழைக்கவந்த விவசாயக்கூலிகளின் வாழ்வினை மாற்றியது என்பதனை தெரிந்து கொள்ள நிறைய பயணிக்க வேண்டியது இருக்கின்றது.  இந்த குழப்பமான வரலாற்றில் இருந்து தெளிவு பெற வேண்டிய அவசியம் உங்களுக்கும் இருப்பதால் கொஞ்சம் இடைவெளிவிட்டு பின் மீண்டும் சந்திப்போம்.

Related Articles

Exit mobile version