மோனலிசாவின் மர்ம புன்னகை

கன்னம் வருடும் தென்றல் முகம் காண இயலாத நிலை அது. பூக்களின் இதழ் விரிப்பில் தேனீயை அழைக்கும் மொழியும் உண்டு எனில் அது புன்னகையாக மட்டுமே இருக்கும். முகவரியின்றி பறக்கும் அஞ்சல் முகம் காட்டும் புன்னகை தான். பூவிதழில் சிந்தியிருக்கும் பனித்துளி விட நம் பூவிதழில் சிந்தியிருக்கும் புன்னகையே கோடி அழகு. மொழிகளால் நொறுக்கப்படாத பொது மொழி. வார்த்தைகளால் இறுக்கப்படாத வாய் மொழி. உள்ளத்தின் விதைகள் உதட்டில் விரிக்கும் உன்னத மலர் தான் புன்னகை. மகிழ்வின் வாடைக் காற்று தொட்டு மொட்டுப் பூட்டை உடைத்து, பட்டென்று வரும் பரவசப் பூ தான் புன்னகை. ஒரு வார்த்தையில் சொல்லும் நட்பின் வரலாறு தானே புன்னகை. விலங்கிலிருந்து மனிதன் விலகியே இருப்பது புன்னகையின் புண்ணியத்தினால் தானே.  உதடுகளை விரியுங்கள் புன்னகை புரியுங்கள் சிரிப்புக்கு அது தான் தாய் வீடு. மகிழ்ச்சிக்கு அது தான் மறு வீடு. என்றும் புன்னகை பற்றி சிறப்பித்துக் கொண்டே போகலாம்.

புன்னைகையின் அர்த்தம் உண்மையில் புரிந்திடாத புதிர் தானோ என்னவோ இன்றளவும் மோனலிசாவின்  மர்ம புன்னகை அனைவரிடத்திலும் ஒரு வியப்பை உருவாக்கும் கேள்விக் குறியாகவே உள்ளது. அவரின் மர்ம புன்னகை ஓவியத்தைப் பற்றி கேள்வி படாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். மோனலிசா ஓவியத்தின் பிரதியை பெரும்பாலும் அனைவரும் பார்த்திருப்போம். புகழ்பெற்ற மோனலிசாவின் ஓவியத்தை வரைந்தவர் இத்தாலியைச் சேர்ந்த லியானார்டோ டாவின்சி. மர்ம புன்னகை அரசி மோனலிசா ஓவியம் பற்றி ஆண்டாண்டு காலமாக பல்வேறு வகையில் விமர்சனங்கள் எழுந்து வந்த வண்ணமே உள்ளது.

லியானார்டோ டாவின்சி வரைந்த ஓவியம்

மெல்லிய புன்னகையுடன் மோகன பார்வை கொண்டு காட்சியளிக்கும் ஓவியத்தை பார்த்தால் டாவின்சி தான் முதலில் நினைவிற்கு வருவார். புகழ் பெற்ற ஓவியரான லியோனார்டோ டாவின்சி பத்து மனிதனின் ஆற்றலை பெற்ற ஒரே பேரறிஞர்.

இவர் ஓவியம் மட்டும் தீட்டவில்லை. சிற்பி, அறிவியல் கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர், உடற்கூறியலறிஞர், கட்டிடவியல் நிபுணர், நகர அமைப்பு வல்லுநர், புல்லாங்குழல் இசை மேதை வடிவமைப்பாளர், போர்த்துறைப் பொறியாளர் என்று பல பல துறைகளில் சிறந்து விளங்கிய மாமேதை தான் டாவின்சி. பல்துறை பேரறிஞனாக டாவின்சி விளங்கினாலும் அவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது என்னவோ மோனலிசா எனும் புன்னகை அரசியின் ஓவியமே. பன்முக பயிற்சியும் பல்வகை பேரறிவும் கொண்டு இருந்த டாவின்சி பிரபஞ்ச மனிதர் என்று போற்றப்பட்டவர். இந்த பட்டப் பெயருக்காக அவர் மூளை புதுப்புது கண்டுபிடிப்புகளாலும், உத்திகளாலும், கருவிகளாலும் நிறைந்திருந்தது.

அவர் சுமார் 7,000 பக்கங்கள் உடற் கூறியல் உண்மைகள் பற்றி எழுதியிருந்தார். இவரது ஓவியங்கள், போர் உத்திகள், குறியீடுகள், பறக்கும் எந்திரங்கள், சமிக்ஞைகள், வண்ண ஓவியங்கள், புதிர்கள், நகர்ப்புற வடிகால் அமைப்புகள் எனும் வியப்பூட்டும் களஞ்சியமாக காட்சியளிக்கிறது. 14 ஆம் வயதிலேயே மாதிரி வடிவமைப்பில் ஆவல் கொண்டிருந்தார். இவர் வரைந்த ஓவியங்களில் சிறந்த ஓவியங்களாக அறியப்படுபவை கடைசி விருந்து மற்றும் மோனலிசா ஓவியங்கள் உலக புகழ் பெற்றவை. டாவின்சி மறைந்து ஐந்து நூற்றாண்டுகள் சென்ற போதிலும் அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் புகழ் அழியாமல் உள்ளது.

Mona Lisa Painting by Leonardo Da Vinci (Pic:Wikipedia)

லூவர் அருங்காட்சியகம்

மோனலிசாவின் புகழ்பெற்ற ஓவியத்தின் நிஜ பிரதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த இடத்தை புன்னகைக்கும் மோனலிசாவின் இருப்பிடம் எனவும் அழைக்கலாம். இந்த அருங்காட்சியகம் மோனலிசாவின் ஓவியம் மட்டுமின்றி உலகின் பல பிரபலமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களையும் தன்னிடத்தில் கொண்டு இருக்கிறது. உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று. முதலில் இந்த அருங்காட்சியகம் ஒரு கோட்டையாக எழுப்பப்பட்டிருந்தது. மன்னர் முதலாம் பிரான்சிஸ் தான் இதை அரண்மனையாக 1546 ஆம் ஆண்டு உருமாற்றினார்.

பின் 1793 ஆம் ஆண்டு மன்னனாக இருந்த பதினான்காம் லூயி தன் இருப்பிடத்தை வெர்செயிலஸ் நகருக்கு மாற்றவே அந்த இடம் லூவர் கலைக் கூடமாக மாறியது. தற்போது அந்த அருங்காட்சியகத்தின் பரப்பு ஆறரை லட்சம் சதுர அடிக்கும் அதிகமாக உள்ளது. லூவரின் அருங்காட்சியகத்தின் நுழைவாயில் ஒரு பிரமிடு வடிவில் உள்ளது.

சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் அவர்களின் ஆர்வத்தை தூண்டும் ஒரு ஓவியம் 21க்கு 3௦ அங்குலம் எனும் அளவில் குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் பாதுகாக்கப்படும் ஒரு ஓவியம் பாதுகாப்பு வீரர்கள் கொண்டு பாதுகாக்கப்படும் ஒரு ஓவியம் தான் மோனலிசா ஓவியம்.

பாரீஸ் அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியங்களின் பங்களிப்பு மன்னர் நெப்போலியனுக்கு பெரும் பங்கு உள்ளது. எந்த நாட்டை வென்றாலும் அங்குள்ள கலைப் படைப்புகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார். அவர் ஆட்சி காலத்தில் இது நொப்போலியன் மியூசியம் என்று அழைக்கப்பட்ட இது வாட்டர்லூவில் நெப்போலியன் தோல்வி கண்ட பின் மீண்டும் லூவர் மியூசியம் என்று அழைக்கப்படத் தொடங்கியது. நேற்று வரைந்த ஓவியம் போல் வண்ணம் சிறிதும் மங்காத மோனலிசாவின் ஓவியம் இதன் ஜாலம் என்னவோ. மோனலிசாவின் ஓவியம் எப்போதும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்க காரணம் என்ன என்பது குறித்து பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மோனலிசா ஓவியத்தில் மிக நுணுக்கமாக பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணக் கலவையால் அந்த ஓவியம் உயிரோட்டம் உள்ளதாக விளங்குகிறது. இதில் எந்த விதத்தில் பல அடுக்குகளாக வண்ணக் கலவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். எக்ஸ்-ரே ஸ்கேனர், சோலார், லேசர் போன்றவற்றை கொண்டு மோனலிசா ஓவியத்தின் ஒவ்வொரு அடுக்கையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Louvre Museum (Pic:mylittleadventure)

மோனலிசா ஓவியத்தின் மர்ம புன்னகை

இது பற்றி விஞ்ஞானிகள் கூறியது மோனலிசா ஓவியத்தின் உயிரோட்டம் அதன் கண்ணாடி போன்ற பளபளப்புக்கு காரணம் அவற்றில் உள்ள பல அடுக்குகளிலும் வண்ணக் கலவைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தான். இந்த ஓவியத்தில் 12 அடுக்குகளாக வண்ணக் கலவைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அடுக்கும் ஒன்று அல்லது இரண்டு மைக்ரோ மீட்டர் தடிமன் உடையது. இதனால் தான் அந்த ஓவியம் பளபளப்புடன் தோற்றம் அளிக்கிறது. இது போல் ஓவியம் வரைய இன்று வரை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பாதி கூட அவற்றில் வரவில்லை. ஏனெனில் டாவின்சி ஓவிய நுட்பம் மிக நுணுக்கமாக அமைந்திருப்பதே. டாவின்சியின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓவிய நுட்பங்களை கண்டறிந்தால் இன்றைய ஓவியக்கலைக்கு சிறப்பு சேர்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தில் உள்ள மோனலிசாவின் புன்னகை வெளிப்படுத்துவது சோகமா அல்லது மகிழ்ச்சியா என்பது அறிய முடியா வண்ணம் இருந்த ஒன்றே. இந்த ஓவியத்தை டாவின்சி 15௦௦ ஆவது ஆண்டுகளில் வரைந்தபோது, மோனலிசா ஓவியத்தில் இடம் பெற்றுள்ள லிசா கெரார்தினியின் இதழ்களில் தவழும் உணர்வு, சோகமா? இன்பமா? என்பது இனம் காண முடியாத புன்முறுவல் தான், மோனலிசா உலக புகழ்பெற்றதற்கு காரணம்.

மோனலிசாவின் புன்னகை போலவே அதை வரைந்த டாவின்சியும் ஒரு மர்மம் நிறைந்த மனிதராகவே கருதப்படுகிறார். கிட்டத்தட்ட அறுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் மோனலிசா ஓவியம். பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த மோனலிசாவின் மர்ம புன்னகை கருத்தைப் பொய்யாக்கும் வகையில் மோனலிசாவின் புன்னகை மகிழ்ச்சியை குறிக்கும் புன்முறுவலே என்று ஜெர்மனியின் ப்ரீபெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் மூலம் விளக்கியுள்ளனர். மோனலிசாவின் இதழ் வளைவுகளில் கணினியின் மூலம் சிறிய கோண மாறுபாடுகளை செய்து அவை துன்பத்தை வெளிபடுத்துவது போல பல படங்களை உருவாக்கினார்கள்.

அதோடு உண்மையான மோனலிசா ஓவியத்தையும் சேர்த்து பொதுமக்களிடம் அவர்கள் கருத்து கேட்டனர். அவற்றை கண்டு மக்கள் சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்த படங்களை பார்த்து அது மோனலிசா அழுவதாக கூறினர். மோனலிசா சிரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்த படங்களை பார்த்ததும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறினார்கள். நிஜ மோனலிசாவின் படத்தை பார்த்த பெரும்பாலனோர் மோனலிசா சிரிப்பதாகவே கூறியுள்ளனர்.

Leonardo Da Vinci (Pic:mos)

இந்த கருத்துக்கணிப்பை பார்க்கையில், சிலர் அவர் சோகத்தை வெளிப்படுத்துவதாக எண்ணும் மனப்பான்மையுடன் நாம் பார்ப்பதால் தான் மோனலிசா அழுவது போல் தோன்றுவதாகவும், ஆனால் உண்மையில் மோனலிசாவின் புன்னகை மகிழ்ச்சியை மட்டுமே வெளிப்படுத்துகிறது என நிரூபணமாகியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Web Title: Mysterious Smile of Mona Lisa Solved, Tamil Article

Featured Image Credit: Wikipedia

Related Articles

Exit mobile version