ஓர் வேண்டுகோள் நேற்றைய நாளில் உங்களுக்கு மிகவும் சந்தோசம் மற்றும் துக்கம் தரக்கூடிய நிகழ்வுகளை சிறிது சிந்தித்து பாருங்கள். அந்த உணர்வுகளின் கனம் மனதை வசியப்படுத்தும், மகிழ்ச்சியான தருணங்களில் மனம் தங்கும், கஷ்டமான வேளையில் மனம் உடனே விலகும். சிறிது அனுபவித்து பின் இதை படிக்க தொடங்குங்கள் அப்பொழுதுதான் உங்களில் ஒருவனாக நான் கூறவருவது நம்மை பற்றி என புரியும்.
தொடர்வோம், என்னால் உணர முடிகிறது தங்களின் உணர்வுகளை. சற்று பின்னோக்கி நம் பள்ளி பருவத்திற்கு போவோம். நாம் கற்கும் கல்வி முறையில் யாரேனும் வந்து உங்களிடம் பிடித்த பாடம் எது என கேட்டால் அவரவர்க்கு பிடித்ததை கூறுவீர்கள் ஆனால், பிடிக்காதது எந்த பாடம் என சொல்லச்சொன்னால் எண்பது சதவிகிதபேர் கூறும் பதில் “வரலாறு” பாடமாகத்தான் இருக்கும். ஆகையால் அப்படி என்ன இருக்கிறது இந்த வரலாறு பாடத்தில்?
வரலாற்றுப் பாடம்
நமக்கு வரலாறு மேல் ஏன் வெறுப்பு உண்டாயிற்று? ஏன் அதன் பக்கம் நாட்டம் இல்லாமல் போகிறது? ஏன் அப்பாடத்தை மனப்பாட மனத்துடனே அணுகுகிறோம்?இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் நமக்கு கற்று கொடுத்த ஆசான்களின் அணுகுமுறையே முதல் காரணம். அவர்கள் வரலாற்றை வெறும் செய்தியாகவும், சம்பவமாகவும் மட்டுமே கற்பித்துள்ளனர். அவர்கள் நம்மிடம் சொல்ல மறந்த மிக முக்கியமான ஒன்று உள்ளது அது “நம்மால் வரலாற்றை உருவாக்க முடியுமா என அவர்களுக்கு தெரியாது. ஆனால் நாம்தான் வரலாறு என புரிய வைக்க தவறிவிட்டார்கள்”. நேற்றைய நாம் தான் இன்றைய வரலாறு இதை இங்கே கூற காரணம் உள்ளது. வரலாறு நம் அன்றாட வாழ்வு அதை உணர்வுகள் கொண்டு பார்த்தால் அதில் கண்டிப்பாக நம் முன்னோர்கள் வழியே நாமும் இருப்போம். அப்படி நாம் படித்து மறந்த வரலாற்றை ஒன்று உள்ளது அந்த கதைக்களத்தை விவரிப்பதே என் நோக்கம்.
ஆயிரம் வருடம் பின்னோக்கிய கதை
உலகத்தின் எந்த நாட்டு வளமும் இந்திய நாட்டின் வளத்திற்கு ஈடு கொடுக்கமுடியாது. எடுத்துக்காட்டாக நம்மிடம் இருந்த கோஹினூர் வைரத்தை விற்றால் உலகத்தின் மொத்த மக்களுக்கும் ஒரு வேலை பசி போக்க முடியும். அப்படியானால் யோசித்து பாருங்கள் நம் நாட்டின் வளம் எப்படி இருந்தது என. இப்படி பட்ட நாடுதான் இந்தியா எனும் இந்துஸ்தானம். ஆனால் நம்மிடம் இருந்த வளங்கள் மீது உலகத்தை ஆதிக்கம் செலுத்திய நாடுகளிடையே ஒரு கண்ணோட்டம் இருந்தே வருகிறது. இது நேற்று இன்று இல்லை ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே உள்ளது. பயணிப்போம் வாருங்கள்.
1191 தாரோரி, இன்றைய ஹரியானாவில் கர்னாலுக்கு அருகில் உள்ள இடம் பரந்து விரிந்த வெட்டவெளியில் புழிதி பறக்க இரு நாட்டு படையினரும் ஒருவரை ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கி கொள்கிறார்கள். போர் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக உச்சத்தை எட்டிக்கொண்டு இருக்கிறது. முகம்மது கோரி தாக்கிய சில வினாடிகளில் கோவிந்த ராஜா வாய்களில் ரத்தம் கொட்டிற்று. நிலை தடுமாறிய கோவிந்த ராஜா தன்னை தானே சுதாரித்துக்கொண்டு முகம்மது கோரியுடன் நேருக்கு நேர் போர் புரிகிறார் இதன் வெளிப்பாடாக யுத்தகளத்தில் ராஜபுத்திர வீரர்களின் கை ஓங்கி துருக்கிய வீரர்களை கொஞ்சம் கொஞ்சமாக பின் வாங்க வைத்தனர். முகம்மது கோரி பலத்த காயங்களுடன் களத்தில் இருந்து பின்வாங்குவதே சரி என ஓட்டம் பிடித்தார். முதல் தாரோரி யுத்தத்தில் ராஜபுத்திரர்கள் பெரும் வெற்றிகண்டனர்.முகம்மது கோரி அவமானமாக நினைத்தார் இந்த தோல்வியை.
முகம்மது கோரி – மத்திய ஆப்கானிஸ்தான் பகுதியில் அமைந்திருந்த கோர் ராஜ்ஜியத்தின் ஆளுநர் மற்றும் படை தளபதியாக அவரே இருந்தார். தனது அன்பு சகோதரர் கியாஸ் உத் – தின் முகம்மது தனது சுல்தானாக இருக்கவேண்டும் என முடிவெடுத்து அவரை சுல்தானாக்கினார். கோரிக்கு ஏற்பட்ட அவமானமும் இந்துஸ்தானத்தின் மேல் இருந்த ஆசையும் அவரை தூங்க விடாமல் எப்படியாவது இஸ்லாமியர்களின் ஆட்சியை இந்துஸ்தானத்தில் நிறுவவேண்டும் என தன ராஜ்ஜியத்தின் வடமேற்கில் உள்ள எல்லையை தாண்டி இந்துஸ்தானத்தில் நுழைந்தார். அது மூன்றாம் பிரித்விராஜ் என்ற ப்ரித்விராஜ் சௌகான் ஆட்சி செய்த ராஜபுத்திரர்களின் சௌகான் ராஜ்ஜியம். இன்றைய ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாபின் சில பகுதிகள் மற்றும் உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது. அஜ்மீரை தலைநகரமாக கொண்டு டெல்லியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வலிமையான ராஜபுத்திரன் பிரித்விராஜ் சௌகான். வஞ்சம் தீர்க்க தன் படைபலத்தை அதிகப்படுத்தி சுமார் ஒரு லச்சத்து இருபது ஆயிரம் வீரர்களை களத்தில் இரக்க தயாராக இருக்கிறார் முகம்மது கோரி.லாகூரில் முகாமிட்டபடி ‘பெரும் இழப்பு நிகழாமல் மரியாதையாக சரணடையும்படி’ பிரித்விராஜ் சௌகானுக்கு தூது அனுப்புகிறார் கோரி. பிரித்விராஜ் சௌகான் அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் யுத்தகளத்தில் சந்திக்கின்றனர் இருவரும்.
தாரோரி தயாரானது, தனது நூற்றைம்பது ராஜபுத்திர ஆட்சியாளர்களோடு களமிறங்கினர் பிரித்விராஜ். ராஜபுத்திர படை கோரியின் படையைவிட இருமடங்கு பெரிதுவேறு . இதில் கோரிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது மூவாயிரத்திற்கும் மேலான யானை படைகள் . கோரி சற்றும் பின்வாங்காமல் யுத்தகள வியூகத்தை முறையாக அமைத்து முன்னேறினார் . போர் தொடங்கி பெரும் சேதங்கள் ஏற்பட்ட வேலையில் ராஜபுத்திரர்கள் வெற்றியை நோக்கி முன்னேறுவதை கோரி கவனித்திக்கொண்டே இருக்கிறார் இருப்பினும் அவர் பின்வாங்கவில்லை. இதில் திருப்புமுனையாக ராஜபுத்திரர்களின் தலைமை தளபதி கண்டே ராவ் கொல்லப்படுகிறார். ராஜபுத்திர வீரர்களின் நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்து வெற்றி வாய்ப்பு கோரியின் பக்கம் சாய்கிறது ,இங்கிருந்துதான் கோரியின் களவியூகத்தை ராஜபுத்திரர்கள் புரிந்து எதிர்வினை ஆற்றுவதற்குள் கோரி ராஜபுத்திரர்களை துவம்சம் செய்கிறார். போரில் முகம்மது கோரி வெற்றி பெறுகிறார். பிரித்விராஜ் இவர்களிடமிருந்து தப்பி ஓடுகிறார், இருப்பினும் வீரர்கள் அவரை கண்டுபிடித்து சரஸ்வதி நதிக்கரையில் பிரித்விராஜ் சௌகானை கொல்கிறார்கள்.
இரண்டாம் தாரோரி யுத்தத்தின் வெற்றியால் சிந்து – கங்கை சமவெளியில் லாகூர், சிந்து, கஜினி, முல்டான், டெல்லி ஆகியவை முகம்மது கோரியின் வசமானது. கைப்பற்றப்பட்ட வடமேற்கு பிரதேசங்களின் ஆளுநராக தனது நம்பிக்கைக்குரிய தளபதி குத்ப் – உத் -தின் ஐபெக்கை நியமிக்கிறார். இவர் ஒரு துருக்கியர் வெற்றிக்கு இவரும் ஒரு முக்கிய காரணம் . பிரித்விராஜின் மகனான கோலாவை ஒரு சிறு பிரதேசத்திற்கு அரசராக்கி அதை கோர் ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டிற்குள் நடக்கும்படி ஏற்பாடுகள் செய்துவிட்டு ஆப்கனுக்கு திரும்புகிறார் முகம்மது கோரி.
டெல்லி எனும் தீரா ஆசை
இஸ்லாமிய மதத்தை பெருமளவில் இந்துஸ்தானத்தில் பரப்பவேண்டும் என்பதே அவரது தீவிர எண்ணமாக இருந்திருந்த வேளையில் 1202 ஆம் ஆண்டு தன் சகோதரர் கியாஸ்-உத்-தின் முகம்மது உடல்நலக்குறைவால் இறந்து போகிறார், கோரியால் இந்த இழப்பை தாங்கமுடியவில்லை. இருப்பினும் கோரியே கோர் ராஜ்ஜியத்தின் சுல்தானாக பொறுப்பேற்கிறார்.மீண்டும் மதத்தை பரப்பும் வேளையில் தீவிரமாக இறங்குகிறார் கோரி. நாட்கள் செல்ல செல்ல கோரியின் உடல்நிலையும் மோசமான நிலையில் 1206 ஆம் ஆண்டு மரணமடைகிறார். பின் ராஜ்ஜியத்தின் ஆட்சி பொறுப்பில் யார் அமருவார் என குழப்பம் நீடிக்க அனைவரது எதிர்ப்பை எல்லாம் முறியடித்து கோர் ராஜ்ஜியத்தின் சுல்தானாக தனக்கு தானே முடிசூட்டிக்கொள்கிறார் குத்ப் – உத் – தின் ஐபெக். இதுவரை சுல்தான்களின் ஆட்சியானது காபூலை மையமாக கொண்டே இயங்கியது ஆனால்,தற்போது குத்ப் – உத் – தின் ஐபெக் டெல்லியில் இருந்து சுல்தான்களின் ஆட்சியை நடத்த முடிவு செய்து டெல்லி வந்தடைகிறார். ஹிந்துஸ்தானத்தில் முதல் சுல்தான் ஆட்சி ஆரம்பமாகிறது. அந்த வம்சத்தின் பெயர் மாம்லுக்( Mamluk, அரபியில் ‘சொந்தமான’ என்று பொருள்). டெல்லியில் இஸ்லாமிய சின்னங்கள் உருவாக ஆரம்பித்தது.குறிப்பாக குதுப் மினார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 1210 ல் குத்ப் – உத் – தின் ஐபெக் தனக்கு விருப்பமான விளையாட்டான போலோ விளையாடும்பொழுது தவறி விழுந்து இறக்கிறார். அதற்கு பின் வருகிற எண்பத்து நான்கு வருடங்கள்(1206-1290) டெல்லி மாமுல்க் வம்சத்தின் ஆட்சியில் இருந்தது. முயிஸ் – உத் – தின், டெல்லியின் பத்தாவது சுல்தானான இவர் இளம் வயதிலே பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். எனவே, அரியணையில் யார் அமர்ந்து ஆட்சி செய்வதில் குழப்பம் நேரிட தனது மூன்று வயது மகனையே 1290 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்த்துகிறார் முயிஸ் – உத் – தின். மாம்லுக் வம்சத்தினரிடம் பல காலமாக பணியாற்றியவர்கள் கில்ஜி வம்சத்தினர். இவர்களும் துருக்கியர்களே வேலைக்காகவும் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள இவர்கள் பணியமர்த்தப்பட்டவர்கள். வெகு காலமாக காத்திருந்த கில்ஜி வம்சத்தை சேர்ந்த ஜலாலுதின் டெல்லி ஆட்சியின் இயலாமையை மனதில் கொண்டு இதுதான் சரியான சமயம் என டெல்லி மீது படை திரட்டி வருகிறார், வந்த வேகத்தில் சுல்தானின் படைகளை சிதறடிக்கிறார். முயிஸ் – உத் – தின் கொல்லப்படுகிறார். அவரது உடல் யமுனை ஆற்றில் எரியூட்டப்பட்டது. அதன்பின் ஜலாலுதின் கில்ஜி சுல்தானாகிறார். கில்ஜி வம்சம் ஆட்சி ஆரம்பம் ஆகிறது டெல்லியில்.
கில்ஜி வம்சம் சொல்லும்படியாக ஆட்சி பொறுப்பில் இல்லை. ஜலாலுதின் ஆட்சி சிறிது காலமே பின் அலாவுதீன் கில்ஜிசுல்தானாகிறார் அடுத்து அவருடைய மகனான குத்ப் – உத் – தின் முபாரக் 1316 ஆம் ஆண்டு மிகவும் இளம் வயதிலே சுல்தானாகிறார். இவரின் அனுபவின்மையும் பருவத்தினால் ஏற்படும் சல்லாபத்தினால் நிர்வாகம் சீர்குலைய ஆரம்பித்தது. அரியணையின் மோகம் அனைவரின் கண்களை ஆசையை தூண்டிற்று. அதில் ஒருவர் கியாத் அல் – தின் துக்ளக். இவரும் துருக்கி துக்ளக் வம்சத்தை சேர்ந்தவர். இஸ்லாத்தை மிக தீவிரமாக பின்பற்றுபவர் அதனாலே முபாரக் மீது கடும் கோபத்தில் இருந்தார் ஏனெனில் முபாரக்கின் ஆட்சியில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துவதை கேட்ட கியாத் வெகுண்டெழுந்து முபாரக்கை அகற்றி அரியணையை கைப்பற்றவேண்டும் என முடிவு செய்தார். வியூகங்கள் அமைத்து படையை திரட்டுவதற்குள் குஷ்ரோ கான் என்ற நெருக்கமான தளபதியே முபாரக்கை கொல்கிறான்(1320).இதனை சற்றும் எதிர்பார்க்காத கியாத் பொறுமை காக்கிறார். இதோடு கில்ஜிகளின் ஆச்சி முடிவு பெறுகிறது(1290 – 1320). காலம் காத்த கியத்திற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது டெல்லி அரியணையை கைப்பற்ற அதுவும் நான்கு மாதங்களில். சரியான முறையில் காய்களை நகர்த்தி குஷ்ரோ கானை வீழ்த்துகிறார். 1320 இல் ஆரம்பித்த துக்ளக் வம்சம் 1414 வரை டெல்லி அரியணையில் அமர்ந்தது.
பின்னாட்களில் சயீத் வம்சத்தினர் டெல்லியை கைப்பற்றினர்.கிஸ்ர் கான் என்ற முதல் சயீத் சுல்தானாக டெல்லியில் அமர்கிறார். அவர் பின் தொடர்ந்து முப்பது ஆண்டுகளில் மூன்று சயீத் சுல்தான்கள் மாறினார்கள். அலா – உத் – தின் ஆலம் ஷா என்பவர் நான்காவது சுல்தானாக 1445 ஆம் ஆண்டு பதவியேற்கிறார். அதே சமயத்தில் பஞ்சாபின் ஆளுநராக இருந்தவர் பஹ்லுல் கான் லோடி. லோடியின் நிர்வாக திறமை மீது ஆலம் ஷா மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். ஆகையால் லோடியை பஞ்சாப் மாகாணத்தின் அமீராக பதவி உயர்வு கொடுத்தார்.(அமீர் என்றால் தன்னாட்சி அதிகாரம் கொண்டவர் என பொருள்). சரியான நபர்களை சரியான பதவியில் அமர்த்தியபின் ஆலம் ஷா அமைதியாக ஓய்வெடுக்க விரும்பினார் ஆதலால் சுல்தான் பதவியை பஹ்லுல் கான் லோடியிடம் ஒப்படைத்து தன் ஓய்விற்காக உத்திரபிரதேசத்தில் உள்ள பாதுன் நகரத்தில் ஒதுங்கி வாழ ஆரம்பித்தார். டெல்லியில் ஏப்ரல் 19, 1451 இல் லோடி வம்சத்தின் ஆட்சி ஆரம்பமானது. ஆப்கானை மையமாக கொண்டவர்கள் லோடி வம்சம். ஆகவே, டெல்லியில் இருந்து அதை சுற்றி உள்ள பகுதிகளை ஒன்றிணைத்தார்கள் ஒரு கட்டத்தில் வட இந்தியா முழுவதும் ஆப்கானியர்கள் வசம் இருப்பதுபோல் தோற்றமளித்தது. இந்த இணைப்பின் போது லோடிக்கு பெரும் சவாலாக இருந்தது உத்திரப்பிரதேஷத்தில் உள்ள ஜவுன்புர் சுல்தான். இவருடன் போரிடுவதிலே தனது பாதி ஆட்சி காலத்தை துளைத்தார் லோடி. இருப்பினும் விடாமல் போரிட்டதில் 1486 ஆம் ஆண்டு ஜவுன்புர் வீழ்ந்தது. அதே சந்தோஷத்தில் ஓய்வெடுக்க முடிவு செய்து தனது இளைய மகனான சிக்கந்தர் லோடியை டெல்லியின் சுல்தானாக அறிவிக்கிறார். உடல்நலம் குன்றி மூன்று வருடமே இருந்த பஹ்லுல் கான் லோடி 1489 ல் மரணமடைகிறார். தான் மரணத்தை நோக்கி போவதை முன்னமே அறிந்த பஹ்லுல் கான் லோடி அரச பகுதிகளை தன் மகன்களுக்கு, உறவினர்களுக்கும் பங்கு பிரித்து கொடுக்கிறார். இந்த நடவடிக்கை சிக்கந்தர் லோடிக்கு விருப்பமில்லை ஏனெனில் பிரிந்து கிடந்தால் எளிய முறையில் வீழ்த்தப்படுவோம் என எண்ணினான். ஆகையால் லோடி இறந்த பிறகு எல்லா பகுதிகளையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினான். ஆனால் அதற்கு முதல் எதிர்ப்பு மூத்த சகோதரர் பார்பக் ஷா. எதிர்ப்பை மீறி ஜவுன்புரை தன் வசமாக்கினார் சிக்கந்தர் லோடி. இருந்தாலும் சகோதர பாசத்தால் மீண்டும் பார்பக் ஷாவிடம் நிர்வாக பொறுப்பை கொடுத்தார். இதைத்தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவந்தார் இடையில் அலம் கான் என்ற உறவினரே சிக்கந்தருக்கு எதிராக சதி தீட்ட அதை முறியடித்து அவரை மன்னித்து உயர்பதவி கொடுத்தார். புதிதாக குவாலியர், பீகார், தோல்புர் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். இந்த இடைப்பட்ட காலத்தில் 1504 ஆம் ஆண்டு ஆக்ரா என்ற அழகான நகரை உருவாக்குகிறார் சிக்கந்தர் லோடி. இந்துக்களின் ஆலயங்களை இடித்து அவர்கள் மீது ஜிஸியா வரி வசூலிக்க ஆணையிடுகிறார். ஜிஸியா வரி என்பது இஸ்லாமியர்கள் அல்லாது பிற மக்கள் கட்டவேண்டிய வரி.அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு இந்த வரி கட்டி வந்தார்கள். வரி செலுத்த முடியாதவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற கட்டாய படுத்தப்பட்டனர். விவசாய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, இசை மற்றும் கலை வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது. தன்னுடைய எல்லையும் விரிவாக்கம் செய்தார் சிக்கந்தர் லோடி. இறுதியில் 1517 ஆம் ஆண்டு சிக்கந்தர் லோடி மரணம் தழுவுகிறார்.
பின் சிக்கந்தர் லோடியின் மகன் இப்ராஹிம் லோடி டெல்லியின் சுல்தானாகிறார். சிக்கந்தர் அளவிற்கு நிர்வாகத்தை தரமுடியாத காரணத்தினால் அவரது சகோதரர் ஜலால் கான் ஜவுன்புரை தனியாக பிரித்து ஆட்சியமைக்க முனையும் ஜலாலுக்கு துணையாக பல அமைச்சர்களும், தளபதிகளும் துணை நிற்கின்றனர். இந்த நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாமல் சதி செய்து தன் சகோதரர் ஜலால் கானை கொல்கிறான் இப்ராஹிம் லோடி. இதில் இருந்தே இப்ராஹிம் லோடிக்கு தொடர்ந்து எதிர்ப்புகள். ஒன்றை புரிந்துகொண்ட லோடி தன் தந்தை ஆட்சியில் இருந்த அனைத்து தலைமை அதிகாரிகளுடன் ஒத்துபோகமுடியாமல் கோபம் அடைந்து முதலில் மியான் புவா என்ற வாஸிரை(பிரதம மந்திரி) சிறைபிடிக்கிறார், சிறையில் ராஜ கவனிப்பு கிடைக்கிறது. உணவு முதல் ஒயின் வரை சகல வசதியும் செய்துகொடுக்கிறார் லோடி. ஆனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு ஒயினில் விஷம் கலந்து பிரதம மந்திரியை கொல்கிறார் இந்த செய்தி எப்படியோ கசிந்துவிட கவர்னர்கள், தளபதிகள் பலர் லோடிக்கு எதிராக திரும்ப ஆரம்பித்தார்கள். லோடி இவர்கள் நடவடிக்கையை கண்காணித்து அவர்களின் எதிர்ப்புகளை அடக்க நினைக்கிறார் இதனிடையில் அஸம் ஹிமாயூன்,ஹுசைன் கான் என்ற இரண்டு முக்கிய மந்திரிகள் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். தலைமையில் இந்த கொலைகள் அதிருப்தியை ஏற்படுகிறதை அனுமானித்த லோடி பயத்தில் மேலும் மேலும் தவறுகளை செய்கிறார். மறுபக்கம் ராஜஸ்தானின் மேவார்(உதய்ப்பூர் அரசு) ஆட்சியாளர் ரானா சங்க்ராம்சிங் (சங்கா), தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே வந்தார் அதில் மால்வா, பேயனா, ஆக்ரா வரை சென்று இருந்தார். சங்கா ராஜபுத்திரர்களை ஒன்று திரட்டி டெல்லியை கைப்பற்ற தயாராகிறார். இதற்கிடையில் லோடியின் ஆட்சியை பார்த்த ஆப்கான் ஆளுநர்களும் அதிருப்தியில் இருந்தனர் இதையறிந்த லோடி அன்றைய லாகூரின் ஆளுநராக இருந்த தெளலத் கானை டெல்லி வந்து சந்திக்க அழைப்பு விடுகிறார். உடனே தெளலத் கானிற்கு பயம் ஏற்பட டெல்லி சென்றால் உயிருடன் திரும்ப மாட்டோம் என நினைத்து தன் மகனை அனுப்பி வைத்தார். இதனை கண்ட இப்ராஹிம் லோடி தன்னை மதிக்கவில்லை என்ற மிகுந்த கோபத்துடன் தன்னை மதிக்காதவர்களின் நிலை என்ன ஆனது என சுற்றி சுவரை பார்க்க சொல்கிறார். அங்கே தலை இல்லாத பலரது உடல்கள் மட்டும் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்த அந்த இளைஞன் நடுநடுங்கி போனான்.
போன தன் மகன் திரும்பி வரவில்லை, என்ன நடந்தது என்ற பதற்றத்துடன் ஒரு முடிவிற்கு வந்தவர் இப்ராஹிம் லோடியை வீழ்த்த வலிமையான சாம்ராஜ்ஜியத்திடம் உதவி கேட்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என யோசித்து முகலாய சாம்ராஜ்ஜியத்தின் பெருந்தூண் பாபரின் உதவியை நாட முடிவு செய்கிறார் தெளலத் கான்..,
Web Title: The History of Indian Kings
Featured Image Credit: newsgram