இலங்கையர்களின் கதிர்காமம்

இலங்கையில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒரே வரிசையில் நின்று இறைவனை நெஞ்சாரப் பிரார்த்தித்து வரும் ஒரே இடம் எதுவென்றால் நாம் முதலில் கதிர்காமத்தைச் சொல்லி விடலாம். பழம்பெரும் காலத்திலிருந்தே இந்த இரு சமூகங்களுக்கும் கதிர்காமத்தில் வீற்றிருக்கின்ற முருகக் கடவுளுக்கும் இடையில், அழிக்க முடியாத பந்தம் நிலவி வருகின்றது.ஒரு காலத்தில், வட இலங்கையை ஆண்டுவந்த எல்லாளனுடன் போர் புரியச் செல்ல முன், சிங்கள மன்னன்,துட்டகைமுனு கதிர்காமத்திற்கு வந்து முருகனை வணங்கி, அதன் பின் அந்தப் போரில் வெற்றி அடைந்தான் என, சிங்களவர்களின் சரித்திரக் கதைகள் கூறுகின்றன. அதன் பின் துட்டகைமுனு மன்னனால் இந்தக் கோயிலுக்கு பல மானியங்கள் அளிக்கபட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

தமிழர்களுக்கோ தனிப் பெருங் கடவுள், முருகன்! தமிழ்மொழியை உலகுக்கு அளித்தவனென முருகன் போற்றப்படுகின்றான். தமிழர்களின் பழம்பெரும் வழிபாடாக வேல் வழிபாடு இருந்து வருகின்றது. முருகனின் மூல ஆயுதமான வேலை, அவனாகவே கண்டு தொழுதலே, வேல் வழிபாடாகும். இன்று தமிழ்நாட்டில் அருகிவிட்ட அந்த தனிப்பெரும் வழிபாடு இலங்கையின் பல இடங்களிலும் காணக் கிடைக்கின்றது. இலங்கை வாழ் தமிழர்களின் ஆன்மீகத்தில் முருகனுக்கே எப்போதும் முதன்மை இடமுண்டு.

கதிர்காம கந்தன் 
படஉதவி : kataragama.org

ஆனால், கதிர்காமத்தில் வேல் வழிபாட்டை விடவும் இன்னனும் சூட்சுமமான முருக வழிபாடு தொன்று தொட்டு நிலவி வருகின்றது. கதிர்காம முருகன் ஆலயத்தின் கருவறைக்குள்ளே அதி சக்தி வாய்ந்த சடாட்சர யந்திரம் இருப்பதாகவும், அது தமிழ்ச் சித்தர் மரபில் முதனிலையில் வைத்துப் போற்றப்படும் போகரால் உருவாக்கப்பட்டதெனவும் கூறப்படுகின்றது. அந்தக் கருவறையில் மந்திர பூசனை எதுவும் நிகழ்வதில்லை. கப்புறாளை என்று கூறப்படும் பூசகர் வாய் கட்டி மௌனப் பூஜை நிகழ்த்துகின்றார். கப்புறாளைகளைத் தவிர, வேறு எவரும் அந்தக் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

கதிர்காமத்தில் வாயை கட்டிக்கொண்டு பூஜை செய்யும் கப்புறாளை என்ற பூசகர் ஒருவர்
படஉதவி : kataragama.org

15 ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் வாழ்ந்து, அருந்தமிழ்க் கவி செய்த அருணகிரிநாதர் தனது திருப்புகழில் “வனமுறை வேடர் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே” என்று, கதிர்காமத்தில் வாழும் முருகனைச் சொல்கின்றார். வேடர்களால் வனத்தில் அவர்களின் வழிபாட்டு முறைகளின் படி நிகழ்த்தப்பட்ட பூஜைகளை ஏற்று மகிழ்ந்திருக்கின்றவன் முருகன் என்பது அதன் பொருள். இன்றைய கதிர்காமம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் நாகரிக மக்கள் வசம் வந்ததெனவும் அந்த வழிபாட்டுத் தலம் தோன்றிய காலப்பகுதியில் இருந்து வேடர்களாலேயே அது பரிபாலிக்கப்பட்டு வந்தது எனவும் கூறப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் கதிர்காமம்
படஉதவி : commons.wikimedia.org

கதிர்காமத்தின் திருவிழாக் காலத்தில் வெகு தூரத்திலிருந்து பாத யாத்திரையாகவே கதிர்காமத்தை வந்தடைபவர்களின் அனுபவங்கள் தனியாக எழுதப்பட வேண்டியவை. அந்த அளவுக்கு அவர்களிடம் அற்புதக் கதைகள் கிடைக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து, திருகோண மலையில் இருந்து மட்டக்களப்பில் இருந்து என, கதிர்காமத்திற்கான பாதயாத்திரைக் குழுக்கள் தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கும். பள்ளம், மேடு தாண்டி, கற்கள் முட்களில் கீறுண்டும் கூட கதிர்காம முருகனைத் தேடி, கால்நடையாக வரும் இந்த பக்தர்களின் பயணங்கள், காடுகளின் ஊடாகவும் நடைபெறும். முருகனை மனதில் நினைந்து தோத்திரப் பாடல்களைப் பாடிய வண்ணம், அந்தப் பாத யாத்திரை அனைத்து இடர்களையும் தாண்டி தொடர்ந்து முன்னெடுக்கப் படுகின்றது. 

கதிர்காம பாதயாத்திரை செல்லும் பக்தை ஒருவர் 
படஉதவி : Prasath Photography

கதிர்காம யாத்திரையூடாக கந்தனைத் தொழும் பணியை,  அமெரிக்க பக்தரான பெட்ரிக் ஹரிகன் நெடுங்காலமாக நடத்தி வருகின்றார். அவர் இந்த பாத யாத்திரையை 1972ல் ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது. வெருகல் ஆலயத்திலிருந்தும் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்தும் வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்திலிருந்தும் இப்பாதயாத்திரையை அவர் முன்னெடுத்திருந்தார்.  நாட்டின் போர் சூழ்நிலை காரணமாக கதிர்காமம் நோக்கிய இந்தப் பாதயாத்திரை சில காலம் தடைப்பட்டிருந்தது. எனினும் அது பின்னர் மீள ஆரம்பிக்கப் பட்டு நடை பெற்று வருகின்றது. கொடிய மிருகங்கள் சூழ்ந்த யால காட்டினூடாக  ஆண்டு ஒன்றுக்கு, சராசரியாக 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான பக்தர்கள், கதிர்காமத்தைச் சென்றடைவதாக தெரிய வருகின்றது.  பாதயாத்திரையை மேற்கொள்ளும் 90 சத வீதமான அடியவர்கள் உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்துதான் காட்டினூடாக இந்தப் பாத யாத்திரையை மேற்கொள்கின்றனர். 10 சதவீதமானவர்கள் மட்டுமே, நகரங்களூடாகவும் பிரதான வீதிகளூடாகவும் கதிர்காமத்தை நோக்கிய தமது பாத யாத்திரையை முன்னெடுக்கின்றனர். வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய மூன்று மாகாணங்களில் இருந்தும் முருக பக்தர்கள் இந்தப் பாதயாத்திரையில் பங்கேற்கின்றனர். முருகக் கடவுளின் அருளை நாடி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் வருவதன் காரணமாக, இது இலங்கையின் மிகப் பெரிய பாத யாத்திரை நிகழ்வாக கருதப்படுகின்றது.

கதிர்காம பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
படஉதவி : Prasath Photography

கதிர்காமத்தின் பெரிய தேவாலயம் என்று கூறப்படும் முருகன் சந்நிதிக்கு அருகே, பிள்ளையார் சந்நிதி ஒன்று உண்டு. இங்கு கப்புறாளைகள் பூசையில் ஈடுபடுவதில்லை. அதே போல், அதற்கு சற்றுத் தூரத்தில், தெய்வானை அம்மன் கோயில் உள்ளது. இது தமிழர்களாலேயே பெரும்பாலும் வணங்கபட்டு வருவதோடு இதன் நிர்வாகவும் இந்துக்கள் வசமே உள்ளது. முருகனுடைய முதல் மனைவியும் தேவர் இனத்தைச் சார்ந்தவளாகவும் கூறப்படுகின்றவள் தெய்வானை. பிள்ளைப் பேற்றுக்கும் குழந்தைகளின் நலத்திற்குமாக இவரை முதன்மையாக வணங்குவர்.

இது தவிர, பல்வேறு பௌத்த சந்நிதிகளும் விகாரைகளும் முருகனின் சந்நிதியைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளன. இதே நிலையே, கதிர்காம பிரதேசத்தில் உள்ள கதிரை மலை அல்லது ஏழுமலை என்ற குன்றின் மேலும் உள்ளது. ஆண்டின் எல்லாக் காலப் பகுதியிலும் பக்தர்களால் நிரம்பிக் காணப்படும் கதிர்காமத்தில் பயணியர் விடுதிகளே அதிகமாக காணப்படுகின்றன. அங்குள்ள மக்கள் அங்குவரும் யாத்திரிகர்களையே தமது வருமானத்திற்கு நம்பியிருக்கின்றனர். பக்தர்களுக்கான பல பொருட்கள் அங்கு அன்றாடம் விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிடைப்பதற்கு அரிய நாட்டு மருந்துகளும், நல்ல தேனும் அங்கு பெறக்கூடிய அரிய வகைப் பொருட்கள் ஆகும்.

பூஜைக்குரிய பொருட்கள் விற்கப்படும் கடை 
படஉதவி : mygola.com

1918 ஆம் ஆண்டு காலப் பகுதியில், அரச அனுமதியின்றி யாத்திரிகர்கள் கதிர்காமத்திற்கு போவது தடை செய்யப்பட்டது. அந்தக்காலத்தில் இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்களால் இந்த தடை உத்தரவு கொண்டுவரப்பட்டது. இதனை மீறி அங்கு செல்பவர்களுக்கு ஆயிரம் ரூபா அபராதம் அல்லது ஓராண்டுக்கு மேற்படாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. ஆயிரம் ரூபா என்பது தற்போதைய பண மதிப்பில் அல்ல. 1918 ஆம் ஆண்டு காலத்தைய ஆயிரம் ரூபா என்பது தற்போது பல லட்சங்களுக்கு ஈடாக இருக்கலாம். இந்த தடை உத்தரவைக் கண்டித்து, அப்போதைய சட்டசபையில் சேர். பொன்னம்பலம் இராமநாதன் காரசாரமான உரை நிகழ்த்தியதை அடுத்தே, அந்தத் தடை உத்தரவு ரத்துச் செய்யபட்டது.

ஒரு காலத்தில் காடாக இருந்த கதிர்காமம் இன்று அரசினால் புனிதப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டு உள்ளது என்றாலும் கூட, வேட்டுவ மக்களின் வழிபாடு இன்றும் தொடர்கின்றது. முருகனின் இரண்டாவது மனைவியான வள்ளி தமது குலத்திலிருந்து வந்தவள் என்ற உரிமையுடன், அவர்கள் இன்றும் அங்கு சென்று தமது வேட்டுவ மரபு சார்ந்த வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.

பூத்து விரிந்த தாமரை மலர்களும் நீலோற்பலங்களும் கதிர்காம முருகனின் சூழலை அழகாக்குகின்றன. அலையடித்து ஓடாது அமைதியாக நகரும் மாணிக்க கங்கையில், நீராடிய வண்ணம் பக்தர்கள் தங்களின் வழிபாட்டுக்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். கப்புறாளைகளின் மௌனப் பூசையில் முருகக் கடவுளின் சாந்நித்யம் தொடர்ந்தும் உணரப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

 

Related Articles

Exit mobile version