நமது உலக வரலாற்றிற்கான தேடுதல் கல்வி சாலைகளோடு பெரும்பாலனவர்களுக்கு முடிந்து விடுகிறது. பின்னர் அமெரிக்க அதிபர் தேர்தலுடன் உலகச் செய்திகளை அறிதல் நிறைவடைந்து விடும். சமீபகாலமாக நமது பணப்பைக்கு பத்திய சிகிச்சை அளித்து வரும் பெட்ரோல்/டீசல் விலை உயர்வு போன்ற விஷயங்களில் சர்வதேச எண்ணெய் நிலவரங்களை சிறிது அறிந்து கொள்வோம். அமெரிக்கா – ஈரானுடைய அணு ஆயுத ஒப்பந்தம், வெனிசுலா நாட்டின் பண வீக்கம் போன்ற ஏனைய காரணங்கள் கூட நமது எரிவாயு விலை ஏற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனம். ஒவ்வொரு நாட்டின் இன்றைய பிரச்சினைகளை நாம் ஆராய்ந்தால் அது நிச்சயம் வரலாற்று தொடர்புடையதாக இருக்கும்.
மன்னராட்சி முடிவு
உலக வரலாற்றையும், வழித்தோன்றல்கள்களையும் நாம் அறிதல் மூலம் தற்பொழுதைய உலகளாவிய பார்வையை அகலப்படுத்திக் கொள்ள முடியும். நாடுகளில் மன்னராட்சி முடிவிற்கு வந்த தருணங்கள், சர்வதேச எல்லைகளில் உருவான மாற்றங்கள், வர்த்தக பொருட்களின் பரஸ்பர பரிமாற்றங்கள் போன்றவற்றை ஓரளவு அறிதல் மூலம் ஒவ்வொரு நாட்டின் தற்போதைய நிலைப்பாடுகளையும், மாற்றங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதற்கானதொரு நல்ல தொடக்கம் முதலாம் உலகப் போரின் பின் நடத்த வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு சில மாற்றங்களை தவிர வேறு என்னவாக இருக்க முடியும். சில நாடுகளின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து குடியாட்சியை உருவாக்க காரணமாக அமைந்தது இதுவே. சில நாடுகள் மறைந்து வேறொரு நாடாக உருமாறிய தருணமும் இதுவே.
உலகமறிந்த பக்கங்கள் தான். அதன் சில முக்கிய நிகழ்வுகளும், ஒரு சில சுவராயங்களும். !!!!!! முதலாம் உலகப்போர் முடிந்து இந்த வருடத்துடன் 1௦0 ஆண்டுகள் நிறைவடைகிறது. முதலாம் உலகப்போர் நடந்த காலம் (191 4-1918).
முதல் நீண்ட கால போர்
உலகளாவிய நாடுகளின் பங்களிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த போரில் இருந்ததால் இது முதலாம் உலகப்போர் என்ற பெயர் பெற்றது. எனினும் போரின் பெரும்பகுதி நடைபெற்றது ஐரோப்பாவில் தான். நேச நாடுகள் என்றழைக்கப்பட்ட ரஷ்யா, பிரான்ஸ், பிரட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும், மைய நாடுகளான ஆஸ்திரியா – ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகள் இரு அணிகளாக போர்க்களம் கண்டது. போரின் ஏறத்தாழ 2௦ மில்லியன் மக்கள் உயிரழந்தனர். 2௦ மில்லியனிற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர். இதில் இராணுவ வீரர்களும், குடிமக்களும் அடக்கம்.
வருடம் 1914, ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசரும் அவரது மனைவியும் செர்பியா நாட்டை சேர்ந்த ஒருவரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். செர்பியா மீது போர் தொடுத்தது ஆஸ்திரியா. அதிகாரப்பசி, வர்த்தகச் சந்தை போன்ற தாகத்துடன் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்த ஜெர்மனி ஆஸ்திரியாவுடன் இணைந்து கொண்டது. ஆஸ்திரியாவிற்கு ஆதராவாக இணைநாடான ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளும் ஜெர்மனியுடன் கைகோர்த்துக் கொண்டனர்.
செர்பியாவிற்கு ஆதரவாக ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா என்று சக்தி வாய்ந்த அதிகாரங்கள் களமிறங்கின. ஆரம்பத்தில் நடுநிலை வகித்த அமெரிக்கா மறைமுகமாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிற்கு உதவிகள் செய்யத் துவங்கியது. இதனால் சீற்றம் கொண்ட ஜெர்மனி அமெரிக்கப் போர் கப்பல் மேல் குண்டுகள் வீச கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. அமெரிக்கா நேரடி யுத்தத்தில் குதித்தது.
போர் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் நடந்த உள்நாட்டு புரட்சியில் புரட்சியாளர் லெனின் தலைமையில் கம்யூனிச நாடாக ரஷ்யா உருவெடுத்தது. ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தத்திற்கு வந்து ரஷ்யா போரை விட்டு விலகியது. பிற நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜெர்மனியை முற்றுகையிட தொடங்கியது. கலக்கமடைந்த ஜெர்மனி மக்கள் மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் குதித்தனர். அனைவரின் எதிர்ப்புகளையும் தாக்குப் பிடிக்க முடியாத ஜெர்மனி இறுதியில் சரணடைந்தது. மன்னர் கெய்சர் பிரதிநிகளிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு முடி துறந்தார்.
ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரியா – ஹங்கேரி, ஓட்டோமான் ஆகிய பேரரசுகள் சிதைந்து புதிய நாடுகள் உருவாகியது. ஆஸ்த்ரியா, ஹங்கேரி தனித்தனி நாடுகள் ஆனது. செக்கோஸ்லோவேகியா, யுகோஸ்லாவியா, லித்துவேனியா, எஸ்டோனியா, லத்வியா, போலாந்து, பின்லாந்து ஆகிய புது நாடுகள் உருவானது. ஐரோப்பாவிலும், பெரும்பாலான மத்தியக் கிழக்கு நாடுகளிலும் எல்லைகள் மாற்றி வரையறுக்கப்பட்டன. பொதுவுடமை அரசுகளாகவும், குடியரசுகளாகவும் நாடுகள் உருமாறியது. வருடம் 1919, போரின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் பங்கேற்ற நேச நாடுகளுக்கு ஒரு பெருந்தொகையை நஷ்ட ஈடாக ஜெர்மனி அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நினைவுகளும் சுவராஸ்யங்களும்
முதலாம் உலகப்போரில் 30 நாடுகளை சேர்ந்த சுமார் 65 மில்லியன் மக்கள் பங்குபெற்றனர். இரண்டாம் உலகப்போர், நெப்போலியன் எதிர்கொண்ட ஐரோப்பிய படைகள், சீனாவில் குயிங் சாம்ராஜ்யத்திற்கும், மிங் சாம்ராஜ்ஜியத்திற்கும் நடந்த போர்கள் போன்ற மிக கோரமான ரத்த ஆறு ஓடிய போர்களின் வரிசையில் முதலாம் உலகப்போரும் இடம்பெற்றுள்ளது. உலக வரலாற்றில் இதுவரை நடந்த மோசமான போர்களில் இந்த போர் ஆறாவது இடத்தில் உள்ளது.
முதல் முறையாக களத்தில் பயன்படுத்தபட்ட கனரக பீரங்கி டாங்கிகள், நீர் மூழ்கி கப்பல்கள், வானூர்தி தாக்குதல்கள், இயந்திர துப்பாகிகள் என்று அனைத்தையும் இந்த போர் கண்டது.
பிரிட்டிஷ் பீரங்கிகள் ஆண் டாங்கி மற்றும் பெண் டாங்கி என்று பிரித்து பெயரிட்டுக் கொண்டனர். ஆண் டாங்கி என்பது பீரங்கி குண்டுகளை தாங்கியும், பெண் டாங்கி என்பது இயந்திர துப்பாகிகளையும் கொண்டது.
போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸின் அருகிலே ஒரு போலி பாரிஸ் நகர் ஒன்றை உருவாக்கினார்களாம். ஜெர்மானிய விமானிகளை குழப்புவதற்காக இப்படியொரு ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலாம் உலகப்போர் துவங்குவதற்கு முன் வரை அமெரிக்காவில் இரண்டாவது அதிகம் பேசும் மொழியாக ஜெர்மன் இருந்துள்ளது. சில செய்தி தாள்கள், அரசாங்க ஆவணங்களும் கூட ஜெர்மன் மொழியில் வெளிவந்துள்ளது. சில பள்ளிகள் ஜெர்மன் மொழியில் இயங்கி வந்துள்ளன. அனைத்து ஜெர்மன் மொழி பயன்பாடும் போரின் பொழுது கட்டாயமாக ஒழிக்கப்பட்டது.
நாய்களை வீரர்களுடனான செய்தி தொடர்பிற்கு பயன்படுத்தினார்கள். அதன் கழுத்தில் கேப்சூல் மாத்திரைகளை கட்டி செய்திகளுடன் அனுப்பி வைக்கப்பட்டது.
கண்புரை நோயுள்ளவர்களால் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தை(UV Rays) உடனடியாக உணர முடியும் என்பதால் சிலரை இதற்காக போர் களத்தில் பயன்படுத்தினார்களாம்.
சுமார் 30 வகையான நச்சுவளிமங்கள் போரில் பயன்படுத்தப் பட்டன. உலகளவில் அனைத்து கடற்கரையிலும் போர் நடந்துள்ளது.
முதலாம் உலகப்போரில் புறாக்கள் தூது செல்வதில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. லட்சக்கணக்கான புறாக்களுக்கு பிரத்யேக பயிற்சி அளித்து இதற்காக களம் இறக்கப்பட்டதாம்.
வருடம் 1918, பிரான்ஸிற்கு ஆதராவாக அமெரிக்க மேஜர் சார்லஸ் வைட் விட்லெசி தலைமையில் போரிட்ட படைவீரர்கள் சிலர் ஒரு இடத்தில் அகப்பட்டு கொண்டனர். ஜெர்மானிய வீரர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். அமெரிக்க வீரர்கள் இருக்கும் இடத்தை அறியாத பிரான்ஸ், ஜெர்மனி வீரர்கள் மேல் குண்டு மழை பொழிய தயாராகிக் கொண்டிருந்தது. தனது படைகள் மூலமே உயிரிழக்க போவதை எண்ணி பதறியது அந்த குழு. அந்த செய்தியை தெரிவிக்க அனுப்பிய இரு புறாக்களும் ஜெர்மனி வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது. கடைசியாக இருப்பது ஒரே ஒரு புறா. செர் அமி என்ற அந்த புறாவில் செய்தி பறக்கிறது. செர் அமி பறக்கும் பொழுது சுடப்படுகிறது. மார்பில் குண்டு அடி பட்டு ரத்தம் சொட்ட, ஒரு கண் பார்வை இழந்தும் கூட 25 மைல்களை 25 நிமிடத்தில் கடந்து இராணுவத் தலைமையகம் சென்றடைந்தது. சுமார் 2௦0 வீரர்கள் காப்பாற்றப் பட்டனர். செர் அமி’க்கு (புறா) மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வீரப்பதக்கம் வழங்கப்பட்டது.
இந்தியர்களின் பங்களிப்பு முதலாம் உலகப்போரில் இல்லாமல் என்ன !!! சுதந்திரம் அடைவதற்கு முன்னர் பிரிட்டனிற்கு ஆதரவாக பெரியளவில் தன்னார்வ வீரர்களின் பங்களிப்பு இருந்தது. சுமார் 15 லட்சம் வீரர்கள் பஞ்சாப், உத்தர பிரதேஷ், மகாராஸ்டிரா, தமிழ்நாடு மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து பங்கேற்றனர். அவர்கள் கிழக்கு ஆப்பிரிக்கா, மெசொப்பொத்தேமியா, எகிப்து ஆகிய மேற்கத்திய முன்னணி நாடுகளில் போரிட்டனர்.
மேலும் 17௦,00௦ விலங்குகள் மற்றும் 3.7 மில்லியன் டன் உணவு பொருட்களும் போருக்கு உதவியாக இந்தியா அளித்தது. சுமார் 20,௦0௦ கோடி ரூபாய் அளவிற்கு பிரிட்டனிற்கு இந்தியா கடன் அளித்துள்ளது. தன்னார்வத்துடன் வீரர்கள் பங்கேற்க இரு காரணங்கள் இருந்ததாக அனுமானிக்கப்படுகிறது. ஒன்று அவர்களுக்கு கிடைக்கும் நல்ல ஊதியம் மற்றும் போருக்கு சென்று வந்தவர்களை சத்ரிய இனமாக கருதப்படும் வழக்கம் இருந்ததால் சமூக அந்தஸ்திற்காகவும் சென்றுள்ளனர்.
சுமார் 13, 0௦0 வீரப்பதக்கங்களும், பிரிட்டனின் உயரிய விருதான விக்டோரியா விருது 12 வீரர்களுக்கு வழங்கியது பிரிட்டன். எனினும் சுமார் 5௦,0௦0 இந்திய வீரர்கள் போரில் மாண்டனர். 65,௦0௦ வீரர்கள் படுகாயமடைந்தனர். சேவைக்காக சென்ற இந்திய செவிலியர்கள் 98 பேர் உயிரிழந்தனர். சுமார் 10,௦0௦ வீரர்களை பற்றிய தகவல் இல்லை. இந்தியா பிரிட்டனிற்கு உதவுவது மூலம் காலனியாதிக்க விடுதலையடைய எண்ணியது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
முதலாம் உலகப்போருக்கு பின்னர் ஜெர்மனி மிதிவண்டி தொழிற்சாலைகளில் சக்கரங்களுக்கான கடும் ரப்பர் தட்டுபாடு இருந்தது. ஆனாலும் ஜெர்மானியர்கள் மிதிவண்டி பயணத்தை பெரிதும் விரும்பினார்கள். ஆதலால் மிதிவண்டிகளில் ரப்பர் சக்கரங்களுக்கு பதிலாக உலோக ஸ்ப்ரிங்குகளினால் ஆன சக்கரங்களுடன் மிதிவண்டி பயன்படுத்தப்பட்டது.
முதலாம் உலகப் போரின் பொழுது பரவிய விஷக்காய்ச்சல், நோய் தோற்று, பசி, பட்டினி, சுரண்டல்கள் என்று கடுமையான இன்னல்களை மக்கள் சந்தித்தனர். இது போன்றதொரு யுத்தம் இனி ஏற்படக் கூடாது என்று எண்ணினர். அதற்காக சர்வதேச சங்கம் ஒரு உருவாக்கப்பட்டது. புதிதாக உருவான சிறு சிறு நாடுகளின் நிலையற்ற முடிவுகளும் ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சியும் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழிவகுத்தது. அது இரண்டாம் உலகப்போர்
Web Title: The First World War
Featured Image Credit: youtube