காண்பதெல்லாம் காதலடி – பிரபலங்களின் காதல் கடிதங்கள்

உலகம் தோன்றியது முதல் மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு காலத்திற்கும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம். சுயம் சார்ந்த மாற்றங்களும் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியும் நம்மை எங்கேயோ கொண்டு செல்லும் இந்த நிமிடம் வரை நம்மிடையே மாறாத ஒன்று இருக்குமேயானால் அது அன்பு மட்டுமே!

அன்பெனும் உணர்வை எந்த எழுத்தாலும் எழுதி நிரப்பிட இயலாது. அன்பிற்கு மதம் இனம் மொழி நிறப் பாகுபாடு தெரியாது. அன்பில் எத்தனையோ வகையுண்டு. நாம் அத்தனை வகைகளையும் கண்டடைந்தோமோ என்பதைத் தாண்டி நாம் எல்லாரும் கட்டாயம் சந்தித்த அன்பிற்கு காதல் என்ற பெயரிட்டோம். அப்படியான காதலை கடிதத்தின் வழியே வளர்த்த காதலர்களை பற்றிய தொகுப்பே இது.

மகாகவியின் காதல்!

முண்டாசு கட்டிய பட்டாசு, செருப்பு அணிந்து நடந்து வந்த நெருப்பு, மாதர் தம் முகத்தில் ஆசை வைத்து பாடாமல் மீசை வைத்து பாடிய மகாகவி பாரதிக்கு அவரின் மனைவி செல்லம்மா எழுதிய கடிதத்திலிருந்து,

“க்ஷேமம்”
கடையம்.

அநேக நமஸ்காரம். கடையத்தில் எல்லோரும் க்ஷேமம்.
இங்கு நம்ப விசுவநாத அத்திம்பேர் வந்திருக்கார்.
அவர் என் கிட்டே ஒரு சமாசாரம் சொன்னார்.

நீங்கள் ஏதோ தேச சுதந்திர விஷயமாகப் பாடுபடுவதாகச் சொன்னார்.
அதுக்காக ஏதோ ஓயாமல் எழுதிக் கொண்டிருக்கிறீர்களாம்.
சட்டத்துக்கு விரோதமாயிருந்தால் தீவாந்திரத்திற்குக்
கொண்டு போய்விடுவாளாம்.

 (தீவாந்திரம் என்பது அந்தக் காலத்தில் அந்தமான் போன்ற தீவுகளில் வெள்ளைக்காரர்கள் கட்டி வைத்திருந்த சிறைச்சாலைகளில் அடைத்து கொடுமைப்படுத்துவதைக் குறிக்கிறது )

எனக்கு இதையெல்லாம் கேட்க ரொம்ப பயமாயிருக்கு.
அதனால் நான் சொல்றதை ஒரு பொருட்டாய் மதிச்சுப் புறப்பட்டு வந்துவிடுங்கள்.
உங்களை மன்றாடிக் கெஞ்சுகிறேன். இதற்கு மேல் நான் என்ன சொல்ல?

உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால் புறப்பட்டு வந்து விடுங்கள்.
எந்த நிமிஷத்தில் உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று எப்பொழுதும் தவித்துக் கொண்டிருக்கிறேன். கெடுதல் ஒன்றும் ஏற்படக்கூடாதென்று
ஸ்வாமியை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

செல்லம்மா.

மனைவி எழுதிய மடலுக்கு பாரதி காதல் பொங்க பதில் அனுப்பினார்: 

“ஓம்”

ஸ்ரீகாசி, ஹனுமந்தக்கட்டம்.

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு, ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ எனது காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை.

விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப்பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன்.

நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில், தமிழை நன்றாகப்படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன்,

 சி.சுப்பிரமணிய பாரதி.

தத்துவஞானியின் காதல்!

மார்க்ஸின் அடுத்த வீட்டில் இருந்த அழகி, ஜென்னி. காணச் சகிக்க முடியாத தோற்றத்துடனும், கறுப்பு நிறத்துடனும் காட்சியளித்த மார்க்ஸின் மனதுக்குள் புகுந்தார் இந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜென்னி, மார்க்ஸின் அறிவாலும் கருத்தாலும் ஈர்க்கப்பட்டார்.

தத்துவம் படித்து டாக்டர் பட்டம் பெறுவதற்காகக் காதலியைப் பிரிந்தார். ஓர் ஆண்டோ… ஈராண்டோ அல்ல… ஏழு ஆண்டுகள். தங்களுடைய காதலுக்காக இருவருமே காத்துக்கிடந்தனர்.

எவர் சொல்லியும் மனந்தளராமல் இருந்த ஜென்னிக்கு… அவருடைய மன நாயகனிடமிருந்து வந்திருந்தன காதல் கடிதங்கள். அதில் ஒன்றை எடுத்து அவர் படித்தபோது… அவருடைய காதல் வலிக்கு அந்தக் கடிதம் மருந்திட்டிருந்தது.

“இனிவரும் நூற்றாண்டுகள் அனைத்துக்கும்
காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்”

என்று  வடித்திருந்த வரிகளால் ஜென்னியின் மனம் நிறைவடைந்தது.

மார்க்ஸை மணந்து, அவர் மனம்கோணாதபடி ஜென்னியும் இணைந்திருந்ததால்தான் கார்ல் மார்க்ஸால் வரலாற்றில் இடம்பிடிக்க முடிந்தது. தன் தாயாரின் மரணம் காரணமாக ஜெர்மனிக்குச் சென்றிருந்த ஜென்னியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத மார்க்ஸ்,

”உன் பிரிவு எனக்குள் மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது.
எனது சக்திகள் அனைத்தும் அதில் கரைந்துபோவதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.
ஒருமுறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக்கொண்டால்
போதும். என் இதயம் அமைதியாகிவிடும். அதன்பிறகு,
எனக்கு இந்த உலகில் எதுவும் வேண்டியிருக்காது”

என வேதனையுடன் கடிதம் எழுதினார். 

ஜென்னியும் தன் கணவருக்குத் துணையாக… அவருடைய நம்பிக்கையைப் பலப்படுத்தும் விதமாகக் கடிதம் எழுதுவார். இதேபோன்று, ஒருமுறை அவர்கள் இருவரும் பிரிந்திருந்த நேரத்தில்,

”…மிகவும் அதிகமான வெறுப்புடனும் எரிச்சலுடனும் எழுதாதீர்கள். உங்களுடைய மற்ற கட்டுரைகள் எவ்வளவு அதிகமான விளைவை ஏற்படுத்தின என்பது உங்களுக்குத் தெரியும். எதார்த்தமான முறையில் நயத்துடனும் நகைச்சுவையுடனும் லேசாக எழுதுங்கள். அன்பே…  உங்கள் பேனாவைக் காகிதத்தின் மீது மென்மையாக ஓடவிடுங்கள். சில சமயங்களில் உங்கள் பேனா, தடுக்கிவிழுந்துவிடுமானால், அதோடு சேர்ந்து உங்கள் வாக்கியம் மட்டுமின்றி நீங்களும் விழ நேரலாம். கவலை வேண்டாம். உங்கள் சிந்தனைகள் பழைய காலத்துப் படைவீரர்களைப்போல அதிகமான உறுதியுடனும் துணிவுடனும் விறைப்பாக நிற்கின்றன. அவர்களைப்போல அவை சாகும். ஆனால், சரணடையாது”

என அவருடைய எதிர்கால சிந்தனை எப்போதும் தடைப்பட்டுவிடாத அளவுக்கு மார்க்ஸுக்குத் துணையாக இருந்தார் ஜென்னி.

மார்க்சும் ஜென்னியும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தம்பதிகள் என்பது அவர்களை நன்கறிந்த எல்லோருடைய கருத்தாகும். குழந்தைகளை வறுமைக்கு இரையாக்கிய துன்பங்களோ, சோதனைகளோ அவர்களுடைய காதலை பலவீனப்படுத்தவில்லை; அதற்கு மாறாக, துன்பம் அவர்களுடைய அன்பை வலுப்படுத்தியது. அவர் மாணவப் பருவத்திலிருந்ததைப் போலவே முதிர்ச்சிக் காலத்தின் போதும் ஜென்னியை மென்மையாக, தீவிரமாகக் காதலித்தார்.

1856ம் வருடத்தில் ஜென்னி ஜெர்மனிக்குக் குறுகிய காலப் பயணம் சென்றிருந்தாள். அப்பொழுது ஜென்னிக்கு வயது நாற்பத்திரண்டு, பெரிய குடும்பத்தின் தாயாகவும் இருந்தாள். அப்பொழுது மார்க்ஸ் பாசத்துடன் ஜென்னிக்கு எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. அக்கடிதம் மனித உணர்ச்சிக்குச் சிறந்த ஆவணம். அதில் மென்மையும் உணர்ச்சியும் இருப்பதுடன் ஆழமான சிந்தனையும் நிறைந்திருக்கிறது. மார்க்சின் ஆளுமைக்கும் காலப் போக்கில் முதுமையடையாத அவருடைய இளமையான காதலுக்கும் அக்கடிதம் அடையாளமாக இருக்கின்றபடியால் அதிலிருந்து நீண்ட மேற்கோளைத் தருவது பொருத்தமே.

“என் அன்பிற்கினியவளே,

நான் மறுபடியும் உனக்கு எழுதுகிறேன், ஏனென்றால் நான் தனியாக இருக்கிறேன், என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடிக் கொண்டிருப்பதும் அதை நீ அறிந்து கொள்ள முடியாமல் அல்லது கேட்க முடியாமல் அல்லது எனக்குப் பதிலளிக்க முடியாமலிருப்பதும் என்னை வாட்டுகிறது…. “

“எனக்கு முன்னால் நீ இருப்பதைப் பார்க்கிறேன், நான் உன்னை அன்போடு தொடுகிறேன், தலை முதல் கால் வரை உன்னை முத்தமிடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டுப் பணிகிறேன், ‘அன்பே! உன்னைக் காதலிக்கிறேன்’ என்று முணுமுணுக்கிறேன். ஆம், எக்காலத்திலும் காதலித்ததைக் காட்டிலும் அதிகமாக நான் உன்னைக் காதலிக்கிறேன். அது உண்மை. போலியான, உளுத்துப் போன உலகம் எல்லா மனிதர்களையும் போலிகளாக, உளுத்துப் போனவர்களாகப் பார்க்கிறது. என்னை அவதூறு செய்பவர்கள், என் முதுகுக்குப் பின்னால் என்னைத் திட்டுபவர்களில் எவராவது இரண்டாந்தரமான நாடக அரங்கில் முதல்தரமான காதலன் பாத்திரத்தை நடிப்பதற்காக என்னை எப்பொழுதாவது குறை கூறியதுண்டா? ஆனால் அது உண்மையே. இந்தப் போக்கிரிகளுக்கு நகைச்சுவை இருக்குமானால் அவர்கள் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை உறவுகளை ஒரு பக்கத்திலும் உன் காலடியில் நான் கிடப்பதை மறு பக்கத்திலும் ஓவியமாகத் தீட்டியிருப்பார்கள். இந்தப் படத்தையும் அந்தப் படத்தையும் பாருங்கள் என்று அந்த ஓவியத்துக்குக் கீழே எழுதியிருப்பார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்தனமான போக்கிரிகள், முட்டாள்களாகவே  நீடிப்பார்கள்.”

“…..ஒரு கனவில் என்னை விட்டு நீ போய்விட்டால் கூட காலம் என் காதலுக்குச் செய்த சேவை என்பதை நான் உடனடியாக அறிந்து கொள்வேன். சூரிய ஒளியும் மழையும் செடி வளர்ச்சியடைவதற்கு உதவி செய்வதைப் போன்றதே இது. நீ என்னைப் பிரிந்த உடனே உன்னிடம் நான் கொண்டிருக்கின்ற காதல் அதன் மெய்யான வடிவத்தை, அதாவது பேருருவத்தை அடைகிறது; அதில் என்னுடைய ஆன்மாவின் முழுச் சக்தியும் என்னுடைய இதயத்தின் முழுப் பண்பும் குவிக்கப்பட்டிருக்கின்றன. நான் மறுபடியும் மனிதனாக உணர்கிறேன். ஏனென்றால் ஒரு மாபெரும் உணர்ச்சியை நான் உணர்கிறேன். நவீனக்கல்வி முறையும் பயிற்சியும் நம்மிடத்தில் ஏற்படுத்துகின்ற பல்வகைத் தன்மையும், அகநிலையான மற்றும் புறநிலையான காட்சிகளை நாம் சந்தேகிக்க உபயோகிக்கின்ற ஐயுறவுவாதமும் நம் அனைவரையும் சிறியவர்களாக, பலவீனமானவர்களாக சிணுங்குபவர்களாக, மன உறுதி இல்லாதவர்களாகச் செய்ய உத்தேசிக்கப்பட்டவை. ஆனால் காதல்-ஃபாயர்பாஹின் மனிதனிடத்தில் அல்ல, மொலிஷோட்டின் “வளர்சிதை மாற்றத்தில்” அல்ல, பாட்டாளி வர்க்கத்தின் மீது அல்ல, ஆனால் அன்பு நிறைந்த பெண்ணிடம், உன்னிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.”

“அன்பே, நீ சிரிக்கலாம்; நான் திடீரென்று பிரசங்கத்தில் இறங்கிவிட்டது ஏன் என்று கேட்கலாம். ஆனால் உன்னுடைய இனிமை நிறைந்த தூய்மையான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். நான் மெளனமாக இருப்பேன், ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன். என் உதடுகளினால் உன்னை முத்தமிட இயலாதபடியால் என்னுடைய நாக்கினுல்தான் உன்னை முத்தமிடுவேன், வார்த்தைகளைத்தான் கொட்டுவேன். நான் கவிதை கூட எழுதுவேன் என்பது மெய்யே….”

“உலகத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் அழகானவர்கள் என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு சுருக்கத்திலும் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் சிறந்த, மிகவும் இனிமையான நினைவுகளைத் தூண்டுகின்ற அந்த முகத்தை நான் மறுபடியும் எங்கே காண்பேன்? உன்னுடைய இனிய முகத்தில் என்னுடைய முடிவில்லாத துயரங்களை, ஈடு செய்யப்பட முடியாத இழப்புக்களை நான் காண்கிறேன்; உன்னுடைய இனிய முகத்தை நான் முத்தமிடுகின்ற பொழுது நான் துயரங்களை முத்தமிட்டு விரட்டுகிறேன். ‘அவளுடைய கரங்களில் புதைந்து, அவளுடைய முத்தங்களில் புத்துயிர் பெற்று’ – அதாவது உன்னுடைய கரங்களில், உன்னுடைய முத்தங்களின் மூலம்; நான் பிராமணர்களுக்கும் பிதகோரசுக்கும் மறு பிறவியைப் பற்றி போதிப்பேன், கிறிஸ்துவ சமயத்துக்குத் திருமீட்டெழுச்சியைப் பற்றி அதன் போதனையைத் தருவேன்.”

மகாத்மாவின் காதல் !

உலகம் போற்றிய அகிம்சை நாயகன் மகாத்மா காந்தியடிகள் தன் மனைவி கஸ்தூரிபாவுக்கு தென்னாப்பிரிக்கச் சிறையிலிருந்து எழுதிய கடிதத்திலிருந்து,

“நீ மட்டும் தைரியத்தைக் கைவிடாமல் இருந்து, தேவையான சத்தான ஆகாரங்களையும் எடுத்துக்கொண்டால் உடம்பு சரியாகிவிடும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நீ காலமாகிவிட்டால், நான் உயிரோடு இருக்கையில் என்னிடமிருந்து நீ பிரிந்திருக்கும்போது நீ அப்படிச் செய்வதில் குற்றம் எதுவும் இல்லை என்று மட்டும் சொல்வேன். நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்றால், நீ இறந்துவிட்டாலும்கூட என்னைப் பொறுத்தவரை வாழ்ந்துகொண்டுதான் இருப்பாய். உன் ஆன்மாவுக்கு மரணமில்லை. நான் அடிக்கடி சொல்லியிருப்பதை மீண்டும் சொல்கிறேன். உன் வியாதி உன்னை எடுத்துச் சென்றுவிடுமானால் நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ள மாட்டேன்”

ஒரு போராளியின் காதல்!

அசாதாரணங்களைப் பற்றி கனவு காண சொன்ன மக்கள் வீரன் சேகுவேரா கியூபாவிலிருந்து  பொலிவியாவுக்குக் கிளம்பிய சமயத்தில் அவர் மனைவிக்கு எழுதிய கடிதம்:

1966,நவம்பர் 11
“பிரியமானவளே!

உன்னைப் பிரிவது கஷ்டமாக இருக்கிறது. ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்திற்காக எப்போதும் தியாகங்கள் செய்ய விரும்புகிற மனிதன் என்று என்னை நீ புரிந்து கொள்வாய்.

தைரியமாக இரு. ஒருவேளை யுத்தத்தில் நான் இறந்து போனால், எனது குழந்தைகள் பெரியவர்களாகி எனது கடமையை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களையும், அவர்கள் அனுபவிக்கும் வறுமையையும் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என நம்புகிறேன்.

உனக்கு அடுத்த கடிதம் எழுத நீண்ட காலம் ஆகலாம். காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும் எண்ணத்தால் உங்களோடு இருப்பேன்.

எனது அன்புக்குரிய மனிதர்களை,  உன்னை, குழந்தைகளை பிரிய நேர்கிறதே என்று வேதனைப் படுகிறேன். பிறநாடுகளில் கோடிக்கணக்கான மக்களைச் சுரண்டும் எதிரியோடு போரிடப் போகிறேன் என்பது வேதனையை குறைக்கிறது.

உடல்நலத்தை கவனித்துக் கொள். குழந்தைகளை பார்த்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை மனைவியாக பெற்றதையும் என் வாழ்க்கையின் அற்புத விஷயங்களாக கருதுகிறேன்.

இந்தப் போராட்டத்தில் இறக்க நேருமானால் சாகும் தறுவாயில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.”

ஒரு மாவீரனின் காதல்!

மாவீரன் நெப்போலியனுக்குள் இருந்த காதலன் மிகவும் ரசிக்கத்தக்கவன்.தன்னை விட வயதில் மூத்த ஜோசபினைக் காதலித்தான்.

 “நான் உனக்காகத்தான் எழுதுகிறேன். முழுமையாக உன் நினைவுகள் எனக்குள் நிரம்பி வழிகின்றன. உனது சித்திரமும் மயக்கும் அந்த மாலைப் பொழுதும் என் மனதை அமைதியிழந்து தவிக்கச் செய்கின்றன. ஒப்புமை இல்லாத ஜோசபின், நீ இனிக்கிறாய். எனது இதயத்தை என்ன செய்தாய் ?

உனக்கு என்னை கொடுத்த போது.. உனது இதழ்களில் உனது இதயத்தில் எனக்குள் எரிந்த தீயின் ஜூவாலைகளை படர விட்டேன். அதனால் என் மீது கோபமாக இருக்கிறாயா? நேற்றிரவு எனது உணர்ச்சிகள் கொந்தளித்தன. இன்று மதியம் நீ மீண்டும் தொடங்க வேண்டும். மூன்று மணி நேரத்தில் உன்னை நான் சந்திப்பேன். அப்போதிலிருந்து உனக்கு நான் ஆயிரம் முத்தங்களை கொடுப்பேன். ஆனால் நீ எனக்கு முத்தம் தரக்கூடாது. ஏனென்றால் உனது முத்தங்கள் எனது ரத்தத்தை எரித்து விடும்”

இப்படி தன்னுடைய கடிதங்களின் வழி காதலை புலம்பி தீர்த்தான் மாவீரன்.

எழுத்தாளனின் காதல்

சிறுகதை உலகில் தனக்கென சிறப்புத்தடம் பதித்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் தன் குழந்தையை இழந்து வாடும் மனைவிக்கு எழுதிய கடித்தத்திலிருந்து,

“கண்ணம்மா நீ தைரியத்தை இழந்து ஒன்றுக்கொன்று நினைக்கலாமா? ஏண்டி நீ எனக்கு கஷ்டத்தையே கொடுக்கிறாய் என்ற அசட்டுத்தனமான நினைப்பு உனக்கு? நீ இல்லாவிட்டால் நான் யார்? வெறும் உயிரற்ற ஜடம். நீ தான் எனக்கு உயிர். கண்ணம்மா உன்னைத் தேற்றுவதற்காக எனக்கு தெரிந்த வித்தையெல்லாம் காட்டி பசப்புவதாக நினைத்துக் கொள்ளாதே. சத்யமாகச் சொல்கிறேன். நீ இல்லாவிட்டால் எனக்கு இங்கிருந்து உழைத்து கொண்டிருக்க அவசியமில்லை. அப்பறம் எனக்கும் களி மண்ணிற்கும் வித்தியாசம் கிடையாது. நீ இல்லாவிட்டால் உன் குழந்தை மனசு காணும் உண்மைகள் எனக்குத் தெரியாவிட்டால் நான் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது ! இந்த நிலையற்ற வாழ்வில் நிலையானது உன் பாசம் தான். உன் கவலைகள் போக்க வேண்டும் என்பதே என் உறுதி. உடம்பைப் பார்த்துக்கொள். கண்ணே வேற என்ன எழுத ? நீ தான் என் உயிர்.

 உன்னையே நினைத்து தவிக்கும் உனது சொ.வி..

காதல் தாங்கும் வரிகளில் தான் எத்தனை பேரழகு. இந்த கடிதங்கள்  சொல்வதெல்லாம்  பிரியத்தின் உணர்வுகளையும் எல்லாக் காலத்திலும் தனிப்பெருந்துணையாக இருக்கும் காதலைத்தான் !

திகட்டா காதல் செய்வோம் !

காதலர் தின வாழ்த்துகள் 🎊

 

மாவீரன் நெப்போலியன் கடிதம்:

ஆதனூர் சோழன் எழுதிய மாவீரன் நெப்போலியன் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

புதுமைப்பித்தன் கடிதம்:

இளையபாரதியில் தொகுப்பான கண்மணி கமலாவுக்கு என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

சேகுவேராவின் கடிதம்:

மருதன் எழுதிய சேகுவேரா-வேண்டும் விடுதலை நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் கடிதம்:

 தென்னாப்பிரிக்காவில் காந்தி - இராமசந்திர குஹா எழுதிய நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம்:

https://www.vinavu.com/2018/10/24/birth-of-a-genius-21/

பாரதி- செல்லம்மா கடிதம்:

https://nammatrichyonline.com/bharathis-letter/

Related Articles

Exit mobile version