பண்டைய இந்திய மன்னர்களின் போர் முறைகள்

இந்திய நாகரிகம் பூமியின் மிக பழமையான நாகரீகங்களில் ஒன்று. சுமார் 70௦௦ ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை சுமந்து நிற்கிறது. ஆசிய கண்டத்தில் இருந்து இமயமலை இந்தியாவை பிரித்தாளும் உள்நாட்டில் கணக்கிலடங்காத போர்கள் நிகழ்ந்துள்ளன. சமூக கட்டமைப்பு, ராஜ்யத்தின் நிலைத்தன்மை, விஸ்தரிப்பு, வீரத்தை பறைசாற்றல் மற்றும் சாகசம், பாதுகாப்பு, கோபம், ஆசை, பொறாமை போன்ற உணர்வுகள், ஆதிக்க நோக்கம் முதலியன பெரும்பாலும் போருக்கு காரணங்களாக இருந்துள்ளன. போர் புரிதலை ஒரு சாதாரண நிகழ்வாகவே அவர்கள் கருதினர்.

 

இந்தியாவின் போர்கள் – படம் – (pbs.twimg.com)

இந்திய அரசர்களின் போர்க்களம் அவர்களின் ரதங்கள் மற்றும் யானைகளால் மையப்படுத்தப்பட்டது. இவைகளை அவர்கள் நகரும் கோட்டைகளாகவே கருதினர். குதிரை படைகள் மற்றும் காலாட்படைகள் இவைகளை பின்தொடர்ந்தன. கி.மு. 150௦ ல் உலக நாடுகளில் இந்தியர்கள்தான் முதன் முதலில் யானைகளை போருக்காக பயன்படுத்தினர். கி.பி. 180௦ பின்னர் உலக நாடுகளில் இறுதியாக இந்த யுத்தியை கைவிட்டது இந்தியா. இந்திய தென்முனை மற்றும் இலங்கையின் யானைகள் அதிக விலை மதிப்புடையாதாக கருதப்பட்டன. அவைகள் போரில் மிக வேகமாக ஆக்ரோஷமாக செயல்பட்டன. ஒரு அரசருடைய வளத்தை அவரிடம் உள்ள யானைகளை வைத்து கணக்கிட்டனர். சந்திரகுப்த மௌரியர் 21,0௦0 யானைகளை தன் வசம் கொண்டிருந்தார் என்கிறது வரலாறு.

ஒரு யானை, ஒரு ரதம், மூன்று குதிரைப்படை, ஐந்து காலாட்படை வீரர்கள் என்று ஒரு சிறு பிரிவாக பிரித்து அதற்கு பட்டி என பெயரிட்டனர். மூன்று பட்டிகள் சேர்ந்தது ஒரு சேனமுகம். மூன்று சேனமுகம் சேர்ந்தது ஒரு குல்மா. இவ்வாறு பிரிவுகள் கணம், வாகினி, ப்ராத்தனா, காமு, மற்றும் அணிகினி என்று பலவாறாக நீண்டது. பத்து அணிகினி சேந்தது ஒரு அக்சோகினி என்றும், இது ராணுவத்தின் மிகப்பெரிய படை என்று அளவிட்டனர். பல அக்சோகினி பிரிவுகளை மௌரியர் தன்வசம் வைத்திருந்தனர்.

போர் யானை – படம் – (kienthuc.net.vn)

போருக்காக தயாராகும் யானைகளுக்கு முழுவதுமாக இரும்பு கவசம் தலை முதல் கால் வரை அணிவிக்கப்பட்டது. அதன் மேல் சிறிய அரியணைகளை ஏற்படுத்தி யானை பாகனுடன் ஒன்று முதல் ஆறு பேர் வரை வில்அம்பு, சூலாயுதம், கோடாரி, ஈட்டிகள், கம்பம் மற்றும் வாள் முதலிய போர் கருவிகளை கொண்டு போரிட்டனர். எதிரிகளை நேரடியாக யானைகளை வைத்து தாக்கவும் செய்தனர். நீண்ட விஷம் தடவிய வாளை இரும்பு கவசம் கொண்ட யானைகளின் தந்தங்களில் கட்டி அவைகளை இரும்பு அரணாக பயன்படுத்தினர். ஒரு சில மன்னர்கள் பெரிய சங்கிலியுடன் இரும்பு குண்டுகளை இணைத்து அதை சுழற்ற பயிற்சி அளித்துள்ளனர். வடமேற்கு ராஜாங்கங்கள் அதிக அளவில் குதிரைப்படை மற்றும் ஒட்டகப்படைகளை பயன்படுத்தினர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அரேபியர்களின் குதிரைப்படை சிறப்பானதாக விளங்கியது.

எதிரிகளின் படை அளவு, வலிமை, கால சூழலுக்கு ஏற்ப போர் வியூகங்கள் வகுக்கப்பட்டன. ஊசி வியூகம், மாலை வியூகம், மீன் வியூகம், கருட வியூகம், தாமரை வியூகம், சக்கர வியூகம், சூலாயுத வியூகம் என்று பல உருவங்களில் தங்களை நிறுத்தி எதிர்வரும் படைகளுடன் தாக்குதல் நடத்தினர். சக்கர வியூகம் மகாபாரதத்தில் துரோணாச்சார்யரால் அமைக்கபட்டது. சுழலும் சக்கரம் போல நகர்ந்தவாறு படைகளை முன்னோக்கி நகர்த்தினார். அவர்களின் நோக்கம் போர்க்கைதியாக தர்மரை சிறை வைப்பது.

சக்கரவியூகம் – படம் – (nova-acropole.pt)

மன்னர்கள் அரசியல் ரீதியாகவும், போருக்காகவும் பயன்டுத்திய தந்திர உபாயங்கள் மிகவும் சுவராஸ்யமானவை.

ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் குதிரைகளின் முகத்தில் செயற்கை துதிக்கைகளை மாட்டி போரில் பயன்படுத்தினார்களாம். எதிராளியின் யானைகள், குதிரைகளை கண்டு அவை யானைக்குட்டிகள் என்று எண்ணி அவைகளை தாக்க மறுத்துள்ளன. புகழ்பெற்ற ஹல்டி போரின் மகாராணா பிரதாப் இந்த யுத்தியை பிரயோகித்துள்ளார்.

ராஜஸ்தான் கோட்டையில் உள் அறைகள் பிரம்மாண்டமாக இருந்தாலும் அதன் வாயில்கள் மிக சிறய அளவிலே இருந்துள்ளன. போர்க்காலங்களில் எதிரிநாட்டு வீரர்கள் அரண்மனைக்குள் நுழைந்தால் சிறிய வாயில் வழியாக அறையை எட்டிப்பார்க்க முற்படுவர். அப்போது அவர்கள் தலை கொய்யப்படும். இதே போல் ஒரு சில வாயில்கள் வழி இல்லாத சந்துக்களாகவும் இருந்துள்ளது.

ஒரு சில போர்களில் வீரர்கள் போரின் நடுவே பழங்குடியினர் பயன்படுத்திய சீழ்க்கைகளை பிரயோகித்தனர். இந்த சீழ்க்கையொலி மனிதர்கள் அலறுவது போல் மரண ஓலமிடும். இது உற்சாகமாக இருக்கும் எதிராளிகளின் மனவலிமையை குறைப்பதாகும்.

ராஜஸ்தான் கோட்டை – படம் – (mydestination.com)

பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட ஹைதர்அலி மன்னர் முதன் முதலில் இரும்பு ராக்கெட்களை எதிராளிகளை நோக்கி எய்துள்ளார். பின்பு ஆண்ட திப்பு சுல்தான் மன்னரும் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனி படைகளுக்கு எதிராக ராக்கெட்களை ஏவினார்.

மராத்திய சிவாஜி, இரவு நேரத்தில் ஆயிரக்கணக்கான எருமைகளை கொணர செய்து அதன் இரண்டு கொம்புகளிலும் விளக்குகள் பொருத்தி எதிரிகளை நோக்கி ஓடச்செய்தார். தூரத்தில் இருந்து இதை கண்ட எதிரிகள் பெரும் படை தம்மை நோக்கி வருவதை கண்டு அஞ்சி நடுங்கினர்.

மராத்தியர்கள் சிறிய அளவு படையை கொண்டு முஸ்லிம் அரசாளும் நகரங்களாக விளங்கிய பீஜப்பூர் பகுதிகளை நெருங்கினார்கள். அவர்கள் படை வலிமை எதிரிகளுக்கு தெரியாமல் இருக்க தாக்கண பீடபூமி, தொடர்ச்சி மலைகள் என்று வெவ்வேறு இடங்களில் படைகளை இறக்கி போரிட்டுள்ளனர். இதன்மூலம் அவை பெரும்படை தாக்குதல் போல் எதிரிகள் எண்ணினார்.

திப்பு சுல்தானின் ஏவுகணை உபாயம் – படம் – (guruprasad.net)

ராஜ தந்திரங்களில் ஒன்றாக விஷ கண்ணிகளை மன்னர்கள் பயன்படுத்தி உள்ளனர். பிரத்யேக உணவு முறை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மருந்துகளை ஒரு சில இளம்பெண்களுக்கு அளித்து பின்னர் விஷத்தை செலுத்தியுள்ளனர். இவர்களுடன் உறவு கொள்ளும்போது உடனடியாக விஷம் தாக்கி எதிராளிகளை உயிர் இழக்க வைக்க முடியும்.

பாலைவன நகரங்களில் கோட்டை வாயில்கள் தகர்க்கப்பட்டால் பாதுகாப்பு அரணாக முதலில் ஒட்டகங்களும் பின்பு யானைகளும் நிரறுத்தபட்டனவாம். யானைகளை விட ஒட்டகங்கள் விலை மலிவாக கிடைத்ததால் இந்த ஏற்பாடாம்.

தேவகிரி கோட்டையில் மதில் சுவர் முதல் அரண்மனை வரை சிறு சிறு அகழிகள் அமைத்து கொதிக்கும் எண்ணெய் மற்றும் தண்ணீர் நிரப்பியுள்ளனர். எதிரிகள் வேகமாக முன்னோக்கி நகராமல் தடுக்க இந்த ஏற்பாடு.

ஒரு சில கோட்டைகளின் வாயில்கள் குகைப்பாதைக்கு கொண்டு சேர்க்கிறது. பல உட்பிரிவு பாதைகளை கொண்ட மிக இருளான அந்த குகையினுள் வீரர்கள் பதுங்கி இருந்து எதிராளிகலை வீழ்த்தியுள்ளனர்.

குருக்ஷேத்திரத்தில் அஸ்திரங்கள் – படம் (ramanan50.files.wordpress.com)

இராமாயணம் மற்றும் மாஹபாரத காலங்களில் பலவிதமான அஸ்திரங்களை பிரயோகித்துள்ளனர். இந்திர அஸ்திரம், அக்னி அஸ்திரம், வருண அஸ்திரம், நாக அஸ்திரம், வாயு அஸ்திரம், சூரியன் அஸ்திரம் என்று இந்து மதத்தின் அடையாளங்கள் இவை என்றே சொல்லலாம்.

பழங்கால மன்னர்கள்களின் உளவியல் ரீதியான போர் காரணங்கள், நிர்வகித்த படைகள், பயன்படுத்திய போர் கருவிகள், போர் நெறி முறைகள், ராஜ தந்திரங்கள், மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறை என்று அனைத்தும் நமக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பாடங்களை உணர்த்துகிறது என்பது நிதர்சனமான உண்மை.

உசாத்துணை – Indigenous historical knowledge -vol II

Related Articles

Exit mobile version