கொழும்பு நகரசபையின் கட்டத்தின் உச்சியில் அமைந்திருக்கும் விமானத்தின் வடிவத்தைப் போலவே கொழும்பு டவுன் ஹோல் சந்தியில் லிப்டன் சுற்றுவட்டத்தில் இந்த பளிங்காலான நினைவுச்சின்னமும் அமைந்திருக்கும். ஒருநாளைக்கு இலட்சக்கணக்கான மக்கள் இதனைக் கடந்து செல்கிறார்கள்.
இது என்ன? யாருக்கானது? என்று ஆராய்ந்து பார்த்ததுண்டா!
யாருடைய நினைவுச்சின்னம்?
இந்தச் சின்னமானது ஆங்கிலேயர் ஒருவருக்காக கட்டப்பட்டது. இலங்கை ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்தபோது, நமது விடுதலைக்காக போராடிய ஆங்கிலேயரான ஜோர்ஜ் வோலின் நினைவாகத்தான் இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டுள்ளது.
‘சிலோன் இன்டிபென்டட்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை நிறுவி நடாத்தி வந்தவர்தான் இந்த ஜோர்ஜ் வோல். நமது ஒவ்வொரு சுதந்திர தினத்திலும், நமது சுதந்திரத்திற்காக போராடிய ஒரு வெள்ளையரைக் கடந்து நாம் சுதந்திர சதுக்கத்தை சென்றடைகின்றோம். ஆனால் ஜோர்ஜ் வோலை யாரும் கவனித்ததாக தெரியவில்லை.
எந்த தரப்பும் லிப்டன் சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள ஜோர்ஜ் வோலின் நினைவுச்சின்னத்தை அகற்ற முயற்சிக்கவில்லை.
கொழும்பு நகர சந்திகளில் அலங்காரங்களுக்காக அலங்கார அமைப்புகளைக் கட்டுவது அந்த காலத்தில் ஒரு முக்கிய விடயமாகப் பார்க்கப்பட்டது. அதன் ஒரு அமைப்பாகத்தான் ஸ்லேவைலன் சந்தியின் நடுவில் ஆறு வீதிகளுக்கும் முகப்பாக சூரிய காந்தி மரங்ககள் நடப்பட்டிருந்ததாம். அந்த மரங்களில் சூரிய காந்தி பூக்கள் பூத்துக் குழுங்கும்போது மிகவும் ரம்யமான ஒரு காட்சியை அதைக் கடந்து செல்பவர்களுக்கு காணக்கூடியதாக இருந்ததாம். ஆனால் இந்த ஆறு சூரிய காந்தி மரங்களும் எதனை அடிப்படையாகக் கொண்டு இங்கு நடப்பட்டது என்பது குறித்த தெளிவு இருக்கவில்லை.
கொழும்பு சந்திகளில் இருந்த இப்படியான அலங்கார அமைப்புகள் பல பிற்காலத்தில் உடைத்து அகற்றப்பட்டுள்ளது. ஆனால் யாரும் எந்த தரப்பும் லிப்டன் சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள ஜோர்ஜ் வோலின் நினைவுச்சின்னத்தை அகற்ற முயற்சிக்கவில்லை. மாறாக இங்கு போஸ்டர்கள் ஒட்டுவதிலிருந்து தப்பிக்கத்தான் முடியாமல் போனதாம். லிப்டன் சுற்றுவட்டத்தின் ஒரு சிறிய குளம் போன்று நீர் நிரம்பிய ஒரு தடாகத்தை காணலாம். அதனைச் சுற்றி தண்ணீர் ஒரு பூ போன்ற வடிவில் பீய்ச்சி அடித்துக்கொண்டிருக்கும். இதற்கு நடுவே பளிங்காலான ஒரு சிறிய கட்டடம் இருக்கும். அதற்கு அருகில் சென்று பார்த்தீர்களானால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூன்று வரிகள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும்.
GEORGE WALL
PHILANTHROPIST
1820 – 1894
எம்போஸ் செய்யப்பட்ட எழுத்துக்களால் அங்கு பொறிக்கப்பட்டிருக்கும் மூன்று வரிகள்
ஜோர்ஜ் வோல் உண்மையில் யார்?
இவற்றைப் பார்க்கும்போது வெளிப்படையாக இது ஆங்கிலேயரான ஜோர்ஜ் வோலை நினைவுகூரும் ஒரு கட்டிடம் என்பது தெளிவாகின்றது. ஜோர்ஜ் வோல் உண்மையில் யார் என்பது தற்போதைய தலைமுறைக்குத் தெரியுமா என்பது சந்தேகமே.
கொழும்பு நகரசபைக்கு சொந்தமான இந்தப் பிரதேசத்தில் ஜோர்ஜ் வோலின் நினைவுச் சின்னம் அமையப்பெற்றிருந்தாலும் இவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் நகரசபையில் இல்லையாம். ஆனால் இந்த நகரசபையைப் பெற்றுக்கொடுக்க மிகமுக்கியமாக போராடிய ஒருவர்தானாம் இந்த ஜோர்ஜ் வோல்.
25ஆவது வயதில் இலங்கையை வந்தடையும் ஜோர்ஜ் வோல்…
1820ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த ஜோர்ஜ் வோல் தனது 25ஆவது வயதில் நீண்ட கடல் பயணத்திற்குப் பிறகு இலங்கையை வந்தடைகின்றார்.
இலங்கை வந்த ஜோர்ஜ் வோல் முதன்முதலில் தங்கியிருந்தது கண்டியில்தானாம். அப்போது அங்கு இயங்கிவந்த சிலோன் பிளாண்டேஷன் எனும் ஆங்கிலேயரின் நிறுவனத்தில் தேயிலை பரிசோதகராக தனது முதல் தொழிலை ஆரம்பித்ததாக மேஜர் ரெவனாட் தெரிவிக்கிறார். ஆனாலும் ஜோர்வோல் அந்த நிறுவனத்தில் பயிற்சிபெரும் ஒரு மேலாளராகத்தான் கடமையில் இணைந்துகொண்டார் என்று ஆனந்த திஸ்ஸ த அல்விஸ் எனும் பிரபல பத்திரிகையாளர் பதிவுசெய்துள்ளார்.
எது எப்படியோ கண்டியில் தொழில்புரிந்துவந்த ஜோர்ஜ் வோல் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்வதற்கு முன்னரே தொழிலை உதறிவிட்டு கொழும்புக்கு தப்பி ஓடிவந்துள்ளார். அது ஏன் என்பற்கான காரணம் தெரியாதபோதிலும் கண்டியில் ஜோர்ஜ் வோலின் நினைவு இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. அது அவர் வாழ்ந்த வீடுதான். ஜோர்ஜ் வோல் கண்டியில் வாழ்ந்த வீடு தற்போது சுவிஸ் ஹோட்டல் என்ற சொகுசு ஹோட்டலாக இயங்கிவருகின்றது.
ஜோர்ஜ் வோல் அன்ட் கம்பெனி
ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட பல வணிக நிறுவனங்கள் இன்னும் நம் நாட்டில் இயங்கிவருகின்றன. அதில் பலதையும் நாம் நினைவில் வைத்துள்ளோம். அதில் ஒன்றுதான் ஜோர்ஜ் வோல் அன்ட் கம்பெனி. இந்த நிறுவனத்தை நிறுவியவர் ஜோர்ஜ் வோல்தான்.
ஜோர்ஜ் வோல் நிறுவனம் குறித்த இறுதி கோப்புகள் கிடைக்கப்பெற்றது 1879ஆம் ஆண்டுதான். அந்த ஆவணங்களில் நிறுவனம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது. எப்போது கலைக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஜோர்ஜ் வோலின் பல முகங்கள்!
ஆனாலும் அவரால் கையாளப்பட்ட எட்டு வகையான வேறு விடயங்கள் குறித்தும் அதில் அடங்கியிருந்துள்ளது.
ஜோர்ஜ் வோல் சட்டமன்றக் குழுவில் உறுப்பினராக இருந்தார் என்றும் அந்த ஆவனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர்த்து ஜோர்ஜ் வோல் ஒரு வானியலாளராக, தாவரவியலாளராக, ஒரு பத்திரிகையாளராக, அச்சு ஆலோசராகவும் மனித உரிமை ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
பொருந்தாத சக்கரம் – ஜோர்ஜ் வோல்
இலங்கையில் ஜோர்ஜ் வோல் முன்னெடுத்த அரசியல் நடவடிக்கைள் இங்கிலாந்து அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளதாம் . அதனால் ஜோர்ஜ் வோலை அவர்கள் ‘பொருந்தாத சக்கரம்’ என்றுதான் விழித்துள்ளனர். ஜோர்ஜ் வோலின் அரசியலானது தமக்கு கிடைக்கும் அத்தனை உரிமைகளும் வரப்பிரசாதங்களும் அனைத்து மக்களுக்கும் அதாவது ஆங்கிலேயர்கள் போல இலங்கையர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறித்தித்தானாம்.
சிலோன் இன்டிபெண்டன்ட் – பத்திரிக்கை
சிலோன் இன்டிபெண்டன்ட் என்ற பெயரில் பத்திரிக்கையை 1800 களின் நடுப்பகுதியில் ஜோர்ஜ் வோல் ஆரம்பித்துள்ளார். இதில் முழுக்க முழுக்க சுதந்திரம் குறித்துதான் பேசப்பட்டு வந்ததாம்.
இதில் பூர்வ குடிகளின் பிரச்சினைகள் குறிப்பாக இந்நாட்டு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆங்கிலேயர்கள் மத்தியில் எடுத்து செல்வதை இந்த பத்திரிகை தமது முதற்கடமையாக கொண்டு செயற்பட்டு வந்துள்ளது.
சிலோன் இன்டிபெண்டன் என்ற பத்திரிகைக்கு முன்னர் 1834ஆம் ஆண்டுகளில் ஒப்சேர்வர் என்ற பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஆசியாவின் மிகவும் பழமையான பத்திரிகையாகக் கருதப்படுகின்றது. இதன் பிரதம ஆசிரியராக இருந்தவர் ஜோர் விண்டர். இந்தப் பத்திரிக்கையில் ஜோர்ஜ் வோல் கட்டுரைகளை எழுதி வந்தாராம். அதில் தனது புனைப்பெயராக ஸ்பெக்லியம் என்ற பெயரில்தான் எழுதினாராம்.
அதன்பிறகு அவர் ஆரம்பித்த சிலோன் இன்டிபெண்டன் பத்திரிகையில் ஜோர்ஜ் வோலின் கட்டுரைகளும் கடிதங்களும் ஆங்கிலேயேர்களுக்கு பெரும் தலையிடியாக அமைந்தது. ஆனாலும் ஜோர்ஜ் வோலுக்கு பதில் கொடுக்க அப்போதைய ஆங்கிலேய அராசங்கத்திற்கென்று ஒரு செய்திப் பத்திரிக்கை இருக்கவில்லை.
அதனால் அவர்கள் கண்டி ஹெரல்ட் (Kandy Herald) என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தனராம். கண்டி ஹெரால்ட் பத்திரிக்கை மூலம் ஜோர்ஜ் வோலின் கட்டுரைகளுக்கு பதிலடி கொடுக்க பொருத்தமான எழுத்தாளர்களை அப்போதைய ஆங்கில அரசு தேடி வந்தது. ஆனால் ஜோர்ஜ் வோலின் எழுத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் பதிலடி கொடுக்ககூடிய யாரும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அதனால் கிடைத்த எழுத்தாளர்களை வைத்து கண்டி ஹெரல்ட் பத்திரிக்கையை நடத்தி வந்தாலும் சுவாரஷ்யமில்லாமல் பத்திரிகை வெளிவந்ததினால் சிறிது காலத்திலேயே அந்தப் பத்திரிகை பயனற்றதொன்றாக மாறிப்போனது.
ஆங்கிலேய அரசுக்கு எதிரான சவுக்கடி கட்டுரைகளை வெளியிட்டு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசி வந்த ஜோர்ஜ் வோலை ஒரு புரட்சி வீரராக பார்த்துள்ளனர் அப்போதைய மக்கள். இதன் பயனாக சுதேசிகள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து ஜோர்ஜ் வோலைச் சுற்றிக்கொண்டனர். அவருக்கு ஆதரவாக தாங்கள் நிற்கப்போவதாக முடிவெடுத்தனர்.
அதன்பிறகான ஜோர்ஜ் வோலின் நகர்வுகள் எப்படி இருந்தது என்றும். இலங்கையர்களுக்கான சுதந்திர போராட்ட வீரராக ஆங்கிலேயர் ஒருவர் எப்படி மாற்றம் பெற்றார் என்றும் அடுத்த பதிவில் பார்ப்போம்.