தமிழர்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாத இடம்பிடித்திருப்பது பனை. பனை மரம்தான் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும், பல லட்சம் கைவினைக் கலைஞர்களுக்கும் வாழ்வு கொடுத்தது. மன்னர்களும், ஆங்கிலேயர்களும் பனை வருமானத்தில் வரி வசூல் செய்து ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இப்போது உற்சாக பானமான தேநீர், காப்பி போன்றவற்றுக்கு மாற்றாகப் பனைவெல்ல பானங்களைத்தான் அருந்தி வந்திருக்கிறார்கள். தேநீருடனும் பனை வெல்லத்தைச் சேர்த்து பருகியிருக்கிறார்கள்.
பச்சை பசேலென்று தழைத்திருக்கும் வாழை மரத்தின் ஒவ்வொரு பாகங்களையும் பயன்படுத்திய இனமென்றால் அது தமிழ் இனம் தான். அப்படியான வாழை மரத்தினை விடவும் தமிழர்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாத இடம்பிடித்திருப்பது பனை. காகிதங்கள் தோன்றாத காலத்தில் எழுத்தறிவைச் சுமந்த ஏடுகள் பனை ஓலைகள். அறிவுப்பசியை பன்னெடுங்காலமாக போக்கிய பனை மரங்களே ஏடுகளின் தாய் என்று சொல்லப்படுகின்றது. பனை மரங்களின் பலன்களை அறியாத மக்களே இருக்கவில்லை.
கடந்த தலைமுறையில் திருக்குடந்தை அருணாசலப் புலவர் எழுதிய “தால விருட்சம்” நூலில் பனையின் 801 பயன்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதாக தகவல் உண்டு. “தால விருட்சம்” என்றால் “பனையின் முகவரி” என்று பொருள். இவர் பனையை ஓர் அற்புத மூலிகை என்றும் கற்பக விருட்சம் என்றும் வர்ணித்துள்ளார். பனை ஓலை, பனம் பூ, பூத்தண்டு, பதநீர், கள், கருப்பட்டி, பனங்கற்கண்டு, நுங்கு, பழம், பனங்கிழங்கு, பனை வேர் எல்லாமே நாட்டு மருந்துச் சரக்குகள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான குணம் உண்டு.
பழந்தமிழ் மன்னர்களின் குலச்சின்னம் பனை மரம் என்கின்றனர். இன்று தங்கத்தில் தாலி செய்கிறார்கள். ஆனால் பழந்தமிழர்கள் பண்பாட்டில் பனை ஓலையில் மணமகள் பெயரை எழுதி, சுருட்டி, துவாரமிட்ட மணமகள் காதில் அணிவார்களாம். அதுதான் தாலி. காதணி விழாவும் கல்யாணமும் ஒன்றாக நிகழ்ந்தன. “தால” என்றால் “இலை” என்று பொருள். பனை ஓலையும் அதன் இலைதான். ஆகவே பனை மரம் தால மரமாயிற்று. தாலி வழங்கிய மங்கல மரமும் அதுதான். தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். இதனால் ‘தாலி தந்த தால விருட்சம்’ ஆகிறது பனை.
பனைமரம் நம் முன்னோர்கள் வாழ்வில் பின்னி பிணைந்துள்ளது. இப்படி ஆண், பெண் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் பனையில், வேர், தூர்ப் பகுதி, நடு மரம், பத்தை மட்டை, உச்சிப் பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளை – பீலி, பனங்காய் (பெண் பனையில் மட்டும் காணப்படும்), பச்சை மட்டை, சாரை ஓலை, குருத்தோலை என 12 உறுப்புகள் உள்ளன. இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயனைத் தரக் கூடியது.
பழந்தமிழர் வாழ்வில் பனை மரமே பணம் தரும் மரம். அன்று கரும்புச் சர்க்கரை தோன்றவில்லை. இனிப்புக்கு இலுப்பைப் பூவும், பனங் கருப்பட்டியுமே பயனாயிற்று. போதைக்கு அன்று சாராயம், கசிப்பு இல்லை. பனங்கள் மற்றுமே பயனாயிற்று. படை வீரர்களுக்கு மன்னர்கள் பனங்கள் வழங்கியதைப் புறநானூறு தெரிவிக்கிறது. கலங்கல் என்பது பனங்கள்.
பனங்கள் மிகவும் அரிய சித்த ஆயுர்வேத மருந்து என்பதை அறியாத பாமரர்கள் நாங்கள். என்ன சாப்பிட்டாலும் எடை ஏறாமல் பலம் குன்றியவர்கள் கள்ளைக் குடித்து நல்லுணவு உண்டால் பலசாலியாவார்கள். வயதுக்கு ஏற்ற எடை ஏறும். சுவாச கோசம், நீரிழிவு நோய்களுக்கு மருந்து. போதைக்கான வேதியல் கலக்காத சுத்தமான கள் ஓர் மருந்து. சுத்தமான கள்ளில் போதை குறைவு.
இலுப்பைப் பூக்களிலிருந்து பழங்குடி மக்கள் தயாரிக்கும் சாராயம் கூட தீமையளிக்காது. மதுபானங்கள் எல்லாம் நின்று கொல்லும் விஷம். அவற்றை விடப் பனங்கள் நூறு மடங்கு உயர்ந்த பானம். சங்க காலத் தமிழர்கள் பனங்கள் பருகி திடமுடன் வாழ்ந்ததால் மனித குல வாழ்வுக்கு பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்று புறநானூறு பாடல் கூறுகிறது.
பனை தரும் பொருள்களில் ஏழைக்கேற்ற சத்துணவும் உண்டு. அதுவே பனங் கிழங்கு. கிராமங்களில் பெண்கள் பனங்கொட்டைகளை சேகரித்து மண்ணில் நெருக்கமாக நடவு செய்வார்கள். பனங் கொட்டை நடப்பட்ட 100வது நாளிலிருந்து அறுவடைக்கு ஏற்றதாய் மாறுகிறது.
ஒரு பனைமரத்திலிருந்து வருடத்திற்கு 180 லிட்டர் பதநீர், 25 கிலோ பனை வெள்ளம்,16 கிலோ பனஞ்சீனி, 11.4 கிலோ தும்பு (மிதியடி பிரஸ் தயாரிக்கப் பயன்படுகிறது), 2.25 கிலோ ஈர்க்கு, 10 கிலோ விறகு, 10 கிலோ ஓலை மற்றும் 20 கிலோ நார் முதலியன கிடைப்பதாக விஞ்ஞானிகளின் கருத்து தெரிவிக்கின்றனர்.
பனை மரம் வெறும் தாவரம் மட்டும் அல்ல தமிழர் வாழ்வின் அடையாளமாகவும் விளங்குகிறது. பனைமர பொருட்களை நம் அன்றாட வாழ்வில் மீண்டும் உபயோகப்படுத்த முன் வரவேண்டும்.