தமிழோடு காதலுள்ளவர்கள் கமலோடு காதலுறாமல் இருக்க முடியாது. இருக்கின்ற கலைஞர்களில் மக்களை அதிகம் சென்று சேரும் சினிமாவிலிருந்துகொண்டு, தமிழிலும், வார்த்தை விளையாட்டுக்களிலும், திரைக்கதை வசனங்களிலும் படத்திற்குப் படம் போட்டி போட்டுக்கொண்டு நம்மை அசரவைத்த கமலை ஆண்டுக்கொருமுறையேனும் திரையில் பார்க்க ரசிகர்களும், ஏன் கமலுமே படும் அவதியும் ஆச்சினையும் நாமறிவோம்.
விஜய் தொலைகாட்சி பற்றியும் அவர்களது உள்கூத்து நிகழ்ச்சி நெறியாழ்கை குறித்தும் இடைவிடாது விசனமும் விமர்சனமும் வைக்கும் நாம், அவர்களின் நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறுவதில்லை என்பதே உண்மை. மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஏதாவதொரு சூழ்ச்சுமத்தை முன்னோட்டங்களில் புகுத்தி, இந்நிகழ்ச்சியைப் பார்த்தால் கடைசியில் நம்மை முட்டாளாக்கிவிடுவார்கள் என்று புறக்கணிக்க நினைப்பவர்களைக்கூட கடைசியில் அந்நிகழ்ச்சிகள் பற்றியே அலசி ஆராயவைக்கின்றமை தயாரிப்பாளர்களின் ஆளுமை.
இப்படியான ஓர் உத்தியே, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரு கமல்ஹாசன் அவர்களைத் தேர்ந்தெடுத்தது. ஆரம்பிக்கும் முன்னரே அனைவரது விமர்சன வாய்களையும் ‘கமல்’ என்ற ஆயுதத்தை வைத்து அடைத்துவிட்டனர் விஜய் தொலைக்காட்சியினர். கமல் தொகுத்து வழங்குகிறார் என்றால் அதில் ஏதாவது நியாயம் அல்லது ஆழ்ந்த கருத்து இருக்கும் என்று சிலரும், கமல் மேலுள்ள தீரா ரசனையின்பால் சிலரும், வாரமொருமுறை கிடைக்கும் கமல் தரிசனமும், அவரது ஆளுமையும் காண சிலரும், கமலின் சமயோசிதம், பேச்சு, தமிழ், சொல்விளையாட்டு என இப்படி ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணத்திற்காய் கமலினூடு அஹம் டிவி வழியே பிக்பாஸ் பார்க்க விளைந்தனர்.
ஆரம்பத்தில் கமலைச் சுற்றி செறிந்திருந்த மக்கள் கவனம், நாளடைவில் தன்னை விட பிரபல்யமான போட்டியாளர்களையும் தாண்டி, ஓவியா என்ற ஒருவர்மேல் எதிர்பாராத ஆதரவு அலைகளாக குவிந்ததுதான் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஆச்சர்யம்!
மனநிலை/உடல்நலக்குறைவு காரணமாக வெளியே சென்றார் என்று சொல்லப்படும் ஓவியா எப்படி இத்தனை உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்க முடியும்? வீட்டினுள் இருந்த யாரையும் தன்வசம் ஈர்க்கத் தவறிய ஓவியா எப்படி இத்தனை கோடி மக்களின் இதயத்தை ஈர்த்தார்?
“ஹெயார்” என்று காயத்திரி சொன்னது கேட்ட வார்த்தை என்று கோபப்பட்ட மக்கள், “நீங்க சட்டப் பண்ணுங்க” என்ற வாக்கியத்தை தாரக மந்திரம்போல் டீஷர்ட்களிலும் என் ஆட்டோவிலும் எழுதுமளவு அவர்களைக் கட்டிப்போட்ட அந்த ஓவியா பார்முலா என்ன?
இது ஒரு சிம்பிள் சைகாலஜி. நம்மால் நமது வாழ்க்கையில் செய்ய முடியாததை, நமது சமுதாயத்திற்கு அதன் நியதிக்கு ஏற்றவாறு ஒன்றிச் செல்லவேண்டிய காரணத்திற்காய் நாம் நம்முள் புதைத்து வைத்திருக்கும் நமது சுயத்தை, அநீதியைக் கண்டு ஆவேசம் கொண்டு துணிந்து குரல்கொடுக்க நம்முள் இருக்கும் வேட்கையை, நமது மனதுக்குப் பிடித்தவற்றை எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்துபார்க்க எமக்குள் ஒளிந்திருக்கும் ஆசையை, மொத்தத்ததில் நாம் வாழ நினைக்கும் கனவு நிலையை, வாய்மையை, பண்பை நிஜ வாழ்வில் ஓர் பெண், இத்தனை காமராவையும் பற்றிக் கவலைகொள்ளாமல் வாழ்வதை கண்கூடு பார்த்ததில் ஏற்பட்ட வியப்பே அன்றி வேறில்லை.
- சும்மா இருந்த ஜூலியை, நீ ஏன் அப்படி இருக்கிறாய்? ஏன் இப்படி இருக்கிறாய்? என்று பகிரங்கம்மாகவே அவமானப்படுத்தி பகிடிவதை செய்யும் காயத்திரி, ஆர்த்தி போன்றவர்களை எதிர்த்து ஜூலிக்கு ஆறுதலாக இருந்த மனித நேயமும்
- தவறுதலாக தனது கால் பட்டதற்காய் தூணிடம் சாரி கேட்கும் பண்பும்
- காமராவையும் ஓர் ஆத்மாவாக நினைத்து, “திரும்பிக்கோ இல்லேன்னா ஸ்ப்ரே அடிச்சி போட்டுடுவன்” என்று அதனுடன் சமரசம் பேசுவதும்
- கமல் முன்னிலையில் தான் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டால் சளைக்காமல் உடனே மன்னிப்பு கேட்பதும், தான் செய்தது சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை கமல் என்ற காரணத்திற்காய் குழைந்து நெளிந்து பசப்பாமையும்
- அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும், தனக்கு வேண்டியவராயினும், வேண்டாதவராயினும் ஆபத்தில் ஆறுதலாக இருக்கவேண்டி, தனக்கு துரோகமிழைத்த ஜூலிக்குக் கூட தவறிழைக்காத உள்ளமும்
- கண்கட்டி விளையாட்டில் ஆரவ் கூறியதுபோல் கட்டிய கண்களூடும் பந்துகள் தெரிந்ததை ஓப்புக்கொண்டு அதனைப் பயன்படுத்தாத நேர்மையும்
- ஆரவ்வின் கவனத்தை ஈர்க்கவே நீச்சல் தடாகத்தில் வீழ்வதுபோல் நடித்ததாக சிநேகனிடம் ஒப்புக்கொண்ட உண்மையும்,
- “அறைஞ்சிடுவேன்” என்று ஆணாதிக்கம் கலந்து ஷக்தி சொன்ன வார்த்தைக்கு, “எங்க அறையுங்க பாக்கலாம்!” என்று எதிர்த்து நின்ற யோக்கியமும்
- வெறுப்பின் உச்சக் கட்டத்தில் நியாயமே இன்றி ஜூலி முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லும் போதும், வலியச் சென்று சமரசம் பேசும் மனிதமும்
இப்படி அடுக்கிக்கொண்டே போகுமளவு தனித்துவத்தாலும், மனிதப் பண்புகளாலும் உயர்ந்து நிற்கும் ஓவியாவை யாருக்குத்தான் பிடிக்காது?
பிடிச்சுப் போச்சுல்ல, அதன்பிறகு பிக்பாஸ் என்பது ஓவியா என்றானதும் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் பாடப்பட்டது ஓவியா புராணமே! தமிழ் தெரிந்த யாருக்கும் ஓவியாவை தெரியாமல் இல்லை, உணவகங்களுக்குப் போனால் பக்கத்து மேசையில் கூடியிருக்கும் கூட்டமும் ஒவியாவைப் பற்றியே பேசியது. நண்பர்கள் சந்தித்தால், கட்டித் தழுவிய அடுத்த கணம் பிக்பாஸ் பாத்தியா? என்ற கேள்வியே வந்தது. எங்கும் எப்பொழுதும் எல்லா ஊடகங்களிலும் ஓவியா பற்றிய பேச்சே மேலோங்கியது.
வெளியே மட்டுமா? பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் கூடுகின்ற இடமெல்லாம் ஓவியா புராணமே, இது சற்று வித்தியாசமான புராணம்!
வார இறுதிகளில் பார்வையாளர்கள் கொடுக்கும் ஓவியா கரகோஷங்கள் அஹம் டிவி வழியே ஏற்படுத்தும் அதிர்வு, தான்தான் பிரபலம், தன்னக்குக்கீழேதான் அனைவரும், திரையுலக பிரபலம் நான்தான் எனக்குத்தான் எல்லோரும் சலாம் போடவேண்டும், நான் மற்றயவர்களை விமர்சிப்பேன் ஆனால் அடுத்தவர் என்னை விமர்சிக்கக் கூடாது இப்படியெலாம் மமதையில் திரிந்த பலருக்கு ஏற்படுத்திய புகைச்சல், ஓவியாவுக்கு எதிரான சூழ்ச்சிகளாக வெடிக்கத் துவங்கியது.
பலத்தின்மீது மோதமுடியாத பலர் ஓவியாவின் பலவீனமறிந்து தாக்கத் தொடங்கினர். அதற்கு ஆரவ்வின் சுயநலத்தையும், ஜூலியின் போட்டி உணர்வையும் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டனர், வெற்றியும் கண்டனர். அதுவே ஓவியாவை மக்கள் மனங்களில் இன்னும் பலமாக பதியவைத்து #NoOviyaNoBiggboss என்ற ஹாஷ் டாக் வரை இட்டுச் சென்றது. ஓவியா திட்டமிட்டு தனிமைப்படுத்தப்பட்டதை ஜீரணிக்க முடியாத ரசிகர்கள், “வெளியே வா ஒ கை கால ஓடச்சிடுறே” என்ற காயத்திரியின் டயலாக்கை அவருக்கே திருப்பிச் சொல்ல #OviyaArmy யை உருவாக்கியது.
அன்றாடம், கணத்துக்குக் கணம் வீட்டினுள் நடக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் சமூக வலைத்தளங்களில் மீம்கள் பறந்தன, த்வீட்டுக்கள் சொரிந்தன, ஓவியாவுக்கு ஆதரவாகவும் ஏனைய போட்டியாளர்களைச் சாடியும் காணொளிகளும் கருத்துக்களும் நிரம்பி வழிந்தன. இத்தனை பெரிய வரவேற்பையும், ஆதரவையும், மக்கள் அன்பையும் கண்டும் அதற்காக, அதன்மூலம் பலன் பெறுவதற்காக தனது சுயத்தை தூக்கிப் போடாமல், நான் திரும்பவும் பிக்பாஸ் வீட்டிற்குள் போகமாட்டேன் என்று உறுதியாகக் கூறிய ஓவியாவின் வாய்மைகண்டு கமலே கண்கலங்கியதை கண்டோம்!
திரையில் நாம் பார்த்த ஓவியாவுக்கும், நிஜ ஓவியாவுக்கும் எத்தனை வேறுபாடு! நல்லவர்கள், பிரபலங்கள், போராட்ட சிந்தையாளர்கள், நல்ல குடும்பத்தவர்கள், நாகரிகமானவர்கள் என்று நாம் நினைத்த அனைவரும் இன்று குற்றவாளிகளாகப் பார்க்கப்படுவதும், ஏதோ ஓர் சாதாரண நடிகை என்று நாம் எடைபோட்ட ஓவியா இன்று குணத்தால் உயர்ந்து நிற்பதும், வாழ்க்கையின் சித்தாந்தங்கள் அன்றி வேறென்ன?
வெளியே வந்த பிறகும் புற்றுநோயாளர்களுக்காய் தனது முடியை தானம் செய்ததாகட்டும், அதே சிரிப்போடும் வாஞ்சையோடும் “I love you guyz” என்று சொல்வதாகட்டும், “இன்னா செய்தாரை ஒருத்தல், அவர்நாண நன்னயம் செய்துவிடல்” என்று தனது ரசிகர்களை தனக்கு அநீதி இழைத்தவர்கள்மீது கோபப்பட வேண்டாம் என்று சொல்லும் பெருந்தன்மையாகட்டும், ஓவியா சொல்வதுபோல் “True love never fails” என்றே எமக்கும் சொல்கிறது
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இத்தனை நாளாகியும், ஓவியாவை மக்கள் மறந்ததாக இல்லை. மறுபடியும் ஓவியா வீட்டினுள் வரமாட்டாரா என்ற ஏக்கமும், ஓவியாவை திட்டமிட்டு தனிமைப் படுத்தியவரல் அதற்காக வருந்த வேண்டும் என்கிற ஆதங்கமும், கமல் மீது கொண்ட நம்பிக்கையினால், அவர் இதற்கு சரியான தீர்வை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடனும், இன்னும் ஓவியா ஆர்மி அதிர்வலைகள் கூறிக்கொண்டே இருக்கின்றன.
அதன் ஒரு பிரதிபலிப்பே, நமீதாவும், ஜூலியும், சக்தியும், காயத்திரியும் ஒருவர் பின்னால் ஒருவர் வெளியேற்றப்பட்டனர். மக்கள் ஒவியாவின்மீது வைத்துள்ள அபிமானமே, இவர்கள் அனைவரது மீதும் ஆதங்கமாக வெடித்தது என்பது நிதர்சனம்.
இருந்தும் சாதாரண உலகு ஓர் பெரிய பிக்பாஸ் வீடாகவும், அதில் இன்னும் எத்தனையோ கோடி ஒவியாக்கள் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுமே இதன்மூலம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்! திரையில் பார்த்து ஆஹா என மெச்சும் நாம், நடைமுறையில் நாம் வெறுக்கும் இக்கதாபாத்திரங்களாகவே வாழ்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. கமல் கூறுவதுபோல் இது அவர்களுக்கு மட்டுமல்ல, எமக்குமான பாடம், சுய விசாரணை. எம்மில் எத்தனை ஒவியாக்கள் சமூகத்தால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை சிந்திப்பதுதான் ஓவியாவுக்கு நாம் காட்டும் உண்மையான ஆதரவு!
காலை எட்டுமணிக்கு பாடல் ஒலிக்கும்போது அனாயாசமாக நடனமாடும் ஓவியா இல்லாத பிக்பாஸ் வீட்டை காணச்சகிக்காத கோடான கோடி மக்களில் ஒருவராக நான் சட்டப் பண்ணிக்கொள்கிறேன்!