அழிந்துபோகும் அபாயத்தில் இலங்கையின் யானைகள்

யானைகள் இலங்கைத் திருநாட்டினை உலகுக்கு அடையாளப்படுத்தும் ஓர் அம்சம் என்றால் மிகையல்ல. இலங்கை என்ற உடனே சுற்றுலாப் பிரியர்களுக்கு கண்முன் தோன்றுவது இலங்கையின் யானைகளே. உலகிலுள்ள யானைகளின் பல்வகைமையில் ஆபிரிக்க மற்றும் ஆசிய யானைகள் பிரசித்தம் வாய்ந்தவை. ஆசிய யானைகளிலேயே பெரியதும் கரியதுமானவை இலங்கை யானைகளே!

(timetravelturtle.com)

காது, தும்பிக்கை, முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் நிரப்புள்ளிகளைக் கொண்டவை இலங்கையின் யானைகள். (timetravelturtle.com)

முக்கியத்துவம்

இலங்கையைப் பொறுத்தமட்டில் யானைகள் இந்நாட்டின் கலாச்சார, அடையாள மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக இலங்கையின் தேசிய பூங்காக்களை தரிசிக்க வரும் சுற்றுலாப் பிரியர்களுக்கு இலங்கையின் யானைகளின் காட்சி மறக்க முடியாத ஓர் அனுபவத்தைத் தருவது சிறப்பு.

கண்டிப் பெரஹரா dyperaheraseats.com)

கண்டிப் பெரஹரா dyperaheraseats.com)

யானைகள் இலங்கையின் மத ரீதியான முக்கியத்துவத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. புனித தந்த தாதுவைச் சுமந்துசெல்லும் அலங்கரிக்கப்பட்ட யானை கண்டிப் பெரஹராவின் கண்கொள்ளாக் காட்சி என்றால் மிகையல்ல.

அபிவிருத்திச் செயற்பாடுகள், பயிர்செய்கை மற்றும் குடியேற்ற திட்டங்கள் காரணமாக மேற்கொள்ளப்படும் காடழிப்பின் விளைவினால் தங்களது வாழ்விடங்களை இழந்து இலங்கையின் உலர் வலயங்களான வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் யானைகள், IUCN இனால் 1986 ஆம் ஆண்டிலிருந்து அழிந்து போகும் அபாயமுள்ள விலங்குகளின் பட்டியலில்  உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும்  யானைகளை வேட்டையாடுவது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகும், சட்டவிரோதமாக யானைகளை வேட்டையாடுதல் ஒருவருக்கு மரண தண்டனையைப் பெற்றுக்கொடுக்கவல்லது.

(miracleofasia.lk)

யானை சவாரியில் சுற்றுலாப் பயணிகள் (miracleofasia.lk)

உடவளவை தேசிய பூங்கா, யால தேசிய பூங்கா, லுணுகம்வெஹெர பூங்கா, வில்பத்து  தேசிய பூங்கா மற்றும் மின்னேரிய தேசிய பூங்கா போன்ற பாதுகாக்கப்பட்ட வலயங்கள் மட்டுமன்றி, பாதுகாப்பற்ற வலயங்களிலும் வாழும் யானைகள் ஆசிய யானைகளோடு ஒப்பிடுகையில் இலங்கையிலேயே செறிந்த பரம்பலைக் கொண்டுள்ளன.

யானைகளின் வாழ்க்கை முறையும் உளவியலும்

பொதுவாக யானைகள் ஆறு தொடக்கம் எட்டு வரையான எண்ணிக்கையில் சேர்ந்து கூட்டமாக வாழக்கூடியவை. இலங்கையின் யானைகளைப் பொறுத்தமட்டில் பன்னிரண்டு தொடக்கம் இருபது யானைகள் கொண்ட மந்தைகளாகவே அவை பெரும்பாலும் வாழ்கின்றன. ஒரு முதிர்ந்த பெண் யானையின் தலைமையின்கீழே இக்கூட்டங்கள் இயங்கி வரும் வழக்கம் கொண்டவை.

இக்கூட்டங்கள் வெறும் அமைப்புக்கள் மட்டுமன்று, மாறாக இவை தங்களுக்கிடையில் ஆழமான அன்பையும் உறவுப் பிணைப்பையும் கொண்டவை. யானைகளின் வாழ்வு சிக்கலான சமூக அமைப்பினைக் கொண்டது. தனது இளம்வயதில் பழகிய ஒரு யானையை எத்தனை வருடங்கள் கழிந்தும் இனங்கண்டு உறவாடும் இயல்பு யானைகளுக்குண்டு. மட்டுமலாது, ஆபத்தில் சிக்கியிருக்கும் தனது சகபாடியை இனங்காண்பதும், அத்தோடு நின்றுவிடாமல் அதற்கு உதவிசெய்து காப்பாற்றுவதும் யானைகளின் இயல்பாக உள்ளன.

பின்னவல சரணாலயத்தின் யானைகள் (cdn.inquisitr.com)

பின்னவல சரணாலயத்தின் யானைகள் (cdn.inquisitr.com)

சுவாரஸ்யமான தகவல் என்னவெனில் இலங்கையின் யானைக் கூட்டங்கள் தங்களுக்கான தாதி அலகுகளைக் கொண்டவை. பாலூட்டும் பெண் யானைகள் மற்றும் இளம் குட்டிகள், இளம் பருவ பாதுகாப்பு அலகுகள் போன்ற அமைப்புகளும் இதில் அடங்கும்.

அழிந்து போகும் அபாயம்

ஆபிரிக்க மற்றும் ஆசிய யானைகள் கடந்த காலங்களில் பாரியளவில் அழிந்துபோகும் அபாய நிலைக்கு உட்பட்டுள்ளன. தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் ஆபிரிக்க யானைகள் வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் அழிவை எதிர்நோக்கியிருக்கின்றன. இதனையடுத்து 1989ஆம் ஆண்டில் சர்வதேச ரீதியில் யானைத் தந்த வியாபாரம் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது. இருந்தும் கடந்த பத்து வருட காலப்பகுதியில் இச்சட்டவிரோத வியாபாரம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட யானைத் தந்தங்களை பகிரங்கமாக அழிக்கும் நிகழ்வு. தெற்காசிய நாடுகளில் இவ்வாறான பகிரங்கமானமுறையில் தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவதை எதிர்த்து, சட்டவிரோத யானைத்தந்த வியாபாரத்தை ஒழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட முதல் நாடு இலங்கையாகும் (facebook.com/SriLankaCustoms)

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட யானைத் தந்தங்களை பகிரங்கமாக அழிக்கும் நிகழ்வு. தெற்காசிய நாடுகளில் இவ்வாறான பகிரங்கமானமுறையில் தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவதை எதிர்த்து, சட்டவிரோத யானைத்தந்த வியாபாரத்தை ஒழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட முதல் நாடு இலங்கையாகும் (facebook.com/SriLankaCustoms)

19ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையின் யானைகள் சுமார் 65% வரை அழிவடைந்துள்ளது. தந்தத்திற்காக வேட்டையாடப்படுவதை விட, தங்களது வாழ்விடங்களை இழப்பதாலும், மனிதர்களோடு ஏற்படும் மோதல்களாலுமே அதிகளவான ஆசிய யானைகள் ஆபத்துக்குள்ளாகின்றன.

வாழிடங்கள் அழிக்கப்படல்

இலங்கையின் யானைகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை வாழிடங்களை இழத்தலாகும். அதிகரித்துவரும் காடழிப்பு யானைகளின் இருப்பிடங்களை வெகுவாகக் குறைத்துள்ளது கண்கூடு. தொடர்ந்தும் அபிவிருத்தித் திட்டங்கள், குடியேற்றங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்றவை இப்பிரச்சினையை இன்னும் இன்னும் அதிகரிக்கும்.

மனித குடியிருப்புக்களுக்குள் பிரவேச்க்கும் யானை (series.fountainink.in)

மனித குடியிருப்புக்களுக்குள் பிரவேச்க்கும் யானை (series.fountainink.in)

மனித – யானை மோதல்கள்

தங்களது இருப்பிடங்கள் அழிக்கப்பட்டு குடியேற்றங்களும் பயிற்செய்கைகளும் மேற்கொள்ளப்படுவதால், மனிதர்கள் வாழும் கிராமங்களுக்குள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையும் இதனால் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுவதும் இவ்விருதரப்பினரிடையேயும் இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. சேனைகளில் பயிரிடப்படும் கரும்பு மற்றும் வாழைப்பழங்கள் யானைகள் விரும்பி உண்ணும் உணவுகள் ஆகையால், மனிதனது விவசாய நடவடிக்கைகள் பாரியளவில் சேதங்களுக்கு உள்ளாகி உள்ளன. இதன்மூலம் ஏற்படுகின்ற மனித யானை மோதல்களில் 1997ஆம் ஆண்டில் 126 காட்டு யானைகள் கொல்லப்பட்டன. அதாவது ஒரு வாரத்திற்கு சராசரி 2.4 யானைகள். தற்போதைய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வருடந்தோறும் 6% சதவீதமான காட்டு வாழ் உயிரினங்கள் அழிவுக்குள்ளாகின்றன.

இப்படியே போனால் அழிந்துவிட்ட விலங்குகள் பட்டியலில் எமது நாட்டின் பாரம்பரியம்மிக்க யானைகளையும் சேர்த்துவிடும் அபாயத்தில் எமது நாடு இருக்கின்றது. இது எமது காடுகளின் இயற்கைச் சமநிலையை சீர்குலைக்கும் என்பதும் மறுக்க இயலாத உண்மை. அதிகரித்த சனத்தொகை இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் சிக்கல் நிலையை ஏற்படுத்தினும், எமது எதிர்கால நடவடிக்கைகள் நிலைபேறான வாழ்வாதாரத்தை நோக்கியதாகவே இருத்தல் அவசியம். எனவே காடழிப்பு, மீழ்குடிஎற்றம் மற்றும் அனைத்து மனித அபிவிருத்தி நடவடிக்கைகளும் எல்லைமீறிய ஆக்கிரமிப்புக்களாக இல்லாதவாறு பொறுப்புணர்வுடன் செயற்படுதல் அவசியம், இல்லாதவிடத்து ஆரம்பத்தில் வன விலங்குகளையும் காலக்கிரமத்தில் மனிதகுலத்தையும் அழிவுப்பாதைக்கே அது இட்டுச்செல்லும்.

Related Articles

Exit mobile version