இன்று யானைகள், நாளை மனிதன்

இரயிலில் அடிபட்டு யானை சாவு, ஏன்டா! அவ்ளோ பெரிய இரயில் வரது கூடவா யானைக்கு தெரியாது?, சரி அது இருட்டுல வந்துச்சுனே கூட வச்சுக்கோ சத்தம் கூடவா கேக்காது?.

செய்தித் தாள்களை வாசித்துக்கொண்டே கேட்டான் நண்பன், சரி என்னை கிண்டல் செய்கிறான் என்று நினைத்தால் “மூதேவி” உண்மையிலேயே கேட்கிறான்!.

கர்நாடக மாநிலத்தில் இரயிலில் மோதி இறந்து கிடக்கும் காட்டு யானை (scoopwhoop.com)

சரிடா, இரயிலில் அடிபட்ட யானையை விட்டுறுவோம் இரண்டு நாள் முன்னாடி தண்ணி குடிக்க வந்த குட்டி யானை கெணத்துல விழுந்து செத்துப் போச்சே அத எதுல சேக்குறது. ஹா,ஹா இங்க நமக்கே தண்ணி இல்லையாம் இதுல யானைக்கு எங்க போறது!…

இது என் நண்பனின் தனிப்பட்ட அறியாமை என்று என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை, காரணம் யானைகள் தண்ணீருக்காக  கிராமங்களுக்கு வருவதும் அவை அடிபட்டு இறப்பதும் அதிகரித்துள்ளது.   பெரும்பாலும் அனைத்து ஊடகங்களும் யானைகள் கிராமத்தில் மக்களுக்கு இடையூறு செய்வதாகவும் வயல்களை நாசம் செய்வதாகவும் மட்டுமே குறிப்பிடுகின்றன, ஆனால் யானை மிகவும் நியாபகத் திறன் கொண்ட விலங்கு. தன் வாழ்நாளில் ஒருதடவை பயணம் செய்த பாதையைக் கூட மறக்காது. பின் எப்படி அவை ஊருக்குள் வருகின்றன?.

காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவு யானைகளின் வாழ்விடங்கள் சுருங்கிவிட்டன, தண்ணீர் பஞ்சம் காடுகளையும் வாட்டும்படி நாம் செய்த்ததன் விளைவே இது. இதில் மிக முக்கிய காரணி “யானைகளின் வழித்தட அழிப்பு”  யானைகள் உணவுக்காக பயணம் செய்யும் பாதையை மாற்றாது, அப்படிப்பட்ட யானைகளின் பாதையை சாலைகளாகவும், தண்டவாளங்களாகவும் மாற்றி அந்த பேர்  உயிரை வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். விலங்குகள் ஆர்வலர் ஒருவரிடம் கேட்டபோது கோவை, பழனி பகுதிகளில் மட்டும் 27 யானைகளின் வழித்தடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவே இந்த பகுதிகளில் யானைகளின் சாவு அதிகமாக உள்ளதன் காரணம் என்று சொன்னார்.

யானைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு கற்காலம் முதலாகவே இருந்து வருகிறது. காடுகளில் பாதைகளை உருவாக்கியது யானைகளின் கூட்டங்களே. அதன் பிறகு மனித இன வளர்ச்சியில் யானைகளின் பங்கு அதிகம்!. யானைகளை போருக்கு பயன்படுத்தியதை “கலிங்கத்துப்பரணி”யாக பாடி வைத்தனர். இன்று நாம் பார்க்கும் பல கம்பீர கோவில்களும், கல்லணை போன்றவையும் யானைகள் இன்றி சாத்தியம் இல்லை. “மாடுகட்டி போரடுச்சா மாளாதுனு யானைகட்டி போரடுச்ச மதுரை” போன்ற பல மொழிகள் விவசாயத்திலும் யானைகளின் பங்கு இருந்ததை காட்டுகிறது. மனிதன் காடுகளில் வாழ்ந்த காலத்தில் 90% யானைகளின் வழித்தடங்களை மட்டுமே நம்பி வாழ்ந்துள்ளான்.

யானைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு கற்காலம் முதலாகவே இருந்து வருகிறது. காடுகளில் பாதைகளை உருவாக்கியது யானைகளின் கூட்டங்களே. (intoday.in)

இதுவரை மனிதனால் 40 இலட்சம் யானைகளாவது காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று யானைகளை பற்றிய ஆய்வுகள் சொல்கின்றன. இலட்சங்களில் இருந்த யானைகளின் எண்ணிக்கை இன்று பல மடங்கு குறைந்துவிட்டது. “ஆசியாவில் மொத்தமே 35,000 யானைகள் தான் உள்ளன. அதில் 32,000 இந்தியாவில் தான் உள்ளன. யானைகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். சரி, யானைகளை காப்பதில் நாமக்கென்ன பயன்?, (நாமதான் இலாபம் இல்லாத எதையும் செய்ய மாட்டமே) புலிகள் வாழும் காடுகள் உயிரி செழுமைக் காடுகள் அதாவது எல்லா விலங்குகளும் செழித்து வாழும் காடு என்று பொருள். அது போல “காடு” என்ற ஒன்று இருக்க வேண்டும் என்றால் அதற்கு யானைகள் முக்கியம்.

யானைகள் உயரத்தில் இருக்கும் கிளைகளை உடைத்து உண்ணும் அதனால் சூரிய ஒளி காட்டுக்குள் பரவ உதவுகிறது. யானைகள் உடைத்த கிளைகளை உண்ணும் விலங்குகள் காடுகளில் அதிகம், யானைகளின் மூலம் அதிகப்படியான விதைகள் பரவுகின்றன இதை நிரூபிக்கும் வகையில் யானைகள் அழிந்துபோன ஒரு காட்டில் பல தாவர வகைகள் முற்றிலும் அழித்துபோனதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

யானை நாள் ஒன்றுக்கு 180 – 200 கிலோ உணவும் 150 லீட்டர் தண்ணீரும் பருகும் இதனால் யானைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும். காடுகளில் தண்ணீர், உணவு இல்லாத காரணத்தாலும் வழித்தடங்களை அழித்து, தொழிற்சாலைகளும் சொகுசு பங்களாக்களும் கட்டியதனதும் விளைவாக யானைகள் குடியிருப்புகளுக்குள் வருகின்றன. (ஆமா இந்த குடியிருப்புலாம் “காட்ட” அழிச்சு வந்ததுதானே?) யானைகள் அழிவிற்கு வன மக்கள்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. கண்டிப்பாய் வன மக்களால் வன உயிர்களுக்கு ஆபத்து இல்லை. அவர்கள் அதை தெய்வமாக வணங்குகின்றனர். 59% யானைகள் வேட்டையாடப்படுவதால் இறக்கின்றன. 13% யானைகள் விஷம் வைத்து கொல்லப்படுகிறன, 8% யானைகள் மின்சாரம் தாக்கி இறக்கிறன, 5% யானைகள் இரயிலில் அடிபட்டு இறக்கிறன. 5% யானைகள் மட்டுமே நோய் வந்து இறக்கிறன, இதிலும் மனிதர்களின் பங்கு உண்டு!..

யானை நாள் ஒன்றுக்கு 180 – 200 கிலோ உணவும் 150 லீட்டர் தண்ணீரும் பருகும் இதனால் யானைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும். (srilankaelephant.com)

கோவை பகுதியில் இருக்கும்  பாட்டில் சில்லுகளை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் குழு சுத்தம் செய்வதாய் கேள்விப்பட்டு விசாரிக்கையில், வனப்பகுதியை ஒட்டி இருக்கும் மதுபான கடைகளில் மது பாட்டில்களை வாங்கி வனத்திற்குள் குடித்துவிட்டு பாட்டில்களையும் உடைத்து செல்கிறார்கள். இதனால் அந்த வழியாக வரும் யானைகளின் கால்களில் காயம் ஏற்பட்டு சீழ் பிடித்து பல யானைகள் இறந்தும் உள்ளன, முதல் நாள் மட்டும் சுமார் 600 கிலோ பாட்டில் சில்லுகளை அகற்றி உள்ளனர். இதைப்பற்றி புகார் தெரிவிக்கலாமே? என்ற கேள்விக்கு,

“மதுபானைக் கடைகளை அகற்றுங்கள் என்று ஆட்சியரிடம், மனு குடுத்தோம், வனத்துறை கிட்டயும் மனு குடுத்தோம் எந்த பயனும் இல்ல  அவுங்களுக்கும் பங்கு போய்ரும் போல! இப்டியே போனா மக்கள் ஒன்னு சேந்து அந்த கடையைகளை உடைக்க வேண்டி வரும்

என்று ஆதங்கத்துடன் முடித்தார் . (ஹைவே-ல மூடுன கடைகளை ஊருக்குள்ள திறக்க இடம் தேடுற அரசாங்கம் யானைகள் சாகுதுன்னு கடைகள மூடும்னு நினைப்பதே பகடி தான்)

யானைகள் அழிந்தால் வனம் அழியும், வன அழிவு என்பது ஒரு இன அழிவிற்குச் சமம்!. நமது அடுத்த தலைமுறை யானைகளை காணவில்லை என்றால் அதன்பின் நமது இனமும் மறைந்து போகும். நம் குழந்தைகளுக்கு இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொடுக்க வேண்டும், அதற்கு உதாரணமாய் நாம் இருக்க வேண்டும். அது ஒன்றுதான் இதற்கு வழி. ஏன்டா அப்ப யானைகளுக்காக நாம ஒன்னுமே பண்ணலயா? என்று பாவமாக கேட்டான் நண்பன், ஒன்னே ஒன்னு பண்ணோம் “யானைகளுக்கு பிச்சை எடுக்க கத்து குடுத்தோம்” என்று சொன்னதும் வெடித்து சிரித்தான் நண்பன். அவன் மூடி வைத்த செய்தித்தாளில்  “யானை போன்ற பலம் கொண்ட கம்பி” என்ற விளம்பரம்! இனி விளம்பரத்தில் மட்டும்தான் யானைகளை பார்க்க முடியுமோ என்ற சிந்தனையுடனே எழுந்து சென்றேன் !..

Related Articles

Exit mobile version