2022 ஆண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில், இலங்கையில் காற்றின் தரம் திடீரென வீழ்ச்சியடைந்தது. நாடு முழுவதையும் கண்களுக்கு புலப்படுமாறு புகைமூட்டம் சூழ்ந்திருந்தது. இலங்கையின் பல நகரங்களில் காற்றுத் தரச் சுட்டெண்ணானது (AQI) ஆரோக்கியமற்ற மட்டம் என கருதப்படும் 150-200 மட்டத்தில் காணப்பட்டது. இலங்கையர்கள் மீண்டும் ஒருமுறை வெளியில் முகமூடிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்; தெருக்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டனர். அதேநேரம் நாம் வீட்டிற்குள் சுவாசிக்கும் காற்று மாத்திரம் எவ்வளவு ஆரோக்கியமானது? என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது.
வழி மாசடைதலானது நமது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலில் எத்தகைய தாக்கங்களை உண்டு பண்ணும் என பெரும்பாலான மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள், ஆனால் உட்புறங்களில் உள்ள காற்றின் தரம் நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எத்தனை பேர் கருத்தில் கொண்டுள்ளனர்? நாம் நாளொன்றில் பெரும்பகுதி நேரத்தை நமது வீடுகள், அலுவலகங்கள் அல்லது பாடசாலைகள் என கட்டிடங்களுக்குள்ளேயே செலவழிக்கிறோம். திறந்த வெளிகளில் அல்ல. எனவே, இன்று இது குறித்துப் பேசுவோம்.
IAQ என்றால் என்ன?
IAQ (Indoor Air Quality) என்பது நம் குடியிருப்புகளுக்கு உள்ளேயும் சுற்றிலும் இருக்கும் காற்றின் தரத்தைக் குறிக்கிறது. அதே நேரம் AQI ஆனது, காற்றின் தரத்தை ‘நல்லது’ மற்றும் ‘கெட்டது’ என வரையறுப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. இவ்வளவீடு ‘நல்லது’ (0-50) முதல் ‘அபாயகரமானது’ (301-500) வரையிலான மதிப்பீட்டை உள்ளடக்கிய ஓர் அமைப்பாகும். அடிப்படையில் மதிப்பெண் அதிகரிப்பதென்பது, காற்றின் தரம் மோசமாவதையும் அதனால் உண்டாகும் ஆரோக்கிய பாதிப்புகள் அதிகரிப்பதையும் குறிப்பிடும்.
மோசமான காற்றோட்டத்தினாலேயே மோசமான IAQ உண்டாகிறது. மூடப்பட்ட அறைக்குள் அடைப்படும் காற்றில் ஒட்சிசின் குறைந்து காபனீரொக்சைட்டு அதிகரிக்கிறது. ஆரோக்கியமற்ற வகையில் (40% -60%) ஈரபதனும் அதிகரிக்கிறது, இதனால் சுவர்கள், ஜன்னல் கண்ணாடிகள், மூடப்பட்டப் பேழைகளுள் ஈரலிப்பு உண்டாகிறது. இதன் மூலம் ஒவ்வாமை, கருப்புப் பூஞ்சை, கல்நார், கார்பனோரோக்சைட் மற்றும் ஃபார்மால்டிஹைடு போன்ற இரசாயன மாற்றத்திற்குள்ளாகக் கூடிய சேதனப் பொருட்கள் (Volatile Organic Compounds) தோற்றுவிக்கும் மூலங்களிலிருந்து வரும் மாசுபடுத்தல்களால் IAQ பாதிப்படையலாம்.
மோசமான காற்றின் தரமானது, தூசி ஒவ்வாமையைத் தூண்டுவது போன்ற சிறியளவிலான சிக்கல்களுக்கும், தலைவலி, மூக்கடைப்பு, குமட்டல், அசதி, ஞாபகமறதி போன்றவற்றிற்கும் வழிவகுக்கும், ஆனால் இது மிகவும் தீவிரமான சூழ்நிலைகளில் கார்பனோரோக்சைட் விஷமாதல் போன்ற சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும்.
குறைந்த IAQ இலங்கையர்களை எவ்வாறு பாதிக்கிறது?
துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் மோசமான உட்புற காற்றின் தரம் (IAQ) பற்றிய தெளிவான அறிவு நிலவாமையால் இது நாம் பேச வேண்டிய முக்கிய உரையாடலாகிறது. ஜப்பான் போன்ற நாடுகள் தசாப்தங்களுக்கு மேலாக இதை பின்பற்றுகின்ற நிலையில் இலங்கை மிகவும் பின்தங்கியுள்ளது.
நாட்டிலுள்ள பல குடும்பங்கள் தாங்கள் அறியாமலேயே முதன்மையாக, அடுப்புகள் மற்றும் பிற சாதனங்களில் இருந்து வெளிப்படும் உமிழ்வுகள் போன்றவற்றின் காரணமாக மோசமான உட்புற காற்றுத் தரத்துடன் போராடிக்கொண்டிருக்கலாம். பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, மரங்களை எரித்தல், விலங்குகளின் கழிவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் போன்றனவும் இதற்கு காரணங்களாக அமையலாம்.
மோசமான கட்டிடவமைப்பு மற்றும் முறையற்ற காற்றோட்டம் ஆகியவை புகைகளும், பிற மாசுபடுத்திகளும் உள்ளிடங்களில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கக் கூடும். இவ்வாறான வீடுகளுக்குள் காற்றின் தரமானது குறைய ஆரம்பிக்கும், இது காலப்போக்கில் மேலும் வலுவடையலாம். மாசுபடுத்திகள் கட்டிடத்திற்குள் தொடர்ந்து குவிவதால் உட்புற காற்றின் தரம் வெகுவாக மோசமடையும்.
முறையான காற்றோட்டம் மற்றும் காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்புகள் இல்லாததால், வீடுகளில் மட்டுமில்லாது நாட்டிலுள்ள பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களிலும் இத்தகைய சூழலே நிலவுகின்றது. பற்றீரியா மற்றும் வைரஸ்கள், தூசிப் பூச்சிகள், மகரந்தம் போன்ற இன்ன பிற உயிரியல் அசுத்தங்களைக் கருத்தில் கொள்ளும்போது இத்தகைய நிலை கூடுதல் அபாயங்களை ஏற்படுத்துகிறது.
வீடுகளில் காற்றோட்டத்தை சீராக பராமரிப்பதன் மூலம் காற்றினால் தொற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
நாம் சுவாசிக்கும் காற்றின் தரத்தை எவ்வாறு உயர்த்துவது?
IAQவின் தரத்தை சிறந்தமுறையில் பேணுவதற்கு சீரான காற்றோட்டத்தை உள்வாங்குதலும், வெளியனுப்பதலும் சமனிலைப்பட வேண்டும். சீரான காற்று உள்ளே வரும்போது வெப்பமும் ஈரப்பதமும் அளவாகக் காணப்படும். அதேவேளை போதுமான ஒட்சிசனும் நிலவும். அது நாம் நினைப்பது போன்ற கடினமான செயல்முறை இல்லையென்பதே உண்மை.
IAQஐ சிறந்த வகையில் பேணுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று இயற்கையான காற்றோட்டம். இதன் மூலம் வெளியிலிருந்து வரும் சுத்தமான காற்றின் அழுத்தம் காரணமாகக் கட்டிடங்களின் உட்புறத்திலுள்ள அவசியமற்ற சத்தமும் மாசடைந்தக் காற்றும் வெளியேறும். அத்தோடு பராமரிப்பு மற்றும் இதற்கான செலவும் குறைவு. பழையக் கட்டிடங்களில் பொதுவாக இவ்வாறு காணப்படும். நவீன நகரமயமாக்கலினதும் கட்டட அமைப்புமுறைகளிலும் இயற்கைக் காற்றை உள்வாங்குது அத்தனை எளிதான ஒன்றல்ல.
ஆக அதற்கான மாற்றீடு என்ன? இயந்திரங்களைப் பயன்படுத்திக் காற்றுச்சுற்றோட்டத்தைப் பேணுவதாகும். உதாரணமாக, உயர்ந்த மாடிக்கட்டிடங்களில் காற்றின் உயரழுத்தம் மற்றும் சுற்றோட்டத்தைப் பேண Siracco அல்லது Turbo Fanகளே பயன்படுத்தப் படுகின்றன. அதேபோல இயந்திரங்களைப் பொருத்தி முறையாகக் காற்றோட்டத்தைப் பராமரிப்பதனால் IAQ பாதிப்படைவது குறையும்.
கட்டிட நிர்மாணத் திட்டங்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சுத்தமான காற்றை உள்வாங்குதலும் , மாசடைந்தக் காற்றை வெளியேற்றுதலும் இதிலடங்கும். சில வீடுகளுக்கு இதனால் 24 மணிநேரங்களும் காற்றோட்டத்தைப் பேணக்கூடிய அவசியம் உண்டாகிறது.
தாழ்வுநிலை
2022 டிசம்பரில் இருந்து இலங்கையின் வெளிப்புறக் காற்றின் தரம் மேம்பட்டிருக்கலாம், ஆனால் ஜனவரியில் வெளியான அறிக்கைகள், வரும் ஆண்டில் வெளிப்புறக் காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என்று குறிப்பிடுகிறது – இது குறிப்பாக அதி உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு வெளிப்புறக் காற்றைப் பாதுகாப்பற்றதாக்குகிறது. இதன் தரமானது மேலும் வீழ்ச்சியடையுமெனில் அது பொது மக்களையும் பாதிக்கலாம்.
முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், மோசமான IAQவால் ஏற்படும் அபாயங்களை மக்கள் அதிக சிரமம் அல்லது செலவு இல்லாமல் நிவர்த்தி செய்ய முடியும். இலங்கையர்களைப் பொறுத்தவரை, நாம் வீட்டிற்குள் சுவாசிக்கும் காற்றை பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றுவது, நீண்ட கால அடிப்படையில் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உயர்த்தும்.