மார்கழிப்பனி மாசுப்பனி

மார்கழிப்பனி என்று  சமூக வலைத்தளங்களில் பலர் ஆனந்தமாக பதிவுகளை இட்டவண்ணம் இருக்க, இடியாய் வந்திறங்கியது தான் இந்த செய்தி. நாங்கள் பார்ப்பதும் அனுபவிப்பதும் மார்கழிப்பனி அல்ல; மாசடைந்த புகை. இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் காற்றின் தூய்மைத்தன்மை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. 

வளித்தரச்சுட்டெண் (Air Quality Index – AQI) ஆனது இலங்கையின் பல பாகங்களிலும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. NBRO – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி இலங்கையின் முக்கிய நகரங்களான கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கேகாலை, தம்புள்ளை மற்றும் வவுனியா ஆகிய நகரங்களுக்கு மஜெந்தா மற்றும் ஊதா நிற எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வளித்தரச்சுட்டெண் (Air Quality Index – AQI) படி ஒரு இடத்தில் 0-50 இற்குள் இருந்தால் அங்கு வளி தூய்மையானது சுவாசத்திற்கு ஏற்றது எனலாம். 50 இற்கு மேல் புள்ளி செல்லுமாயின் வளி மாசடைந்துள்ளது என்று பொருள். இன்று (08) இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களின் AQI 180 ஆக பதியப்பட்டுள்ளது. 180 மிக ஆபத்தான வாயு அல்லது சுவாசத்திற்கு ஒவ்வாதது என்று பொருள். அத்துடன் இக்கால நிலையில் லேசான மழைத்தூறலும் இருப்பதால் அதில் நனைவதை முற்றாக தவிர்த்துக்கொள்வது நல்லது. 

வளியில் கலந்திருக்கும் நச்சுப்பொருட்கள் மழை நீருடன் கலந்து புவியை அடைவதால் மிக கவனமாக இருக்கவும். மக்கள் பலரும் இதனை மார்கழிப்பனி என தவறாக நினைத்துக்கொண்டிருப்பதனால் கவனம் கொள்க. “சுவாசம், மற்றும் இதய நோய் உள்ளவர்கள், சிறுவர்கள் வெளியில் உலவுவதை தவிர்க்க. அத்துடன் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொள்க.” என்று சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அணில் ஜெயசிங்ஹ அவர்கள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

அண்மைக்காலங்களில் மக்களின் அதீத வாகனப்பாவனை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின்மையே இதற்கு மூல காரணமாக அமைந்துள்ளது. கொழும்பில் இருந்தே சிவனொளிபாதமலையை பார்ப்பது அதிசயமான நிகழ்வல்ல. ஆனால் சுற்றுச்சூழல் மாசினால் அரிதான நிகழ்வாகிப்போனது. மக்களாய் உணர்ந்து மாறும் வரை வீசும் காற்றில் விஷம் பரவிக்கொண்டே இருக்கும். 

எழுத்து: அபிலாஷ் விஜயகுமரன்

பட வடிவமைப்பு: ஜேமி அல்போன்ஸஸ்

Related Articles

Exit mobile version