கருங் கற்களாலான நீண்ட செவ்வக வடிவிலான பெஞ்ச் போன்ற அமைப்பு, அதில் நெடுகிலும் துளைகளிடப்பட்டிருக்கும், அந்த துளைகளின் மீது ரோமானிய குடிமகன்கள் உற்காந்துகொண்டு, ஊர்க்கதை பேசிக்கொண்டோ, சொந்தக்கதை சோகக்கதை பற்றி புலம்பிக்கொண்டோ மலங்கழிக்கலாம், அந்த கழிவு அப்படியே பெஞ்சின் கீழுள்ள கால்வாய் வழியாக நீர்நிலைகளில் போய் சேர்ந்துவிடும்! ஆம் கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ரோமப் பேரரசில் குறைந்தது இருபதுபேர் ஒன்றாக உற்கார்ந்துகொண்டு மலம் கழிக்கும்வகையில் இப்படித்தான் கழிப்பறைகள் இருந்தன என தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நவீன கழிப்பறைகள் உருவாக்கங்களுக்கு முன்னர் உலகம் பூராவும் மனிதர்களின் கழிவுகள் நீர் நிலைகளில் கலக்கவிடப்பட்டதுடன், பயிர்களுக்கு உரமாக பயன்பட்டிருப்பதனை வரலாறுகள் கூறுகின்றன. மொசப்பத்தோமிய மற்றும் சிந்துவெளி நாகரீகங்களின் அகழ்வாராச்சிகளின்போது கண்டெடுக்கப்பட்ட புதைபடிமங்களின்படி வீடுகளிலிருந்து கழிவுகளை அகற்றும் கழிவுவாய்க்கால்கள் பிரதான பாதையுடன் இணைக்கப்பட்டிருப்பதனை காணலாம். சீனாவில் மலக் கழிவுகள் உடனடியாக அப்புறப்படுத்தப்படவேண்டும் என்பதற்காக பன்றிகள் மிக அதிகமாக வளர்க்கப்பட்டு அப்பன்றிகளுக்கு உணவாக மனித மலம் கொடுக்கப்பட்டதுடன், இரவுவேளைகளில் ஊர்கள் தோறும் மலத்தினை சேகரித்து அவற்றை ஊருக்கு ஒதுக்குபுறமாக குறிப்பிட்ட இடத்தில் கொட்டுவதற்க்கென்றே பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனராம். பாரிசில் ஜன்னல்களில் அமர்ந்தவாறு மலம் கழிக்கும் வழக்கம் இருந்ததாகவும், அதன்போது தவறி வீழ்ந்து மரணங்கள் ஏற்படவே வீட்டில் உள்ள பானைகளில் மலம் கழிக்கப்பட்டு அவை ஜன்னல்கள் ஊடாக வெளியே வீசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
பழங்காலத்து அரண்மனைகளில் அரச குடும்பத்தினர்கள் மலம் கழிக்கும்போது அவற்றுக்கு தண்ணீரை ஊற்றி கழிவிவிடுவதற்க்கென்றே பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனராம். எனினும் ஒழுங்கமைக்கப்படாத இந்த கழிவகற்றல்களால் vibrio cholerae , shigella , salmonella Typhi போன்ற தொற்று நோய்கள் மிக வேகமாக பரவத்தொடங்கியதும், சிறிதுசிறிதாக இதுபற்றிய விழிப்புணர்வு பலரிடத்தேயும் பரவத்தொடங்கியதெனலாம். அந்த சமயத்தில்தான் (1860) லூயிஸ் பாஸ்டர் எனும் அறிவியல் அறிஞர் வைரஸ், பாக்டீரியா போன்ற வெறுங் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரிகள் இயற்கையாகவே தாம் பெற்றுள்ள ஆற்றலால், மரபணு மாற்றத்தால் புதுப்புது வடிவம் எடுப்பதோடல்லாமல் ,அவை புதிய புதிய வகையில் தொற்றத் தொடங்கி கட்டுமீறிப் பரவுவதை, பெருகுவதை கண்டுபிடித்தார்.
காலப்போக்கில் இங்கிலாந்து அரண்மனையில் மூடியுடன் கூடிய மரத்திலாலான பெட்டிகள் (Chamber Pot) மலம் கழிப்பதற்க்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு , பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. எது எப்படியோ தற்கால நவீன டொய்லெட்டுக்களின் உருவாக்கத்தில் முன்னோடியாக இருந்தவர் முதலாம் எலிசபெத்தின் கணவர் சர் ஜான் ஹாரிங்டன் (Sir John Harrington) என்பவரே . இவர் தனது மனைவியான முதலாம் எலிசபெத்திற்காக உருவாக்கி பரிசாக கொடுத்த (modern flush toilet) டொய்லெட்டினை முன்மாதிரியாகக்கொண்டே பின்னாளில் வெஸ்டர்ன் டொய்லெட்டுக்கள் உருவாக்கப்பட்டதாம் .
கழிவுகளுக்கான உள்கட்டமைப்பென்பது (Sewage collection and disposal system) மனித நாகரீக வளர்ச்சியில் மிகவும் முக்கியமானவொன்று எனலாம் . எனினும் இன்றும்கூட உலகளவில் இரண்டு பில்லியன் மக்கள் காழிப்பறை வசதிகளேதுமின்றியும், 2.2 பில்லியன் மக்கள் முறையான கழிப்பறைக்கான வடிகாலமைப்புக்களின்றியும் ஏராளமான தொற்றுநோய்களுக்காளாகி வருகின்றமை கவலைக்குரியவொன்றே.