கடந்த பத்தாண்டு காலத்தில் உலகம் முழுவதும் கடல் நீரின் மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 3.6 மில்லி மீட்டர் என்ற கணக்கில் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நீரின் வெப்பநிலை அதிகரிக்க, அதிகரிக்க அதன் பரும அளவு அதிகரிப்பதே இதுபோன்ற மாற்றங்களுக்கு மிகப் பெரிய காரணமாக உள்ளதுடன், இத்தகைய கடல்நீர் மட்டம் உயர்வு காரணமாக உலக வரைபடத்திலிருந்த பல தீவுகளும், நாடுகளும் காணாமல் போய்க்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் ஏற்கனவே அழிந்துபோன ஏராளமான தீவுக்கூட்டங்களுடன், இந்த தீவும் ஒருகாலகட்டத்தில் உலகவரைபடத்திலிருந்து இல்லாமல் ஆகிவிடும் என்கின்ற எச்சரிக்கைக்குள்ளாகியுள்ள ஓர் தீவு பற்றியே இன்று நாம் பார்க்கவிருக்கின்றோம்.
ஆம் , சினிமா பிரபலங்கள் , விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என வசதி படைத்தவர்கள் பலரின் பொழுதுபோக்குத் தலங்களின் பட்டியலில் இந்த நாடு இருக்கும்! ஒருமுறையாவது இங்கு சென்றுவிடமாட்டோமா என்ற சாமானியனின் ஏக்கத்திற்குப் பின்னாலும் இந்த நாடு இருக்கும். இந்திய பெருங் கடலில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தென் மேற்கில் சிதறிக் கிடக்கும் மாலைத் தீவுகள்தான் அந்த நாடு! உலகெங்கும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கனவான நிலப்பரப்பாக, பார்க்கும் திசையெங்கும் அழகிய கடல், நெஞ்சைக் கவரும் இயற்கைக் காட்சிகள், ஆடம்பர தங்கும் விடுதிகள், உலக தரத்திலான நீர் விளையாட்டுகள், ஆழ்கடல் நீச்சல் (scuba diving), கடலுக்கடியிலான உணவகங்கள் என சுற்றுலா பயணிகளுக்குப் பிடித்தமான குட்டித்த தீவாக மிளிர்கின்றது என்றால் மிகையில்லை.
90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவில் மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் இருநூறு தீவுகளில் மாத்திரமே மனிதக் குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் “மாலத்வீப”(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுவதோடு, வேறு சிலரின் கருத்துப்படி “மகால்” என்ற அரபு சொல்லே மருவி மாலைதீவு என்றானதாக கூறப்படுகின்றது. மாலத்தீவு குட்டி நாடாக இருந்தபோதிலும் இந்த நாட்டுக்கென்றே தனிப் பாரம்பரியம் உள்ளது. கடலுக்குக் கீழ் ஒரு நீண்ட மலைத் தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அங்கு வழங்கப்படும் மொழி, கலாசார, வாய்மொழி ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே அதாவது கி.மு. 300-ல் மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் நிரூபணமாவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் “கிராவரு” என்ற தமிழர்கள் அங்கு ஆட்சி புரிந்ததாகவும், பின்னர் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் சோழர்களது ஆட்சியின் கீழ் நீண்ட காலமாக மாலத்தீவு இருந்துள்ளதுடன் பின்னாளில் சிங்களவர்கள் மாலத்தீவை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். மாலைத்தீவின் வரலாற்றின்படி சிங்கள இளவரசன் கொயிமலா என்பவர் தனது மனைவியான இலங்கை அரசனின் மகளோடு கப்பலில் செல்லும் போது சதுப்பு நிலத்தில் கப்பல் சிக்கி அவர்கள் மாலைத்தீவில் தங்கும்படியானபோது, அவ்விளவரசன் இலங்கைக்கு திரும்பாமல் மாலைத்தீவிலிருந்து ஆட்சி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது .அப்போது, அங்கு பரவலாக புத்த மதம் பின்பற்றப்பட்டுள்ளது.
காலவோட்டத்தில் , கிழக்குப் பகுதிகளுக்குச் சென்ற அரேபிய வணிகர்கள், தங்கள் பயணத்தின் நடுவே மாலத்தீவில் தங்கிச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். அராபியர்களுக்கு மாலத்தீவு மிகவும் பிடித்து போய்விடவே , அங்கு தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி ஆட்சியில் அமர 1153-ம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை இத்தீவில் உருவானது . அங்குள்ள மக்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக மாறத்தொடங்கினர் . ஆய்வுகளின்படி கிமு 2000 காலப்பகுதியிலேயே மாலைத்தீவு கடல் வழி வியாபாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே மாலைத்தீவின் முதல் குடிகளாக இருந்ததாகவும் , இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் மக்கா நோக்கிப் பாராமல் கிழக்கு நோக்கியே காணப்படுகின்றமை இதற்கு ஒரு சான்றாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. கட்டிடப் பொருள் தட்டுப்பாடு காரணமாகப் புதிய கலாச்சாரங்கள் தோன்றும் போது பழைய கலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்திம் மீதே புதிய கட்டிடங்கள் எழுப்பட்டன. இதனால் இப்பள்ளிகள் முன்னைய சூரிய வணக்க கோவில்கள்மீது எழுப்பப்பட்டன எனக் கருதபடுகின்றது.
பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றதுடன் 1968 இல் சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத் தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நாட்டின் பொருளாதாரத்தினை பொறுத்தவரையில் மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை கோலோச்சுவதுடன் குடிசைக்கைத்தொழில்களும் பரவலாக கைக்கொள்ளப்படுகின்றன. பாரம்பரியமான நீண்ட வரலாற்றினையும், சுற்றுலா சிறப்புக்களையும் கொண்டிருக்கும் இந்த மாலத் தீவுகளைப் போல வேறு எந்த நாடும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்றும் கூறவேண்டியுள்ளது. அதன் ஆடம்பரமான கடற்கரை சொகுசு விடுதிகள் உலகப் புகழ் பெற்றவையாக இருக்கின்றபோதிலும் அதன் 1200 தீவுகள் கடல்மட்டத்திற்கு ஒரு மீட்டர் உயரத்திலேயே உள்ளன. அதில் 80 சதவீத பகுதிகள், உயரும் கடல்மட்டத்தால் அவற்றின் இருப்பே கேள்விக்குறியாகி இருப்பதுடன் இத்தீவில் வசிக்கும் சுமார் ஐந்து இலட்சம் மக்களின் உயிர் உடமை பற்றிய அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தியுள்ளதெனலாம்.
கடலில் மூழ்கிப் போதல் என்ற நீண்டகால அச்சுறுத்தல் உள்ளதால் பூமியில் மிகவும் ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் மாலைதீவு இடம்பெற்றுள்ளதுடன் கடலோர அரிப்பு அதிகரித்து வருவதால் 70 சதவீத கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது. (கடலோரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள வீடுகள், இதர கட்டடங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு இந்த அபாயம் உளளது) அதுமட்டுமன்றி உப்பு நீர் உள்ளே வருவதால் தூய்மையான குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதும் கவலைக்குரியதாகியுள்ளது. அத்துடன், முன்கூட்டியே கணிக்க முடியாத இயற்கைப் பேரழிவுகள் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் கடந்த 2004 சுனாமியில் இத்தீவில் ஏற்பட்ட அழிவுகள்.