பெண்ணைத் தெய்வமாகக் கருதி பாரத மாதா என்று புகழ்ந்து பாடும் இந்தியா, அதே பெண்களுக்கு எதிராகக் காலம்காலமாக நடத்திய வன்கொடுமைகளில் ஒன்றுதான் சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதல். கி.மு. 3-ம் நூற்றாண்டில் இருந்தே இந்தியாவில் சதி நடைமுறை இருந்ததாக கூறப்படுகின்றது. அந்தக் காலங்களில், கால்நடைகளைப் போலவே பெண்ணும் ஆணுக்கான உடைமைப் பொருள். ஆகவே, கால்நடைகளை யாகத்தில் பலி கொடுப்பதுபோல பெண்ணையும், அதன் உரிமையாளன் இறந்துபோன பிறகு பலி கொடுத்தனர் என்றுகூட கூறலாம்.
இப்படி உயிரோடு கொல்லப்பட்ட பெண்களுக்கு நினைவுக்கல் வைத்து வழிபடப்பட்டதனால், கொஞ்ச காலத்தில் அவள் ‘சதி மாதா’ என்கிற சிறுதெய்வமாக மாறிப்போனாள். இப்படியான சதி மாதாக்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிறைய இருக்கின்றனர் தமிழகத்தைவிட என்பதே உண்மை. கிரேக்க வரலாற்று அறிஞரான அரிஸ்டோபுலஸ்சின் குறிப்பின்படி வயோதிபர்களுக்கு மணம்முடித்துக்கொடுக்கப்பட்ட ஏழு, எட்டு வயது சிறுமிகள்கூட சதிக்கு உள்ளாகி உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவங்கள் இந்தியாவில் நடந்து இருக்கின்றன என்பதோடு ஜுகி என்ற நெசவாளர்கள் இனத்தில் உயிரோடு எரிப்பதற்குப் பதிலாக பெண்ணைக் கணவனோடு சேர்த்து மண்ணுக்குள் புதைத்துவிடும் வழக்கம் இருந்துள்ளதென்பது மிகப்பெரிய அதிர்ச்சி.
இவ்வாறு பெண் பலி கொடுக்கப்படுவதால் ஆணுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கை இருந்ததாக கருதப்படுவதோடு, கணவனை இழந்த பெண், வேறு ஆணோடு பழகிக் குழந்தை பெற்றுவிட்டால் இனத் தூய்மை அழிந்து போய்விடும். எனவே, அவளைக் கணவனோடு சேர்த்துக் கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணமும் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்ததாக கூறப்படுகின்றது. அதுமட்டுமன்றி பெண் கல்வி, பெண் தொழில் உரிமை, பெண்ணுக்கான சொத்துரிமை என எதுவுமே அற்ற அன்றைய காலகட்டத்தில், பெண் என்பவள் தந்தை, தனயன், கணவன், மகன் என்கிற ஆண் தலைமைகளை சார்ந்தே வாழவேண்டிய கட்டாயம் இருந்ததனால் , திருமணத்திற்குப்பின் கணவன் இறக்க நேரிட்டால், அவளது பராமரிப்பு என்பது சிக்கலாகிவிடும் என்கிற அடிப்படையிலும் பெண் கொல்லப்பட்டால் என்பதே யதார்த்தம்.
உடன்கட்டை ஏறும் பெண்ணின் கணவன் குடும்பத்து தந்தை வழி,பெண்ணின் தாய் வழி என மூன்று தலைமுறையினர் செய்த பாவங்களை எல்லாம் உடன் கட்டை ஏறுதல் மூலம் போக்கி விடலாம் என்று உருவாக்கப்பட்ட நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டும், கணவனை இழந்த பெண்கள் உயிரோடு இருந்தால் பழியும் பாவமும் சாபக்கேடும் வரும் என்ற நம்பிக்கையைகொண்டும் சதி முறை கையாளப்பட்டது என்றுகூட கூறலாம்.
உடன்கட்டை ஏற மறுக்கும் பெண்களின் உணர்வுகளை அழிக்க அபின் போன்ற போதைப்பொருட்களைத் கொடுத்து மயக்கத்தில் தள்ளாடும் பெண்ணை சிதையில் கணவனுடன் கட்டிவைத்து எரியும் போது எழுந்து ஓடாமல் தடுக்க மயானத்தில் இருவர் கட்டையை வைத்து அடித்து சிதையில் தள்ளிவிடுவதற்கும், அவளது அலறல் கேட்காமல் இருக்க கொட்டு மேளம் அடித்து சதியை நிறைவேற்றுவதற்குமென்றே சிலர் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது எவ்வளவு குரூரமானது இல்லையா?
உடன்கட்டை ஏறுதல் என்பதனை “சதி” என அழைப்பதன் காரணம் என்ன?
தக்ஷனின் மகளான சதி தேவி தனது தந்தையின் யாகத்தில் தன் கணவனுக்கு ஏற்பட்ட அவமானம் தாளாது அக்னிக்கு தன்னை இறையாக்கிக்கொண்டாள். இதன் தாக்கமாகவே சதி எனும் பெயருடன் உடன்கட்டை ஏறும் வழமை கைக்கொள்ளப்பட்டது. மேலும் சமஸ்கிருத சொல்லான सती (sati) எனும் சொல்லின் பொருள் நல்ல மனைவி என்பதாகும். எனவே நல்லதொரு மனைவியின் அடையாளமாக இந்த உடன்கட்டை ஏறும் வழமை பிற்காலத்தில் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்கிற கருத்தும் உண்டு.
தர்ம சாஸ்திரங்கள் மற்றும் ரிக் வேதத்தில், கருடபுராணத்தில், விஷ்ணு புராணம்,விஷ்னுஸ்மிருதி,காதிக்காண்டம் என அனைத்தும் சதியை போற்றி புகழ்கின்றன.மணிமேகலை கூறும் கணவன் இறந்தவுடன் உயிரை விடும் தலையாய கற்பு,தீப்பாய்ந்து இறக்கும் இடையாய கற்பு,கைம்மை நோன்பு நோற்கும் கடையாய கற்பு எனும் வகையறாக்கள் பற்றி எழுதும்போதே பற்றிக்கொண்டு வருகின்றது ஆத்திரம் என்றால் மிகையாகாது.
சதிக்கு எதிராகப் போராடியவர்களில், ராஜாராம் மோகன்ராய் மிக முக்கியமானவர். இவரது சகோதரர் இறந்துவிடவே அவரது மனைவி சதிச் சடங்கில் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் மோகன்ராயின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து, சதிக்கு எதிராகத் தீவிரமாக போராடத் தொடங்கினார். இதற்காக, ஒவ்வொரு நாளும் கல்கத்தாவின் மயானத்துக்கு தனது ஆட்களுடன் சென்று சதி நடைபெறுகிறதா என்று கண்காணித்ததோடு, அதை ஒழிப்பதற்கான தடைச் சட்டத்தை உருவாக்கவும் முனைப்புடன் செயல்பட்டார்.
1829- ல் வங்காள கவர்னர் பெண்டிங், சதியை முற்றிலும் ஒழிப்பதற்கான சட்டத்தை முன்மொழிந்தார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வங்காளத்தின் பிரபுக்கள் இங்கிலாந்து அரசிடம் மேல்முறையீடு செய்தனர். ஆனால், 1832-ல் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது என்பதுடன் பெண்களின் மீதான இந்த வன்முறை ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தன எனலாம்.