Roar தமிழின் Sports Roundup – அரையிறுதியில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 12, குழு ஒன்றில் நடந்த 37 ஆவது போட்டி நியூசிலாந்து எதிர் அயர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரில் அரை இறுதிக்கு முதல் அணியாக தன்னை பதிவுசெய்து கொண்டது.

அடிலெய்ட் , ஓவல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி, களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, 20ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றது. வில்லியம்சன் 61 ஓட்டங்களையும் பின் அலென் 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று அணிக்கு வலு சேர்த்தனர்.

அயர்லாந்து பந்துவீச்சில், ஜோசுவா லிட்டில் 3 விக்கெட்டுகளையும், டிலேனி 2 விக்கெட்டுகளையும் மார்க் அடாயர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர். தொடர்ந்து 186 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை சந்தித்தது.

புகைப்பட உதவி – indiatoday

வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்

அதேபோன்று, தொடரின் 38 ஆவது போட்டியும் நேற்று அடிலெய்ட் மைதானத்தில் அவுஸ்ரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியா வெற்றிபெற்றது. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பையே தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலியா, 20 ஓவர்களுக்கு8 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும் மிட்செல் மார்ஷ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மறுமுனை பந்துவீச்சில் வீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் பாரூக்கி 2 விக்கெட்டுகளையும் முஜிப் உர் ரஹ்மான் மற்றும் ரஷித்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

169 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்று போராடித் தோற்றது. இப்போட்டிகள் இரண்டும் இலங்கை கிரிக்கெட் அணியின் அரையிறுதி முன்னேற்றத்திற்கு முக்கியமான ஒன்றாக அமைந்தபோதிலும் முடிவுகள் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தவாறு அமையவில்லை.

புகைப்பட உதவி – sports.ndtv.com

இங்கிலாந்தை வெல்லுமா இலங்கை?

இன்று இலங்கை அணி இங்கிலாந்து அணியுடன் மோதுகின்றது. குறிப்பாக இப்போட்டியில் இலங்கை வெற்றிபெறுமானால், இங்கிலாந்து வெளியேறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிட்டும். அதனால் இலங்கை வெற்றிக்காக இலங்கை ரசிகர்கள் மாத்திரமின்று ஆஸ்திரேலிய ரசிகர்களும் பிரார்த்தனையோடு எதிர்பார்த்திருப்பார்கள். இங்கிலாந்தை பொறுத்தவரையிலும் துடுப்பாட்டத்திலும் சரி பந்து வீச்சுலும் சரி பலம் வாய்ந்த அணியாகவே காணப்படுகின்றது. அதேபோன்று சிட்னி ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதமாக அமையும் என்பதால், இலங்கையின் ஹசரங்க மற்றும் தீக்‌ஷன சவாலாக அமைவார்கள் என்ற கணிப்பும் காணப்படுகின்றது.

எது எப்படியோ இதுவரை 13, டி20 போட்டிகளில் இந்த இரண்டு அணிகளும் மோதியுள்ளன அதில் இங்கிலாந்து 9 போட்டிகளிலும், இலங்கை 4 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. குறிப்பாக 2014 இற்கு பின்னர் இலங்கை இங்கிலாந்தை வீழ்த்தியதில்லை என்பதும் கூட சுட்டிக்காட்டப்படத்தக்க விடயம்.

சாதனை படைத்தார் ஜோஷ் லிட்டில்

ஒரே களம் ஏராளக் கனவுகள் என்றபடி போட்டிகள் முடிவுகள் வெற்றி தோல்விகள் என்பதையும் தாண்டி இனிவரும் காலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கின்றது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். போட்டியின் 19 ஓவரில் கேன் வில்லியம்ஸன், ஜேம்ஸ் நீஷாம், மிச்செல் சென்ட்னர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் தலைவர் பதவியை ராஜினாமா

அதேபோன்று ஆப்கானிஸ்தான் அணியின் நேற்றைய தோல்வி அந்த அணியின் எதிர்கால கிரிக்கெட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாய் அமைந்து விட்டது. தோல்வியோடு இம்முறை டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேருகின்றது. அத்தோடு அந்த அணியின் தலைவர் மொஹம்மட் நபி தன் பதவியை துறப்பதாக அறிவித்துவிட்டார். இதற்காக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “ஆப்கானிஸ்தான் அணியின் டி20 உலக கோப்பைப் பயணமானது முடிவுக்கு வந்துவிட்டது. நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. போட்டிகளின் முடிவுகளால் ரசிகர்களை போலவே நாமும் விரக்தி அடைந்துள்ளோம். கடந்த சில சுற்றுப்பயணங்களின் போது அணி நிர்வாகம், தேர்வுக் குழுவிற்கும் எனது முடிவுகளிலும் வேறுபாடு இருந்துள்ளது. இது அணியின் சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமைந்தது. எனவே, தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என்றபோதிலும் அணி நிர்வாகம் விரும்புமிடத்து , ஒரு வீரராக தொடர்ந்தும் விளையாட தயாராக இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

மீண்டும் உச்சத்தில் விராட் கோஹ்லி

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீர வீராங்கனைகளை மாதம் தோறும் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய வீரரை தேர்வு செய்து கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஐசிசி விருதை அறிவித்து வருகிறது. அதன்படி ஒக்டோபர் மாத விருதுக்கான பரிந்துரைப்பு பட்டியலை ஐசிசி வியாழக்கிழமை (03) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் விராட் கோஹ்லி, சிறந்த வீரர் பரிந்துரை பட்டியலில் முதன் முறையாக இடம்பெற்றுள்ளார். இவர் தவிர தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. fடந்த காலங்களில் விராட் கோஹ்லி பல்வேறு மட்டத்தில் இருந்தும் பல விமர்சனங்களை எதிர் கொண்டிருந்தார் என்பது இங்கு நினைவு படுத்த வேண்டிய ஒன்றாகும்.

புகைப்பட உதவி – cricketaddictor.com

அரையிறுதி போட்டிகளில் மழை குறுக்கிட்டால் என்ன செய்வது?

நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் மழை தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. பல போட்டிகளின் முடிவு, புள்ளிகள் மழையினால் மாற்றியமைந்தது உதாரணமாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் புள்ளிகளை இழக்கும் நிலை ஏற்பட்டதை குறிப்பிடலாம். இப்படியான நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையோடு சுப்பர் 12 சுற்றுகள் நிறைவடைந்து, நொக்அவுட் (knockout) சுற்று ஆரம்பமாகின்றது. மழை சூழலில் போட்டியை நடத்திய காரணம் ரசிகர்களிடையே கண்டனத்தை ஏற்படுத்தியும் இருந்தது. இதன்காரணமாக அரையிறுதி போட்டிகளின் போது மழை இடையே வந்தால் எப்படியான தீர்மானங்களை மேற்கெள்ளவேண்டும் என்பது தொடர்பில் ஐசிசி திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளது.

மழையால் போட்டி பாதிக்கப்பட்டால், ஆட்டத்தை கைவிடாமல் மீண்டும் மாற்று தேதியில் போட்டியை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. மேலும், இதனால் இரு அணிகளுக்கும் வெற்றி, தோல்வி வாய்ப்புகள் காணப்படுவதால், இரு இன்னங்சிகளிலும் 10 ஓவர் வீசப்பட்டு இருந்தால் மாத்திரமே ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்ட போதிலும் டக்வொர்த் லூயிஸ் முறை (duckworth lewis) அமல்படுத்தப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இல்லையென்றால் போட்டி நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கும் என ஐசிசி முடிவுசெய்துள்ளது.

இலங்கையில் தொழில்முறை குத்துச் சண்டை போட்டிகள் ஆரம்பம்

கிரிக்கெட்டின் நிலைமை இவ்வாறு இருக்க, இலங்கையில் முதல் தடவையாக சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகள் நடத்த அனைத்து ஆயத்தபாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Countdown to the Middle East Crown Series 05 என்ற பெயரில் எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி முதல், கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் இத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. டுபாயை பிரதானமாக கொண்டு இயங்கும் DJMC Events Dubai நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதிபருமான டன்ஸ்டன் போல் ரொசைரோ இந்த முயற்சியை ஏற்பாடு செய்கின்றார்.

இலங்கை, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த 18 குத்துச்சண்டை போட்டியாளர்கள் பங்கேற்கும் இப்போட்டித் தொடர் இதற்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் சில வருடங்களாக நடத்தப்பட்டுவந்தது , அதனைத்தாண்டி வெளியே இப்போட்டிகள் நடத்தப்படவிருப்பது இதுவே முதல் தடவையாகின்றது. பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்வதற்கு இது உதவும் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இளம் சதுரங்க வீரர் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றார்

இந்த வாரம் குறிப்பிட்டு கூறவேண்டிய முக்கிய சம்பவங்களில் இந்தியாவின் முன்னணி அதேசமயம் இளம் சதுரங்க வீரரான பிரக்ஞானந்தா பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் செம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று இந்த வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை செஸ் செம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியையும் இவர் பெற்றுள்ளார்.

புகைப்பட உதவி – scroll.in

FIFA 2022 பிரிவுகளும் அணிகளும்

அதேபோல டி20 உலகக் கிண்ணத் தொடரை விடவும் பலத்த எதிர்பார்ப்பையும் ஆவலையும் ஏற்படுத்துவது FIFA 2022 உலகக்கோப்பைத் தொடர்தான். அது எதிர்வரும் 20 திகதி ஆரம்பமாகவுள்ளது . கட்டார் இம்முறை இத் தொடரை நடத்துகின்றது என்பது அறிந்தவிடயம். பல்வேறு மட்டத்தில் இருந்தும் கட்டார் இதனை நடத்துவதற்கும், அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தாலும் கூட, இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளை காண உலகம் முழுவதிலும் சுமார் இருந்து 15 லட்சம் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிகளுக்காகவே புதிய மைதானங்களை நவீனமயமாக கட்டார், கட்டமைத்துள்ளது. மேலும் 100இற்கும் அதிகமான புதிய விடுதிகள், ஒரு புதிய மெட்ரோ, புதிய சாலைகள் ஆகியவையும் அதிக செலவில் கட்டமைக்கப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் முதல் முறையாக பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது.





புகைப்பட உதவி -fifa.com

32 அணிகள் பங்கேற்கும் 22ஆவது உலக கோப்பை தொடர் இதுவாகும். இத் தொடருக்காக தகுதி பெற்றுள்ள அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன. A பிரிவில் கட்டார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து, B பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ், C பிரிவில் ஆர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து, D பிரிவில் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, ஆஸ்திரேலியா, E பிரிவில் ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான், கோஸ்டாரிகா, F பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா, G பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிஸ்சர்லாந்து, கேமரூன் H பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Related Articles

Exit mobile version