சமுத்திரகுமாரி எனும் சாகசக்காரி!
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரமும் கதையோட்டத்துக்கு மிகவும் அழகாக, அவ்வந்த பாத்திரங்களுக்கு ஏற்ப நளினத்தோடு வலிமையும் சேர்ந்து நாவலுக்கு ஆளுமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.
இந்த நாவலில், நாவலின் மற்ற பெண் கதாபாத்திரங்களிலிருந்து பூங்குழலி தனித்து நிற்கிறாள்.குந்தவை, வானதி, மணிமேகலை, நந்தினி ஆகிய இளவரசிகள் சக அரச குடும்பத்தினர் ,வேலைக்காரர்கள், தோழிகள் சூழ்ந்த அரண்மனையில் வாழ்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்க காவலர்களும், அவர்களை அழைத்துச் செல்ல பல்லக்குகளும் , யானைகளும் உள்ளன. அவர்கள் கவலைப்பட அரசியல், அரண்மனை சூழ்ச்சிகள், கூட்டணி, ராஜ்யத்தின் அரசியல் சூழ்நிலை மற்றும் பழிவாங்குதல் போன்ற கனமான விஷயங்கள் உள்ளன.
இளையபிராட்டி குந்தவையின் மதிநுட்பம் நம்மை வியக்க வைக்கும் நந்தினி தேவியின் எழில் நம்மை மதிமயங்கவைக்கும் அதே வேளை அவரது வஞ்சம் சிறிது மிரளடிக்கவும் செய்யும். வானதியின் குறும்பும் மழலைத்தனமும் நம்வீட்டு கடைக்குட்டியாக நினைவூட்டும். இவ்வுணர்வுகள் அனைத்தினதும் கலவையாக பூங்குழலி எனும் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும் எனலாம். முழுக்க முழுக்க அரச குல மங்கையர் ஆதிக்கம் செலுத்தும் இச்சோழ கதையில் சாதாரண படகோட்டி பெண் தனித்து மிளிர மேலும் பல காரணங்கள் உள்ளன.
யார் இந்த பூங்குழலி?
கோடிக்கரை பகுதியில் வாழ்ந்த கோடிக்கரை குழகர் கோவிலில் புஷ்பா கைங்கரியம் செய்யும் தியாகவிடங்கரின் மகள் தான் இந்த பூங்குழலி. அண்ணன் முருகப்பனுடன் இணைந்து படகோட்ட கற்றுக்கொண்டவள். ஊமைதேவி மந்தாகினி தேவியின் மருமகள். சேந்தன் அமுதனின் மனைவி.
பெயரை போன்றே இவளும் அழகி. துடுக்கானவள் மனவலிமையுடன் வியக்க வைக்கும் உடல் வலிமையும் கொண்டவள். மீன்வால் ஆயுதம் கொண்டு சிறுத்தைப்புலியை கொன்ற கதையை ஏதோ செடியில் பூ பறித்தது போன்ற தொனியில் கூறி வல்லவராயனை திகைக்க செய்தவள். இயற்கையை யாசிப்பவள். கூந்தலில் எப்போதும் ஏதேனும் பூ ஒன்றை சூடியிருப்பாள். கரையொதுங்கும் சங்குகளும் சிப்பிகளுமே அவள் கழுத்தை ஆரமாக அலங்கரிக்கும்.
இனிமையாக பாடக்கூடியவள். பொன்னியின் செல்வன் நாவலில் நம் சமுத்திர குமாரியின் அறிமுகம் சேந்தன் அமுதன் தன் மாமன் மகள் குறித்து வல்லவராயனிடம் விளிப்பதுடன் ஆரம்பித்தாலும் அவளின் சரியான அறிமுகம் “அலைக்கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல் தான் பொங்குவதேன், நிலமகளும்துயிலுகையில் நெஞ்சகம் தான் விம்முவதேன்” என்றே ஆரம்பிக்கும். வல்லவராயன் கோடிக்கரையில் பூங்குழலியை சந்தித்தது முதல் அவள் நாயகனின் புகழை விஞ்சும் அளவுக்கு நம் மனதை ஆட்கொள்ள ஆரம்பிக்கிறாள்.
இவளுக்கு மனிதர்களின் நட்பில் நாட்டமில்லை, தனிமையும் கடலுமே தோழர்கள். பேசிக்கொண்டே அடுத்த நொடி சிந்தனையில் ஆழ்ந்துவிடும் சுபாவம் கொண்டவள் இதனாலேயே இவள் பித்து பிடித்தவளோ என பலநேரங்களில் தோன்றவைப்பவள். அவளது பாடல்களில் எப்பொழுதும் சொற்களுடன் ஏதோவொரு சோகமும் சேர்த்து கோர்க்கப்பட்டிருக்கும் வந்திய தேவனைப் போலவே வாசகர் நாமும் இந்தப் பெண்ணின் மனதை கண்டறிய போராடவேண்டியுள்ளது .
சதுப்பு நிலங்களின் சூடான குமிழ்களை ஏன் தன் காதலர்கள் என்று அழைக்கிறாள்? அவள் இதயத்தில் மறைத்து வைத்திருக்கும் துக்கம் என்ன? எதற்காக இந்த சோக கீதங்கள்? அவள் மனதில் என்ன சோகமோ , கடலின் ஆழம் குறித்து தற்சமயம் அலசுவதாயில்லை.
அவள் படகில் கடல் வழியாக தான் நினைத்த நேரமெல்லாம் திரிகிறாள். சுதந்திரமானவள்.எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வந்து செல்கிறாள். அவள் பெற்றோர் உட்பட யாருக்கும் அவளை கட்டிப்போட முடியாது . ஆட்களை தன் படகில் ஏற்றிச் செல்வதன் உரிமையைப் பற்றி யாரும் அவளைத் தொந்தரவு செய்வதில்லை அல்லது அவள் எப்போது திருமணம் செய்து கொள்வாள் என்ற கேள்விகளால் அவளைத் துன்புறுத்துவதில்லை. அவள் விரும்பும் நபர்களிடம் அவள் பேசுகிறாள், பேச விரும்பாதவர்களிடம் ஒதுங்கி போகிறாள்.
தன்னை பிடிக்காதவர் குறித்து அசட்டை செய்துக்கொள்வதாயில்லை. தன்போக்கில் சுதந்திரமாக வாழ்க்கையை வாழ்கிறாள்.அவ்வப்போது குழகர் கோவில் சென்று பிரசாதம் பெற்றுக்கொள்ளவும் தவறுவதில்லை. திறந்த கடல் மட்டுமன்று கோடிக்கரையின் புதர் காடுகளும் சேற்று நிலங்களும் கூட அத்துப்படி அவளுக்கு.
கதை நாயகன் வாணர்குல வந்தியத்தேவனை இலங்கைக்கு படகு மூலம் அழைத்து வந்தவள்.வந்தியத்தேவனின் பார்வையில் சிலநேரம் இவள் மகா சாகசக்காரியாக சிலநேரம் உன்மத்தம் பிடித்தவளாக இன்னும் சிலநேரங்களில் மிக அழகியாக தோன்றுகிறாள். இலங்கை கரையை அடையும் வரை பூங்குழலியை முழுமையாக நம்ப அவன் மனம் மறுத்தது. இலங்கை செல்லும் வழியில், வந்திய தேவன் தண்ணீருக்கு அஞ்சுகிறான், அவளுக்கு அது வழமை போல ஒரு நாள் வேலை. புயல், சுழல்காற்று பற்றி அவள் சாதாரணமாக பேசுகிறாள் , இதனால் வந்தியத்தேவன் மேலும் பயந்து மனம் இழந்து கடலில் குதிக்கிறான். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளைச் சமாளிக்க அவள் தயாராக இருக்கிறாள். சமயோசிதமாக வந்தியத்தேவன் முகத்தில் குத்தி அவனை படகில் ஏற்றினாள். இத்தனைக்கும் வந்தியத்தேவன் மாவீரன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பொன்னியின் செல்வன் அருண்மொழிவர்மன் மீது சமுத்திரகுமாரிக்கு அலாதி பிரியம். நேசமும் ஆசையும் தகுதி தராதரம் பார்த்து வருவதில்லையே. எப்போதும் சுழன்றுகொண்டே இருப்பவள் எல்லா கேள்விகளுக்கும் பதில் வைத்திருப்பவள் பொன்னியின் செல்வரை கண்டால் தொண்டை வறண்டு போய்விடுவாள். சமுத்திரகுமாரி எனும் பெயரை தந்ததே நம் குமாரன் தான்.
அவள் தன் மனதின் ஆசையை வெளிப்படுத்தும்போது கதை மேலும் சுவாரஸ்யமாகிறது. வந்திய தேவன் தன்னைப் பற்றி அருண்மொழிவர்மருக்கு நினைவூட்ட வேண்டும் என்று விண்ணப்பம் விடுகிறாள். நிச்சயமாக பொன்னியின் செல்வரை திருமணம் செய்து கொள்வதில் நம்பிக்கை இல்லை. இளவரசர்கள் படகு பெண்களை திருமணம் செய்து கொள்வதில்லை. வெளிப்படுத்தாத அன்பாலும் வேதனையாலும் உடைந்த இதயத்துடன், விசித்திரமாக நடந்துகொள்வதில் ஆச்சரியமில்லை.
எவ்வாறாயினும் பூங்குழலி வந்தியத்தேவனுக்குப் பலவாறு நன்றி சொல்ல வேண்டும்,ஏனெனில் அவனால்தான் அவள் மீண்டும் அருள்மொழியைச் சந்திக்கிறாள். பழுவேட்டரையர் அவரைக் கைதுசெய்யும் திட்டங்களைப் பற்றி எச்சரிக்கை செய்தியைக் கொண்டு வருகிறாள். இளவரசர் அவளிடம் தன்னை தொண்டைமானாறு பகுதிக்கு அழைத்து செல்ல கேட்கிறார். அவர்கள் துணை வீரர்களை ஏமாற்றி இருவரும் யானையின் மீது பிரயாணம் செய்கிறார்கள். அருண்மொழி இங்கு அவளுக்காக கிட்டத்தட்ட விழுகிறார் அவளது புத்திசாலித்தனத்தையும் துணிச்சலையும் பாராட்டி அவளை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறுகிறார்.
வாணர்குல வல்லவராயன் வந்தியத்தேவன் நம் பூங்குழலி பற்றி குந்தவை தேவியிடம் “அந்த பெண்ணுக்கு ஆயிரம் உயிர் இருந்தால் அவ்வளவையும் நம் இளவரசருக்கு கொடுப்பாள்” என்கிறான். கொடும்பாளூர் இளவரசி வானதிக்கும் பூங்குழலிக்குமான பூசலில் அருண்மொழியின் ராணியாக மாறமாட்டேன் என்று வானதி சபதம் எடுத்தபோது, பூங்குழலி தன் வார்த்தைகளுக்கு வருந்துகிறாள். வானதி பொன்னியின் செல்வர் மீது வைத்திருந்த அன்பின் ஆழத்தையும் உணர்ந்தாள். அத்துடன் அத்தை ஊமைதேவி மந்தாகினியின் மரணம் பூங்குழலியின் காதல் ஆசையை தணிக்கிறது.
அவள் விடாப்பிடியாக இருந்திருந்தால், அருண்மொழியை மண்டியிட்டு அவளிடம் முன்மொழிய வைத்திருக்கலாம், மாறாக அவள் தன்னை உண்மையாகவும், ஆழமாகவும் நேசிக்கும் சேந்தன் அமுதனைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்கிறாள். இறுதியில் சிவபக்தன் சேந்தன் அமுதனார் பொன்னியின் செல்வரால் மகுடம் சூடப்பெற்று கோப்பரகேசி உத்தம சோழராக ஆட்சி செய்ததாக வரலாறு உரைக்கின்றது.