மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையினை (Mumbai) “City of the dreams “என்று சொல்வார்கள். உலகில் எட்டாவது சனத்தொகை அதிகமாக கொண்ட மும்பை நகரம், இருபது மில்லியன் மனிதர்களின் கனவுகளின் நகரம்.
பிரிட்டிஷ் கால கம்பீரமான கட்டிடங்கள் மும்பையின் தலைநகரை வசீகரிக்க, கருப்பு டாக்சியில் மஞ்சள் கோடிட்ட வண்டிகள் பிரதான மும்பை நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட, குறைவற்ற சுற்றுலாப்பயணிகள் வந்து கலைக்கட்ட, ஆர்ப்பாட்டம் இல்லாமல், பிரிட்டிஷ் கட்டிடங்களில் மண்டியிருக்கிற புறாக்களின் சலசலப்போடு, துயில் எழுகிறது அந்த நகரம்.
மும்பை நகரிற்கு இரண்டு முகம், ஒன்று பிரிட்டிஷ் கட்டிடங்களின் கம்பீரத்துடன், உலகின் முக்கிய செல்வந்த மக்கள் வாழ்கிற, பணக்கார மும்பாய். அங்குதான் தெற்கு மும்பை உயர் கட்டடங்கள், இந்தியாவின் நுழைவாயில் (மும்பை), தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர், சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், தி பார்க் டவர்ஸ் மும்பை பாந்திரா-வொர்லி கடற்பாலம் என்பவை காணப்படுகின்றன.
அடுத்தது இருபது மில்லியன் கடைக்கோடி எளிய மனிதர்களுக்கான மும்பாய். தரை தட்டுப்படுகிற இடம் எல்லாம், அந்த நகரை நோக்கி வந்தவர்களின் வீடு. கிடைக்கிற வேலை, அன்றன்று பெறுகிற சிறு ஊதியம், வீதியோர கடை உணவு, அவர்களின் பிள்ளைகள், குடும்பம் என சாதாரண மனிதர்கள் கனவுகளுடன் அந்த நகரத்தில் போராடி கொண்டிருப்பார்கள்.
மும்பை நகரின் பிரதான பகுதியில்தான் இந்தியாவின் நுழைவாயில் (Gateway of India) அமைந்து காணப்படுகின்றது. அந்த கேட்வேயின் முன்னாள் மும்பைக்கு வருகிற ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும், வெள்ளை சட்டையணிந்து, கருப்பு காற்சட்டையில் உள்ளிட்ட சட்டைகளை நேர்த்தியாக அணிந்து, தலையை ஒழுங்காக வாரியிழுத்து, கழுத்தில் டிஜிட்டல் கேமராக்களை மாட்டிய போட்டோகிராப்பர்களை, மும்பை வெயிலின் வியர்வை முகத்தில் வடிய காணமுடியும்.” மேடம் ஜீ, சார் ஜீ போட்டோ…..”, என இந்தியில், இடையிடையே அவர்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டவாறு கேட்வேயின் முன்பு ஓடிக்கொண்டிருப்பார்கள். தாங்கள் எடுத்த புகைப்படங்களை ஒரு பைலில் இட்டு கேட்வேயின் முன் நிறைந்திருக்கின்ற சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரிடமும் காட்டி கேட்பார்கள். பக்கத்தில் பிரிண்ட் செய்கிற மெசின் கூடவே இருக்கும். கேட்வே முன்பு, தாஜ் விடுதியின் முன்பு, புறாக்களின் முன்பு என இவையெல்லாம் தெரிவது போல புகைப்படங்களை, தனிப்படம், குடும்ப படம், காதலன், காதலிகளை சேர்த்தமாதிரியான படங்கள் என அவர்கள் எடுப்பார்கள். இதுதான் அவர்களின் தொழில்.
மகாராஷ்டிராவின், அல்லது இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள பின்தங்கிய வறிய கிராமங்களில் இருந்து வருகிற ஒரு எளிய புகைப்படக்காரானின் வாழ்வை, சிறிதும் மும்பை வாழ்வின் இயல்பு மாறாமல் சுவைப்பட சொல்கிற திரைப்படம்தான் 2019 இல் வெளிவந்த ரித்தேஷ் பத்ராவின் Photograph (புகைப்படம்) என்கிற திரைப்படம். எளிய பின்தங்கிய குடும்பத்தின் கனவுகளை, பொருளாதார சுமையை ஏற்று மும்பை நகரை நோக்கி வந்த ஒரு போட்டோகிராப்பரிற்கும், மும்பையில் உள்ள நடுத்தர குடும்பத்தில் அம்மா, அப்பா, அக்கா என்ற சிறிய குடும்பத்தில் கடுமையாக படித்து, தொழில் ஒன்றை பிடித்து, நல்ல பணக்கார வெளிநாட்டு மாப்பிள்ளையை கட்டி வைக்க வேண்டும் என்ற, வெறுமனே குடும்பத்தின் கனவுகளை பின்தொடர்கிற ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை பற்றிய படமே போட்டோகிராப் என்ற திரைப்படம்.
பிரதான பாத்திரங்களில் மும்பையின் தெருவோர போட்டோகிரபராக நவாஸீதின் சித்திக் (Nawazuddin Siddiqu) “ரபி “என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். மும்பையின் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கல்வி கற்கிற பெண்ணாக சன்யா (Sanya Malhotra ) மிலோனி என்ற பாத்திரமேற்று நடித்திருப்பார்.
படத்தில் வருகிற இரண்டு பாத்திரங்களும் இருவேறு துருவங்கள். ரபீக் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவன். அவனுக்கு குடும்பத்தில் பல பொறுப்புகளும், அவசரமாக தீர்த்து வைக்க வேண்டிய கடன் சுமைகளும் இருந்தது. ஊரில் அவனுக்காக ஒரு பாட்டி இருந்தாள். ரபீ மீது அளவற்ற அன்பை கொண்டவளாக அவள் இருந்தாள். குடும்பத்தின் கடனுக்காக பேரன் படாத பாடு படுகிறான் என்பது அவளுக்கு தெரியும். ஆனாலும் அப்படியே இந்த பொருளாதார பிரச்சினைகளை பிரதானப்படுத்தினால், எப்போதும் முடிவுக்கு வராத அந்த பணப்பிரச்சினைகளில் சிக்கி மனிதன் தனக்கென ஒரு வாழ்வை வாழ முடியாது, கூடவே எளிய மனிதனுக்கு பணம்தான் எல்லா பிரச்சினைகளிற்கும் காரணம். ஒருபோதும் அவன் பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறப்படி வாழ சம்பாதிக்க முடியாது என அவள் அறிந்திருந்தாள். ரபீயின் வயதும் ஓடிக்கொண்டே இருப்பதால் திருமணம் செய்து கொள் என அவனை நச்சரித்துக்கொண்டே இருந்தாள். ரபீயை பொருத்தவரை வீட்டுக்கடனை ஓரளவு கொடுத்து இல்லாமலாக்கிய பின்னர் தான் திருமணம் பற்றி யோசிக்க வேண்டும் என்றிருந்தான். ஒவ்வொரு முறையும் பாட்டியிடம் ஒவ்வொரு காரணத்தை சொல்லி தவிர்த்து வந்தான்.
இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களில் இருந்து வயிற்று பிழைப்புக்காக வருகிற இளைஞர்கள் பலவிதமான கனவுகளோடு வருகிறார்கள். போராடி உழைக்கிற அந்த மனிதர்களை பலவிதங்களில் அவர்களின் தேவையை பூர்த்தி செய்து வைக்கிறது மும்பை நகரம். ரபீயோடு சேர்ந்து அவனை போல பல இளைஞர்கள் எப்படியாவது அவர்களது வாழ்வை வாழ்ந்துவிட வேண்டும் என்பதற்காக கிடைக்கிற வேலைகளை செய்து, சேரி போன்ற அடிப்படை வசதிகளற்ற கூடாரங்களில், மேன்ஸன்களில் தங்கியிருந்து மும்பை நகருடன் கலந்து விடுகின்றனர். ரபீக்கும் அவ்வாறுதான். மும்பையை நோக்கி ஆயிரம் கணக்கான மனிதர்கள் வந்து குவிந்துவிடுவதற்கான காரணம் எந்த வேலையை செய்தாவது கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம். பகல் முழுவதும் ஓடித்திரிந்து சம்பாதித்து திரும்புகிற அந்த இளைஞர்கள், அவர்கள் வாடகை கொடுப்பதற்கு ஏற்றதுபோல பிடித்துக்கொண்ட சிறு அறையில், நிறைந்து இருப்பார்கள். மும்பையில் கிடைக்கிற தெருவோர உணவுகளை கொண்டு எளிய முறையில் தமது இரவுணவை முடித்துக்கொண்டு அவர்கள் குடும்பம், பணப்பிரச்சினை, அன்றைய நாள் முழுவதும் நடந்தவை,, அந்தரங்கமான வயது வந்த கதைகள் என பேசிக்கொள்வார்கள். அங்குள்ள நண்பர்களுக்கு ரபீயின் கடன் பிரச்சினை, திருமணம் குறித்த அவன் பாட்டியின் நச்சரிப்புகள் எல்லாமே தெரிந்திருந்தது. பாட்டி ரபீயை பார்ப்பதற்கு வருவதாக இருக்கிறார். பாட்டியிடம் கல்யாண பேச்சுகளில் இருந்து தற்காலிகமாக தப்பித்து கொள்வதற்காக தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக ரபீ சொல்லி விடுகிறான்.
இதற்கெல்லாம் முதல் படத்தின் கதாநாயகி மிலானியை ரபீ கேட் வேயின் முன்பு புகைப்படம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்களிடம் வழமையாக தனது சம்பாசனைகளை ஆரம்பிப்பதுபோல போட்டோ எடுத்துக்கொள்கிறீர்களா என கேட்கிறான். குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்த மிலோனி சரியென எடுத்துக்கொள்கிறாள். படத்தை பிரின்ட் செய்து வந்து அவளிடம் கொடுப்பதற்காக வந்து பார்த்தபோது அவளை காணவில்லை. அவளது குடும்பம் அந்த இடத்தை விட்டு செல்ல ஆயத்தமான போது அவளும் சென்றுவிட்டாள். இல்லை நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன், அதை வாங்க வேண்டும் என்று சொல்லக்கூட துணிவற்ற பெண்ணாக அவள் இருந்தாள். மிலோனி என்பவள் அவளுக்கென எதையும் தெரிவு செய்ய தெரியாத, குடும்பத்தில் அப்பா, அம்மா, அக்கா என எல்லோரினதும் கனவுகள் திணிக்கப்பட்ட பெண். அவள் என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எதை உடுத்த வேண்டும், எதை படிக்க வேண்டும், எந்த பரீட்சைக்கு தயாராக வேண்டும், எப்படிப்பட்ட கணவரை அவளுக்கு தெரிவு செய்ய வேண்டும் என அவளை தவிர அனைவரிற்கும் கருத்து இருந்தது.
போட்டோவை பிரின்ட் செய்து, அவளிடம் கொடுக்க வந்த ரபீயிற்கு பெரிய ஏமாற்றம். அவளையும் காணவில்லை. பணமும் கிடைக்கவில்லை. அந்த புகைப்படம் அவனிடம் இருந்தது. பின்னர் அவளை எதேட்சையாக பஸ்சில் சந்தித்த ரபீக் அவளின் புகைப்படத்தை சேர்ப்பதற்காக அதே நேரம் அவளை, அவளது மென்மையான அழகில் விரும்ப தொடங்கியிருப்பான். அவளை பின்தொடர்வதும், அவனிடம் இருந்த புகைப்படத்தை கொடுக்கவும் முயற்சிப்பான். மிலானி ஒரு போட்டி பரீட்சைக்கு தனியார் வகுப்பு ஒன்றில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தாள். ரபியின் பாட்டி அவனது காதலியை பார்க்க கிராமத்தில் இருந்து மும்பை வருவதாக சொல்ல பாட்டியிடம் காட்ட தனக்கு ஒரு காதலியாக மிலானியை நடிக்க முடியுமா என அவன் கேட்பான். இந்த இடைப்பட்ட காலங்களில் அவர்களிருவருக்கும் ஒரு நெருக்கமான அழகான உறவொன்று மலர்ந்திருக்கும். ரபீ விளிம்பு நிலையில் உள்ள, முன்னேற துடிக்கிற கொஞ்சம் வயது கூடிய இஸ்லாமிய குடும்ப பின்னணி உள்ள ஒரு ஆண்.
மிலானி எல்லா வகையிலும் ரபீயை விட முன்னில் நிட்கிற, படித்துக்கொண்டிருக்கிற ஒரு சிறு பெண். இந்து மதத்தை சேர்ந்தவள். அவளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்வதற்கு, ஒரு அழகான குடும்பம் அவளுக்கு இருந்தது. அவள் உணவு அவளை தேடி மேசைக்கு வரும். ரபீ அந்த உணவை தனது கோப்பைக்குள் கொண்டுவர அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. மிலானிக்கு இருந்தது எல்லாம் ஒழுங்காக படித்து அந்த பரீட்சையில் சித்தியடைய வேண்டும், பிறகு அவளுக்கென ஒரு நல்ல வாழ்க்கையை அவளுக்காக குடும்பம் ஒழுங்கு படுத்தி வைத்திருந்தது. ரபீ அவனது வாழ்வை அமைத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருந்தான்.
இப்படி முற்றிலும் எல்லாவிதத்திலும் மாறுப்பட்ட இரு நபர்களுக்கிடையில் மலர்ந்த காதல் என்னவாகும்? ரபீயின் பாட்டிக்கு மிலானியை மிகவும் பிடித்துவிடும். ஆனால் அவர்கள் நிஜமான காதலர்கள் இல்லை. பாட்டிக்காக நடிக்க வந்த போது அவர்கள் உண்மையில் காதலிக்க தொடங்குவார்கள். ஆனால் இருவரும் வெளிப்படையாக அந்த உணர்வை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். இறுதியில் இருவரும் வெளிப்படுத்துவார்களா? பாட்டி மிலானி ஒரு இஸ்லாமிய பெண் இல்லை என்பதை தெரிந்து கொண்டாளா?, இவர்கள் ஒன்று சேர்வார்களா? பணம், படிப்பு, வயது, மதம், எல்லாவற்றிலும் வேறுப்பட்ட இரு அந்நிய மனிதர்களின் மத்தியில் தோன்றுகிற இந்த இனம் புரியாத உணர்வு எங்கிருந்து உருவாகிறது? இது எல்லாம்தான் போட்டோகிராப் திரைப்படம். மும்பை நகரத்தில் அவ்வாறான புகைப்படக்காரர்களை, மும்பையில் ஒரு சாமானிய இளைஞனின் வாழ்வியல் எப்படிப்பட்டது என்பதை பார்த்தவர்களிற்கு தெரியும் எப்படி அந்த திரைப்படத்தின் கதை இயல்பாக காட்சியாக்கப்பட்டுள்ளது என்பதை.