பிட்காய்ன்னா (Bitcoin) என்ன பிக்பாஸ்?

மனிதன் நாணயங்களை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்த காலம் நம்மால் கணக்கிட முடியாத அளவு பழைமையானது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூற்றுபடி மனிதன் எழுத்துக்களை பயன்படுத்தும் முன்னரே காசுகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அவைகளில் குறியீடுகள் பொறிக்கப்பட்டிருக்கிறன. பணம் என்பதன் உட்பொருள் தொடர்பு. பணம் ஒரு மொழி. நாம் ஒரு பொருளுக்காக, ஒரு சேவைக்காக, ஒரு செயலுக்காக மதிப்பீடு மூலம் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்கிறோம். சமூக தொடர்பு மூலம் நாம் ஒருவருக்கு ஒருவர் செய்யும் இந்த பரிவர்த்தனை ஒரு சமூக பந்தத்தையும் சமூக கட்டமைப்பையும் உருவாக்குகிறது.

“என்னுடைய கோழியை நீ எடுத்துக்கொள், உன்னுடைய இருபது வாழைப்பழங்களை நான் எடுத்துகொள்கிறேன்” என்று மதிப்பீட்டு முறைகளில் தொடர்புகள் இருந்திருக்கின்றன. படம் : beneaththesurface.co.za

இதற்கு சிறந்த உதாரணம் நம் பண்டமாற்று முறை. இந்த பணம் என்ற தொழில்நுட்பம் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னால் இருந்த முறை. “என்னுடைய கோழியை நீ எடுத்துக்கொள், உன்னுடைய இருபது வாழைப்பழங்களை நான் எடுத்துகொள்கிறேன்” என்று மதிப்பீட்டு முறைகளில் தொடர்புகள் இருந்திருக்கின்றன. பணம் என்பது இதன் உள்ளார்ந்த மதிப்பின் சுருக்கம்தான். இதன் அடுத்த பரிணாம வளர்ச்சி விலையுயர்ந்த உலோகங்கள். தங்கம், வெள்ளி முதலியவற்றை வெட்டி பகிர்ந்தளிக்க முடியும், கொண்டு செல்ல எளிதானது, மற்றும் அதற்கு ஒரு உலகளாவிய பயன்பாடும், மதிப்பும் இருந்ததால் உலோகங்கள் இந்த மாற்றத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தன.

இந்த இரண்டு புரட்சிகளுக்கு பின் சில நூறு ஆண்டுகளுக்கு பின் புது யுக்தி ஒன்று கையாளப்பட்டது. நாம் உலோகங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு மாற்றாக நம்பிக்கையான ஒருவரின் பெட்டகத்தில் அவைகளை வைத்து விட்டு அவரிடம் இருந்து ஒரு சீட்டு வாங்கி அதை வைத்து வாணிபம் செய்யலாம் என்றும், அது பாதுகாப்புக்கும் பயன்பாட்டுக்கும் எளிது என்று கருதியவர்கள் உருவாக்கியது தான் நம் காகிதப்பணம். மனிதகுலம் தோன்றியது முதல் இந்த உலகத்தின் அனைத்து  புரட்சிகரமான மாற்றங்களுக்குப் பின்னாலும் அவநம்பிக்கை இருந்து கொண்டே இருந்துள்ளது. இதற்கு ஒரு சமீபத்தய உதாரணம், வேடிக்கையான செவி வழிச்செய்தி. தமிழ்நாட்டில் முதல் பேருந்தின் முதல் வழித்தடம் சத்திரம் பேருந்து நிலையத்திருந்து ஸ்ரீரங்கம் திருக்கோவில் வரை இயக்கப்பட்டிருகிறது. அப்பொழுது குதிரை வண்டி சவாரி ஓட்டுனர்கள் அனைவரும்  நகராட்சி அலுவலகம் முன் போராட்டம் செய்தார்களாம். “இந்த புதிய இயந்திர வாகனத்தை உடனடியாக தடை செய்யுங்கள். இது எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்று.”

பண்டைய எகிப்தில் நடைமுறையில் இருந்த வணிக முறைகள் படம் : googleusercontent.com

மக்கள் காகிதப்பணத்தை சர்ச்சைக்குரிய விஷயமாகவே பார்த்தனர். சிலரால் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. இந்த காகித சீட்டுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை என்பதில் பலர் தீர்க்கமாக இருந்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் காகிதப்பணத்தை முழுமையாக ஏற்று கொள்ள நானூறு வருடங்கள் பிடித்ததாம்.

பின்னர் வந்தன கடன் அட்டை முறை. சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் நிறுவனம் ஒன்று முதன் முதலில் கடன் அட்டைகளை உருவாக்கியதாம். மக்களால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை. “நீங்கள் பயன்பாட்டில் உள்ள காகிதப்பணத்தை எனக்கு அளிக்கலாமே” என்றார்களாம். பின் உலகம் முழுவதும் கடன் மற்றும் சேமிப்பு அட்டைகள் பயன்பாட்டுக்கு வந்தது நாம் அறிந்த விஷயம் தான். பின்பு இணையம் வந்தது. நாம் இப்பொழுது மின்னணு பரிவர்த்தனை செய்து வருகிறோம்.

“பணத்தினால் வெற்றியை உருவாக்க முடியாது, ஆனால், பணத்தை உருவாக்கும் சுதந்திரத்தினால் வெற்றியை பெற்றுத்தர இயலும்”

நெல்சன் மண்டேலா

இப்பொழுது நாம் அடுத்த புரட்சிக்கு தயாராகிவிட்டோம். இந்த மாற்றத்திற்கான விதைகள் உலகம் முழுவதும் தூவப்பட்டிருக்கிறது. இதன் பெயர்  மறையீட்டு செலாவணி (Cryptocurrency).

மறையீட்டு செலாவணி (Cryptocurrency) என்பது ஒரு புது வகையான எண்ணியல் செலாவணி (Digital Currency) முறை. இதை மாற்றுச்செலாவணி என்று சொல்லலாம். இதை எளிமையாக விளக்க வேண்டும் என்றால் நீங்கள் கடைக்கு சென்று பத்து ரூபாய் கொடுத்து ஒன்பது ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கினால் கடைக்காரர் மீதமுள்ள உள்ள ஒரு ரூபாய்க்கு வேகமாக ஒரு மிட்டாய் ஒன்றை கொடுத்து விடுவார். இது ஒரு வகையான மாற்று செலாவணி. நீங்கள் ஒரு பிரபலமான துணிக்கடையில் துணிகளை வாங்கினால் அவர்கள் உங்களுக்கு ஒரு அன்பளிப்பு பற்றுசீட்டு (Gift Voucher) வழங்குவர். இதுவும் ஒரு மாற்று செலாவணி முறை தான். உலகில் எந்த நாட்டு அரசாங்காங்கத்தின், மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லாமல், நாம் பயன்படுத்தும் செலாவணி முறைக்கு மாற்றாக, தன்னிச்சையாக தனி கணினி அமைப்பின் பிணையத்தின் (Network) கீழ் இயங்குகிறது இந்த மறையீட்டு பண பரிமாற்ற முறை.

பணத்தினால் வெற்றியை உருவாக்க முடியாது, ஆனால், பணத்தை உருவாக்கும் சுதந்திரத்தினால் வெற்றியை பெற்றுத்தர இயலும்” – நெல்சன் மண்டேலா படம் : media.licdn.com

நமது அனைத்து தரவுகளும், பரிவர்த்தனைகளும் மென்பொருள் மூலம் மறையீட்டு குறிப்புகளாக (Encrypted Codes) பரிமாறப்படும். சம்பந்தப்பட்ட இருவர் தவிர எவராலும் பரிவர்தனை நடத்தியவர்களின் விவரங்களை கண்டறிய இயலாது. தலைகீழ் பத்மாசனம் செய்தாலும் பலனளிக்காது.

இந்த முறையை முதன் முதலில் உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் சடோஷி நகமோடோ என்பவர். 2008 ல் இதற்கான குறிப்புகளை ஒரு பிரபலமான செய்தித்தாளில் வெளியிட்டுள்ளார். பின்பு 2009ல் இதையொட்டி இதற்கான மென்பொருளையும் அவர் அறிமுகம் செய்துள்ளார். அவர் முதன் முதலில் உருவாக்கிய இந்த பணத்தின் பெயர் பிட்காயின். இன்று உலகம் முழுதும் 900 வகை மறையீட்டு செலாவணி முறைகள் வந்துவிட்டன. ஆனால் முதன் முதலில் தோன்றியதால் பிட்காயின் அடிப்படை பணம் என்ற அந்தஸ்தை பெறுகிறது. ரூபாய்களை நாம் பைசாக்களாக செலவு செய்வது போல் பிட்காயின் பிரித்து செலவு செய்தால் அதன் மதிப்பை சடோஷி என்றே அழைகின்றனர்.

இந்திய ரூபாய் INR, அமெரிக்க டாலர் USD போல் பிட்காயினை BTC என்கின்றனர்.

இதை விளக்க முற்படும்போது கடினமாக தெரிந்தாலும், இது பயன்படுத்துவதற்கு மிக மிக எளிமையானது. இதற்கான பயனர் மென்பொருளை உங்கள் கணினியிலோ கைபேசியிலோ தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இது தான் உங்களுக்கான பணப்பை (BITCOIN WALLET). இதை பயன்படுத்தும் அனைவர்க்கும் தங்கள் பணப்பை முகவரி பிரத்யேகமாக அளிக்கப்படும்.

இந்திய ரூபாய் INR, அமெரிக்க டாலர் USD போல் பிட்காயினை BTC என்கின்றனர். படம் : huffingtonpost.com

நீங்கள் ஒருவருக்கு பணம் அனுப்ப விரும்பினால் உங்கள் மென்பொருளில் இருந்து நீங்கள் அனுப்பும் நபரின் முகவரியை தட்டச்சு செய்து தொகையை பதிவு செய்தால் போதும். உடனே அது அவரது கணக்கிற்கு சென்று விடும். நீங்கள் மின்னஞ்சல் அனுப்புவது போல் எளிதானது இதன் செயல்பாட்டு முறை.  உங்கள் பணப்பை முகவரி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மாறுபடும். ஒருவரது பணப்பையில் இருக்கும் பணத்தை அடுத்தவர் திருடாமல் இருக்க, ஒவ்வொரு பயனர் மென்பொருளோடும் ஒரு ரகசிய தகவல் (PRIVATE KEY) இருக்கும். பரிமாற்றத்தின்போது பிட்காய்ன் முகவரியோடு இதுவும் சேர்த்து அனுப்பப்படும். அது சரியாகப் பொருந்தினால் மட்டுமே பரிமாற்றம் வெற்றிகரமாக நடக்கும்.

இணையத்தின் ஒரு பிணையத்தின் கீழ் சங்கிலி தொடர் போல இயங்கும் இந்த கட்டமைப்பில் உங்கள் ஒவ்வொரு பரிவர்த்தனையும் சில நிமிடங்களில் மறையீடுகளாக உலகம் முழுவதும் உள்ள இதற்கான மென்பொருள் பயன்பட்டாளர்களின் பொது கணக்கேட்டில் ஏற்றப்படும். இதனால் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

நீங்கள் பிட்காயின், ஃபெதர்காய்ன், லைட்காய்ன் என்று எதை வாங்க விரும்பினாலும் இதற்கென்று தனியாக இயங்கும் பரிமாற்று இயங்குதளங்களை அணுகலாம் அல்லது நேரடியாக தனி நபர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

சில நாட்டு அரசாங்கங்கள் மறையீட்டு செலாவணி முறையை நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கீகரித்துவிட்டன. இந்திய அரசு கால சூழலுக்கு ஏற்ப மாற வேண்டியது அவசியம் என்றும் அதை பரிசீலனை செய்கிறோம் என்றும் அறிவித்துவிட்டது. முதலீட்டு சந்தையில் மக்களின் பார்வை இப்பொழுது இதன் பக்கம் திரும்பியுள்ளது. ஒரு பிட்காயின் இப்பொழுது இந்திய முறைப்படி எவ்வளவு என்று அறிந்தால் மலைக்க வைத்து விடும். இன்றைய மதிப்பின் படி ஒன்றே முக்கால் லகரங்களை சுற்றி ஏறி இறங்குகிறது இதன் விலை. நீங்கள் இதை பயன்படுத்தி புதிதாக வந்துள்ள, அல்லது மதிப்பு குறைவான ஒரு செலாவணியில் முதலீடு செய்தால் பிட்காயின் போல் குறுகிய காலத்தில் விலை எகிறினால் நீங்கள் ராஜா தாங்க!

உசாத்துணை : THE INTERNET OF MONEY – ANDREAS M. ANTONOPOULOUS

Related Articles

Exit mobile version