பணவீக்கம் என்றால் என்ன?
பணவீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பொருளாதாரத்தின் பொருட்கள் மற்றும் சேவைகளின் மீது ஏற்படும் விலை உயர்வினை குறிக்கும். பணவீக்கத்தால் நாணயத்தின் வாங்கும் திறன் குறைவதுடன், பணவீக்கம் மெதுவான அல்லது தேக்கமான பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் சுருங்கச் சொன்னால் காலப்போக்கில் பணத்தின் பெறுமதி குறைவடைவது. அதாவது, உதாரணமாக நீங்கள் ஒரு பொருளை 100 ரூபாவிற்கு சில வருடங்களுக்கு முன் வாங்கி இருந்தால் இப்போது அதன் விலை 120 ரூபாவாக மாறி இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இப்போது பணவீக்கமானது 20% ஆக அதிகரித்துள்ளது எனலாம்.
ஏன் பண வீக்கம் ஏற்படுகிறது?
இது பிரதானமாக 2 நிலைமைகளால் இடம்பெறலாம்.:
- ஒரு நாட்டில் அதிகளவான பணம் அச்சிடப்பட்டு, அது புழக்கத்திற்கு விடப்படுகிற போது, அதிக பணத்தை வைத்திருக்கும் மக்கள் தங்களுடைய தேவைக்கு அதிகமாக பொருட்களை முந்தி வாங்குவதாலும், தேவையுடைய மக்களுக்கு பணம் இருந்தும் பொருட்களை வாங்குவதற்கு தட்டுப்பாடு ஏற்படுவதாலும் ஏற்படலாம். அல்லது,
- உள்நாட்டில் போதியளவான பொருட்கள் உற்பத்தி செய்யாமையால் அல்லது மக்களுக்குத் தேவையானவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமையினால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இப்போது பணம் இருக்கிற மக்கள் என்ன விலை கொடுத்தாவது வாங்கி விட வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இதனாலும் பொருட்களுக்கான விலை அதிகரிக்கிறது.
சாதரணமாக பணவீக்கத்தின் அளவு எவ்வளவாக இருக்கலாம்?
பொதுவாக பணக்கார நாடுகளின் மத்திய வங்கிகள் இதனை வருடம் ஒன்றுக்கு 2% அதிகரிப்பை சாதரணமானதாக கொள்கிறது.
இலங்கையில் இப்போது பணவீக்கம் எவ்வளவாக இருக்கிறது?
கடந்த டிசெம்பர் 2021 வரைக்கும் பணவீக்கத்தின் அளவு (https://www.cbsl.gov.lk/en/measures-of-consumer-price-inflation) 14% ஆக இருக்கிறது.ஆனால் அதற்கு முந்தைய வருடம் டிசெம்பர் 2020 இல் பணவீக்கத்தின் அளவு 4.6% ஆக இருந்தது. எனவே பணவீக்கத்தின் வருடமொன்றிற்கான அதிகரிப்பு (14% – 4.6% = ) 9.4% ஆகும். மேற்கூறப்பட்டதன் படி சாதரணமாக கொள்ளக்கூடிய 2% அதிகரிப்புக்குப் பதிலாக இங்கு 9.4 % அதிகரித்துள்ளதனைக் கொண்டு இலங்கையின் பணவீக்கத்தினை ஒப்பிட்டு பார்க்க முடியும்.
இலங்கைக்கு ஏன் இந்த நிலை?
கோவிட் 19 இற்குப் பின்னர் வளர்முக நாடுகளில் பெரும்பாலும் இலங்கை அளவுக்கு இல்லை என்றாலும் பணவீக்கம் அசாதரணமாக அதிகரித்திக்கிறது. இதற்குக் காரணம் வெளிநாட்டு வருவாய் இல்லை என்பதும் உள்நாட்டில் ஏற்படும் உணவு மற்றும் எரிபொருள் தேவைகளுக்கு வெளிநாடுகளை நம்பி இருப்பதும் தான்.
எனினும் வெளிநாடுகளில் சுற்றுலாத்துறைக்கு மேலதிகமாக கனிசமான வேறு வருமானங்கள் இருப்பதினால், அவற்றைக் கொண்டு தேவையான உணவு மற்றும் எரிபொருள்களை வாங்க முடியுமானதாக இருக்கிறது. இதனால் போதிய அளவு பொருட்களை இருப்பில் வைத்துக்கொள்வதால் அவற்றின் விலை வானத்தை பிளக்காத அளவுக்கு பார்த்துக்கொள்ள முடிகிறது. எனவே பெரும்பாலான வளர்முக நாடுகள் தங்கள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடிகிறது. இங்கு தான் இலங்கையினுடைய பணவீக்கம் வானத்தை ஏன் பிய்த்துக்கொண்டு போகிறது என்பதை நாம் விளங்க முடியும்.
சுற்றுலாத்துறையைத் தாண்டி வேறு வருமான வழி வகைகளை ஸ்திரப்படுத்திவதில் ஏற்பட்ட பின்னடைவை இதற்கான காரணமாக கூறலாம். அதாவது கோவிட் 19 காரணமாக உலக போக்குவரத்தில் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் உள்நாட்டு உற்பத்திகளில் ஏற்பட்ட நலிவு என்பன பொருட்களின் ஏற்றுமதி வருமானமானத்தினை கனிசமாக பாதித்தது.
எனவே சேவையின் மூலமாக புதிய வருமான வழிகளை தேடிக்கொள்வதும், ஏற்கனவே உள்ள சேவை வருமான மூலங்களினை வலுப்படுத்திக் கொள்வதும் அவசியமாகிறது. இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட ஆளணியை உருவாக்குவது மற்றும் கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு விடயங்களில் தேசிய கொள்கைகள் தாக்கம் செலுத்துவதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
நடைமுறை வாழ்வில் இந்த பணவீக்கம் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது?
உதாரணமாக நீங்கள் 2013 ஆண்டில் ஒரு பொருளை 100 ரூபாவிற்கு வாங்கினீர்கள் என வைத்துக்கொண்டால்,
இப்போது ஒரு உணவுப் பொருளை 121.50 ரூபாவிற்கு வாங்குகிறீர்கள் எனவும். உணவு அல்லாத பண்டங்களின் விலைகள் 107.60 ரூபாவிற்கும் வாங்குகிறீர்கள் எனவும் கொள்ளலாம்.
எனவே உணவில் ஏற்பட்டிருக்கும் விலை அதிகரிப்பானது இரண்டு விதங்களில் சாதரண மக்களின் வாழ்வை பாதிக்கிறது.
- நாட்டில் வேறு வருமான வழிகளில் டாலர் கிடைக்காததினால் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை எதிர்நோக்க வேண்டி இருக்கிறது. இதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் நாட்டு மக்களுக்கு போதாமல் அசாதரண விலை அதிகரிப்பை உண்டு பண்ணுகிறது. இதனால் வருமானம் குறைந்த மக்கள் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்வர்.
- உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதற்குத் தேவையான எரிபொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடுகளினால் உற்பத்திகள் குறைவடைந்து பல வியாபாரங்கள் நஷ்டத்திற்குள்ளாகி மூட விளைகின்றனர். இதனால் வேலைவாய்ப்பை இழக்கின்ற மக்கள் உணவுக்கு மேலதிகமாக தங்களுடைய அத்தியாவசியத் தேவைகளான உடை மற்றும் உறையுள் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யமுடியாத அளவுக்கு வருமான இழப்பை அடைவர்.
என்றாலும், இது தொடர்பில் பொதுமக்கள் கனதியான அச்சத்தை கொண்டிருக்கத் தேவையில்லை எனவும் இவ்வாறே தொடர்ந்தும் பணவீக்கம் அதிகரிப்பது அசாத்தியமனது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலைமையை கட்டுப்படுத்துவது மத்திய வங்கியின் கடமையாகும். இதற்காக மத்திய வங்கி சுயாதீனமாக சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். அவற்றுள் பெரும்பாலும் முதன்மைப்படுத்தப்படுவது வங்கி வட்டி வீதங்களை அதிகரிப்பதாகும். இதன் மூலம் மக்களின் செலவுகளை கட்டுப்படுத்தி மேலும் முதலீடுகள் செய்வதிலிருந்தும், வாங்கும் திறனை கட்டுப்படுத்துவதிலிருந்தும் பணத்தை சேமிப்பதற்கு அவர்களை தூண்டுகின்றனர். இதனால் பொருளாதார மாற்றங்கள் அவசரப்படுத்தப்படாமலும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் இச்செயன்முறை வெற்றியளிக்கும் என நம்பப்படுகிறது.