கறுப்புப்பணம்.. இந்த உலகம் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஓன்று என்றால் மிகையில்லை. அண்மைக்காலமாக இலங்கையிலும் கருப்புப்பண மோசடிகள், பதுக்கல்கள் பற்றி அதிகப்படியாகவே கேள்விப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். உண்மையில் கறுப்புப்பணம் என்றால் என்ன? வருவாயில் இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய் மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக் காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது.
அரசுகளின் அதிகப்படியான வரி விதிப்புக்கள்கூட இவ்வாறான கருப்புப்பண உருவாக்கல்களுக்கான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இதனால்தான் வரிவிதிப்பு முறை யதார்த்தமாக இருக்க வேண்டும் எனவும் மக்கள் இதனை சுமையாக பார்க்கக்கூடாது என்றும் பல வல்லுநர்களால் கூறப்படுகின்றது. அதிக வரி விகிதம் மக்களை வரி ஏய்ப்பு முறைகளை நோக்கிச் செல்ல மட்டுமே உதவும். இவ்வாறான கறுப்புப் பணக் குவிப்பு, பொருளாதார மற்றும் சமூக சமத்துவமின்மை உள்ள சமூகத்தில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தவிர்க்கவியலா ஓன்று. கறுப்புப் பணம் எங்கிருந்து வருகிறது?
சர்வதேச அளவில் கணக்கில் வராத கறுப்புப் பணத்தின் பயணம் என்பது பிரதானமாக வளர்ந்து வரும் நாடுகளில் இருந்துதான் துவங்குகிறது.கறுப்புப் பணத்தின் பெரும்பகுதி உற்பத்தியாகும் இடமாக ஆசிய கண்டமே இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. கடந்த பத்து ஆண்டுகளில் சர்வதேச அளவில் புழங்கிய கறுப்புப் பணத்தின் 40 சதவீதம் ஆசிய கண்டத்தில் இருந்தே வந்திருக்கிறது என்கிறது ஆய்வுகள்.
உலகில் கருப்பு பணத்தை பதுக்கிவைக்கும் சொர்க்கபுரிகளாக ஐரோப்பாவை சேர்ந்த சில நாடுகள் திகழ்கின்றன. இந்தப் பட்டியலில் மொத்தம் 11 நாடுகள் உள்ளன.இந்நாடுகளில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் பல்லாயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப் பணத்துக்கு ஒரு சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. கருப்பு பணம் அதிகம் பதுக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது சுவிட்சர்லாந்து.
இதற்கு அடுத்து 10 மிகச் சிறிய நாடுகள் கருப்புப்பணத்திற்கான அடைக்கல நாடுகளாக உள்ளன. அவையாவன ஜிப்ரால்டார் நீரிணை பகுதியில் அமைந்துள்ள “ஜிப்ரால்ட்டர்”(இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 6.8 கி.மீட்டர். மக்கள் தொகை 28,875), பிரான்ஸ் அருகேயுள்ள மிகச் சிறிய நகர நாடான மொனாக்கா (பரப்பளவு 2.02 கி.மீட்டர், மக்கள் தொகை 36,810), ஜரோப்பாவின் பழமையான குடியரசு நாடு என்றழைக்கப்படும் சான் மரீனோ( பரப்பளவு 61 கி.மீட்டர், மக்கள் தொகை 28,117), நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள லீச்டென்ஸ் டெய்ன் (பரப்பளவு 160 கி.மீட்டர். மக்கள் தொகை 33,987.) சிறிய தீவு தொகுப்புகளை கொண்ட குயெர்ன்சி (பரப்பளவு 78 கி.மீட்டர். மக்கள் தொகை 65,573.), பிரிட்டன் அருகேயுள்ள மான் தீவு ( பரப்பளவு 572 கி.மீட்டர். மக்கள் தொகை 80,058.), பிரான்ஸ் அருகே அமைந்துள்ள அந்தோரா (பரப்பளவு 468 கி.மீட்டர். மக்கள் தொகை 71,822) பிரான்ஸ் அருகே உள்ள ஜெர்ஸி ( பரப்பளவு 116 கி.மீட்டர். மக்கள் தொகை 89,300) மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் ( பரப்பளவு 2586 கி.மீட்டர். மக்கள் தொகை 4,39,539) மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள சைப்ரஸ் (மிகச் சிறிய தீவு நாடான இதன் பரப்பளவு 9251 கி.மீட்டர். மக்கள் தொகை 788457)
இலங்கையிலும் கூட பல பெரிய தொழிலதிபர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்வது அறியப்படுகிறது. இருப்பினும், வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் மொத்தத் தொகை குறித்த மதிப்பீடு யாரிடமும் இல்லை என்பதே உண்மை.
கறுப்புப்பணம் எப்படி உருவாகிறது?
உலக அளவிலான மிகப் பெரும் ஊழல் வலைப்பின்னல் கட்டமைப்பு இதை சாத்தியமாக்குவதாக ஐ.நா. கூறுகிறது. இந்த கறுப்புப் பணம் புழங்குவதற்கு, நாடு விட்டு நாடு கைமாற்றப்படுவதற்கு, இயற்கைவள வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு, வரி விலக்கு அளிப்பதற்கு, முதலாளி யார் என்றே தெரியாமல் போலியான நிறுவனங்களைத் துவக்கி நடத்துவதற்கு என பலவகையான செயல்களை செய்வதற்கும் கட்டமைப்புகள் இருப்பதாகவும் அவற்றின் மூலமே இந்த கறுப்புப் பண பரிவர்த்தனை சர்வதேச அளவில் சாத்தியமாவதாகவும் ஐநா கூறுகிறது. உலக அளவில் பிற நாடுகளில் கருப்புப்பணத்தினை அதிகப்படியாக பதிக்கிவைத்துள்ள நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருப்பது ரஷ்யா , சீனா , இந்தியா , மலேசியா , மெஸ்சிக்கோ என்பதும் குறிப்பிடத்தக்கது.
கறுப்புப் பணத்தினை வெள்ளையாக்குதல் என்றால் என்ன ?
சட்டத்திற்கு புறம்பாக வரி கட்டப்படாமல் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் பணத்தினை மீண்டும் சட்டரீதியில் வெவ்வேறு வழிமுறைகளில் பயன்படுத்த வைக்க முயல்வதே கறுப்புப்பணம் வெள்ளையாதல் எனப்படுகின்றது. அட, நம்ம சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த் கருப்புப்பணத்தையெல்லாம் எடுத்து, தன்னுடைய பவுண்டேஷனுக்கே நன்கொடையாக வழங்குவாரே அப்படியா? என்றால் .. ஆம் கிட்டத்தட்ட அதுவும் ஒரு முறைதான் என்றுகூட சொல்லலாம்.
சில வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மோடி இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களை செல்லுபடியாகாததாக அறிவித்தாரே.. அதுவும் ஒருவகையான கருப்புப்பணத்தினை வெளிக்கொணரும் நடவடிக்கைதான். ஆக, சட்டரீதியாக பயன்படுத்த முடியாத வரி ஏய்ப்புப் பணத்தினை எப்படி சட்டரீதியாக பயன்படுத்தும் நிலைக்கு நாம் மாற்றுகின்றோம் என்பதுதான் கருப்புப்பணத்தினை வெள்ளையாக்குதல் என்று கூறப்படுகின்றது .
கணக்கில் வராத கறுப்புப் பணத்தின் நடமாட்டம் என்பது இன்று உலகளாவிய பிரச்சனை.பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இது மிகப்பெரிய இழப்பாக இருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.