ஒரு நாட்டின் இராணுவம் என்பது தன் நாட்டு அரசையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு சிறப்புமிக்க பல அதிகாரங்கள் பெற்றுள்ள ஒரு துறையாகும். இராணுவத்துறை தன்னுள் பல பிரிவுகளை கொண்டு கட்டமைக்கப்படும். இத்துறைக்கென தனித்துவம்வாய்ந்த ஆயுதங்கள், வாகனங்கள், விமானங்கள் போன்ற சாதனங்களுடன், சில அசாதாரண சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் நாட்டின் பாதுகாப்பு கருதி எந்தவித கேள்விகளும் இன்றி ஒருவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளக்கூடிய அதிகாரமும் வழங்கப்படுகிறது.
கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு இராணுவப் படைக்கென தேர்தெடுக்கப்படும் வீரர்கள் நாட்டின் இராணுவ இரகசியங்களை பாதுகாக்க தன் சுய விருப்பங்களை தவிர்த்து சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள். இராணுவமானது நாட்டிற்கு நாடு மாறுபட்ட அதிகாரங்களைக் கொண்டு காணப்படும். வளர்ந்துவரும் நாடுகள் முதல் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் வரை இராணுவ துறைக்கென பெரும் நிதியினை ஒதுக்குகின்றது. அவ்வாறாக உலகின் பலம் பொருந்திய 10 நாடுகளின் இராணுவங்களைக் பற்றிய சில தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஜப்பான் இராணுவம்
உலகின் 5 வது மிகப் பெரிய விமானப்படையினைக் கொண்டுள்ள ஜப்பான் இராணுவமானது 131 போர் கப்பல்களையும் 1,595 இராணுவ விமானங்களையும் கொண்டு செயற்பட்டு வருகின்றது. 247,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களுடன் இயங்கி வரும் ஜப்பான் இராணுவத்திற்கு 49.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆண்டுக்கு ஒதுக்கப்படுகின்றது. உலகின் பல நாடுகளின் இராணுவ இணைப்பைக் கொண்டுள்ள ஜப்பான் இராணுவம் உலகின் சக்தி மிக்க இராணுவங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.
தென் கொரிய இராணுவம்
வட கொரியாவுடன் தனது எல்லையை பகிர்ந்துகொள்ளும் தென் கொரிய இராணுவமும் உலகின் சக்திவாய்ந்த இராணுவங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. 640,000 மேற்பட்ட வீரர்களை கொண்டு இயங்கிவரும் ஜெர்மானிய இராணுவப் படைக்கு 34 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆண்டுக்கு ஒதுக்கப்படுவதாக என சொல்லப்படுகின்றது. 1,393 போர் விமானங்கள், 166 போர் கப்பல்கள் மற்றும் 2,346 பீரங்கிகளை தன்வசம் கொண்டுள்ளது. சீனா மற்றும் ஜப்பானிடம் உள்ள ஆயுதங்களுக்கு இணையாக தனது ஆயுதங்களுக்காக தற்போது அதிகம் செலவுசெய்து வருகின்றது. மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரிய இராணுவப்படை இராணுவப் பயிற்சிகளில் ஈடுபடுகிறது.
ஜெர்மானிய இராணுவம்
ஜெர்மானியானது உலகின் வலிமையான பொருளாதாரமிக்க ஒரு நாடாகும். 183,000 இராணுவ வீரர்களைக் கொண்ட ஜெர்மானிய இராணுவமானது 710 போர் விமானங்கள், 400 க்கும் மேற்பட்ட பீரங்கிகள் மற்றும் 5 நீர் மூழ்கிக் கப்பலுடன் செயல்பட்டு வருகின்றது. 5000 ற்கு மேற்பட்ட நவீன ஆயுதங்களைக் கொண்ட இந்த இராணுவத்திற்கு, ஆண்டுக்கு 45 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுகின்றது.
துருக்கி இராணுவம்
அதிக அதிகாரங்களுடன் உலகின் சக்தி வாய்ந்த இராணுவங்களின் ஒன்றான துருக்கி இராணுவமானது, 1000 போர் விமானங்கள் 4000 பீரங்கிகள் மற்றும் பல நீர்மூழ்கி படை கப்பல்களையும் தன்வசம் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 18.18 பில்லியன் டொலர்கள் இந்த துறைக்கு வழங்கப்படுவதாக குறிப்புகளில் சொல்லப்படுகின்றன. வலுவான பல ஆயுதங்களை கொண்டுள்ள துருக்கி இராணுமானது அமெரிக்காவுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது என்றும் சொல்லப்படுகின்றது.
பிரஞ்சு இராணுவம்
பிரஞ்சு இராணுவமானது 220,000 க்கும் மேற்பட்ட வீரர்களுடன் 9000 இராணுவ வானங்களையும், 1000 போர் விமானங்களையும் 10 நீர் மூழ்கிக் கப்பல்களையும் 4 போர்க் கப்பல்களையும் கொண்டு இயங்கி வருகின்றது. குறைவான வீரர்களையும் ஆயுதங்களையும் கொண்டு செயல்பட்டு வந்தாலும் பிரான்ஸ் இராணுவமானது உலகின் பலம் கொண்ட இராணுவங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.
பிரித்தானிய இராணுவம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றொரு உறுப்பினரான பிரித்தானியா, 2010 மற்றும் 2018 க்கு இடையில் ஆயுதப்படைகளின் அளவை 20% குறைக்கும் திட்டத்தைக் கொண்டு செயல்பட்டு வந்தது. இங்கிலாந்தின் பாதுகாப்புதுறைக்கு ஆண்டுக்கு 54 பில்லியன் ஒதுக்கப்படுகின்றன. 908 விமானங்களையும் 50 மேற்பட்ட இராணுவ கப்பல்களும் மற்றும் 400 க்கும் மேற்பட்ட பீரங்கிகளும் கொண்டு 205,000 வீரர்களுடன் பலம் பொருந்திய இராணுவமாக செயல்பட்டு வருகின்றது.
இந்திய இராணுவம்
பாரத தேசமானது தனது பாரிய மக்கள் தொகைக்கு ஏற்றாட்போல் தன் இராணுவத்தையும் பெருமளவு கொண்டுள்ளது. 3.5 மில்லியன் வீரர்களை உள்ளடக்கிய இந்திய இராணுவத்தில் 1.3 மில்லியன் வீரர்கள் இராணுவ பாதுகாப்பு பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ளனர். 16,000 க்கும் மேற்பட்ட இராணுவ வாகனங்களும், 3,500 பீரங்கிகளும் 1,785 போர் விமானங்களையும் கொண்டது. இந்திய இராணுவத்திடமுள்ள ballistic எனும் ஏவுகணைகள் பாகிஸ்தான் அல்லது சீனாவின் பெரும்பகுதியைத் தாக்கும் வலிமை கொண்டது எனச் சொல்லப்படுகின்றது. இதன் ஓராண்டு செலவுகள் 45 பில்லியனாக உள்ளது என்கிறது தகவல் குறிப்புக்கள். உலகின் மிகப்பெரிய இராணுவ பொருட்களை இறக்குமதி செய்யும் இராணுவமாக இந்திய இராணுவம் திகழ்கின்றது.
சீன இராணுவம்
சீனாவின் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டம் அதிகாரப்பூர்வமாக 126 பில்லியனாக உள்ளது. உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பான சீன நாடானது, 25,000 இராணுவ வாகனங்களும், 2,800 மேற்பட்ட இராணுவ விமானங்களும், 300 அணு ஆயுதங்களும் கொண்டு செயல்பட்டு வருகின்றது. சீனாவில் 23,33,000 இராணுவ வீரர்கள் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
ரஷ்ய இராணுவம்
ரஷ்ய இராணுவமானது 766,000 வீரர்களைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 76.6 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் இராணுவத்தில் 15000 க்கும் மேற்பட்ட பீரங்கிகளும் 4000 போர் விமானங்களும் 50 க்கும் மேற்பட்ட நீர் மூழ்கிக் கப்பல்களும் பல அதி நவீன ஆயுதங்களும் உள்ளன. உலகின் பலம் பொருந்திய இராணுவங்களின் வரிசையில் ரஷ்யா 2 ஆம் இடத்தில் உள்ளது.
அமெரிக்க இராணுவம்
உலக நாடுகளுக்கெல்லாம் தலைவன் என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்காதான் பலம் பொருந்திய இராணுவங்களைக் கொண்ட இராணுவங்களின் பட்டியலில் முதன்மை பெறுகின்றது. அமெரிக்காவானது தனது இராணுவத்திற்கு 612.5 பில்லியன் டொலர்கள் ஆண்டு ஒன்றுக்கு செலவுசெய்கின்றது. 14 லட்சம் வீரர்களைக் கொண்ட இந்த இராணுவத்தில் 8500 மேற்பட்ட போர் பீரங்கிகளும் 14,000 போர் விமானங்களும் 80 இற்கும் மேற்பட்ட நீழ்மூழ்கிக் கப்பலும் காணப்படுகின எனத் தகவல் குறிப்புக்கள் சொல்கின்றன. அது மட்டுமின்றி 20 க்கும் மேற்பட்ட விமானத்தாங்கி கப்பல்களும் அமெரிக்க இராணுவமானது தன்வசம் கொண்டுள்ளது. உலகின் பலம் பொருந்திய இராணுவங்களின் முதன்மையான அமெரிக்க இராணுவத்திற்கு மற்றைய நாட்டு இராணுவங்களுக்கு இல்லாத தனி சிறப்பு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.