அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழையோ, அல்லது இடியுடன் கூடிய பலத்த மழையோ பெய்யக்கூடும்.
இந்த அறிவிப்பைச் சமீபமாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள். வானிலை வாசிப்பாளர் ஒருவர் மக்களிடயே பிரபலமான நபராக மாறிப்போனது வானிலை அறிவிப்பும், அதை பற்றி விழிப்புணர்வும் முக்கியதுவம் பெறத் துவங்கியதால்தான். ஓய்வு பெற்ற சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் வானிலை அறிவிக்கும் விதமே அவரை நாடறிந்த மனிதராக மாற்றியிருக்கிறது.
வானிலை ஆய்வுக்காக செயற்கை கோள்களை பூமியை சுற்றிவரச்செய்து அதன் மூலமாக கிடைக்கிற தகவலை, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தினசரி ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெப்பம், மழை வருமா? வந்தால் எப்ப வரும்? போன்ற தகவல்கள் அறிவிக்கப்படுகின்றன. இந்த அறிவிப்புகள் 50-60 சதவீதம் சரியாகவே இருக்கின்றன.
வானிலையை மிக துல்லியமாக கணிப்பது சாத்தியமில்லை. நாம் பார்த்திருப்போம்… மேகம் திரண்டு இடி மின்னல் துவங்கினாலும் சில சமயங்களில் மழை பெய்வதில்லை. மழை பெய்வதற்கு மேகம் மட்டும் போதாது. மேகத்தை மழையாக மாற்ற காற்றின் ஈரப்பதன், வேகம் உள்ளிட்ட பல காரணிகள் சரியாக அமைய வேண்டும்.
கடந்த 7 வருடங்களாக தமிழகத்திற்கு மழையில்லை. இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழையும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இனி வடகிழக்கு பருவமழை மீது நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் மக்கள். விவசாயி மட்டுமல்ல காலி குடங்களும் காத்திருக்கின்றன.
நம் முன்னோர்களின் மழைக் கணிப்பு…
விவசாயியான நம் தாத்தா என்ன செய்வார் தெரியுமா? கண்களுக்கு மேலாக கைகளை வைத்து நாலாபுறமும் பார்த்து மழை வர 15 நாளாகும்ப்பா என்பார்!!!! அவர் கணிப்பு சரியாகவே இருக்கும். இயற்கையோடு இணைந்து வாழந்தவர்களின் கணிப்பு தவறாது. மழை பற்றிய சில நம்பிக்கைகளும் உண்டு. நிலாவை சுற்றி வட்டவடிவில் இருக்கும் வளையத்தை பார்த்திருப்பீர்கள். (தினசரி வானத்தை ஒருமுறையாவது பாருங்களேன்) அந்த வளையம் நிலாவுக்கு அருகே இருந்தால் மழை பெய்ய சில நாட்களாகும். வளையம் தூரமாக இருந்தால் நாளையோ, அடுத்த நாளோ மழை பெய்யலாம். இது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை. சோதித்து பாருங்களேன்.
மழை வருவதற்கு சில அறிகுறிகள் உண்டு. தண்டான் தாளப்பறந்தாலும், வண்ணத்துபூச்சி தரை தொட்டாலும் (அதை மட்பிளங்க் என்பார்கள்-மண்ணை நுகருதல்)பருந்து வட்டமிட்டாலும் மழை வரும் வாய்ப்பு உண்டு. இதே போல மேல் புறத்தில் கறுப்பாகவும், கீழே வெள்ளை நிறத்திலும் சற்று நீண்ட உடலமைப்பு கொண்ட பருத்திக்குயில் என்ற பறவை (இது வெளிநாட்டுப் பறவை) நம் பகுதியில் கண்ணில் தென்பட்டால் மழைவரும். அதாவது பருவமழைக்கு முன் தமிழகம் வரும் பறவை.
விவசாயிகள் வானத்தைப் பார்த்து மழை கணிக்கிறார்களே அதில் அவர்கள் பார்ப்பது மேகங்களின் போக்கை மட்டுமல்ல, படைக்குருவியின் சேட்டைகளையும்தான். படைக்குருவி பெயருக்கு ஏற்றால்போல பெரும் படையாக பறந்த செல்லகூடியவை . 50 – 100 படைக்குருவிகள் வானத்தில் ஓவியம் வரைவது போல பறந்து செல்லும். அந்த பறவைகள் எந்த பகுதியில் அதிகமாக வட்டமிடுகிறதோ அந்தப்பகுதியில் மழை வருவது உறுதி.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூகம்பமோ, சுனாமியோ, வெள்ளமோ வருவதை பறவைகள், விலங்குகள் அதன் நுண்ணறிவு மூலம் முன்பே அறிந்து கொள்ளும் அற்றல் பெற்றவை. அதே போலத்தான் மழை வருவதையும் அவை வெப்பம், காற்றின் ஈரப்பதம், காற்றுவீசும் திசை போன்றவற்றை வைத்து அறிந்து கொள்கின்றன. மனிதனுக்கும் இந்த நுண்ணறிவு முன்பு இருந்தது. நாம் தான் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையிலிருந்து விலகி வந்துவிட்டோமே.
தமிழகத்தில் மழை காலம்…
ஜூன் முதல்வாரத்தில் கேரளாவில் துவங்குகிற தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதி வழியாக கர்நாடகா, கோவா தொடங்கி மும்பை, கல்கத்தா வரை இந்தியாவையே வலம்வந்து விடுகிறது.
தென்மேற்கு பருவமழை தென்னிந்தியாவில் கடுமையான வெப்பத்திற்கு பிறகு மெல்லிய தூறலாக துவங்கி பெரும் மழையாக உருவெடுக்கும், ஆனால் அசாம், மேற்கு வங்காளம், ஒரிசா, பிஹார் போன்ற வடக்கு மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளில் பருவமழையின் துவக்கம் பயங்கர இடி, மின்னலுடன் இருக்கும். தென்னிந்தியாவில் பெய்வது மென்மையான தன்மை கொண்ட பெண் மழை. வடஇந்தியாவில் அக்ரோஷமாக பெய்கிற ஆண் மழை என்கிறார்கள். தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு பெரிய அளவில் பயன்தாராது. வடகிழக்கு பருவமழைதான் தமிழகத்திற்கு பலன்தரும். கடந்த இரண்டு வருடங்களுக்குமுன் சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை, அது வடகிழக்கு பருவமழை காலத்தில் தான்.
இப்போது மழையின் தன்மையை சுற்றுப்புறச்சூழல் பெரிய அளவில் பாதிக்கிறது. பூமி வெப்பம் அதிகரித்து வருவதால் உலகம் முழுவதும் பல இடங்கிளில் வரலாறு காணத மழை பெய்து வருகிறது. பாலைவனப்பகுதியான துபாயில் கூட வெள்ளபெருக்கை ஏற்படுத்தி வருகிறது கனமழை.
இந்தியாவில் பருவமழை துவங்கி 60 முதல் 80 லட்சம் ஆண்டுகள் இருக்கலாம். பருவமழையை உருவாக்குவதும் திசை திருப்புவதும் மலைகளே. மேற்குதொடர்ச்சிமலை, தீபெத்பீடபூமி, இமயமலைத்தொடர்கள் உருவான பிறகே பருவமழை பெய்யத்துவங்கின. இந்த மலைத்தொடர்கள் உருவாகி 60 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
குறைந்த அழுத்த தாழ்வுமண்டலம்…..
“இலங்கைக்கு அருகே குறைந்த அழுத்த தாழ்வுமண்டலம் உருவாகியிருப்பதால் தென்தமிழகத்தில் கனத்த மழை பெய்யக்கூடும். கடற்கரை பகுதியில் பலத்த காற்றுவீசும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.”…
மழை காலம் தொடங்கினாலே இந்த குறைதாழ்வுமண்டலம் என்ற வார்த்தை டிவி., வானொலிகளில் அதிகமாக கேட்கும். தமிழகத்தில் பெய்யும் வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் குறைந்த அழுத்த தாழ்வுமண்டம் மூலம் கிடைக்ககூடியவை.
நாம் வாழும் பூமியில் எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பது காற்று. காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. ஒவ்வொரு தனி மனிதரையும் காற்று எல்லா பகுதிகளிலும் அழுத்துகிறது அதனால் நாம் அதை உணர முடிவதில்லை.
ஏப்ரல், மே மாத கடுமையான கோடை காலத்திற்கு பிறகு தமிழகத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் காற்று கடுமையாக வீசும். “ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்” என்ற பழமொழியே உண்டு. காற்றின் அழுத்தம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது மாறிக்கொண்டே இருக்கும் அதற்கும் சூரியனின் வெப்பம் காரணமாகும்.
காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். காற்றழுத்தம் நகரும் திசை குறித்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக முக்கியம். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவுமானி வைக்கப்படுகிறது.
காற்றழுத்த அளவுமானியை வைத்து கணக்கிடபப்படும் காற்றழுத்தத்தை கொண்டே மழை வருவதை தெரிவிக்கிறார்கள்.
தண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கியவையாக வருகின்றன. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகின்றது.
இப்போதெல்லாம் சாரல் மழை பெய்தாலே பெரும் மழை பெய்தது போல ஊடகங்கள் சொல்கின்றன. மழை நீர் உயிர் நீர்… மழை இல்லாவிட்டால் பூமியில் உயினங்கள் இல்லை.
சிலப்பதிகாரம் மழையைப் போற்றிப்பாடுகிறது…
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்
(சிலப்பதிகாரம்:1: 1-9)
மழையைப் பாதுகாப்போம்.