ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு வீட்டிலிருந்து நான்கு காணிகள் தள்ளியே அடுத்த வீடு இருந்தது. அரை நூற்றாண்டின் முடிவில் இன்று நான்கு வீடுகள் ஒரே காணியில் இருக்கின்றன. நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் மக்கள் தொகை இவ்வாறான ஓர் சமூக, பெளதீக மாற்றத்தை எம்மில் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது.
இவ்விளைவுகள் ஏற்படுத்திய மாற்றங்களில் அன்று எமது வீடுகளின் முன்புறமாக அமைந்திருந்த பூந்தோட்டத்தினதும், பின்புறமாக பராமரிக்கப்பட்ட மரக்கறித்தோட்டத்தினதும் வழக்கொழிதலையும் காணலாம். அன்றைய வீட்டுத் தோட்டங்கள் இன்றைய வீட்டுத் தோட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இன்று அழகுபடுத்தல் நோக்கங்களே வீட்டுத் தோட்டங்களின் இருப்புக்குக் காரணமாகும் அதேவேளை, அன்று இருந்த வீட்டுத் தோட்டங்கள் அழகியலுடன் இணைந்து மருத்துவ மற்றும் உணவுக்கான தாவரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சாதாரணமாக கண்களில் அகப்படும் பூங்கன்றுகள் தண்டு, இலை, பூ, காய், வேர் என பல வகைகளில் உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டன. மருந்தே உணவு, உணவே மருந்து என்ற நடைமுறையில் அந்நாட்களில் வீட்டில் செய்யும் கைமருந்துகளுக்கும் ஆரோக்கிய உணவுக்கும் அப்பாற்பட்ட தீவிரமான அல்லது சிக்கலான உடலியல் பிரச்சினைகளால் ஏற்படும் நோய்களுக்கே மக்கள் வைத்தியர்களை நாடினர்.
அவ்வாறு அழகுக்காகவும் அதேவேளை மருந்து மற்றும் உணவுக்காகவும் வீட்டுப் பூந்தோட்டங்களில் வளர்க்கப்பட்ட சில தாவரங்கள் எமது பசுமையான நினைவுகளை மீட்டிப்பார்க்க இதோ,
செவ்வரத்தை
செவ்வரத்தம் பூக்கள் மருத்துவ மற்றும் அழகுசாதனப் பொருளாகவும் பயன்படும். பளபளப்பான, வரட்சியற்ற கூந்தலைப்பெற இதன் சாற்றைப் பெண்கள் வீட்டிலேயே தயாரித்து உபயோகிப்பர், இதன் சாறு குருதியைச் சுத்தப்படுத்தும் நோக்கிலும் பயன்படும் என்று கூறப்படுகிறது. “புத்தியுள்ள பிள்ளைக்குச் செவ்வரத்தம்பூ நஞ்சல்ல” என்ற கதையும் மிகப்பிரபலமானது. பூவிதழ்களை பச்சையாகக் கடித்தும் உண்ணலாம். சிறுவர்களின் விளையாட்டில் இப்பூவுக்கு முக்கிய இடம் இருந்தது. சிறுவயதில் இப்பூவிதழ்களைக் கொய்து அதன் நடுவிழையத்தினுள் காற்றை ஊதி விளையாடியதும் நினைவிருக்கிறது.
ஜப்பான் ரோசா
இத்தாவரம் அதிகமாக அழகுத் தேவைக்காகவே வளர்க்கப்பட்டபோதும் இதில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளதாக கிராமப்புற மக்கள் நம்புகின்றனர். அதிக சூரிய வெளிச்சம் உள்ள இடங்களில் செழித்து வளரும் இத்தாவரம் சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்து எனும் ஐதீகம் இன்றும் இருந்துவருகிறது. இதன் இலைகளைப்பறித்து மெல்லியதாக அரிந்து சுண்டல் செய்யவும் பயன்படும். ஜப்பானிலிருந்து கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படுவதனாலேயே இப்பூவுக்கு ஜப்பான் ரோசா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.
வாடாமல்லி
நீண்ட நாட்கள் வாடாமல் நிறைந்து காணப்படும் இத்தாவரம் இரண்டடிவரை வளரக்கூடியது. இதன் பூக்கள் பெரும்பாலும் பெண்களின் கூந்தல் அலங்காரத்தில் நாகபந்த அமைப்பில் பயன்படுத்தப்படும். நாட்டிய அரங்கேற்றங்கள் மற்றும் மணப்பெண் அலங்காரத்திலும் இது உபயோகப்படுத்தப்படும். மட்டுமல்லாது, இருமல் மற்றும் காய்ச்சலைத் தணிக்கும் குணமும் இவ்வாடாமல்லிக்கு இருக்கிறது என்கின்றனர்.
நந்தியாவட்டை
மல்லிகைக் குடும்பத்தைச் சேர்ந்த நந்தியாவட்டை வீட்டுத் தோட்டங்களில் அதிகம் வளர்க்கப்படும் ஓர் தாவரமாகும். நறுமணம்கொண்ட பூவையுடைய நந்தியாவட்டையின் இலைகளை சருமத்தில் ஏற்படும் கட்டிகளுக்குமேல் அரைத்துப் பூசுவது வழக்கமாக இருந்துவந்துள்ளது. இச்செடியின் வேரும் பல்வேறு நாட்டு மருந்துத் தயாரிப்பில் மூலப்பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது.
காசித்தும்பை
மிகவும் மிருதுவான இத்தாவரத்தின் பூக்கள் பார்ப்பதற்கு அழகானவை. சிவப்பு, ஊதா, இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்ட இதன் இலைச்சாறு பாலுண்ணி மருக்களை அகற்றவும் பாம்புக் கடிக்கு விஷ முறிவாகவும் பயன்படும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பூக்களின் சாந்து தீப்புண்களை ஆற்றவும் பயன்படுகிறது. இதன் இலை பூ கனி வேர் ஆகியவற்றினைப் பக்குவப்படுத்தி மூட்டு வலிகளுக்கும் எலும்பு முறிவுக்கும் பயன்படுத்துவதோடு சாறு மலமிளக்கியாகவும் உபயோக்கிக்கப்படுகிறது.
பட்டிப்பூ
“அப்பாவி போல வெள்ளை நிறம் (ஊதா நிறமும் உண்டு)
அதெல்லாம் வெளிவேசம்.
உள்ளெல்லாம் பெரு நஞ்சு. குடல் பிரட்டும், பெரு நாத்தம், புடுங்யெறி”
பொக்கையால் எச்சில் பறக்கப் பொரிகின்றாள்.
கேட்க மனம் பதறுகிறது, இதன் பெருமை தெரியாது அவளுக்கு.
பயனுள்ள சிறு செடி, மறைந்திருந்து உயிர் காவும்
பெருநோயாம் குருதிப் புற்றுக்கு, இதன் சாற்றில் பொடித்தெடுத்த
வின்கிரிஸ்டின் அருமருந்தாம், வெளிநாட்டார் கண்டறிந்தார்.
நீரிழிவுக்கு சொன்ன மருந்தென, எம்மூர்ப் பரியாரியும் பகருகிறார். (hainalama.wordpress.com) இப்படிப் பாட்டிலேயே விளக்கமும் கொடுத்துள்ளனர் இச்செடியின் மருத்துவக் குணத்துக்கு.
மயில்கொன்றை
உயர்ந்து மரமாக வளரும் இத்தாவரம், மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறப் பூக்களையும் கொண்டது. முட்கள் நிறைந்த தண்டுடைய இத்தாவரம் பெரும்பாலும் பாதுகாப்பு நோக்கில் வேலியோர தவரமாகவே வளர்க்கப்படும். இந்த மயில் கொன்றை மரத்தின் பூ, இலை, காய்கள் அனைத்தும் மருந்தாகின்றன. மூட்டு வாதங்களுக்கு ஏற்ற மருந்தென நாட்டு வைத்தியர்கள் கூறுகின்றனர். இது வலியை குறைக்கக் கூடியது. வீக்கத்தை கரைக்கக் கூடியது. கண் எரிச்சல், சோர்வு போன்றவற்றை போக்கக் கூடியதாக அமையும் இம்மயில் கொன்றை, கண் நோய், கண் வீக்கம், கண் இமைகளில் தண்ணீர் சேர்ந்திருத்தல், கண் சிவத்தல் போன்றவற்றிற்கும் நிவாரணத்தைக் கொடுக்கிறது.
இக்சோரா
இக்சோரா பூக்கள் வீட்டுத் தோட்டங்களின் கட்டாய தாவரங்கள் பட்டியலில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. அலங்காரத் தேவைக்காக இதன் பல வகை வர்ணப்பூக்கள் பயன்படுகின்றன. ஒரு தேர்ந்த வீட்டுத் தோட்டத்தின் அடிப்படை தகுதிகளில் இவ்விக்சோரா தாவாத்தின் அனைத்து வகைகளையும் கொண்டிருத்தல் ஒரு அம்சமாகும். இதன் பழங்களை சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்பது வழக்கம். மட்டுமல்லாது எக்சிமா போன்ற தோல் நோய்களுக்கும் (Eczema) இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கூறிய தாவரங்கலின் மருத்துவக் குணங்கள் விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும், காலாகாலமாக மக்கள் இவற்றை தமது அன்றாட வாழ்வில்ந ம்பிக்கையுடன் பயன்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் எமது அன்றாட வாழ்வில் அதிகம் காணமுடியாத இனங்களாக இவை மாறிவரும் நிலையில் அழகுக்காகவேனும் ஏன் பயன்படுத்தக் கூடாது?