வாழ்வாதாரமான நீராதாரங்கள் இனியேனும் காக்கப்படுமா?

வரலாறு காணாத வரட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். இயற்கையும், வளமும் ஒரு சேர அரவணைத்து வெண்சாமரம் வீசும் பகுதிகளில் கூட தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிட்டது. வான் மழை பொய்த்துப் போனது என ஒற்றை வரியில் இதற்கு காரணம் சொல்லி நகர்வதை விட அபத்தமானது வேறு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

ஒரு கணம் உங்கள் கண்களை மூடி சுய விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சிந்தித்துப் பாருங்கள். நம் மாவட்டத்தில், ஒன்றியத்தில், பேரூராட்சியில், கிராமத்தில்நாம் உறவாடிக் கழித்த எத்தனை நீர் ஆதாரங்கள் இன்று வெறும் நினைவுகளாக மட்டுமே இருப்பது தெரியும். வடிவேலு ஒரு படத்தில் காவல் துறையினரிடம், ‘’அய்யா என் கிணத்தை காணோம்.” என புகார் கொடுப்பார். அது நகைச்சுவை காட்சியாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், இன்றைய சூழலில் அவசிய காட்சியாக மாறி நிற்கிறது.

தமிழகத்தில் இரு உயர்நீதிமன்றங்கள் உள்ளன. ஒன்று மாநிலத் தலைநகர் சென்னையில். மற்றொன்று மதுரையில் உள்ள, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. இங்கு நீராதாரங்கள் அழிக்கப்படுவது குறித்தும், விளை நிலங்கள் காவு வாங்கப்படுவது குறித்தும் பல்வேறு வழக்குகளும் நடந்து வருகிறது. சீமைக் கருவேல மர ஒழிப்பு பணிக்கு மதுரை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து, நீதித்துறையில் இருந்து நிதியே ஒதுக்கி சூழல் காப்பில் ஒரு படி முன்னே நின்றது. நிற்க!…இப்போது இதுவரை நீதிமன்றத்தின் சூழல் காப்பு ஆயுதம் குறித்து உங்களுக்குள் இருந்த பிம்பத்தை அடியோடு மாற்றியமைத்து விடும் வாக்கியம் அடுத்து வருவது.

தாமிரபரணி நதி (cdninstagram.com)

‘’மதுரையில் உள்ள உயர்நீதிமன்றக் கிளையே ஏரியை தூர்த்து கட்டப்பட்டதுதான். மதுரையில் உலகனேரி என்று ஒரு ஏரி இருந்தது. அந்த ஏரியை நிரப்பித்தான் மதுரை உயர்நீதிமன்றமே கட்டப்பட்டுள்ளது. இப்படி ஏரிகளையும், குளங்களையும், கண்மாய்களையும் அரசே வலிந்து எடுத்து கட்டிடங்கள் கட்டும் நிலையில், தனியாரின் ஆக்கிரமிப்புகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சென்னை நேரு ஸ்டேடியம், கோயம்பேடு சந்தை என தலைநகரில் தொடங்கி, நெல்லையில் புதிய பேருந்து நிலையம், நாகர்கோவிலில் இரு பேருந்து நிலையங்கள் என தமிழகம் முழுவதுமே உதாரணம் சொல்லலாம். பெரும் பட்டியல் வந்து சேரும். உங்களுக்கு அரசு இயந்திரங்களின் மீது சொல்லவொண்ணா கோபத்தை ஏற்படுத்திவிடக் கூடும்.

என்னுடைய குழந்தை பருவத்தில் பக்கத்து, எதிர் வீட்டு நண்பர்களோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்போம். இப்போது போல குக்கிராமங்களின் முட்டுச் சந்துகள் வரை அலங்கார தரை ஓடுகள் வியாபித்திராத காலகட்டம் அது. தெருவெங்கும் மண் தரை தான். எங்கள் சந்துக்களில் கை வைத்து மண்ணை தோண்டி விளையாடுவோம். விளையாட்டுக்கு வெறும் கையால் தோண்டிய குழியிலேயே சிறிது நீர் சுரந்து நிற்கும். அந்த அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் ஆரோக்கியமான நிலையில் இருந்தது. ஆனால் இன்று என் வீட்டு மோட்டாரில் தண்ணீர் ஏற மறுக்கவே, போரினை ஆழப்படுத்திவிட்டு நிதானிக்கையில் இவ்விசயம் நினைவை சுழற்றுகிறது.

இப்போதெல்லாம் பருவமழை பொய்த்து விட்டது என சொல்பவர்கள், மழை கொட்டிய காலங்களில் அதனை முறையாக சேகரம் செய்யும் நுட்பத்தை அறிந்திருந்தார்களா என்னும் கேள்வி நெஞ்சை ரணமாக்குகிறது. தமிழகத்தில் முன்பு 39,000 நீர் ஆதாரங்கள் இருந்தன. அதிலும் குமரி மாவட்டத்தில் மட்டும் 4000க்கும் அதிகமான நீர் ஆதாரங்கள் இருந்தன. இப்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 2040 நீர் ஆதாரங்கள் மட்டுமே குமரியில் உள்ளன. நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தின் வட்டாரப் பெயர் “குளத்து பஸ் ஸ்டாண்ட்”. காரணம் அது குளத்தை நிரப்பி உருவாக்கப்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு பயணிக்க செல்லும் கிறிஸ்டோர் பேருந்து நிலையமும் முன்பு குளமாக இருந்ததுதான். நாகர்கோவிலில்  அண்ணா ஸ்டேடியம் என்னும் பெயரில் இன்று பல விளையாட்டு போட்டிகளும் அரசு சார்பில் நடத்தப்படும் அரசு விளையாட்டு அரங்கமும் கூட முன்பு குளமாக இருந்ததுதான். இதன் பெயர் கள்ளன் குளம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் குமரி மாவட்டம் இருந்த போது, சிறையில் இருந்த திருடர்களை இங்கு வந்து குளிக்க வைப்பதால் இப்பெயர் பெற்றது. இதே போல் நாகர்கோவிலில் இன்று பெரிய வணிக வளாகங்களாக உருப்பெற்று நிற்கும் செட்டிக்குளமும் இதில் அடக்கம்.

வைகை நதி (staticflickr.com)

இது நான் யோசித்த போது என்னைச் சுற்றி இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் குளித்தும், பொழுதை கழித்தும் மகிழ்ந்த இடங்கள். எங்கள் சுற்றுவட்டார நிலத்தடி நீரை ஜீவனாய் காத்த விசயங்கள். ஒரே ஒரு நிமிடம் நிதானித்து யோசித்து பாருங்கள் .உங்கள் பகுதிகளையும். நீர் ஆதாரத்தை விட்டு நாம் எவ்வளவு தூரம் ஓடி வந்து விட்டோம் என்பது தெரியும்.  நீர் ஆதாரங்களை இழந்ததன் வெளிப்பாடே இன்றைய தண்ணீர் பஞ்சம். நிலத்தடி நீர் சேகரத்தை முறை செய்யவே, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் கடந்த 2001ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது  “மழைநீர் சேகரிப்பு திட்டம்”. மூன்று வடிவத்தில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தை தமிழக அரசு, முதலில் கட்டடத்தின் அமைப்பின்படி அமைக்க வலியுறுத்தியது. பின், மழைநீர் சேகரிப்பு திட்டம் இல்லாத கட்டடத்திற்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்தது. மேலும், புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே, “கம்ப்ளீசன்’ சான்றிதழ் தரப்பட்டது. இதனால், அப்போது சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் பெரும்பான்மை கட்டடங்களில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

அரசு கட்டடங்கள், பள்ளிகள் மற்றும் இதர கட்டடங்களிலும் கட்டாய அடிப்படையில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த வகையில் சென்னையில் மட்டும் 1,344 அரசு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைக்கப்பட்டது. மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில் குடிநீர் வாரியம் சார்பில் வீடு தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்யப்பட்டதுடன், தேவைப்படுவோருக்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைத்தும் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக, தமிழகம் எங்கும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் கடும் வெயில் ஏற்பட்ட போதும், மக்களுக்கான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவில்லை. தொடர்ந்து இத்திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டப்பட்டதால், பொதுமக்களும் தங்கள் வீடுகளில் ஆர்வமாக மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கினர்.

ஆனால் இதனை அரசு தொடர்ந்து பின் தொடராததன் வெளிப்பாடு இத்திட்டம் முடங்கிப் போனது, பொதுமக்களில் பலர் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பை தொடர்ந்து கண்காணித்து, அதில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதில்லை. துவக்கத்தில் இத்திட்டம் வந்த புதிதில் சம்பிரதாயத்துக்கேனும் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இப்போது அதுவும் இல்லை. இன்னொரு புறம் கிராமங்கள் வரை தார் சாலைகளையும், அலங்கார தரை ஓடுகளையும் அமைத்து வளர்ச்சி என புளங்காகிதம் அடைந்த நாம், அவைகளால் வடிந்தோடும் மழை நீரை மண்ணுக்குள் செல்ல அனுமதிக்க முடியவில்லை என்னும் உண்மையை உணராமல் போய் விட்டோம்.

முன்னாள் முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதாவின் ஆலோசனையில் வடிவமைக்கப்பட்ட
மழைநீர் சேகரிப்புத் திட்டம் (tn.gov.in)

நிலத்தடி நீர் மட்டம் வற்றிப் போன நிலையில், நீராதாரங்களில் போதிய அளவு நீர் இல்லை என்னும் உண்மையை அண்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நீர் இருப்பு விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில்  குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகளில் உள்ள நீர் இருப்பு தொடர்பான விவரங்களை மத்திய அரசு அண்மையில்  வெளியிட்டது. இதில் நாட்டின் முக்கிய நீர் நிலைகளின் மொத்தக் கொள்ளளவில் தற்போது 27 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நீர் இருப்பு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ஹிமாசலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நீர் இருப்பு விகிதம் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் அதனால் என்ன? நம் மக்கள் தானே கஷ்டப்படுவார்கள். ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் இல்லையே!. தண்ணீருக்கு குடத்துடன் பொது நல்லியில் காவல் நிற்கும் எந்த அரசியல்வாதியின் குடும்ப உறுப்பினர்களையும் அண்மையில் பார்க்க முடியவில்லை. அதுவெல்லாம் காமராஜர் காலத்தோடு முடிந்தும் போய் விட்டது. அண்மையில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தினால் ஏற்பட்ட கிளர்ச்சி பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை இளம் தலைமுறையினர் புறக்கணித்து ஆச்சர்யமூட்டினர். ஆனால் அரசுக்கோ, அந்நிறுவனங்களோடு தான் உறவு புதுப்பித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

மத்திய அரசின் பட்டியலிலேயே, தமிழக நீர் ஆதாரங்களில் போதிய நீர் இல்லை என வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையிலும், நெல்லை தாமிரபரணியில் இருந்து கோகோ கோலா நிறுவனத்துக்கு தண்ணீர் எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது  சாமியே சைக்கிளில் போகும் போது, பூசாரிக்கு புல்லட் கேட்ட கதையாக உள்ளது.

தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ஹிமாசலப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நீர் இருப்பு விகிதம் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. (savayavakrishipariwar.org)

தாமிரபரணியில் இருந்து நெல்லை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் 12.5 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் எடுக்கப்படுகிறது. இது தவிர தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.  கங்கைகொண்டானில் 1996-ல் 2 ஆயிரம் ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. இதில் 45 தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு 2004-இல் கோகோ கோலா நிறுவனத்துக்கு 31.54 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இ்ந்நிறுவனம் குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் இருந்து தினமும் 9 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வருகிறது. ஆயிரம் லிட்டருக்கு ரூ.37.50 மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதே போல பெப்சி நிறுவனமும் குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கிறது.

குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் இருந்து அதிகளவில் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் தாமிரபரணியில் கோகோகோலா நிறுவனம் தண்ணீர் எடுக்க மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதே நேரத்தில்  கோகோ கோலா நிறுவனம், உயர்த்தப்பட்ட சீவலப்பேரி தடுப்பணை மூலம் விவசாயிகளுக்கு நீராதாரம் கூடும் என்றும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும், உறை கிணறுகளின் நீர்நிலை சீராகும் என்றும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வேளாண்மைக்கு ஆதாரமாகவும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகின்ற தாமிரபரணி ஆற்று நீரை உறிஞ்சி, பல்லாயிரக்கணக்கான கோடிக்கு பொதுமக்களிடமே விற்பனை செய்யும் தில்லாலங்கடிகளுக்கு நீர் எடுக்க தமிழக அரசு அனுமதித்ததே எத்தனை அபத்தம். அதுவும் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான லிட்டர்  தண்ணீர்.

இதை எதிர்த்து  தொடரப்பட்ட பொதுநல வழக்கின்  தீர்ப்பில், ’’நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் பாசன வசதியை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. தாமிரபரணியை ஒட்டி 8 அணைகளும், 283 கிலோ மீட்டர் நீளத்திற்கு 11 கால்வாய்களும் செல்கின்றன. இந்த பாசன அமைப்புகள் அனைத்தும் மன்னர்கள் ஆட்சி செய்த போதும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போதும் ஏற்படுத்தப்பட்டவை.

தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து, உபரி நீர் முழுவதையும் நீர் நிலைகளுக்கு நேரடியாக செலுத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவும் வருத்தம் தருகிறது.” என வருத்தப்பட்ட நீதிபதிகள், பொதுநல மனுவில், தனி நபர் விரோதம் இருப்பதாக தள்ளுபடியும் செய்தனர். கடந்த மார்ச்சில் இருந்து மீண்டும் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் குளிர்பான தேவைக்கு லட்சக்கணக்கில் உறிஞ்சப்படுகிறது. ஆனால் தமிழக மக்களோ காலி குடங்களுடன் வழக்கம் போல் பொது நல்லியில் தவம் இருக்கிறோம்.

அரசுகளின் செயல்பாடுகள் இவ்வளவு தான் என்பது தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வரும் நிலையில், வாழ்வாதாரத்தை தக்கவைக்க நீராதாரங்களை காக்க அந்த, அந்த பகுதி மக்கள் களம் காண வேண்டும். குறைந்தபட்சம் அவற்றின் இப்போதைய நிலையையேனும் சிதைக்காமல் காப்பது உத்தமம். இரண்டாவது அந்த, அந்த பகுதி மக்கள்  குழுக்களாக இணைந்து புனரமைக்கலாம்.

Related Articles

Exit mobile version