அம்பாறை மாவட்டத்தில் பரந்தளவான விவசாய நெல் உற்பத்தியையும், கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி போன்ற தொழிற் துறைகளை உள்ளடக்கிய கிராமமாக நிந்தவூர் காணப்படுகிறது. மக்கள் பரந்து வாழும் இக்கிராமத்தில் நெல் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட அரிசி ஆலைகளும், மற்றும் செங்கல் உற்பத்தி போன்ற, சிறு கைத்தொழில் உற்பத்திகளும், நிந்தவூர்-அட்டப்பள்ள பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது
இங்கு பாரியளவிலான நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதன் காரணமாக பெரும் போக, சிறு போக காலப்பகுதிகளில் 25% நெல்லில் இருந்து உமி பெறப்படுகிறது. இங்கு பெறப்படும் உமியை மூலப்பொருளாகக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில் நிந்தவூர்-அட்டப்பள்ள பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்று 2010 ஆம் ஆண்டளவில் தனது மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மானப் பணிகளை ஆரம்பித்து, 2014 ஆம் ஆண்டளவில் அதன் மின்னுற்பத்தி செயற்பாடுகளை தொடர்ந்தது.
வளி மாசு
தற்போது, நாளொன்றுக்ககு 75000KG – 100000Kg உமி பயன் படுத்தப்பட்டு அதிலிருந்து 5 – 2MW மின் பெறப்படுகிறது. இதன் விளைவாக 16000Kg – 20000Kg உமிச்சாம்பல் வெளியேற்றப்படுகிறது. அதில் அடங்கியுள்ள பாதகமான இரசாயனங்கள் மற்றும் கரியமில வாயு (SIO2, Al2O2, Fe2O3, CaO, MgO, K2O, Na2O, SO3, C, CO2) போன்றவை சூழலுக்கு வெளியேற்றப்படுகிறது. இந்த உமிச்சாம்பலில் கிட்டதட்ட 82% தொடக்கம் 90% சதவீதம் சிலிக்கனிரு ஒக்சைட்டு (Silicon dioxide – SIO2 – 82-90%) அடங்கியுள்ளது.
இந்த சிலிக்கன் டையொக்சைட்டின் தாக்கத்தை தற்போது நிந்தவூர்-அட்டப்பள்ள மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த உமிச்சாம்பல் கறுப்பு நிறத்தில் தூள் போன்று காற்றில் எங்கும் பரவி அந்த பிரதேசத்தை மாசுபடுத்துகிறது. இதன்காரணமாக இங்கே வாழும் மக்கள் சுவாச நோய்கள் (ஆஸ்துமா), சொறி மற்றும் சிரங்கு போன்ற நோய்களுக்கும் ஆளாகி உள்ளனர். இவை உணவிலும் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் நிலவி வருகிறது. இப் பிரேதசத்தையொட்டி இருக்கும் கமு/அஷ்-சஹீதா என்ற பாடசாலையும் இயங்கி வருகிறது. பாடசாலைச் சூழல் இந்நச்சுத் துகள்களால் மாசடைவதன் காரணமாக மாணவர்கள் தங்கள் மூக்கைப் பொத்தியபடி கல்விகற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். அடிக்கடி தங்கள் இருப்பிடங்களை சுத்தம்செய்துகொள்வதோடு, கரிபடிந்த வெள்ளைச் சீருடையை நாளாந்தம் சுத்தம்செய்வதும் அச்சிறார்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
மேலும், இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் நெற்பயிர்ச்செய்கை, காய்கறிச்செய்கைகள்,போன்றவற்றில் இலைகள் மீது சாம்பல் படிவுகள் இடம்பெறுவதன் காரணமாக ஒளித்தொகுப்பு பாதிக்கப்பட்டு பயிர்ச்செய்கை பாதிக்கப்படுவதாக அங்குள்ள விவசாயிகள் விசனம் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
நீர் மாசு
மின்னிலயத்துக்கான செயற்பாட்டுக்காக 7 நிலக்கீழ் குழாய்கள் மூலம் கிட்டத்தட்ட நிமிடத்துக்கு 35 கலங்கள் அளவான நீர் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 607m³/562m³ கனவளவு நீர் அதாவது 607,000/562,000 லீட்டர்கள் நீர் பயன்படுத்தப்படுகிறது. அனல் மின்நிலையம் மீள் சுழற்சி முறையில் நீரை வெளியிடும் போது உபயோகித்த முழுக்கனவளவும் சுழற்சிக்கு உட்படுவதில்லை. ஒரு நாளைக்கு 16m³ கனவளவு வீதம் குறைந்துகொடுவரும் நீர், ஒரு மாதத்தில் 22 நாட்கள் அனல்மின்நிலையம் இயங்கும் பட்சத்தில் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 352,000 லீட்டர்(352m³) என்ற கணக்கில் காணாமல் போய்விடும். இது கடல் நீரல்ல, நிலக்கீழ் நீர். காலப்போக்கில் நீர் உறுஞ்சப்பட கரையோரப் பகுதியான இப்பிரதேசத்தில் கடல்நீர் நிலக்கீழ்வழியாக உட்புகுந்து நிலக்கீழ் நீர் உவர்நீராகிவிடும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் நீரின் வெப்ப நிலை 40°C – 50°C வரை காணப்படுவதும், கலக்க கூடாத இரசாயனக்கலவைகள் நீருடன் கலப்பதும் அபாயம்மிக்கவை.
மழை பொய்த்துப்போயுள்ள அசாதாரண காலநிலைகளில் விவசாயிகள் பயிற்ச்செய்கைக்கே நீரின்றி வாடும் நிலையில், இவ்வாறானதொரு செயற்பாட்டிற்காக மிகையளவான நீர் பயன்படுத்தப்படுவது நாளடைவில் இத்தொழிற்சாலையை அண்டிய பிரதேசங்களில் நீர் மட்டம் குறைந்து நீர்ப்பற்றாக்குறை ஏற்பட வழிகோலும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதுமட்டுமன்றி, நன்னீர்நிலைகளில் கலக்கவிடப்படும் இத்தொழிற்சாலைக் கழிவுநீரினால் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இம்மின்னிலையத்தின் செயற்பாட்டால் தற்போது ஏற்பட்டிருக்கும், பிரச்சினைகள்.
- பயிர்களின் இலைகளில் கழிவுத்தூசு படிவதால் தாவரங்களின் ஒளித்தொகுப்புவீதம் பாதிப்படைதல். பிரதானமாக வேளாண்மை.
- கழிவு நீர் நன்நீருடன் கலப்பதால் நன்நீருக்கு மேல் படைபோன்ற பாடல் உருவாக்கி நீர் மற்றும் வளித் தொடர்பு துண்டிக்கப்பட்டு பிராணவாயுப் பற்றாக்குறையினால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
- அதிக சத்தம் காரணமாக சூழல் மாசடைகிறது.
- நச்சுத் தூசு வெளியேற்றத்தினால் மக்கள் தோல் நோய்களால் அவதியுறுகின்றனர்.
- நீர்நிலைகளிலிருந்து மிகையளவாக நீர் உறுஞ்சப்படுவதால் காலப்போக்கில் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
- அதிக புகை வெளியேறுவதன் காரணமாக வளிமண்டலம் பாதிப்படைகிறது.
- உமிப் பற்றாக்குறை காரணமாக அப்பிரதேசவாழ் மக்களின் வாழ்வாதாரமான செங்கல் உற்பத்தி பாதிப்படைகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
மின் நிலையத்தினை நிறுத்தக் கோரி நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். சிவானந்தம் ஆகியோர்களிடத்தில் பிரதேச மக்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்த விடயம் சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல், இந்த மின்நிலைய பிரச்சினை தொடர்பாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றதாகவும், இக் கூட்டத்திபோது இதனை ஆராய ஒரு உயர்மட்டக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது எனவும் இரண்டு வாரங்களில் இது சம்மந்தமான தொழில்நுட்ப அறிக்கைககள் கிடைக்கப்பெறும் எனவும் அவை கிடைக்கப்பெற்றதும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இருந்தும் இதுவரை இது தொடர்பான எவ்வித முன்னேற்றங்களும் பெறப்படவில்லை.
ஒரு மாதத்துக்கு முன்பாக சுகாதார பிரதியமைச்சர் திரு.பைசால் காசிம் அவர்கள் இது சம்பந்தமாக ஜனாதிபதியிடம் நேரடியாக சென்று முறையிட இருப்பதாகவும், அதற்காக பொதுமக்களில் ஐந்து பேரை கூட்டி செல்ல இருப்பதாகவும் அனல்மின் நிலையம் சம்பந்தமான ஒன்று கூடல் ஒன்றில் வாக்குறுதி அளித்திருந்தார். இருப்பினும் அவ்வாக்குருதியும் பின்னர் நிறைவேற்றப்படவில்லை.
இலங்கைக்கு அனல் மின்னுற்பத்தி உகந்ததா?
கொழும்பில் ஜனவரி 24ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற கால நிலை மாற்றம் தொடர்பில் எதிர்கொள்ள நேரும் சவால்கள் குறித்த விசேட மாநாட்டில் உரையாற்றும்போது அனல் மின் உற்பத்தி இலங்கைக்கு பொருத்தமில்லாதது என்றும் இலங்கை எதிர்காலத்தில் அனல் மின் உற்பத்தியை தவிர்த்துக்கொள்வது சிறந்ததெனவும் அமெரிக்கப் பேராசிரியரும் விஞ்ஞான தொழில்நுட்பத்துறை சர்வதேச பேரறிஞருமான சேர். ரொபர்ட் டோனி வட்ஸன் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் சர்வதேச நாடுகள் காலநிலை மாற்றத்தால் எதிர்கொள்ள நேரும் தாக்கங்கள் மற்றும் சவால்கள் அதற்கான தீர்வுகள் தொடர்பில் அவரது சிறப்புரை அமைந்திருந்தது. கடும் குளிர், கடும் வெப்பம் மற்றும் வரட்சி உள்ளிட்ட காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் தாக்கங்கள் மக்களது வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. வரட்சி, வறுமை போன்றவற்றின் பாதிப்புகளுக்கு இலங்கை உட்பட பல நாடுகள் முகங்கொடுக்க நேரிட்டுள்ளன என்றும் அவர் அளித்த விளக்கம் இம்மின்னிலையம் தொடர்பான வாத பிரதிவாதங்களுக்கு தக்க பதில் தருவது மறுக்கமுடியாதது.
வளி, நீர், விவசாயம், கல்வி, சுகாதாரம் மற்றும் அப்பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் இத்தொழிற்சாலை தொடர்பான உரிய நியமங்களை அமைக்கவேண்டிய கட்டாயத்தில் எமது சமூகம் இருக்கின்றது. மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்குப் பங்கம் விளைவிக்காத வகையில் எந்தவிதமான அபிவிருத்திச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படலாம் ஆனால் மக்களின் அடிப்படையையே ஆட்டம்கானவைக்கும் இவ்வகையான திட்டங்கள் மனிதகுலத்தின் இருப்புக்கு எவ்வித பங்களிப்பையும் வழங்கப்போவதில்லை. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். கடல், வயல்,பயிர்ச்செய்கை, மீன்பிடி என சுகாதாரமான முறையில் இயங்கிவரும் ஒரு சூழல் தொகுதியை கந்தக காற்றும் கரியமில வாயுவும் தின்றுவிடாது காப்போம்