பிறப்பையும் இறப்பையும் ஒன்றாக பார் என்பது ஞானிகளின் தத்துவத்தில் ஒன்று, அதை இன்றளவும் நாம் வாழும் சமூகத்தில் பின்பற்றுவோர் வெகு சிலரே. ஆனால், இனி நாம் அனைவரும் அதை பின்பற்றும் மனநிலையை தயார் செய்துகொள்வோம். ஏனெனில் இனிவரும் காலங்களில் பிறப்பும் இறப்பாகவே பிறக்கப்போகிறது. நான் உங்களில் ஒருவன், கொஞ்சம் கொஞ்சமாக இறப்பை நோக்கி பயணிக்கிறேன். வெகு நாட்களுக்கு முன்பே என் மரணத்தை கணித்துவிட்டேன், அதற்கு காரணம் யாரென்றும் தெரிந்துவிட்டது. வேறுயாருமில்லை நான்தான் முதல் காரணம், இரண்டாவது நீங்கள் ஒவ்வொருவரும். புரியவில்லையா?? சொல்கிறேன் ! சிந்தியுங்கள் !
இயற்கை அனைத்து உயிர்களுக்கும் சமமானது,பேரண்டத்தின் உருவாக்கமே அதன்படி உருவானதுதான். அதன் சிறுப்பகுதி நாம் வாழும் பூமி. பூமியின் அடிப்படை விதி சமநிலை காப்பது . எதுவாக இருந்தாலும் அதுவே தீர்மானிக்கும். அதன்படி, இயற்கையின் பேராற்றல் சிலந்தி வலைக்குள் அடக்கிவிடலாம், அதில் சிறிய இடத்தில் இடையூறு ஏற்பட்டாலும் அது பூமியின் ஏதோ ஒருபகுதியில் பேராபத்தை ஏற்படுத்தும். நம் கண்ணோட்டத்தில் அது பேரழிவு, அதுவே இயற்கையின் பார்வையில் பார்த்தோமெனில், தன்னை சார்ந்த உயிர்களுக்கு தீங்கு நேரிடக்கூடாது என தானே சரி செய்துகொள்கிறது. அப்படியானால் சமநிலை போதிக்கிறது. அப்பொழுது அந்த இடையூரின் காரணம் ?
கருத்தரிப்பும் ! கண்டுபிடிப்பும் !
இயற்கையை சார்ந்து வாழும் உயிரினங்கள் அனைத்தும் அதனை மைய்யமாக்கியே பரிணாமம் பெற்றுள்ளது. அவைகள் இயற்கையை இடையூறு செய்யவில்லை. அதனால்தான் காடுகள் பசுமை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. காடுகளில் ஓடும் நதிகள் அந்த காடுகளின் எல்லா உயிரினங்களின் மேன்மையாக பார்க்கப்படுகிறது.இங்கு ஓர் அறிவில் தொடங்கி ஆறறிவு வரை இணக்கமாகவே காலம் நகர்கிறது. இருப்பினும் அனைத்து உயிர்களில் மேலாக கருதக்கூடிய ஒரே உயிரினம் மனிதன் (அதை மனிதனே கூறிக்கொள்வான்) . இங்கே மற்ற உயிரினங்கள் செய்ய அஞ்சும் அனைத்தையும் மனிதன் செய்வான். அவனின் ஓரே யுக்தி சிந்தித்தல். அந்த சிந்தனை, மானுட சமூக வளர்ச்சிற்கு பெரும் நன்மை புரிந்துள்ளது,அதுப்போலவே நேரெதிராக தீமையும் நிகழ்ந்துள்ளது.
தாயின் கருவை களைப்பதும், மரங்களை வெட்டுவதும் ஒன்று என தொல்காப்பிய நூல் கூறுகிறது. அதை மனிதன் தன் சிந்தனைகொண்டு, தான் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகளை வைத்து அதே கருவை உருவாக்க பல்வேறு வகையில் இயற்கைக்கு மாறாக முயற்சி செய்துக்கொண்டே இருக்கிறான். இதில் நாம் சாதித்துவிட்டோம் என்ற இறுமாப்புடன் கூறுகிறார்கள் அறிவியல் சாதனையாளர்கள் . எச்சரிக்கை ! மனித வரலாற்றில் அறிவியல் ஒருபோதும் இயற்கையிடம் வென்றது இல்லை. இங்கு கண்டுபிடிப்பு என்று சொல்லும் அனைத்துமே இதற்குமுன் இங்கேயே இருந்துள்ளது. சிந்தித்து செயல்படுங்கள்.
பூமியின் மிகப்பெரிய மாசு!!!
இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் ஒரு விபத்தால் தோன்றியது. துகள்களாக உருவான கோள்கள்.தூசுகளால் உருவான உயிர்கள். இந்த உயிர்கள் வாழ தகுதியான இடமாக பூமி பரிணமிக்க கோடான கோடி ஆண்டுகள் ஆகிற்று.அவற்றுள் மிக முக்கியமான ஐந்து, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஒருசேர ஒரு கோள்களில் இருக்குமானால் அங்கு உயிர்கள் ஜனிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக உறுதிசெய்த ஒன்று. அப்படி அழகான ஒரு கோள்தான் நாம் வாழும் இப்பூமி. எல்லா ஜீவராசிகளுக்கும் தான் வாழ என்ன வேண்டுமோ அதை மட்டுமே இப்பூமியில் இருந்து எடுத்துக்கொண்டது, மனிதனை தவிர!!!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் அனைத்து உயிர்களின் தலைவனாக இருந்தவன் மனிதன்(homo sapiens). அவன் உயிரினங்களின் இந்த தலைமையைகூட ஏமாற்றி பறிக்கப்பட்டவை. ஆம், நமக்கு இணையான இல்லை இல்லை நம் அறிவிற்கும் ஒருப்படி மேல யோசிக்கக்கூடிய இன்னொரு மனித இனம் உண்டு அவர்களை நியாண்டர்தால் (Neanderthal) என அழைப்பர். இவர்களை முழுமையாக அழித்த பெருமை நம்மையே சாரும். அதுவும் சிந்தனை தொடக்கத்திலே நாம் அழிவை ஏற்படுத்த தொடங்கிவிட்டோம்.
மனிதனின் சிந்தனை மற்றும் வளர்ச்சிபசியில் என்னால் நீங்களும், உங்களால் நானும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கிறோம். இதனால் நமக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் நிறைய உண்டு, அவை நம் வளர்ச்சிக்காக இப்பூமியை அழித்துக்கொண்டு இருக்கிறோம். மனிதனின் புதிய வழிமுறைகள், சிந்தனைகள், செயலாக்கங்கள் இவை அனைத்தும் மனித நலன் சார்ந்தே உள்ளதே தவிர மற்ற உயிர்மேல் இல்லாமல் போனதால் பூமியில் நிறைய உயிரினங்களின் இனப்படுகொலையை இன்முகத்தோடு செய்தோம். இனப்படுகொலை செய்வதும் (ஆதரிப்பதும்) நமக்கு புதிதாயென்ன?
இயற்கைக்கு எதிராக மரங்களில் இருந்து ஆரம்பித்தோம் நம் வேட்டையை, மரத்தின் உபயோகம் இல்லாமல் நாம் வாழ்க்கையை வாழமுடியாத அளவிற்கு அது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. வர்த்தகரீதியாக நாடுவிட்டு நாடும், கண்டம் விட்டு கண்டம் ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறோம். வர்த்தகம் சூடுபிடித்தது, வளங்கள் சுருங்க ஆரம்பித்தது. பெரும்முதலாளிகள் காடுகளை அரசாங்கத்தின் உதவியோடு சுயலாபநோக்கில் ஆக்கிரமிப்பு நடத்தப்படுகிறது. மரம் இல்லாமல் சுத்தமான காற்றிற்கு அலைகிறோம். மரம் இல்லையேல் உயிர்கள் இல்லை.
மரம் இல்லாமல் காற்றின் உயிர்பதம் தீர்ந்துகொண்டே வருகிறது
மரம் அழிக்கப்படுகிறது , சுவாசிக்கும் காற்றின் உயிர்தன்மை குறைந்துவிட்டது, தொழிற்சாலைகள் நாட்டின் வளர்ச்சியென கட்டுப்பாடற்று விரிவாக்கம் செய்யும் தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப்புகையால் எம்மக்கள் சுவாச கோளாறால் மடிகிறார்கள். நமக்கு தெரியாமல் காற்றை அசுத்தம் செய்து வருகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அதில் மிக முக்கியமா கவனிக்கப்படவேண்டிய ஒன்று, செல்போன் டவர் இதில் இருந்து வரும் கதிர்வீச்சு மனிதனுக்கு புற்றுநோய் ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், அதே கதிர்வீச்சில் சிட்டுக்குருவி இனத்தையே 99% அழித்துவிட்டோம். வந்துவிட்டது சுத்தமான காற்று விற்பனைக்கு. தயாராகுங்கள்!!!!
மரம் அழிக்கப்படுகிறது , நீர்நிலைகளை வற்றாமல் தாங்கிப்பிடிக்க வேர்கள் இல்லை, ஆற்று மணல் சுரண்டல், சாயப்பட்டறை கழிவுகள், தனியார் தொழிற்சாலைகள் உறிஞ்சும் நிலத்தடி நீர், மக்களின் சுயநலத்திற்காக நகரங்களில் இடைவெளியே இல்லாமல் ஆழ்துளை கிணறு தோன்றுவது, மனிதக்கழிவுகளை நீர்நிலைகளில் பக்கம் திசைதிருப்புவது. மொத்தத்தில் சொல்லப்போனால் நீர் உபயோக சட்டம் என எதுவும் இல்லை. அதனால் தண்ணீர் அடிப்படை உரிமை என அடிசுவடே இல்லாமல் செய்துவிடுவோம்.
மரம் அழிக்கப்படுகிறது, பணத்தின் மோகத்தில் குறுகிய காலத்தில் விளையும் பயிர்கள் பயிரிட்டு அதற்கு ரசாயன உரங்கள் தெளித்து மண்ணை மலடாக்கி எதற்குமே உதவாது என்ற முடிவிற்கு வந்து இறுதியில் கார்பொரேட் முதலாளிகளிடம் விற்றுவிட்டு அவனிடமே தொழிலாளியாக சேருவதே இன்றைய விவசாய மக்களின் நிலை, மழை இல்லாததால் நிலம் வெடிப்பு, உலகத்தின் பெரும் சவாலாகவும் அசச்சுறுத்தலாகவும் கருதப்படுகின்ற ஒன்று “நெகிழி(Plastic)”. இந்த நெகிழி குப்பை மண்ணை வளம் பெறவிடாது, மழைநீரை மண்ணிற்குள் இறங்கவிடாது. மக்கும் தன்மை என்பது நூறு வருடங்கள் ஆனாலும் மண்ணிற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. போரில் வெற்றி பெறுவதை காட்டிலும் நெகிழியை ஒழிப்பது கடினமானது இன்றைய சூழலில்.
” செத்துக்கொண்டு இருக்கிறோம் கவனம் கொள்ளுங்கள், நம்மை சுற்றி நஞ்சு அனைத்திலும் கலந்துவிட்டது. வாழ்வதற்காக பயன்படுத்துவதாக கூறுகிறாய். நஞ்சுள்ள வாழ்வே ஆரோக்கியமானது என்பதை நம்பவைத்துவிட்டார்கள். மாசு பற்றியே நான் எழுத நினைத்தேன், ஆனால் உங்களுக்கு மிகையாவே தெரியும் என்பதை உணர்ந்தேன், இருப்பினும் நான் எழுத காரணம் நீங்கள் அறியாத மாசு. ஆம், பூமியின் மிகப்பெரிய மாசு” மனிதன் “. இதுவரை பார்த்த அத்தனை விளைவுகளுக்கும் நாம்தான் முதற்முக்கிய காரணம். மனித சிந்தனை மாசு பட்டால் அழிவு உறுதி என கூறி விடைபெறுகிறேன்.” என் இறப்பு உங்களால்,உங்கள் இறப்பு என்னால். நன்றி.
குறிப்பு
முன்னேற்றத்தின் வழியே பயணத்தை தொடர்ந்துக்கொண்டு இருக்கும் நாம், சற்று சிந்தித்து பார்க்க வேண்டுகிறேன். இவ்வளவு வளர்ச்சிற்கும் எது மூலமாக இருந்தது, எதன் அடிப்படையில் மனிதகுலம் முன்னேற்றம் அடைந்தது. ஒன்றே ஒன்று தான் காரணம் “காலம்”. இங்குள்ள அத்தனை கண்டுபிடிப்புகளும், மாற்றங்களும், காலத்தின் அடிப்படையிலே உச்சத்திற்கு சென்றுள்ளதை பார்க்கிறோம். அதே நேரத்தின் அடிப்படையிலே கண்டுபிடிப்புகளும் பரிணாமம் அடைந்துள்ளது. ஆனால் அந்த கண்டுபிடிப்புகளை இயற்கையை அழித்தே உருவாக்கி உள்ளோம். இதை ஒருபோதும் இயற்கை அனுமதிப்பதில்லை ஏனெனில், மனித வளர்ச்சிக்கும், ஆசைக்கும் இடையில் மற்ற உயிரினங்களை சிந்திக்காமல் அழிப்பதும் இயற்கையின் இடையூரே, ஆதலால் இதன் பின்விளைவு எங்கோ இயற்கை சீற்றமாக, பனிமலைகள் உருகியும், வெயிலின் தாக்கம், குடிநீர் பற்றாக்குறை ,நிலத்தடிநீர் வறண்டது, மாரி பொய்த்தது, மண் மலடானது, . இதுபோல இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகமுடியும். நம் நோக்கம் வளர்ச்சி என்பதினை இயற்கை சார்ந்தே இருக்கவேண்டுமே தவிர அதனை அழிப்பதில் இருந்து தொடங்குவத்தை நாம் அனுமதிக்க கூடாது. இனிவரும் காலங்களில் விழிப்போடு எதிர்கொள்வோம்.
சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 ல் உங்களிடம் இதனை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து உங்கள் மேலான கருத்துகளையும் தெரிவிக்கலாம்.
Web Title: Beat Plastic Pollutions
Featured Image Credit: pt-a.blogspot