இலங்கை கடற்பரப்பின் திமிங்கிலங்களோடு – மிரிஸ்ஸ

கடல், மனித குலம் என்றும் வியக்கின்ற ஓர் ரகசியப் பள்ளம். கண்ணுக்குத் தெரிந்த, ஆராய்ச்சி செய்த உண்மைகள் மற்றும் கற்பனை வாதங்கள் தாண்டி கடல் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் எமது கற்பனைக்கெட்டாத அதிசயங்கள் எத்தனை கோடியோ! அதனாலேயே, கடல் கொண்டுள்ள அற்புதங்களையும் அது எமது கண்ணுக்களிக்கின்ற விசித்திர அழகையும் ஆர்வத்தோடு அணுகுகின்ற கடற்காதலர்களுக்கு பஞ்சமே இல்லை எனலாம்.

“கடல் வாசல் தெளிக்கும் வீடே” என்று கவிப்பேரரசு வைரமுத்து உவமித்த இவ்விலங்கைத் தீவின் எழில் அதுகொண்ட கடற்பரப்பு, கடற்கரைகள், கடல்சார் நிலக்கூறுகள், விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றால் மேலும் மெருகேறி நிற்பது கண்கூடு.

வருடம்தோறும் இலங்கை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகளும், இலங்கையின் கரையோரம் முழுதும் நிறைந்திருக்கும் சுற்றுலா விடுதிகள் மற்றும் உபசார கலாச்சாரமும் இலங்கைத் திருநாட்டின் கடற்கரைகளின் மகிமையை பறைசாற்றும். குறிப்பாக, இலங்கையின் தென் மாகாணம்; அதன் பாறைப் பாங்கான கடற்கரைகளுக்கும், ஆழம் குறைந்த, நீர் விளையாட்டுக்களுக்கு ஏதுவான, கடல்வாழ் உயிர்ப் பல்வகமைமிகு கடற்பரப்புக்கும் பிரபல்யம்வாய்ந்தது.

மிரிஸ்ஸ – Mirissa

இலங்கையின் தென் மாகாணத்தில் வெலிகமைக் குடாவை (Weligama Bay) அண்மித்ததாக இருக்கிட்ற ஓர் சிறிய கடற்கரை நகரமே மிரிஸ்ஸ. ஒப்பீட்டளவில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை தன்னகத்தே ஈர்க்கும் இந்நகரம் இலங்கையின் பாரிய மீன்பிடித் துறைமுகத்திற்கும், அத்துறைமுகத்தினூடு திமிங்கிலம் மற்றும் டொல்பின்களை காணச் செல்லும் கடற்பிரயாணத்திற்கும் பெயர்போனது. இலங்கையின் தென்கோடியினூடான எமது நீண்ட சுற்றுலாவின் முதலாம் நாள் இரவு நாங்கள் இந்நகரை வந்தடைந்தோம்.

Mirissa (Pic: dronestagr.am)

நட்சத்திர விடுதிகளிலிருந்து, சாதாரண விடுதிகள் வரைக்கும் குறைவே இல்லாத மிரிஸ்ஸ, இராப்போதிலும் சுறுசுறுப்பாக இயங்கும் தூங்கா நகரம் என்றே சொல்ல வேண்டும். வெலிகமைக் குடாவின் அழகிய தோற்றம், சாலையோர உணவகங்கள், வீதி நிறைந்த சுற்றுலாப் பயணிகள், கேளிக்கைகள் என இரவிலும் பகலாய் காட்சியளிக்கிறது நகரம். கொழும்பிலிருந்து வரும்வழி முழுதும் பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு களைத்துப்போன எங்கள் நண்பர் குழாம் இராப்போசனத்தோடு, மறுநாள் செல்லப்போகும் கடற் பிரயாணம் பற்றிய கனவுகளோடு தூங்கிப் போனது.

Weligama Bay (Pic: 3.bp.blogspot.com)

பெரும்பாலும் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான கடற்பிரயாணங்கள் அங்குள்ள விடுதிகளின் தொடர்பு மூலமே ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றன. படகுகளின் உரிமையாளர்களை தொடர்புகொண்டு எங்களுக்கான முற்பதிவுகளை எமது விடுதிமூலமே செய்துகொண்டோம். அடுத்த நாள் 6 மணியளவில் மிரிஸ்ஸ துறைமுகத்தில் இருந்து படகு கிளம்புவதனால், அதிகாலை 5:30 மணிக்கே நாங்கள் ஆயத்தமாக காத்திருந்தோம். விடுதியிலிருந்து எங்களை துறைமுகம் கூட்டிச்செல்ல முச்சக்கர வண்டிகளும் ஒழுங்குசெய்யப்பட்டு ஆயத்தமாக இருந்தன. கிளம்புவதற்கு முன்பே கப்பலின் இயக்கித்தினால் குமட்டல் வராமலிருபதற்கான மாத்திரைகளை முன்யோசனையாக உட்கொள்ளுவது சிறந்தது. கப்பலில் பிரயாணம் ஆரம்பிக்க முன்னர் மேற்படி மாத்திரைகள் வழங்கப்படுவது வழமை ஆயினும், உங்கள் மாத்திரைகளை நீங்களே கொண்டுசெல்வது உசிதம்.

சூரிய உதயம் மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் அதிகாலை வேளையில் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தினூடு கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தளத்தை நோக்கி முச்சக்கரவண்டிகள் சென்றன. அவ்வளவு பெரிய மீன்பிடித் துறைமுகத்தை அதுவரை நாங்கள் கண்டதில்லை. அதிகாலையில் கரையேறிய படகுகளும், கொண்டுவரப்பட்ட மீன் வகைகளும், நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் நிறைந்திருந்த அக்காட்சி, கடலுணவுகளின் காதலர்களுக்கு சொர்க்க வாசல்தான்.

புதிதாக பிடிக்கப்பட்ட இறால், கணவாய், மீன்கள் என நிறைந்திருந்த அவ்விடம் தந்த புலால் வாசம் நாசி துளைக்கையில் காலை உணவுகூட சாப்பிடாத வயிற்றில் அமிலம் சுரந்தது. அந்நிறைவான காட்சியைக் கடந்தபடியே துறைமுகம் நோக்கிச் சென்றோம்.

Cruise at Harbour (Pic: ourglobaltrek.com)

பயணத்துக்கு ஆயத்தமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் அவர்களை ஏற்றிச் செல்வதற்காக பல படகுகளும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இப்பிரயாணங்களுக்கேன்றே பிரத்தியேகமாக பல படகுச் சேவைகள் மிரிஸ்ஸவில் இயங்குகின்றன. பயணிகளுக்கான காப்புறுதிகளில் இருந்து, காலை உணவு, தேநீர் உபசாரங்கள் என அனைத்தையும் அவர்களே வழங்குகின்றனர்.

பெரும்பாலும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையே இக்கடற்பரப்பில் திமிங்கிலங்களையும் டொல்பின்களையும் மற்றும் பல கடல்வாழ் உயிரினங்களையும் காண முடியும். ஏனைய காலப்பகுதியில் இப்பிரதேசத்தின் கடற்பரப்பு கொந்தளிப்பாக இருப்பதாகவும் அவ்வேளைகளில் திமிங்கிலங்கள் தென்படுவதில்லை என்றும் தெரிகிறது. காலை 6 மணியளவில் படகுகள் துறைமுக வளைவினூடு வெலிகமைக் குடாவிலிருந்து அகன்று கடலுக்குள் தனது பயணத்தை ஆரம்பித்தன.

படகு  கடலுக்குள் செல்லச் செல்ல ஒருவித பிரமிப்பும், ஆர்வமும், கூடவே பீதியும் தொற்றிக்கொண்டது. இதுவரை அவ்வாறான நீண்ட நேர கடல் பயணம் கண்டிராத எங்களுக்கு அது ஒரு புதுவித மனோநிலையையே கொடுத்தது. மேலும் கீழுமாக அசைந்தபடி நகர்ந்த படகு சிலநேரம் பள்ளத்தில் வீழ்வது போல கீழிறங்குவதும், அடுத்த கணமே அலையில் உயர்ந்து மேற்செல்வதும் படகுமுழுக்க இருந்த அனைவரையும் ஆர்ப்பரிக்கச் செய்தது. இத்தனைக்கும் இடையே கடல்மீது கொண்ட ஆர்வமும் காதலுமே மேலோங்கி நின்றது. கொஞ்சம் கொஞ்சமாக கரை கண்களை விட்டு மறைய ஆரம்பித்ததும் திரும்பிய பக்கமெல்லாம் பரந்து விரிந்த நீர்ப்பரப்பே அன்றி வேறொன்றும் புலப்படவில்லை.

Cruise (Pic: iburtours.com)

இத்திரைக்கடலில் எந்திரம் இயக்கும் படகில் கூட்டமாகச் செல்லும்போதே இவ்வளவு பயமும் பீதியும் தொற்றிக்கொள்கிறதே, கொந்தளிக்கும் கடலில், மலைபோன்ற அலைகளையும் சமாளித்து, ஒற்றைப்பெண்ணாய் படகுவலித்த கல்கியின் சமுத்திரகுமாரியை நினைக்க நினைக்க வியப்பே எஞ்சியது. கல்கியின் கற்பனைக்கு தலைவணங்கியபடி லயித்திருந்த வேளையில் ஆங்காங்கே கடற்பரப்பின்மேல் அதிசயமாக சிறு தும்பிபோன்ற பறவைகள் பறப்பதும் மறைவதுமாய் இருந்தது கண்டு ஆளாளுக்கு ஓர் ஆருடம் கூறினார்கள். சிலர் மீன்கொத்தி என்றார்கள், சிலர் கடல் தும்பி என்றார்கள், அப்படியானால் அவை திடீரென மறைவது எங்கனம்? இப்படி ஒருவரை ஒருவர் கேட்டபடி செல்கையில், அவை பறக்கும் மீன்கள் என இணையத்தில் நோண்டி அறிந்துகொண்டோம். ஆமாம், நாட்டுக்குள் சிறுகச் சிறுக வரும் தொடர்பாடல் சமிக்கை நடுக்கடலில் நன்றாகவே வந்தது.

அதிகாலையில் ஆயத்தாமாகி வருவதனால், பயணிகளுக்கு படகிலேயே காலை உணவும், தேநீர் உபசாரங்களும் வழங்கப்படுகிறது. பழங்கள், தேநீர், கோப்பி, காலை உணவு என கொஞ்ச நேரம் படகு கிளுகிளுப்படைந்திருந்தது.

Dolphin (Pic: destinationsrilanka.travel)

கிட்டத்தட்ட தெற்குநோக்கி இருபது கிலோமீட்டர்கள் சென்றபின்னர் எல்லோரும் மிகக் களைத்திருந்தோம். இவ்வளவுதூரம் வந்தும் ஆங்காங்கே மிதந்து வந்த பிளாத்திக்குப் பொருட்கள் மற்றும் நெகிழிப் பைகளைத் தவிர வேறு உயிரினங்கள் எதுவும் கண்ணில் படவில்லை. இப்போது நாங்கள் வருவோம் என்றறிந்து எப்போதோ எம்மவர் போட்டுவைத்த பிளாத்திக்கு கைங்கரியத்தை கண்டு உளம்பூரித்து டால்பின்களை கனவில் கண்டதோடு சரி என்று கண்கள் களைத்துப் போன சமயம், படகுகளின் மோட்டார்கள் திடீரென நிறுத்தப்பட்டன. அலைகள் தூக்கி எறிந்த வாக்கிற்கு படகு அங்குமிங்கும் ஆடிற்று. ஆங்காங்கே தூரத்தில் தெரிந்த படகுகள் அனைத்தும் எங்களைப்போலவே மோட்டார்களை நிறுத்தி அவசர மௌன விரதத்தை அணிந்துகொண்டன.

Whale & Boat (Pic: pinterest.com)

படகுக் காரர்களுக்குத் தெரியும் எங்கே எப்போது டால்பின்கள் அகப்படும் என்று. சொல்லிவைத்தாற்போல் அனைத்துப் படகுகளும் சமீபத்தில் அவற்றுக்குச் சாத்தியம் இருப்பதாய் மௌன மொழியில் கட்டியம் கூறின. பத்து, இல்லை இருபது, இல்லை ஐம்பது இப்படி எண்ணிக் கணிக்க முடியாமல் கும்பல் கும்பலாக படையெடுத்துச் செல்லும் டால்பின்கள் முழுவதும் பாதியுமாக நீர்மட்டத்திற்கு மேல் தாவித்தாவி எங்களுக்கு தரிசனம் தந்தன. ஆர்வம் பெருக்கடுக்க இயல்பில் தெரிந்த காட்சியை இயன்றளவு சேமித்துவைக்க ஆளாளுக்கு திறந்பேசி தேடியெடுத்து அவரவர் வாக்கில் காணொளியாய் பதிவுசெய்துகொண்டோம். கண்களின் வேகத்தை வென்று அவ்வளவு வேகமாக நீந்திய டால்பின்களை இயன்றவரை பார்த்து ரசித்தோம். உடனே மோட்டார்கள் முடுக்கிவிடப்பட படகுகள் அத்தனையும் டால்பின்கள் சென்ற திசை நோக்கி விரைந்து சென்றன. இயற்கை மனித மூளையை விட விசித்திரமானது அல்லவா? தொடர்ந்து சென்ற எங்களால் அவற்றை பின்தொடர முடியவில்லை. சில நொடிகள் நீடித்த அக்குதூகலம் வாழ்க்கை முழுதும் நினைத்து நினைத்து மகிழக்கூடிய அதிசய நொடிகள் என்பது உறுதி.

Jumping Dolphins (Pic: iha.com.de)

படகுகளில் சில நிமிடம் இவ்வாரவாரமும் அவரவர் கண்ட காட்சிகளின் அனுபவப் பரிமாற்றமும், களிப்பும் நிலைகொண்டது. இதுவென்ன பிரமாதம்! இதோ இருக்கிறேன் நான் என்று பெருமை கொள்வதுபோல் அலைப் பரப்பில் நிலைகொண்ட நீண்ட கற்பாறையாய் காட்சியளித்தது ஓர் திமிங்கிலம். அதற்கும் எங்களுக்குமான தூரம் எப்படியும் ஒரு கிலோ மீட்டராவது இருந்திருக்கும். தோற்ற நீளத்திலேயே பிரமிப்பூட்டும் திமிங்கிலத்தின் உண்மை நீளம் எவ்வளவோ என வியக்கவைத்தது அக்காட்சி. டால்பின்கள் கொடுத்த பிரமிப்பிலிருந்து மீள முன்னரே இன்னுமொரு அதிசயம் எங்களை நோக்கிவந்த தருணம் அலாதியானது. நீந்திவந்த திமிங்கிலம் நீர்ப்பரப்பில் விட்ட மூச்சில் சிதறித் தெறித்த தண்ணீர் மலை மாலையாக மேலெழுந்து வீழ்ந்தது. நீர் மேற்பரப்பிலிருந்து அடிநோக்கி திரும்புகையில் வால்ப்பகுதியை நீப்பரப்பின் மேல் வளைத்து மேலெழும்பியயபடி அத்திமிங்கிலம் காட்டிய சாலம் ஆயுட்கால அனுபவம். ஆங்காங்கே ஒன்றிரண்டு திமிங்கிலங்கள் எங்கள் பயணத்திற்கு பெறுமதி சேர்த்த களிப்பில் நிறைந்த மனதோடு நீண்ட நேரப் பிரயாணத்தில் களைத்திருந்த படகுகள் புத்துயிர்பெற்று மகிழ்ந்தன.

Whale Tail (Pic: pinterest.de)

திமிங்கிலங்கள் கண்டு களித்தபடியே கரைக்குத் திரும்பலானது படகு. ஒப்பீட்டளவில் இப்பயணத்திற்கு கொடுக்கும் கட்டணம் கொஞ்சம் அதிகமே என்றாலும், வாழ்நாளில் ஒருமுறை இவ்வனுபவம் கொள்வது மிகையல்ல என்றே தோன்றியது. கடலலைகள் படகை அசைக்க, கண்கள் கண்ட அனுபவ அலைகளில் உள்ளம் மிதந்தபடி கரையை வந்தடைந்தோம். காலையில் நிறைந்திருந்த மீன் வியாபாரம் மூன்றே மணிநேரத்தில் முழுவதும் விற்றுத் தீர்ந்திருந்தது. ஆஹா! எவ்வளவு மும்முரமான வியாபாரம்! கடல்வளம் கொண்ட இலங்கையில் அதனை முழுவதுமாய் உபயோக்கும் தொழில்நுட்பம் இல்லை என எப்போதோ கற்ற பாடம் நினைவுக்கு வந்தது. அந்தளவில் தப்பியது இயற்கை என்று நினைத்து துறைமுகம் விட்டு வெளியேறினோம்.

தென்னிலங்கையின் சுற்றுலா அம்சங்களில் மிரிஸ்ஸவுக்கு முக்கிய இடம் இருந்தாலும், தென்னிலங்கை கொண்டுள்ள வசீகர கடற்கரைகளுக்கு பஞ்சமே இல்லை எனலாம். இலங்கையைக் கடைந்து செல்பவர்கள் மிரிஸ்ஸ கடற்கரைகளையும் அதன் சிறப்பம்சங்களையும் தவற விடுதல் தெய்வ குற்றம் என்று வைத்துக்கொள்ளுங்கள்! தென்னிலங்கையின் இன்னுமொரு சுற்றுலா தலத்தோடு இன்னுமொரு கட்டுரையில் சிந்திப்போம்!

Web Title : Dolphins of Srilankan Bay

Featured Image Credit : utmthotel.com

Related Articles

Exit mobile version