சுற்றுச்சூழல் நண்பர்கள்

இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை, பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தான். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று வள்ளலார் கூரியதை நான் நினைவுக் கூர்கிறேன். ஆனால் மனிதர்களாகிய நாம் இன்று இதனை முற்றிலும் மறந்துவிட்டு உலகம் முழுவதும்  இயற்கையை நமது பயன்பாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், நமது வசதிக்கு ஏற்பவும் மாற்றி அமைத்து வருகிறோம். இயற்கைக்கு எதிரான செயல்களை எந்த விதமான குற்ற உணர்வும் இல்லாமல் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். அதிலும் சற்று கவனித்து பார்த்தால் தமிழகத்தில் இயற்கைக்கு எதிரான செயல்களை மிக தீவிரமாக செய்து கொண்டிருக்கிறது இந்த தலைமுறை. அதே போல் வளர்ச்சி, விஞ்ஞானம் என்று சொல்லி இயற்கை வளங்களை அழித்து கட்டிடங்களையும், தொழிற்சாலைகளையும் ஒரு முணைப்போடு எழுப்புகிறார்கள். இவர்களை இயற்கை விரோதிகள் என்றே குறிப்பிடலாம்.

எனக்கு ஜப்பானின் இயற்கை வேளாண் விஞ்ஞானி மற்றும் தத்துவவாதி  ”மாசனோபூ ஃப்யூகுகோக்கா” கூறியது நினைவுக்கு வருகிறது.

“அறிவினாலும் ஆராய்ச்சியினாலும் இயற்கையை விட சிறந்த ஒன்றை உருவாக்க முடியும் என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை” என்பதே அது.

இயற்கைக்கு அப்பாற்பட்டு புதியதாக படைக்கப்படும் பல படைப்புகள் இயற்கைக்கு ஈடான நன்மை பயப்பதாக தெரியவில்லை. இயற்கையோடு இணைந்து வாழ்வது தான் மிக சிறந்த வாழ்க்கை என்பர் நமது பாட்டன்மார்கள். ஆனால் நம் புரிதலோ வேறு விதமாக உள்ளது. காடுகளை அழிப்பது, மணலை கொள்ளை அடிப்பது, சுற்றி உள்ள உயிரினங்களுக்கு தீங்கு விளைவித்துக்கொண்டிருப்பது என எதுவும் நம் கவனத்தில் கொள்ளாமலேயே தினம் தினம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு வகையில் நாமும் இயற்கை விரோதிகள் தான். இந்த வாழ்க்கை முறையை உடனடியாக மாற்றிக்கொள்ளவும் நாம் தயாராக இருக்கின்றோமா? என்பது ஒரு முக்கியமான கேள்வி.

இதே காலகட்டத்தில் வெகு சில சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் தனி மனிதனாகவோ அல்லது குழுவாகவோ அல்லது ஒரு குழுமத்திற்கு கீழோ ஒன்றிணைந்து 60 வருடங்களுக்கு முன்பு இருந்த வாழ்க்கைமுறைக்கு திரும்புவதற்கான வழிகளை கண்டறிந்து இந்த தலைமுறையினரிடம் எடுத்துக் கூறி, நமது சமூகத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தி வருக்கின்றனர். இதற்கேற்ப தமிழகத்தில் செயல் படும் சுற்றுச்சூழல் நண்பர்கள் பற்றிய தொகுப்பே, இந்த கட்டுரை.

வானகம்

கரூரில் இருந்து 62 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கடவூர் கிராமத்தில், சுருமான்பட்டி என்ற இடத்தில் வானகம் இயங்கி கொண்டிருக்கிறது. இது இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம். நம்மாழ்வாரின் மறைவுக்குப் பின், அவரோடு பயணித்தவர்களால் வானகம் இன்றும் செயல்பட்டு வருகிறது

எங்கும் இயற்கை வழி வேளாண்மை என்பதை இலக்காக கொண்டு ஆராய்ச்சிகள் செய்து, பயிற்சி வகுப்புகள் வழியாக நஞ்சில்லா உணவு, மருந்தில்லா மருத்துவம் போன்ற பல சுற்றுச்சூழல் அக்கறை கொண்ட கொள்கைகளின் நன்மையை மக்கள் மனதில் விதைத்து அதனை ஒட்டிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்றம் என்பது சொல் அல்ல செயல் என்று நம்மாழ்வாரின் சொல்லுக்கேற்ப, வானகம் பாகுபாடின்றி தொடர்ச்சியாக அனைத்து மக்களுக்கும், மூன்று நாள் பயிற்சி , மூன்று மாத கால பயிற்சி, ஆறு மாத கால பயிற்சி, குழந்தைகள் முகாம்,விதைத் திருவிழா என்று பல பயிற்சி முகாம்கள் மூலம் இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்க்கைமுறையை விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் கொண்டு செல்கிறது.

தற்போது இந்தியாவில், தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு திரும்பியிருக்கிறார்கள் என்ற ஒரு பிரக்ஞை இருக்கின்றது. குறிப்பாக இளைஞர்களின் கவனமும் இயற்கை வேளாண்மை பக்கம் திரும்புகிற செய்திகளையும் நாம் கடக்கின்றோம். இதற்கு நம்மாழ்வார் போன்றோரும் அவர் வழிகாட்டுதலில் வந்த வானகம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை.  

Nammazhwar (Pic: sadhguru)

மரக்கன்று வேலுச்சாமி தாத்தா

திருப்புர் ’அம்மா பாளையம்’, பகுதியைச் சேர்ந்த இந்த 86 வயது இளைஞர் தான் ’மரக்கன்று வேலுச்சாமி தாத்தா’.அதிகப்படியான சாயப்பட்டறை கழிவுகளால் மாசடைந்த திருப்பூரில், இரவும், பகலும் இயந்திரம் போல் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், மனிதர்களை இயற்கையின் பாதைக்கு அழைத்துச் செல்ல பணியாற்றி வருகிறார்.

தன் மிதிவண்டியின் பின் இருக்கையில், தினமும், குறைந்தது  நன்கு அல்லது ஐந்து மரக்கன்றுகளையவது வைத்துக்கொண்டு திருப்பூர் நகர வீதிகளைச் சுற்றி கண்ணில் தென்படும் காலியான இடங்களிலெல்லாம் அந்த மரக்கன்றுகளை நடுவதே இவரது பிரதான பணி. மரக்கன்றுகளை நட்டு வைப்பது மட்டுமில்லாமல், அதற்கு தண்ணீர் ஊற்றி தொடர்ந்து பராமரித்து வருகிறார். இவர் நட்டு வளர்த்த மரங்கள் ஒவ்வொன்றும் இன்று பெரிய மரங்களாக வளர்ந்திருக்கின்றன. அது தரும் பயன்களைப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவர் நட்டு வைத்த மரங்களின் எண்ணிக்கை பல அயிரங்களைத் தாண்டும். இந்த தலைமுறையை இயற்கையின் பாதைக்கு அழைத்துச் செல்வதில் மரக்கன்று வேலுச்சாமி தாத்தா தனது பொறுப்புணர்ந்த மனிதர் தான்.

Velusamy (Pic: thehindu)

புவிதம்

தருமபுரி அருகே நாகர்கூடல் என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது ’புவிதம்’, என்ற கல்வி மையம். இந்த கல்வி மையம்   18 வருடத்திற்கு முன்னரே தொடங்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்த பள்ளியில் இருக்கின்றது. இப்பள்ளியின் தாளாளர் ’மீனாட்சி அம்மா’.

மீனாட்சி அம்மா,  உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். புனேவில் கட்டிடக்கலை சம்மந்தமாக படித்தவர். உலகம் கொண்டாடும் கட்டிடக்கலை கலைஞரான ’லாரி பேக்கர்’இன் மாணவர். புனேவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் மனம் வாடி, அமைதியைத் தேடி 1992-ம் ஆண்டு தமிழகம் வந்தார். தான் விரும்பும் அமைதியான இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை, கிராமங்களில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து தருமபுரி மாவட்டம், நாகர்கூடல் பகுதியில் கணவர் ’உமேஷ்’ உடன் குடியேறினார்.

அவர் 25 வருடங்களுக்கு முன்னர் வேளாண்மை செய்வதற்கு ஒரு இடத்தை வாங்கி உள்ளார் ஆனால் அந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் படிக்காமல், வேலைக்காக வேறு ஊருக்கு செல்வதையும், முக்கியமாக பெண்குழந்தைகள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வதையும் அறிந்து அவர்களுக்கு கல்வி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து ,வேளாண்மைக்காக வாங்கிய நிலத்தில், ஒரு பள்ளியை தொடங்கி உள்ளார். மேலும் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு விடுதி வசதியும் அமைத்து கொடுத்துள்ளார். பள்ளியிலும்,விடுதிகளிலும் பெரும்பாலும் சிறுதானிய உணவுகளே அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த பள்ளியின் கல்விமுறையே ஒரு புதிய பார்வையில் அமைக்கப்பட்ட மாற்றுவழிக் கல்வி முறை. இயற்கையோடு ஒன்றி வாழ்வதின் முக்கியத்துவத்தை குழந்தைகள் மனதில் விதைத்து சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டு தொடங்கப்பட்ட பள்ளி இது.

மீனாட்சி அம்மா கூறுகையில் “குழந்தைகளின் புரிதல் அழகானது, அற்புதமானதும் கூட. அவர்களுடன் உரையாடுவதன் மூலம் அவர்கள் பேசுவதில் ஒரு சிறு பகுதியைக்கூடப் பாடப் புத்தகம் சொல்வதில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். ஒருமுறை ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன் பேசியபோது, ‘மண்ணில் ஏன் விதை முளைக்கிறது?’ என்று கேட்டதற்கு ‘மண்ணுக்கு உயிர் இருக்கிறது’ என்றனர். மகத்தான தத்துவார்த்தச் சிந்தனைபோல என் மனதில் அவர்களுடைய புரிதல் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர்தான் ‘புவிதம் பள்ளி’யின் கற்பித்தல் முறையை வடிவமைக்கத் தொடங்கினேன்” என்று கூறினார்.

“நான் இந்த புவிக்கு சுமையாக இருக்க கூடாது, அதனுடன் இயைந்து வாழ வேண்டும் என்று விரும்புபவள். அதனால்தான் பள்ளிக்கு ”புவிதம்” என்று பெயர் வைத்தேன்.” என்று கூறுகிறார்.

ஒரு பொறியாளரின் மகனோ மகளோ பொறியியல் படிப்பதை கௌரவமாக பார்க்கும் சமூகத்தில் இருக்கும் விவசாயி, தன் மகனையோ அல்லது மகளையோ விவசாயம் படிக்க வைக்க தயங்குகிறார். இதன் விளைவு என்னவென்று அந்த விவசாயிக்கே புரியவில்லை என்பது தான் இங்கு இருக்கும் சிக்கல் என்பதை உணர்ந்து தொடங்கப்பட்ட பள்ளி என்று பெருமிதம் கொள்கிறார் மீனாட்சி அம்மா. இந்த பள்ளியில் பயின்றவர்கள் பலர் நல்ல நிலைமையில் இருப்பதிலும் இவரது அசாத்திய முயற்சிக்கு கூடுதல் சிறப்பு.

Meenatchi (Pic: theweekendagriculturist)

பூவுலகின் நண்பர்கள்

1990 களின் பிற்பகுதியில் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு அமைதியாக நகரத்தில் வலிமை பெற்றது. சில இளைஞர்கள் டீ கடைகளிலும், புத்தக கடைகளிலும்  நாட்டில் நிகழும் சிக்கல்களை விவாதிக்கின்றனர். இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமல்ல. மனிதன், மரங்களையும், விலங்குகளையும் போல இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும் என்கின்றது அவர்களின் கொள்கை. இதன் விளைவாக சுற்றுச்சூழல் தொடர்பான புத்தகங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கினர் , மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தங்கள் கருத்தினை புத்தகங்கள் வாயிலாக கொண்டு சென்றனர். வெவ்வேறு துறையிலிருந்த சமூக ஆர்வலர்களை கொண்டு  பூவுலகின் நண்பர்கள் இயக்கம் செயல் பட தொடங்கியது. மா. நெடுஞ்செழியனின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இன்றும் நல்ல முறையில் இயங்கி வருகிறது.

நெடுஞ்செழியன்  மறைவுக்கு பிறகு இந்த அமைப்பு பல்வேறு துறை சார்ந்தவர்களோடு இணைந்து செயல்படுகின்றது. பொறியாளர்கள் ஜி. சுந்தரராஜன் மற்றும் ஜி. ராஜாராம், பி. சுந்தரராஜன் மற்றும் எம். வெற்றிச்செல்வன், டாக்டர் ஜி. சிவராமன், ஆகியோர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மூலமாக இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டிய அவசியத்தை பிரகடனப்படுத்தி வருகின்றனர்.  இதுவரை பிளாஸ்டிக் பொருட்களின் அபாயங்கள் மற்றும் பசுமைப் புரட்சியின் விளைவுகள் இவைகளைப்பற்றி மக்களிடம் எடுத்துரைப்பதோடு. குழந்தைகளுக்கான மின்மினி என்கின்ற இதழ் மற்றும்  காடு மாத இதழ் என்று பல்வேறு மாத இதழ்களும் தொடர்ந்து வெளியிடுகின்றனர். இது மக்களிடம் படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு வழக்கம். பூவலகின் நண்பர்கள் அனைவரும் வெவ்வேறு துறைச்சார்ந்த வல்லுநர்களாக இருகிறார்கள்.

Poovulagin Nanbargal (Pic: thehindu)

இந்த தன்னார்வ அமைப்புகளும், தனி மனிதர்களும், மனிதர்களை நாம் நேசிப்பதைப் போல நமது சுற்றுச்சூழலையும் நேசித்து வாழ வேண்டும் என்பதை உணர்த்த முற்பட்டு, அசாத்திய செயல்களில் இறங்கி பயணித்து கொண்டிருக்கின்றனர். நமது நினைகளிலும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அடுத்த தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.

Web Title: Friends of Environment

Featured Image Credit: vikatan/thehindu/theweekendagriculturist/vikatan

Related Articles

Exit mobile version